.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, December 31, 2013

கணவன் மனைவியிடையே இருக்கும் உணர்வுபூர்வமான உறவு வலுவடைய..




கணவரோ மனைவியோ கவலையோடு இருந்தால் அவர்களின் சந்தர்ப்பத்தை புரிந்துகொண்டு தகுந்த முறையில் ஆதரவு அளிக்க வேண்டும். இதன் மூலமாக கணவன் மனைவியிடையே இருக்கும் உணர்வுபூர்வமான உறவு வலுவடையும்.

ஆதரவான வாழ்க்கை துணையே ஆரோக்கியமான திருமண வாழ்வின் சாரம். உங்கள் எண்ணங்களை புரிந்துகொண்டு கடினமான சந்தர்ப்பங்களில் உங்களை ஆதரித்து உங்களை உயர்த்தும் வாழ்க்கை துணை அமைந்துவிட்டால் உங்கள் திருமணம் அர்த்தமுள்ளதாக மாறிவிடும். இது ஒரு நல்ல குடும்பத்திற்கு இன்றியமையாத ஒன்றாகும்.

ஒவ்வொருவரின் வாழ்விலும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் சில காரணங்களுக்காக நாம் சோகமோ வருத்தமோ அடைவதுண்டு. இந்த சுறுசுறுப்பான வாழ்க்கையில் நாம் நமது குடும்பத்தோடு செலவிட நேரம் இல்லை. இதனால், ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் குறையை தொடங்கி விட்டது.

வேலை சம்பந்தமான மன அழுத்தம் என்பது வேலைக்கு செல்லும் நபர்களிடையே அதிகமாக பார்க்கக்கூடிய பிரச்சனையாகும். உங்கள் கணவர் வேலை முடிந்து சோர்வாக வீட்டிற்கு வரும் போது ஒரு கப் காபி கொடுக்கலாம். எனினும், அவர் வருத்தமாகவோ கவலையாகவோ இருந்தால் கவனமாக கையாள வேண்டும்.

அந்த சமயத்தில் நீங்கள் அவருக்கு தேவையான உணர்வுபூர்வமான ஆதரவை அளிக்க வேண்டும். கடினமான சந்தர்ப்பங்களில் அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டும். இதை தான் அவரும் எதிர்பார்ப்பார். சில நேரங்களில் இந்த உணர்ச்சிமிக்க உறவுகள் பிரச்சனைகளை உண்டாக்கும். அதனால் கவனமாக இருக்க வேண்டும்.

அவரது மனநிலையையும் தன்மானத்தையும் புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு உங்கள் ஆதரவை தர வேண்டும். உங்கள் கணவர் வருத்தத்துடன் இருக்கும் சமயத்தில் நீங்கள் இதை செய்தால், பாராட்டுகளை பெறுவீர்கள். உங்கள் கணவர் வருத்தத்துடன் காணப்பட்டால் நீங்கள் செய்ய வேண்டிய முதல் காரியம் அவரோடு பேசுவதுதான்.

அவரது பிரச்சனைகளை கேட்டறிந்து அவருக்கு நீங்கள் எவ்வாறு உதவ முடியும் என்பதை கேட்க வேண்டும்.உங்கள் கணவருக்கு சில சொந்த எதிர்ப்பார்ப்புகள் இருக்கக் கூடும். சில குறிப்பிட்ட வழியில் அவருக்கு உங்கள் உதவி தேவைப்படலாம். நீங்கள் அவருக்கு எவ்வாறு உதவ வேண்டும் என்பதை கேட்டறியவேண்டும்.

சில நேரங்களில் நீங்கள் அவருக்கு உதவ நினைப்பார்கள். எனினும், அவருக்கு உங்களிடம் உதவி கேட்க தயக்கம் இருக்கும். அதனால் நீங்களாகவே அவரிடம் கேட்டறியலாம். உணர்ச்சிபூர்வமான கணவர்களை உங்கள் அன்பின் மூலம் கட்டுப்படுத்தலாம். பேசிதான் அவரை ஆதரிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

அவரை கட்டிகொண்டோ அல்லது வேறுவிதமாகவோ வெளிப்படுத்தி அவரை மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கலாம். இது அவருக்கு தேவைப்பட்டால் இந்த வழியில் ஆதரவு அளிக்கலாம். கட்டுதல் மூலமாக நீங்கள் எப்பொழுதுமே அவரோ இருப்பதை தெரிவிக்கும்.அதனால் இதனை முயற்சி செய்யுங்கள். இதன் மூலமாக உணர்ச்சிபூர்வமான கணவர்களை சிறந்த முறையில் கையாளலாம்.

