.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, December 31, 2013

‘ஜில்லா’வில் கலக்கும் ஜீவா...!!!



ஜில்லா படத்தில் விஜய்யுடன் ஒரு பாடல் காட்சியில் தோன்றி நடிக்கிறாராம் ஜீவா.

விஜய், மோகன்லால் நடித்திருக்கும், ‘ஜில்லா’ இன்னும் சில நாட்களில் வெளியாக இருக்கும் நிலையில் படம் மீதான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் ஜெட் வேகம் பிடித்திருக்கிறது.

சூப்பர்குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரிக்கும் இப்படத்தை நேசன் இயக்கியிருக்க, டி.இமான் இசை அமைத்திருக்கிறார்.

சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்க, படத்தின் டிரெய்லர் ஜனவரி 1ம் தேதி  ரிலிசாகவிருக்கிறது.

அத்துடன் இந்தப் படத்தில் ஒரு ஹைலைட் விஷயமாக விஜய்-யுடன் ஜீவா-வும் ஒரு பாடல் காட்சியில் தோன்றி ஆடியிருக்கிறாராம்.

புத்தாண்டு உறுதிமொழி: 'பாஸ்வேர்டை மாற்றுவோம்!'



புத்தாண்டு பிறக்கப்போகிறது. புத்தாண்டு மாற்றத்துக்கான காலம் எனும் நம்பிக்கையில், இந்த ஆண்டு முதல் இதை செய்யலாம் என தனிப்பட்ட உறுதிமொழிகளை எடுத்துக்கொள்வதற்கான நேரம் இது.


புத்தாண்டு உறுதிமொழிகளை புத்தாண்டு பரபரப்பு அடங்கிய கையோடு மறந்து விடுவதுதான் வாடிக்கையாக இருக்கிறது. என்றாலும், வழக்கமான உறுதிமொழிகளோடு இந்த ஆண்டு புதிதாக ஒரு சூளுறை மேற்கொள்ளலாம். அது 'பாஸ்வேர்டை மாற்றுவோம்' என்பதுதான்.


இதைக் காலத்தின் கட்டாயம் என்றும் சொல்லலாம். காரணம் விடைபெற இருக்கும் 2013-ம் ஆண்டு தொழில்நுட்ப உலகை பொறுத்தவரை பாஸ்வேர்டு விழுப்புணர்வு ஆண்டாக அறியப்படலாம். அந்த அளவுக்கு 2013-ல் பாஸ்வேர்டு திருட்டுகள் நடைபெற்று இருக்கின்றன.


அடோப் உள்ளிட்ட பல இணைய நிறுவங்களின் லட்சக்கணக்கான பயனாளிகளின் பாஸ்வேர்டை தாக்காளர்களால் திருடப்பட்டது பற்றி இணைய உலகில் பரபரப்பாக பேசப்பட்டது. சமீபத்தில் கூட பேஸ்புக், கூகுள் உடபட பல நிறுவனங்களின் லட்சக்கணக்கான பாஸ்வேர்டுகள் தாக்காளர்களின் கைகளின் சிக்கியது பற்றி செய்தி வெளியாகியுள்ளது.


இப்படி கொத்துக் கொத்தாக பாஸ்வேர்டுகள் களவுபோவது பற்றி நிபுணர்கள் கவலையோடு விவாதித்து வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்களை தடுக்க மேற்கொள்ள முன் வைக்கப்படும் பல்வேறு நடவடிக்கைகளில் முக்கியமானது பயனாளிகள் பாஸ்வேர்டை அடிக்கடி மாற்ற வேண்டும் என்பதுதான். அடிக்கடி மாற்றாவிட்டாலும் பரவாயில்லை, மிகப்பெரிய அளவில் பாஸ்வேர்டு திருட்டு நடைபெற்ற செய்தி வெளியானால், முதலில் பாஸ்வேர்டை மாற்றியாக வேண்டும். அதிலும் குறிப்பாக தாக்குதலுக்கு இலக்கான சேவையின் பயனாளி என்றால் இதை நிச்சயம் செய்தாக வேண்டும்.


