.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, January 9, 2014

இவ்வளவுதான் நம்ம..?

இவ்வளவுதான் நம்ம..? 


1. நீங்கள் சுறுசுறுப்பாக வேலை செய்யும் போது உங்கள் மூளை 25 வாட்ஸ் மின்சாரத்தை உருவாக்கும் திறன் பெற்றது, இது ஒரு பல்பை ஒளிரச் செய்யப் போதுமான அளவு மின்சாரம் ஆகும்.

2. நாக்கின் ரேகை மனிதனுக்கு மனிதன் வேறுபடும்.

3. ஒவ்வொரு நாளும் நமது உடம்பு 300 பில்லியன் செல்களை உற்பத்தி செய்கிறது.

4. மனித மூளை சுமாராக 100 பில்லியன் நரம்பு செல்களை உள்ளடக்கியது.

5. தைராய்டு குருத்தெலும்பு பொதுவாக ஆடம்ஸ் ஆப்பிள் என அழைக்கப்படுகிறது.

6. குழந்தைகள் வசந்த காலத்தில் வேகமாக வளர்கின்றன.

7. சராசரியாக மனித இதயம் அதன் வாழ்நாளில் 3,000 மில்லியன் முறை துடிக்கிறது.

8. உங்கள் உடலில் உள்ள எலும்புகளில் நான்கில் ஒரு பங்கு எலும்புகள் உங்கள் கால் பாதங்களில் அமைந்துள்ளன.

9. மொத்த மக்கள் தொகையில் 7% பேர் இடது கைப்பழக்கம் உடையவர்கள்.

10. உங்கள் வாழ்நாளில் சுமாராக இரண்டு வாரங்கள் முத்தம் அளிக்கச் செலவு செய்கிறீர்கள்.

நீங்கள் முத்தம் அளிக்கும் போது உங்கள் உடம்பில் இருந்து 26 கலோரி செலவழிக்கப்படுகிறது.

11. உங்கள் உடலில் உள்ள உறுப்புகளில் நுரையீரல் மட்டுமே நீரில் மிதக்கும் தன்மை உடையது.

12. நீங்கள் ஒரு நாளைக்கு 22000 முறை சுவாசிக்கிறீர்கள்.

13. பெரும்பாலான முதுகெலும்பு உள்ள விலங்குகள் இரண்டு நுரையீரல் கொண்டிருக்கின்றன.

14. இரண்டு கால் பந்துகளின் அளவை ஒத்தது உங்கள் நுரையீரல்.

15. பிறந்த குழந்தை ஒரு நிமிடத்திற்கு 40 முதல் 50 முறை சுவாசிக்கிறது. குழந்தை 5 வயதை அடையும் போது இது 25 முறையாக குறைகிறது.

வந்தாச்சு கேப்ஸ்யூல் பேபி..!



'கொஞ்சி மகிழக் குழந்தை இல்லையே...’ என்று ஏங்குபவர்களின் எண்ணிக்கை குறையும் வகையில் மருத்துவ அறிவியலும், ஆராய்ச்சியும், டெக்னாலஜியும் படுவேகமாக வளர்ந்து நம்மை வியக்கவைக்கின்றன.

கருத்தரித்தலில் பிரச்னை உள்ள தம்பதிகளுக்கு, ஐ.யு.ஐ., ஐ.வி.எஃப். போன்ற செயற்கைக் கருவூட்டல் முறைகள், இப்போது வரப்பிரசாதமாக உள்ளன. இதில், ஐ.வி.எஃப். சிகிச்சைக்கான கட்டணம் சில லட்சங்கள். சிகிச்சை வெற்றிபெறுவதற்கான வாய்ப்பும் குறைவுதான். ஓரிரு தடவை ஐ.வி.எஃப். முறையில் சிகிச்சைக்கு முயற்சித்தும், குழந்தை பெறாதவர்களும்கூட உள்ளனர். தற்போது ஐ.வி.எஃப். சிகிச்சையின் கட்டணத்தை மூன்றில் ஒன்றாகக் குறைக்கும் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஈரோட்டைச் சேர்ந்த மாருதி மருத்துவமனை அறிமுகம் செய்துள்ளது.

சேலத்தைச் சேர்ந்த வேலப்பன், பங்கஜம் தம்பதியினருக்கு இந்த நவீனத் தொழில்நுட்பத்தின் மூலம் பெண்குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து ஈரோடு மாருதி மெடிக்கல் சென்டரின் மகப்பேறு இன்மைக்கான சிறப்பு மருத்துவர் நிர்மலா சதாசிவம் மற்றும் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சதாசிவம் ஆகிய இருவரிடமும் பேசினோம்.

'ஐ.வி.எஃப். முறை சிகிச்சையில், சினைப்பை முட்டை தூண்டப்படுதல், முட்டையை வெளியே எடுத்தல், விந்து அணுவுடன் சேர்த்துக் கருவை உருவாக்குதல், உருவான கருவை குறிப்பிட்ட நாட்கள் வரை இன்குபேட்டரில் வளர்த்தல், வளர்ந்த கருவை, கருப்பைக்கு மாற்றுவது என்று பல கட்டங்கள் உள்ளன. இந்தச் சிகிச்சைக்கு வெளிநாடுகளில் இருந்து விலை உயர்ந்த மருந்துகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. மருந்து தவிர்த்து, இன்குபேட்டர் உள்ளிட்ட மேலும் சில காரணங்களால் சிகிச்சைக்கான செலவு அதிகரிக்கிறது.