Monday, December 30, 2013

வணக்கம் வைப்பது தீண்டாமையா...?







இரு கைகளையும் கூப்பி வணக்கம் செலுத்துவது தான் தமிழர்களின் பண்பாடு.  ஆனால் இப்படி வணக்கம் செலுத்துவதில் ஒரு வகையான தீண்டாமை இருக்கிறது என்றும், அதனால் ஐரோப்பிய முறைப்படி கைகுலுக்கி, கொள்வதே சிறந்த மரபு என்றும் சில தமிழ் அறிஞர்கள் பேசுவதை கேட்கும் போது மனதிற்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது.


   ஒவ்வொரு மனிதனுக்கும் ஆறா என்ற ஒளி வட்டம் தனித்தனியாக உள்ளது.  இதனை நவீன கேமராக்கள், படம் எடுத்தும் உள்ளன.  விஞ்ஞானமும் அதை ஒத்து கொள்கிறது.


 இந்த ஆறா என்பது வேறொரு மனிதனை தொடும் போது மற்றவர்களின் ஆறாவால் சற்று சலனம் படுகிறது.

  இது சம்பந்தப்பட்ட இருவருக்குமே நல்லது என்று சொல்ல முடியாது.  இதை முற்றிலுமாக உணர்ந்த நமது முன்னோர்கள் வணக்கம் செலுத்தும் முறையை கொண்டு வந்தார்கள்.

  இதில் தீண்டாமை இருப்பதாக அவர்கள் கனவிலும் நினைக்கவில்லை.

  காப்பாற்ற சில பேர் இருந்து விட்டால் கள்வர்கள் வாழ்விலும் நியாயம் உண்டு என கண்ணதாசன் சொல்வது போல் குதர்க்கமான பார்வையாளர்களுக்கு எல்லாமே குதர்க்கமாகப் படுகிறது.


மேல்நாட்டு முறையில் கை குலுக்கி கொள்வது தீண்டாமையை விரட்டுகிறது என்றால் ஐரோப்பியர்கள் போலவே கட்டிபிடித்து முத்தம் கொடுத்து அறிமுகம் படுத்தி கொள்வதற்கு இந்த அறிஞர்களுக்கு துணிச்சல் உள்ளதா என கேட்க விரும்புகிறேன்.

 இவையெல்லாம் இருக்கட்டும் இனி வணக்கம் செலுத்தும் முறைக்கு வருவோம்.  இரு கைகளையும் தலைக்கு மேலே கூப்பி உயர்த்தி வணங்குவது கடவுளை வணங்கும் முறை.

 நெற்றிக்கு நேராக கை கூப்புவது ஆசியரை வணங்கும் முறை.

  உதடுகளுக்கு நேராக கைகளை குவிப்பது தந்தையையும், அரசரையும் வணங்கும் முறை.


   மார்புக்கு நேராக வணங்குவது உள்ளத்தாலும் அறிவாலும் உயர்ந்த சான்றோரை வணங்கும் முறை.

   தொப்புள் கொடி உறவை தந்த தாயை வயிற்றுக்கு நேர் கை கூப்பி வணங்க வேண்டும்.


   இதயத்தில் கை வைத்து நம்மை விட சிறியவர்களை வணங்க வேண்டும்.  இது தான் இந்திய மரபு.

    இதில் தீண்டாமை என்பது இல்லவே இல்லை.

செல்போன் விபரீதம் பெண்கள் ஜாக்கிரதை...??





நாணயத்துக்கு இருபக்கம் இருப்பது போல் தொழில்நுட்பத்துக்கும் உண்டு. அதற்கு உதாரணம் செல்போன். கூலித் தொழிலாளி முதல் தொழிலதிபர் வரை இன்று அனைவரின் கையிலும் தவழ்கிறது செல்போன். உலகின் எந்த மூலையில் இருந்தாலும் மகள் சாப்பிட்டாளா? தாத்தாவுக்கு உடம்பு எப்படி இருக்கு? சரக்கு டெலிவரி ஆகிவிட்டதா?என்று பேச, ஆபத்தான நிலையில் இருப்பவர்களுக்கு சிறிதும் தாமதிக்காமல் உதவிட என்று அனைத்து தரப்பினருக்கும் ஆபத்பாந்தவனாக இருக்கிறது.


