.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, January 5, 2014

ஆறுதல் சொல்வது எப்படி ?




உங்கள் நண்பரோ மிகவும் நெருங்கியவரோ மனம் உடைந்து போயிருக்கும் நேரத்தில் அல்லது மனம் சோர்வுற்றிருக்கும் போது அவர்களை ஆறுதல் படுத்துவது கொஞ்சம் கஷ்டமான காரியம் தான். அந்த நேரம் என்ன சொல்லித் தேற்றுவது, எப்படி நடந்து கொள்வது என்று நீங்கள் குழம்பிப் போகலாம். நல்ல விதமாக ஒருவரை எப்படித் தேற்றுவது என்று பார்ப்போமா?.

• "அட, என்ன எப்ப பார்த்தாலும் ஒரே கவலையா இருக்கே, கவலையை விட்டுத் தள்ளுப்பா, இதெல்லாம் சகஜம் தான்" என்று கவலையை விடச்சொல்லி உபதேசம் செய்யாதீர்கள். கவலை அல்லது மனச் சோர்வை யாரும் வேண்டுமென்று கட்டிப் பிடித்துக்கொண்டு இருக்கமாட்டார்கள். அது அவர்களுக்கு ஏற்படும் உணர்வு, அவர்கள் அனுபவப்படுவது.

காய்ச்சல் தலைவலி போன்ற ஒர் உடல் நலக் குறைவு. அடிபட்டு ஆஸ்பத்திரியில் கிடப்பவரைப் போய் என்ன கை காலெல்லாம் வீங்கியிருக்கே எல்லாத்தையும் உதறித் தள்ளிவிட்டு எழுந்திரு என்று கூறுவது எவ்வளவு அபத்தம். மனச் சோர்வு என்பது உண்மையிலேயே நோய் தாக்குவதைப் போன்ற ஒரு பாதிப்பு. மனம் உடைந்து போனவர் தன்னைத் தானே உடனே அதிலிருந்து மீண்டு சந்தோசமாக ஆகிவிட முடியாது. காலம் தான் ஆற்ற முடியும். மருத்துவமும் தேவைப்படும்.

• மனம் உடைந்து போயிருப்பவருக்கு தன் துன்பங்களை யாரிடமாவது சொல்லி அழத்தோன்றும். அதைக் கேட்க காதுகள் தான் தேவை. எனவே கேளுங்கள் நன்றாக செவி சாய்த்து கேளுங்கள். அவரது கவலை சிலவேளை உங்களுக்கு அற்பமாக தெரியலாம். அவருக்கு அதன் பாதிப்பு ஆழமாக இருக்கலாம். எனவே எவ்வித அலட்சியமும் காட்டாமல் உண்மையாகவே பரிவோடு அவர் சொல்வதை கேளுங்கள்.

• பொதுவாக உளம் சோர்ந்திருப்பவர்கள் தனிமையை விரும்புவார்கள். தனிமை நிலமையை இன்னும் மோசமாக்கி விடக்கூடும். எனவே அவர்களைக் கொஞ்சம் எதாவது செயல்களில் ஈடுபடத் தூண்டுங்கள். நீங்களும் அவர்களோடு சேர்ந்து செயல் படுங்கள். கவலை தரும் நினைவுகளை கொஞ்ச நேரம் மறந்திருக்க உதவுங்கள்.

• வெளியே எங்காவது காலாற நடந்து விட்டு வரலாம். எப்போதும் ஓரிடத்தில் முடங்கிக் கிடக்காமல், பீச், பார்க் என்று போகலாம். சேர்ந்து பஸ் பயணம் மேற்கொள்ளலாம். புதிய விஷயங்களில் மனம் ஈடுபடும் போது மனம் கவலைகளை சற்று மூலைக்குத் தள்ளி விடும்.

• சுத்தமான ஆடைகள் அணிவது, முடிவெட்டி கொள்வது, தினமும் ஷேவ் செய்து கொள்வது, பிறருடன் பழகுவது போன்றவற்றை தூண்டுங்கள்.