பொதுவாகவே ஒரே பாஸ்வேர்டை வைத்திராமல், அடிக்கடி பாஸ்வேர்டை மாற்றிக்கொண்டே இருப்பது இணைய விஷமிகள் அவற்றை எளிதில் யூகித்து கைவரிசை காட்டாமல் இருக்க உதவும் என்கின்றனர். இதை இதுவரை யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆனால், இப்போது பாஸ்வேர்டு களவு போகும் வேகத்தை பார்த்தால் அலட்சியம் ஆபத்தில் முடியும் என்றே சொல்லத் தோன்றுகிறது.


எனவே, புத்தாண்டு உறுதி மொழியாக பாஸ்வேர்டு மாற்றத்தை மேற்கொள்ளுங்கள். பாஸ்வேர்டு மாற்றும்போது பாதுகாப்பான பாஸ்வேர்டுக்காக அடிக்கடி வலியுறுத்தப்படும் குறிப்புகளை கவனமாக பின்பற்றுங்கள். அதாவது வழக்கமான பாஸ்வேர்டு மற்றும் எல்லோரும் பின்பற்றும் பாஸ்வேர்டு உத்திகளை தவிர்த்து விடுங்கள். அதோடு ஒரே பாஸ்வேர்டை ஒன்றுக்கு மேற்பட்ட சேவைகளில் பயன்படுத்துவதையும் கைவிடுங்கள்.


பலரும் சுலபமாக இருக்கிறது என்று ஒரு சேவையில் பயன்படுத்தும் பாஸ்வேர்டையே மேலும் பல சேவைகளில் பயன்படுத்துகின்றனர். பல சேவைகள் இமெயில் அல்லது சமூக வலைதள பாஸ்வேர்டையே பயன்படுத்த ஊக்குவிக்கின்றன. இது எளிதாக இருக்கலாம். ஆனால் ஆபத்தானது. குறிப்பிட்ட ஒரு சேவையில் பாஸ்வேர்டு திருடப்பட்டால் அதன் மூலம் தாக்காளர்கள் உங்களின் மற்ற சேவைகள் அனைத்துக்குள்ளும் நுழைந்து விடும் அபாயம் இருக்கிறது.


எனவே பல பாஸ்வேர்டுகளை பயன்படுத்தும் நிலை இருந்தால் , ஒவ்வொன்றுக்கும் ஒரு பாஸ்வேர்டை உருவாக்கி கொள்வதே நல்லது.


பாஸ்வேர்டை மாற்றுங்கள். இணையப் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ளுங்கள்.

மிகச் சிறந்த தாய்...!



தனது மனைவி ஐஸ்வர்யா ராய் பச்சன் மிகச்சிறந்த தாயாக தனது மகள் ஆராத்யாவை வளர்த்து வருவதாக நடிகர் அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய்க்கும், ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் - ஜெயாபச்சன் தம்பதியினரின் மகனும், நடிகருமனான அபிஷேக் பச்சனுக்கும் கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தற்போது 2 வயதில் ஆராத்யா என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் அபிஷேக் பச்சன் தனது மனைவி மிகச் சிறந்த தாயாக தனது கடமைகளை நிறைவேற்றி வருவதாக மனம் திறந்து பாராட்டியுள்ளார்.

மேலும், அவர் முன்னாள் உலக அழகியும், தனது மனைவியுமான ஐஸ்வர்யா ராய் குறித்து கூறியிருப்பதாவது,

'ஐஸ்வர்யாவின் தொழில் பக்தி மற்றும் அர்ப்பணிப்பு குறித்து கேள்விக்கு இடமில்லை. 2 வயது மகள் ஆராத்யாவை மிகுந்த அக்கறையுடன் கவனித்துக்கொண்டு அன்புடன் வளர்த்துவரும் ஐஸ்வர்யா, ஒரு மிகச் சிறந்த தாயாக விளங்குகிறார். ஒரு இணை நடிகராக, அவருடன் பணியாற்றுவதை மிகவும் விரும்புகிறேன். இது எனக்கு மிகுந்த சந்தோஷமே.

திரை உலகத்திலிருந்து மகள் ஆராத்யாவை பாதுகாக்கவே நானும், ஐஸ்வர்யாவும் விரும்புகிறோம். குழந்தையின் பெற்றோராக மகள் ஆராத்யா, ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கவே நாங்கள் இருவரும் விரும்புகிறோம். ஊடகங்கள் மற்றும் திரை பத்திரிக்கைகளில் இருந்து நான் பாதுகாக்கப்பட்டேன்.

