.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, January 1, 2014

தோல்வி என்றால்.....?



தோல்வி என்றால் நீங்கள் தோற்றவர் என்று பொருள் அல்ல:நீங்கள் இன்னும் வெற்றி பெறவில்லை என்று பொருள்.


தோல்வி என்றால்,நீங்கள் எதையுமே சாதிக்கவில்லை என்று பொருள் அல்ல: சில பாடங்கள் கற்றுக்கொண்டு இருக்கிறீர்கள் என்று பொருள்.


தோல்வி என்றால் நீங்கள் அவமானப்பட்டு விட்டதாகப் பொருள் இல்லை:முயன்று பார்க்கும் துணிவு உங்களிடம் உள்ளது என்று பொருள்.


தோல்வி என்றால் உங்களிடம் சரக்கு இல்லை என்று பொருள் அல்ல:வேறு உத்திகளைக் கையாள வேண்டிய அவசியத்தை உணர்ந்து விட்டீர்கள் என்று பொருள்.


தோல்வி என்றால் வாழ்க்கை வீணாகி விட்டதாகப் பொருள் இல்லை:மீண்டும் ஆரம்பிக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்று பொருள்.


தோல்வி என்றால் விட்டு விட வேண்டும் என்று பொருள் அல்ல:இன்னும் செம்மையாக உழைக்க வேண்டும் என்று பொருள்.


தோல்வி என்றால் உங்களால் அடைய முடியாது என்று பொருள் அல்ல: அடையக் கொஞ்சம் தாமதமாகலாம் என்று பொருள்.


தோல்வி என்றால் கடவுள் உங்களைக் கை விட்டு விட்டார் என்று பொருள் இல்லை:உங்களுக்கு வேறு நல்ல எதிர் காலத்தை நிர்ணயம் செய்து வைத்திருக்கிறார் என்று பொருள்.

மகளிர் பெண்களே இப்படி சமாளியுங்க…!




மகளிர் பெண்களே இப்படி சமாளியுங்க…!

`உரலுக்கு ஒரு பக்கம் இடின்னா, மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி’ என்று பழமொழி சொல்வார்கள். பெண்களுக்கு இந்த சொலவடை நிச்சயம் பொருந்தும்.

புதிதாக மணம் முடித்து கணவர் வீட்டில் காலெடுத்து வைக்கும் ஒவ்வொரு பெண்ணும் சந்திக்கும் `கடி’கள், ஏச்சு பேச்சுகள் அவர்களின் மனதை ரொம்பவே துடிக்க வைத்து விடும். அப்படிப்பட்ட நிலைமையை எப்படி சமாளிப்பது? இங்கே சில ஐடியாக்கள்…

`இந்த வீட்ல நான்தான் எல்லா வேலையும் பார்க்க வேண்டி இருக்குது. வேலைக்குப் போனா வீட்டு வேலையை பார்க்கக்கூடாதா? பார்த்தா குறைஞ்சு போகுமோ’ – வேலைக்குப் போகும் மருமகளை, ஏதோ சிங்காரித்து சினிமாவுக்கு சென்று வருவதைப்போல நினைத்து இப்படிப் பேசும் மாமியார்கள் இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட சூழலை நீங்கள் சந்தித்தால், “நான் தினமும் ஆபீஸ் போய்விட்டு, இத்தனை மணிக்குத்தான் திரும்புவேன், நான் வந்தபிறகு இந்தெந்த வேலைகளை கவனித்துக் கொள்கிறேன்” என்று முன்கூட்டியே சொல்லிவிடுங்கள்.

`உங்கப்பா நல்லா இருக்கும்போதே உனக்கு வேணுங்கறதை கேட்டு வாங்கிட்டு வந்துடு, பின்னாடி உங்க அண்ணன்கள்கிட்டே எதிர்பார்த்துகிட்டு நிக்க முடியாது பாரு…”

இந்த வார்த்தைச் சாட்டைக்கு இப்படி பதிலளியுங்கள்..”எனக்கு என்ன செய்யணும்னு எங்க அப்பா அம்மாவுக்குத் தெரியும். நான் போய் கேட்க வேண்டியதில்லை, கேட்கவும் மாட்டேன். எனக்கு தேவைன்னு தெரிஞ்சா அவங்களே தேடி வந்து செய்வாங்க”

“உன் பெண்டாட்டி வரவர என்னை மதிக்கிறதே இல்லை. நான் சொன்னா காதிலேயே வாங்காமப் போறா, ஆபிசிற்கு ரொம்ப குலுக்கி மினுக்கிப் போறா?”

இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆரம்பத்திலேயே உங்களின் உண்மை நிலையை கணவரிடம் விளக்கி விடுவதுதான் சிறந்த வழி. மாமியாரின் கோபத்துக்கான காரணத்தை தெரிந்து பேசித் தீர்க்க முடியுமா? என்றும் முயற்சி செய்யுங்கள்.