• அவர்களை ஊக்கப்படுத்துங்கள் ஆனால் எதையும் திணிக்காதீர்கள், வற்புறுத்தாதீர்கள், நிர்பந்தப் படுத்தாதீர்கள். அப்படிச் செய்வது அவர்களுக்கிடையே நமக்கு இடைவெளி உண்டாக்கி விடும். நம்மை விட்டு விலகியிருக்கத் தூண்டும். உங்கள் அழைப்பை, ஆறுதலை, ஆலோசனைகளை அவர்கள் ஏற்க மறுத்தால் வற்புறுத்தாதீர்கள். அவர்களுக்கு கொஞ்சம் டைம் கொடுத்து இன்னொரு நாள் மிகவும் தன்மையாய் எடுத்துக் கூறுங்கள்.

• நன்றாக சாப்பிட, நன்றாக தூங்க உதவுங்கள்.

• புகை, போதைப் பொருட்களை நாடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

• மனச்சோர்வு அகற்ற நிறைய மருந்துகள் உண்டு. மருத்துவ உதவி எடுத்துக் கொள்ளத் தூண்டுங்கள். சரியான உளவியல் மருத்துவர்களிடம் கூட்டிச்சென்று தக்க ஆலோசனையும் சிகிட்சையும் பெற உதவி செய்யுங்கள்.

• பிரச்சனைகள் ஏதுமற்ற அமைதியான சூழலை உருவாக்கிக் கொடுங்கள். வீட்டில் மேலும் மன அழுத்தங்கள் உருவாக்கும் நிலைமை இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

• அவர்களது தினசரி வாழ்க்கையில் ஒரு சிட்டையை, ஒழுங்கை அமைத்துக் கொள்ள உதவுங்கள்.

• கவலைக்குக் காரணத்தை ஞாபகப்படுத்தும் பொருட்கள், இடங்கள், மனிதர்களை விட்டு விலகி இருப்பது கவலையை விரைவில் மறக்க உதவும். கவலையை மறக்க வருந்தி முயற்சிக்கக் கூடாது. நினைவுகளில் இருந்து தானாக கவலை அழிய வேண்டும்.

• மனச் சோர்வு வாழ்க்கையில் நம்பிக்கை இழக்கச் செய்து விடும்.எனவே நம்பிக்கையூட்டுங்கள்.

• எது அவர்கள் மனதை கொஞ்சம் இலேசாக்குகிறதோ அதில் அதிகம் ஈடுபட தூண்டுங்கள். உள்ளத்தை அதிகம் சுறு சுறுப்பாக வைத்திருக்கும் எதாவது ஒன்றைக் கற்றுக்கொள்ள உதவுங்கள். கம்யூட்டர், இணையம், புதிய நட்பு, கவலை மறக்கச்செய்யும்.

• உலகத்தைப் பற்றிய கண்ணோட்டத்தை மனசோர்வு சிதைத்து விடும். காலமும் சரியான சிகிட்ச்சையும் நிச்சயம் அதை மீட்டுத்தரும்.

ஒரு திடீர் மரணமோ, அதிகப்படியான சோகமோ மூளையில் கார்டிகோட்ரோபின் எனும் அமிலத்தை சட்டென சுரக்கவைத்து மூளை முழுவதும் பரப்பி விடுகிறது. இந்த அமிலமே அதிகப்படியான மன அழுத்தத்தையும், தாங்கொண்ணா துயரத்தையும் தருவிக்கிறது என்று அட்லாண்டாவின் எமோரி பல்கலைக்கழக மருத்துவர்கள் ஆராய்ந்து கண்டுபிடித்துள்ளனர். உறவுகளை இழக்கும் போது உண்டாகும் அதிகப்படியான வலியைக் குறைக்கவும், கடும் துயரத்திலிருந்து விரைவில் மீளும் வழியைக் காட்டவும் இந்த கண்டுபிடிப்பு உதவும்.