ஆனாலும் இந்த செல்போன்கள் எதிர்விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. இதில் பாதிக்கப்படுபவர்கள் குறிப்பாகப் பெண்கள் தான்.


 எம்.எம்.எஸ், அறிவியலின் அற்புத தொழில்நுட்பம் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. ஆனால், சில விஷமிகள் தோழிகளாக பழகும் பெண்களை ஆபாச படம் பிடிக்கவும், பயமுறுத்தவும் இதைப் பயன்படுத்துகின்றனர். இதனால், பல பெண்களின் வாழ்க்கைச் சீரழிவது தொழில் நுட்பக் கொடுமை.
ஆண்களை விட இளம் பெண்கள் அதிகம் செல்லின் வசம் அடிமையாகிக் கிடக்கின்றனர் என்கிறது ஒரு ஆய்வு.


ஓயாத செல் பேச்சு, எந்நேரமும் மெசேஜ் எனத் திரியும் பெண்கள் அதனாலே பல தொல்லைகளுக்கு ஆளாகிறார்கள். ‘ஹாய்‘ என்று ஒரு சின்னஞ்சிறு குறுஞ்செய்தியில் ஆரம்பிக்கும் ஆண் பெண் தொடர்பு தற்கொலை, கொலை போன்ற அசாதாரண சம்பவங்களில் முடிவதில் பெரும்பங்கு செல்லுக்குத் தான். செல்லில் இருக்கும் மிஸ்டு காலை பார்த்து பேச ஆரம்பித்து பிறகு அந்த அறிமுகம் இல்லாத நபரிடமிருந்து தொடர் குறுஞ்செய்திகள், போன்கால்கள் என வம்பில் மாட்டிக் கொள்கிறார்கள் பல பெண்கள். பெற்றோர்கள் கவனமின்மையும் இதற்கு ஒரு முக்கிய காரணமாகும்.


  செல்லில்பேசிக்கொண்டே தண்டவாளத்தைக் கடக்க முயன்று ரயில் மோதி உயிரிழந்த சம்பவங்கள் தினமும் தொடர்கதையாகவே உள்ளது. பம்பர் லாட்டரி, பரிசு,  என்று வரும் மெசேஜைப் பார்த்து ஏமாந்து பணத்தை பறிகொடுத்துவிட்டு, கமிஷனர் அலுவலகம் வரும் அப்பாவிகள் ஏராளம்.
அதீத செல்போன் பழக்கத்தினால் தூக்கமின்மை, மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு பெண்கள் ஆளாகின்றனர். அளவுக்கதிகமான செல்போன் பயன்படுத்தும் பழக்கம் கேன்சரில் முடிவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 


பெண்களை ஏமாற்ற இத்தகைய செயல்களில் இளைஞர்கள் ஈடுபடுவதை தடுக்க அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆனால் அது மட்டும் போதாது எந்நேரமும் அரசாங்கம் பெண்கள் பின்னே நிற்க முடியாது என்பதால் இதுகுறித்து பெண்களிடையே மிகுந்த விழிப்புணர்ச்சி ஏற்படுவது தான் இதற்கான சிறந்த தீர்வாக இருக்கமுடியும்.


பெற்றோரின் கண்காணிப்பின்றி நகரங்களில் தங்கி படிக்கும், வேலை பார்க்கும் பெண்கள் தான் செல்லால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.


குடும்பத்திற்கு தெரியாமல் ரகசிய செய்கைகளில் ஈடுபடுவது அவர்களை ஆபத்திற்குள்ளாக்கும் என்பதை பெண்கள் உணரவேண்டும். அதனால், தேவையற்ற நபர்களின் எஸ்.எம்.எஸ்க்குப் பதில் அளிக்காதீர்கள். காதலன் தானே, பாய்பிரண்ட் தானே என்று அலட்சியப்பேச்சும் வேண்டாம். உங்களுக்குள் பிரிவு ஏற்படும் போது அது உங்களை படுகுழியில் தள்ளிவிடும். பெண்களுக்கு பெரும் பாதிப்புகளை உண்டாக்கும் இத்தகைய பேச்சுகளை பெண்கள் தவிர்க்கவேண்டும்.