“இவள் காசை கன்னாபின்னான்னு செலவழிச்சு கரியாக்குறா. திடீர்ன்னு ஆயிரம், ரெண்டாயிரத்துக்கு புதுப்புடவை எடுத்துக்கிறா, நகைநட்டு வாங்கி குவிக்கிறா, என் மகன் பாவம் வாயில்லாப்பூச்சி, எதையும் கேட்கறதில்லை.”எல்லோர் வீட்டு மாமியார்களும் கூறும் பொதுவான `கம்ப்ளெயிண்ட்’ இது…

“சிக்கனம் தேவைதான். அதுக் காக டிரஸ்ஸில் சிக்கனம் பிடிக்கலாமா? தேவைக்குத்தான் வாங்கி இருக்கிறேன்” என்று சொல்லுங்கள். அடுத்து விசேஷ நாட்களில் மாமியார், நாத்தனாருக்கும் (கடமைக்காக அல்லாமல் அன்புடன்) ஒரு புடவை எடுத்துக் கொடுங்கள். பிரச்சினை வந்தவழி தெரியாமல் ஓடிப் போய்விடும்.

“பெரிய ஆபீசர் வீட்ல இருந்து வந்தவளே பாத்திரம் கழுவுறா, எல்லா வேலையும் பாக்குறா? இவளுக்கென்ன? மூத்த மருமகள் கேட்ட அடுத்த மாசமே என் மகனுக்காக பைக் வாங்கி தந்துட்டா..! உன்கிட்ட கேட்டாலும் கிடைக்குமா, உங்கப்பா நெலமைதான் ஊருக்கே தெரியுமே?

`இப்படிப் பேசுவது சுத்தமாகப் பிடிக்கவில்லை’ என்பதை கணவரிடம் நேரடியாகச் சொல்லி விடுங்கள். அதன்பிறகு ஓரளவாவது இந்த மாதிரி ஒப்பீடு குறையும்.

எவ்வளவு இடையூறுகள் வந்தாலும் `எங்கம்மாவை அப்படிப் பேசாதே’ என்று சொல்ல வாரிசு வளரும் வரை நீங்களாகத்தான் சமாளிக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ளுங்கள் புதுப்பெண்களே!

வெற்றிக்கான நான்கு தூண்கள்





ஒரு கட்டிடத்திற்கு அல்லது மண்டபத்திற்கு, குறைந்தது எத்தனை தூண்கள் தேவை?

நான்கு.


வெற்றியெனும் மாளிகைக்கும் குறைந்தது நான்கு தூண்கள் தேவை.
என்னென்ன?


அதைத் தெரிந்து கொள்வதற்கு முன்னால்… ஆங்கில அகராதியைப் புரட்டியிருக்கிறீர்கள் அல்லவா? அதன்படி….


ஆக, நல்லவை எல்லாமே, கஷ்டத்திற்குப் பிறகுதான் வருகின்றன என்பதை ஆங்கில அகராதி சூசகமாய்ச் சொல்கிறது.


அதேபோல, வெற்றி நமக்கு வேண்டுமானால், நான்கு விஷயங்கள், முன்னதாக நமக்குத் தேவை. என்னென்ன?


முதல் தேவை:

பொறுமை


கஷ்டங்கள், பிரச்னைகள், குறை பாடுகள், அசௌகரியங்கள் இவைகளை சகித்துக் கொண்டு தாக்குப்பிடிக்கும் பொறுமை. Patience.



இரண்டாம் தேவை :

 சக்தி



பொறுமையோடு இருக்கிறேன் என்று கையைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கலாமா? கூடாதுதானே.


பொறுமை காக்கும் அதே நேரத்தில், நமது பலங்களையும் ஆற்றல்களையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்க வேண்டும். என்னென்ன பலங்கள்?


அறிவு பலம், மனோ பலம், ஆள் பலம், பண பலம் எல்லாம் தான்.
ஆம். இரண்டாவது தேவை, சக்தி( Power.)


மூன்றாம் தேவை :

 திட்டம்


வாழ்க்கையில் நமது லட்சியங்களை அடைவதற்கான, சரியான, தெளிவான, முழுமையான, நுட்பமான திட்டம். plan


நான்காம் தேவை :

விடாமுயற்சி


திட்டம் தயாராகிவிட்டால், சந்தேகமேயில்லாமல் அடுத்த தேவை முயற்சி, முயற்சி, முயற்சி, குறிப்பாக, தடங்கலுக்குத் தளராத விடாமுயற்சி, வெற்றியைத் தொடும்வரை, தொடர்ந்து செய்ய வேண்டிய விடாமுயற்சி Preseverance


இந்த நான்கையும் தான், வெற்றி மாளிகையில் நான்கு தூண்கள் (Pillars) என்று குறிப்பிடுகிறேன்.


ஆக 4Ps என்று சொல்லப்படும்,

PATIENCE

POWER

PLAN

PERSEVERANCE


என்ற நான்கு தூண்களும் உறுதியாக இருந்தால், வெற்றியின் விளைவாகிய செழுமை (Prosperity) எனும் மேற்கூரை, தானே வந்து சேர்ந்துவிடும்.