துயரங்கள் தவிர்க்க இயலாதவை, அவற்றைத் தாங்கும் மனம் எளிதில் அமைந்து விடுவதில்லை என்பது இழப்பைச் சந்தித்தவர்களால் புரிந்து கொள்ள முடியும். அத்தகைய துயரங்களின் அழுத்தத்தை மருந்து, மாத்திரைகள் வாயிலாக குறைக்க முடியுமெனில் அதுவும் நல்ல செய்தி தான்.

சோர்வை நீக்கும் உணவு வகைகள்:


சோர்வை நீக்கி மூளைக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி தருவதற்கு சோளம், புரதம் அதிகம் உள்ள உருளைக்கிழங்கு, ஃபோலிக் அமிலம் உள்ள முட்டை கோஸ், சப்பாத்தி, தயாமின் என்ற வைட்டமின் நிறைந்த கொண்டைக்கடலை, இரும்பு சத்து நிறைந்த பேரீச்சை, மொச்சை, பீட்ரூட் முதலிய உணவுகள் அடிக்கடி உணவில் இடம் பெறச் செய்வது நல்லது.

பெண்களின் கால்சியமும் வைட்டமின் 'டி' யும்



பெண்களின் ஆரோக்கியத்திற்கு அடிப்படையானது கால்சியம். வெறுமனே பாலையும், தயிரையும் குடிப்பதால் மட்டுமே கால்சியம் அளவு  அதிகரிப்பதில்லை. அதற்கு வைட்டமின் டி சத்து அவசியம். கால்சியம் மற்றும் வைட்டமின் டி சத்துகள் குறைபாட்டால் பெண்கள் சந்திக்கக் கூடிய  பிரச்சனைகளைப் பற்றியும், அவற்றுக்கான தீர்வுகள் பற்றியும் விளக்கமாகப் பேசுகிறார் மகப்பேறு மருத்துவர் மாலா ராஜ்

கால்சியம் பற்றாக்குறை வந்தா வரக்கூடிய பிரச்சனைகள் பத்தி மக்களுக்கு ஓரளவுக்குத் தெரியுது. ஆனா அந்த கால்சியத்துக்கு தேவையான  வைட்டமின் டி பத்தின விழிப்புணர்வு பலருக்கும் இல்லை..

முட்டையோடு வெள்ளை கரு, உலர் பழங்கள்னு உணவுப்பொருட்கள் மூலமா கிடைக்கிற வைட்டமின் டி ரொம்ப அரிது. அந்தச் சத்துக்கான ஒரே  ஆதாரம் சூரிய வெளிச்சம். ஆனா வெயில்ல தலைகாட்டினா சருமம் கருத்துடும், அழகு போயிடும்னு பலரும் வெயிலைத் தவிர்க்கறோம்.. அதிகாலை  சூரிய வெளிச்சத்துலதான் வைட்டமின் டி அதிகம் என்ற கருத்து உண்மையில்லை.. காலை 10 மணிலேர்ந்து பிற்பகல் 3 மணி வரைக்குமான  வெயில்ல தான் போதுமான வைட்டமின் டி சத்தை பெற முடியும்.

ஆனா அந்த நேரத்துல வெயில் அழகுக்கு எதிரிங்கிறதால சருமத்தை பாதுகாக்க சன் ஸ்கிரீன் போட்டுக்கறோம். சன் ஸ்கிரீன் போடறது மூலமா  வைட்டமின் டி சத்து சருமத்துக்குள்ள ஊடுருவறது தவிர்க்கப்படுகிறது. தசைகள் வலுவோட இருக்க, இதயம் சரியா இயங்க ரத்தத்துல  ஹீமோகுளோபின் அளவு சரியான அளவுல இருக்க இப்படிப் பல விஷயங்களுக்கு வைட்டமின் டியும் அவசியம்..