எனக்கு 18 வயது இருக்கும்போது, முதலாவதாக திரைப்பத்திரிக்கை ஒன்றில் வந்தேன். எனவே நட்சத்திரங்களின் குழந்தைகளை புகைப்படம் எடுப்பதிலிருந்து ஊடகங்கள் கட்டுப்பாடு காட்ட வேண்டிக்கொள்கிறேன்' என என்று அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார்.

நான்கு கோடி ரூபாய்க்கு ஏலம் போகும் மருத்துவப் படிப்புகள்...!




உயிர்காக்கும் புனிதத் தொழிலாக கருதப் படும் மருத்துவத்தில் சிறப்புப் பிரிவுகளில் சேருவதற்கு புத்திசாலித்தனமும், நல்ல கல்வியறிவும் மட்டும் போதாது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர வேண்டுமானால் பணம் ஒரு முக்கியக் காரணியாக தற்காலத்தில் விளங்குகின்றது.


முதுநிலை பட்டப்படிப்பு பிரிவுகளில் அதிகப் பணம் அளிக்க முன்வருவோருக்கே அனுமதி என்ற நிலையே பரவலாகக் காணப்படுகின்றது.அதிலும் ஒரு மருத்துவக் கல்லூரியின் அரங்கத்தில் நிர்வாகக் குழுவினருடன் அமர்ந்திருக்கும் பெற்றோர்கள் கூட்டத்தில் அதிக விலை கொடுப்பவருக்கே அவர் விரும்பும் பிரிவில் அனுமதி கிடைக்கின்றது என்ற தகவல் வெளியாகியுள்ளது..

சென்னையில் சிறந்து விளங்கும் தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் ரேடியாலஜி பிரிவில் முதுநிலைப் படிப்பிற்கான அனுமதி 4 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே பிரிவு பெங்களூரு மருத்துவக் கல்லூரிகளில் 3 அல்லது 3.5 கோடிக்கு கிடைக்கின்றது. எலும்பு மற்றும் தோல் மருத்துவத்திற்கான உயர்கல்வி அனுமதி ஒன்றிலிருந்து ஒன்றரை கோடியாக இருக்கின்றது. குழந்தை மருத்துவத்திற்கான அனுமதி 1.6 கோடிக்கு கிடைக்கின்றது.


ஒரு மருத்துவக் கல்லூரியின் அரங்கத்தில் நிர்வாகக் குழுவினருடன் அமர்ந்திருக்கும் பெற்றோர்கள் கூட்டத்தில் அதிக விலை கொடுப்பவருக்கே அவர் விரும்பும் பிரிவில் அனுமதி கிடைக்கின்றது. இத்தகைய முறை பெற்றோர்களுக்குமே திருப்தி அளிக்கவில்லை. இதுபோல் ஏல முறையில் அனுமதி கிடைப்பது சொத்துகளை வாங்குவதுபோல் இருக்கின்றது. அதுபோல் பணம் கொடுக்க இயலாத பெற்றோர்களின் பிள்ளைகளே எதிர்காலத்தில் பாதிக்கப்படுகின்றனர் என்று அவர்கள் கருதுகின்றனர்.


ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மாணவர்கள் ரேடியாலஜி பிரிவிற்கு விண்ணப்பிக்கும் போது மொத்தம் 683 சீட்டுகளே அந்தப் பிரிவில் உள்ளன. மாணவர்களின் தேவை மற்றும் விநியோகத்திற்கு இடையே பெரும் இடைவெளி இருக்கின்றது. இந்தப் பற்றாக்குறை செலவினத்தை அதிகரிக்கின்றது என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகின்றது.


இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் முதுநிலைப் படிப்பிற்கான இடங்களை அதிகரிக்கும்படி தொடர்ந்து வேண்டுகோள் விடுத்தும் பயனில்லை என்று கல்லூரி தரப்பு நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன. மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கும்போது நிர்வாக செலவு அதிகரிப்பதால் அதனை ஈடுகட்ட அனுமதிக் கட்டணம் அதிகரிக்கின்றது என்பது அவர்கள் தரப்பு கருத்தாகும்.
 
back to top