பலவீனங்களை பலமாக்குவோம்...?



 ஜப்பானில் பத்து வயதுப் பையன் ஒருவன் இருந்தான். ஜூடோ சாம்பியனாக வேண்டும் என்பது அவனுடைய கனவு. ஆனால் அவனுக்கு இடது கை கிடையாது. கையும் காலும் வலுவாய் இருப்பவர்களுக்கே ஜூடோ சாம்பியன் ஆவது சிம்ம சொப்பனம். கையில்லாத பையன் என்ன செய்வான்?
பல மாஸ்டர்களிடம் போனான். எல்லோரும் அவனைப் பரிதாபமாய்ப் பார்த்துவிட்டு திருப்பி அனுப்பிவிட்டார்கள். கடைசியில் ஒரு குரு அவனுக்கு ஜூடோ கற்றுத் தர ஒப்புக்கொண்டார்.


பயிற்சி ஆரம்பமானது. குரு ஒரே ஒரு தாக்குதலை மட்டும் அவனுக்குக் கற்றுக் கொடுத்தார். நாட்கள், வாரங்கள், மாதங்க ஓடின. குரு வேறு எதையும் கற்றுக் கொடுப்பதாகத் தெரியவில்லை. பையன் சோர்ந்து போனான்


"குருவே.. ஜூடோ சாம்பியன் ஆக இந்த ஒரு தாக்குதல் தெரிந்தால் மட்டும் போதாதே. வேறு எதுவும் சொல்லித் தருவீர்களா? " என்றான்.


"இந்த ஒரே ஒரு தாக்குதலில் நீ வல்லவன் ஆனால் போதும்" என்றார் குரு.


குரு சொல்லிவிட்டால் மறு பேச்சு ஏது? பையனும் பயிற்சியைத் தொடர்ந்தான். சாம்பியன்களுக்கான போட்டி ஆரம்பமானது !

முதல் போட்டி.


ஜூடோவில் எல்லா வகைகளும் கற்றுத் தேர்ந்த எதிராளி. ஒரே ஒரு தாக்குதல் மட்டும் தெரிந்த இந்தப் பையன். போட்டி ஆரம்பமானது.

எல்லோரும் ஆச்சரியப்படும் விதமாக பையன் வெற்றி பெற்றான்.


இரண்டாவது போட்டி.


அதிலும் அவனுக்கே வெற்றி. அப்படியே முன்னேறி அரை இறுதிப் போட்டி வரை வந்தான்.
அதிலும் கொஞ்சம் போராடி ஜெயித்து விட்டான்.


கடைசிப் போட்டி.



எதிரே இருப்பவன் பலமுறை சாம்பியன் பட்டம் பெற்றவன். ஒரு கை இல்லாத எதிராளியைப் பார்த்து அவனுக்கு கொஞ்சம் பரிதாபமும், இளக்காரமும். பையன் சளைக்கவில்லை. போட்டி ஆரம்பமானது.
முதல் சுற்றில் பையனை அடித்து வீழ்த்தினான் எதிராளி. பையனின் நிலையைக் கண்டு பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி. போட்டியை நிறுத்திவிடலாமா என்கின்றனர் போட்டி நடத்துபவர்கள்.

"வேண்டாம்., பையன் சண்டையிடட்டும்" என்றார் குரு.

இந்தப் பையனோடு போரிட இனிமேல் பாதுகாப்புக் கவசம் தேவையில்லை என எதிராளி அலட்சியமாய் வந்திறங்கினான். பையன் தனக்குத் தெரிந்த அந்த ஒரே தாக்குதலை பலமாய் நிகழ்த்தினான். எதிராளி வீழ்ந்தான். பையன் சாம்பியனானான்.


பார்வையாளர்களுக்கு ஆச்சரியம்.


அந்தப் பையனுக்கே தனது வெற்றியை நம்ப முடியவில்லை. அன்று மாலை குருவின் பாதங்களில் பணிந்த அவன் கேட்டான் "குருவே, நான் எப்படி இந்த போட்டியில் வெற்றி பெற்றேன்? ஒரே ஒரு தாக்குதலை மட்டும் வைத்துக் கொண்டு வெற்றி பெற்றிருக்கிறேனே" என்றான்.


புன்னகைத்தபடியே குரு சொன்னார் "உனது வெற்றிக்கு இரண்டு காரணங்கள். ஒன்று ஜூடோவிலுள்ள மிகக் கடுமையான ஒரு தாக்குதலை நீ கற்றுத் தேர்ந்திருக்கிறாய்.

இரண்டாவது இந்த தாக்குதலைத் தடுக்க வேண்டுமானால் எதிராளிக்கு ஒரே ஒரு வழி தான் உண்டு. உனது இடது கையைப் பிடிக்க வேண்டும்.

உனக்குத் தான் இடது கை கிடையாதே! உன்னுடைய பலவீனம்தான் பலமானதாய் மாறி உன்னை சாம்பியன் ஆக்கியிருக்கிறது!"

குரு சொல்லச் சொல்ல பையன் வியந்தான்.  
 
back to top