கர்ப்பிணி பெண்களுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின் டி பற்றாக்குறை இருந்தா அவங்களுக்குப் பிறக்கிற பெண் குழந்தைக்கு இடுப்பெலும்பு சின்னதா  இருக்கும். அந்த குழந்தை வளர்ந்து திருமணமாகி குழந்தை பெறும் நேரத்துல அதுக்கு சிசேரியன் தேவைப்படலாம். ஒரு மாசத்துக்கு ஒருத்தருக்கு  60ஆயிரம் யூனிட் வைட்டமின் டி தேவை.. ரத்தப் பரிசோதனை மூலமா இந்த பற்றாக்குறையைக் கண்டுபிடிக்கலாம்.

மருத்துவரோட ஆலோசனையோட வைட்டமின் டி மருந்துகளை 3 மாதங்களுக்கு எடுத்துக்கிட்டு மறுபடி ஒரு பரிசோதனை செய்து பார்த்து, போதுமான  அளவு இருக்கிற பட்சத்துல மருந்துகளை நிறுத்திடலாம். 35வயதுக்கு மேலான பெண்களும், கர்ப்பிணி பெண்களும் கட்டாயம் கால்சியம் மற்றும்  வைட்டமின் டி அளவுகள்ல கவனமா இருக்கணும். இது போதிய அளவு இருக்கிறது மூலமா முதுகு வலி, கொலஸ்ட்ரால் பிரச்சனைகளை கூட  தவிர்க்க முடியும்.

23 முறை கேட்ட கேள்வி - (சிறுகதை)




23 முறை கேட்ட கேள்வி:-

வசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது! 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். மூதாட்டியான அவரது மனைவி அவருக்கருகில் அமர்ந்து தனது இடுங்கியக் கண்களால் திருமறையை ஓதிக் கொண்டிருக்கிறார். நன்கு படித்து, பெரிய பதவியில் இருக்கும் 45 வயதுடைய அவர்களின் மகனும் தனது லேப்-டாப்பில் ஏதோ வேலை செய்துக் கொண்டிருக்கிறார்.

திடீரென ஒரு காகம் முதியவரின் அருகிலிருந்த சன்னலில் வந்து அமர்ந்தது.

“என்ன இது?” என்று கேட்டார் முதியவர்.

லேப்-டாப்பிலிருந்து கண்களை விளக்கிய மகன் சொன்னார், “அது ஒரு காகம்”

சில நிமிடங்கள் கழிந்தன. அந்த முதியவர் மீண்டும் கேட்டார், “என்ன இது?”

“இப்பத்தானே சொன்னேன், அது ஒரு காகம்” என்றார் மகன்.

சிறிது நேரம் கழித்து மூன்றாம் முறையாக அந்த முதியவர் தன் மகனிடம் கேட்டார், “என்ன இது?”

சற்று எரிச்சலான குரலில் மகன் பதிலளித்தார், “அது ஒரு காகம், காகம்!”

இன்னும் சிறிது நேரம் கழித்து அந்தத் தந்தை நான்காவது முறையாக அதே கேள்வியைக் கேட்டார், “என்ன இது?”

மகனோ பொறுமையை இழந்து விட்டார். தனது தந்தையைப் பார்த்து அவர் கத்தினார், “அதே கேள்வியை ஏன் திரும்பத் திரும்ப கேட்டுட்டே இருக்கீங்க? எத்தனை முறைதான் பதில் சொல்வது, ‘அது ஒரு காகம்’ என்று? இதைக்கூட உங்களால புரிஞ்சுக்க முடியலையா?”

முதுமை அடைந்து விட்டதால் மீண்டும் சிறு குழந்தை போல ஆனதாலோ என்னவோ, தந்தையின் முகத்தில் எந்தவித உணர்ச்சிகளும் தென்படவில்லை. அவருக்கருகில் அமர்ந்து அமைதியாகக் குர்ஆனை ஓதிக்கொண்டிருந்த அவரது மனைவி எழுந்து தமது அறைக்குச் சென்று திரும்பினார். அவரது கையில் மிகப் பழைய நாட்குறிப்பு ஒன்று இருந்தது.