அறிமுகம் இல்லாத நபர்களிடம் உங்கள் செல்போன் எண்ணை பகிர்ந்துகொள்வதை தவிர்த்துவிடுங்கள். தேவையற்ற நபர்களிடம் தேவையற்ற பேச்சுக்கள் அறவே வேண்டாம். அறிமுகம் இல்லாத, அவ்வளவாக பழக்கமில்லாத நபர்களிடம் சொந்த தகவல்களை பகிர்வது, வீட்டுக்குள் அனுமதிப்பது போன்ற செயல்களையும் பெண்கள் கட்டாயம் தவிர்த்துவிடுங்கள்.


 விக்கிறவனுக்கு ஒரு கண் போதும், வாங்குகிறவனுக்குத் தான் ஆயிரம் கண்கள் வேண்டும் என்றொரு பழமொழி தமிழில் உண்டு. அது போல ஆண்களை விட பெண்கள் எப்போதும் ஒரு படி மேலே ஜாக்கிரதை உணர்வோடு செயல்பட்டால் இது போன்ற சுய கவுரவத்திற்கு இழுக்கு ஏற்படும் நிலைமையிருந்தும், சமூக நெருக்கடிகளில் இருந்தும், பல இழப்புகளிலிருந்தும் தங்களை காப்பாற்றிக் கொள்ளமுடியும்.

நியூ இயர் கொண்டாட்டமா? கவனமா இருங்க...




உலகம் முழுதும் சாதி, மத பேதமின்றி அனைவரும் கொண்டாடும் ஒரே ஸ்பெஷல் தினம் நியூ இயர். எந்த ஒரு பண்டிகைக்கும் இல்லாத சிறப்பு புத்தாண்டுக்கு உண்டு. ஏதோ... புதிய வாழ்க்கை தொடங்குவது போல ஒவ்வொருவரின் மனதிலும் ஒரு இனம்புரியாத குதூகலம் பிறக்கும்.


வருடத்தின் முதல் நாள் சந்தோஷமாக இருந்தால் வருடம் முழுதும் சந்தோஷமாக இருப்போம் என்ற சென்டிமெண்ட் தான் இதற்கு காரணம். அந்த மகிழ்ச்சிக்கு இதோ... இன்னும் மூன்றே நாள் தான் 2013 முடிந்து 2014 புத்தாண்டு பிறப்பதற்கு. இந்த புத்தாண்டில் இன்னுமொரு சிறப்பு 67 ஆண்டுகள் கழித்து, 1947க்குப் பிறகு 2014ம் ஆண்டும் ஒரே மாதிரியான தேதிகளையும் கிழமைகளையும் கொண்டுள்ளது.  புத்தாண்டு தினத்தில் கோயில்களில் சிறப்பு பூஜை, சர்ச்சில் சிறப்பு பிரார்த்தனை, மசூதிகளில் சிறப்பு தொழுகை என அனைத்து ஏற்பாடுகளும் களைகட்டி வருகிறது. சென்னையை பொறுத்த வரையில், புத்தாண்டு என்றாலே யூத்களுக்கு தனி குஷிதான்.


புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவு 12 மணிக்கு மெரினா, பெசன்ட் நகர் எலியர்ட்ஸ் பீச்களிலும், கடற்கரை சாலைகளிலும் கூட்டம் அலைமோதும். புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் வாண வேடிக்கைகள் வெடித்தல், பலூன்களை பறக்கவிடுதல், ஓட்டல்களில் கேக்வெட்டுதல் என புத்தாண்டு களைகட்டும். முகம் தெரியாத நபர்களையும் நண்பர்களாக பாவித்து கேக் கொடுத்து ‘ஹேப்பி நியூ இயர்‘ என கைகுலுக்கி வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வார்கள்.  புத்தாண்டை பெரியவர்கள் கொண்டாடினால் போதுமா சிறுவர் சிறுமியருக்கான நியூஇயர் பார்ட்டிக்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது. டின்னருடன் பாட்டு, டான்ஸ் மேஜிக் ஷோ என குழந்தைகளுக்கான தனிக்கொண்டாட்டமாக இப்போது துவங்கியிருக்கிறது.