அது அந்தத் தந்தையின் நாட்குறிப்பு. தன் மகன் பிறந்ததிலிருந்து அவர் அதில் எழுதி வந்தார். அதில் ஒரு பக்கத்தைத் திறந்தத் தாய் அதைத் தன் மகனிடம் கொடுத்து படிக்கச் சொன்னார்.

அந்தப் பக்கத்தில் இவ்வாறு எழுதப் பட்டிருந்தது;

“எனது சின்னஞ்சிறு மகன் என்னுடன் உட்கார்ந்திருக்கும்போது சன்னலில் ஒரு காகம் வந்தமர்ந்தது. என் மகன் ‘அது என்ன’ என்று 23 தடவைகள் கேட்டான். ‘அது ஒரு காகம்’ என்று நான் 23 தடவைகளும் பதில் சொன்னேன். அவன் ஒவ்வொரு முறை அந்தக் கேள்வியை கேட்டபோதும் நான் அவனை பாசத்துடன் அணைத்துக் கொண்டேன். அவன் திரும்பத் திரும்பக் கேட்ட அதே கேள்வி என்னை எரிச்சலடையச் செய்யவில்லை. அதற்கு மாறாக, கள்ளங்கபடமற்ற அச்சிறு குழந்தையின் மீது எனக்கு பிரியம்தான் அதிகமானது”.

இதைப் படித்த மகனின் கண்கள் பனித்து விட்டன. 23 தடவை அதே கேள்வியை கேட்டபோதும் தன் மீது பாசமழை பொழிந்த தன் தந்தை மீது எரிச்சலடைந்ததற்காக அவரது மனம் வருந்தியது.

ஆக்ஸிஜன் பயன்பாடு…



ஆக்ஸிஜன் இல்லாமல் ஒரு மனிதன் சில நிமிடங்கள்
மட்டுமே உயிர் வாழ முடியும். காரணம், ஆக்ஸிஜன்
இல்லாமல் மனித மூளையால் செயல்பட முடியாது.

 நாம் சுவாசிக்கும் போது உள்ளே செல்லும் ஆக்ஸிஜனில்,
சுமார் 20 சதவீதம் ஆக்ஸிஜனை நமது மூளையே
பயன்படுத்துகிறது.

 சுமார் 8 முதல் 10 வினாடிகள் மூளைக்கு ஆக்ஸிஜன்
கிடைக்காமல் போனாலும், மனிதன் உணர்வற்ற
நிலைக்குத் தள்ளப் படுவான். அடுத்த சில நொடிகளில்
மூளையின் செல்கள் இறந்து, மனிதன் மரண நிலைக்குத்
தள்ளப்படுகிறான்.

 இருப்பினும் மிகக் குறைந்த வெப்ப நிலையில் மனித
மூளைக்கு மிகக் குறைந்த ஆக்ஸிஜன் போதுமானது.
காரணம், மிகக் குறைந்த வெப்பநிலையில்
மூளையானது மிகக் குறைந்த ஆக்ஸிஜனையே
உபயோகிக்கிறது.

 எனவே, நீண்ட நேரம் நடைபெறும் அறுவை சிகிச்சைகள்
மிகக் குறைந்த வெப்பநிலையில் செய்யப்படுகிறது.
காரணம், மிகக் குறைந்த ஆக்ஸிஜன் பயன்பாட்டில்
அறுவை சிகிச்சையைச் செய்து முடித்துவிட இயலும்.

 மனித மூளையைத் தவிர மற்ற உறுப்புகள் ஆக்ஸிஜன்
இல்லாமலும் சில மணி நேரம் செயல்படுகின்றன.
எனவேதான், இறந்த மனிதனது மூளையைத் தவிர,
மற்ற சில உறுப்புகள் உறுப்பு மாற்று சிகிச்சைக்குப்
பயன்படுத்தப்படுகின்றன.
 
back to top