விபத்தை தவிர்க்க போலீசார் கட்டுப்பாடு


சென்னையின் ஒட்டுமொத்த கூட்டமும் புத்தாண்டுக்கு முந்தைய நாள் நள்ளிரவிலும், புத்தாண்டு அன்றும் பீச், ஈசிஆர் மற்றும் முக்கிய சாலைகளிலும் கூடுவார்கள் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இந்தாண்டு புத்தாண்டு தினத்தை அமைதியாகவும் பாதுகாப்பாகவும் மக்கள் கொண்டாட வேண்டுமென்பதில் போலீசார் அதிக அக்கறை எடுத்துள்ளனர். அதனால்  சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, யாரும் கடலில் குளிக்காதவாறு கண்காணிக்கப்படும். 


இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறுகையில், சென்ற ஆண்டைப்போல் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் மெரினா கடற்கரையில் கூடுவார்கள் என எதிர்பார்க்கிறோம். சென்னையின் பல்வேறு இடங்கலில் சுமார் 20 ஆயிரம் போலீஸார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். மெரினாவில் மட்டும் 2,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். புத்தாண்டுக் கொண்டாட்டத்தை ஒட்டி, மெரினா கடற்கரை பகுதி ஒரு வழிப்பாதையாக மாற்றப்படும்.


மக்கள் கூம்பு வடிவ ரேடியோ பயன்படுத்தக்கூடாது என்றும், நீச்சல் குளம் அருகில் மது விருந்து நடத்தக்கூடாது என்று ஓட்டல் நிர்வாகத்தினரிடம் எச்சரித்துள்ளோம். விதிமுறைகளை மீறும் ஹோட்டல் நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.  பொதுவாக புத்தாண்டு கொண்டாட்டத்தில் சாலை விபத்துகளும் தவிர்க்க முடியாதவை. போதையில் வாகனம் ஓட்டுவதாலும், அதிவேகமாக செல்வதாலும் பெரும்பாலான விபத்துகள் நடக்கின்றன. இம்முறை அதற்காக நிறைய கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டுள்ளது. போதையில் வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க, போதையில் வருபவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதோடு, அதிவேகமாக வாகனம் ஓட்டினால் வாகனமும் பறிமுதல் செய்யப்படும். நகர் முழுதும் இரும்புத் தடுப்புகள் அமைக்கப்படும்.


புத்தாண்டுக் கொண்டாட்டம் என்ற பெயரில் பெண்களை கேலி, கிண்டல் செய்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.



இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். புத்தாண்டு கொண்டாட பீச்சுக்கோ, ஈசிஆருக்கோ, பொழுதுபோக்கு தளங்களுக்கோ எங்கு செல்வதாக இருந்தாலும், ஜாலியாக கொண்டாடுங்கள். ஆனால் அதே சமயம் போதையில் செல்வதோ, ரேஷ் டிரைவிங்கோ வேண்டாம். விதியை மீறினால் புத்தாண்டு தினம் மகிழ்ச்சிக்கு பதிலாக உங்களை சங்கடத்தில் கொண்டு சேர்த்து விடும். கவனமா இருங்க! புத்தாண்டை மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் பிறருக்கு இடையூறு செய்யாதபடியும் கொண்டாடினால் எல்லா நாளும் புத்தாண்டுதான்.


விடிய விடிய சிறப்பு பஸ்கள்


புத்தாண்டு தினத்தில் கோயில்களுக்கும், தேவாலயங்களுக்கும் நிறைய பேர் செல்வார்கள் என்பதால் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. 31ந்தேதி பகல் 12 மணி முதல் 1ந்தேதி மாலை வரை நூற்றுக்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து மெரினா, பெசன்ட் நகர், தாம்பரம், கோவளம், வண்டலூர், எம்.ஜி.எம், வள்ளுவர்கோட்டம் உள்ளிட்ட பல இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.


குறிப்பாக இரவு நேரத்தில் தேவையான பகுதிகளுக்கு விடிய விடிய மாநகர பஸ்கள் இயக்கப்படும். அதிகாலையில் குன்றத்தூர், மாங்காடு, மயிலை கபாலீஸ்வரர் கோவில், பார்த்தசாரதி கோவில், திருவேற்காடு, வடபழனி முருகன் கோவில், திருநீர்மலை மற்றும் சந்தோம், பெசனட் நகர் சர்ச் உள்ளிட்ட தலங்களுக்கு பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இதே போல, அவசர காலங்களில் உதவிக்காக 108 ஆம்புலன்ஸ்களும் அதிகளவில் தயாராக இருக்கும்.
 
back to top