இந்தச் செலவைக் குறைக்கும் வகையில், கேப்ஸ்யூல் ஐ.வி.எஃப். என்ற நவீன சிகிச்சை வந்துள்ளது. இதில் முட்டை, குறைந்த அளவில் தூண்டப்பட்டு எடுக்கப்படுகிறது. வெளியே எடுக்கப்படும் முட்டை, ஆண் உயிரணுவுடன் சேர்க்கப்படும். இதை கேப்ஸ்யூலில் உயிர்ச் சத்து திரவத்துடன் சேர்த்து இன்குபேட்டரில்வைத்து வளர்க்காமல், பெண்ணின் ஜனனப்பாதையின் உட்பகுதியில் பாதுகாப்பாகவைக்கப்படும். உயிரணு குறைவு பிரச்னை இருந்தால், நுண்ணோக்கியில் பார்த்தபடி, விந்தணுவை முட்டைக்குள் செலுத்தி, அதை கேப்ஸ்யூலில்வைத்து ஜனனப்பாதையில் வைப்போம். இதனால், இயற்கையான சூழ்நிலையில் கரு வளர்வதற்குத் தேவையான தட்பவெப்பநிலை கிடைக்கிறது. கரு வளர்ச்சி அடைந்ததும், அது கர்ப்பப்பைக்கு மாற்றப்படும். கர்ப்பப்பையில் ஒட்டிக்கொள்ளும் அந்தக் கரு நன்கு வளர்ச்சி அடையும். இன்குபேட்டர், அதிக ஆற்றல்மிக்க மருந்துகள் பயன்படுத்துவது குறைக்கப்படுவதால் சிகிச்சைக்கான செலவும் பெருமளவு குறைந்துவிடுகிறது. இந்த கேப்ஸ்யூல் உள்ளிட்ட மருந்துகளை இந்தியாவிலேயே தயாரிக்கும்போது ஐ.வி.எஃப். கட்டணம் தற்போது உள்ளதைவிட, நான்கில் ஒரு பங்காகக் குறைந்துவிடும்' என்றார் டாக்டர்.

பணம் அதிகம் செலவழித்து, சோதனைக்குழாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கும் தம்பதிகளின் வயிற்றில் பால்வார்க்கும் செய்திதான்!

காளிபிளவர் மொச்சை மசாலா...




காளிபிளவரை பகோடா செய்திருப்போம், உருளைக் கிழங்குடன் சேர்த்து வறுவல் செய்வோம். அதேப்போல, மொச்சைக் கொட்டையுடன் சேர்த்து பொறியல் செய்யலாம். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
 
செய்யத் தேவையானவை

காளிபிளவர் - ஒரு பூ

மொச்சைக் கொட்டை - 100 கிராம்

வெங்காயம் - 2

தக்காளி - 2

இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன்

கடுகு, எண்ணெய், கறிவேப்பிலை - தாளிக்க

உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்

தேங்காய் துருவல் - அரை கப்

செய்யும் முறை

மொச்சைக் கொட்டையை குக்கரில் 3 விசில் வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

காளிபிளவரை ஒவ்வொரு கிளையாக நறுக்கி  ஒரு பாத்திரத்தில் சுடு தண்ணீர் ஊற்றி அதில் போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்து சுத்தப்படுத்தி, தேவையான அளவுக்கு நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

வெங்காயம், தக்காளியை நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

அடுப்பை பற்ற வைத்து அதில் கடாயை வைக்கவும். அதில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொறிந்ததும் உளுத்தம் பருப்பை போட்டு அது சிவந்ததும் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

பிறகு, வெங்காயத்தையும், தக்காளியையும் போட்டு நன்கு வதக்கி, நறுக்கி வைத்துள்ள காளிபிளவரையும், வேக வைத்துள்ள மொச்சைக் கொட்டையையும் போட்டு நன்கு கிளறவும்.

தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்கு கிளறவும். அடி பிடிக்காமல் இருக்கும் வகையில் அவ்வப்போது நன்கு கிளறி மசாலா பொருட்கள் சிவந்து வரும் போது தேங்காய் துருவலை சேர்த்து இறக்கவும்.

காளிபிளவர் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் காய்களில் ஒன்றாகும். காளிபிளவரில் கால்சியம் அதிகம் உள்ளது. நரம்பை பலமாக்குவதோடு, புத்துணர்ச்சியை அளிக்கும். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் இது நல்ல உணவாக அமைகிறது. வாயுத் தொல்லை இருப்பவர்கள், காளிபிளவருடன் பூண்டு சேர்த்து சாப்பிடலாம்.

இளமையைத் தக்க வைத்துக்கொள்ள ஆசையா?




தலைப்பைப் பார்த்ததும், ‘இதற்கும் நமக்கும் சம்பந்தமில்லை’ எனப் பக்கத்தைப் புரட்டாதீர்கள். 25 பிளஸ்சில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணும்  அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் இவை. ‘50 பிளஸ் நெருங்குபவர்கள்தான் வயதானவர்கள்’ என்கிற பார்வை உங்களுக்கு  இருக்கலாம். ஆனால், முதுமைத்தோற்றம் என்பது உங்கள் சருமத்தையும் கூந்தலையும் 25 வயதிலிருந்தே விரட்ட ஆரம்பிக்கிற உண்மை தெரியுமா?

“முதுமைத் தோற்றத்துக்கு எதிரான உங்கள் போராட்டமும் முயற்சிகளும், 25 வயதிலிருந்தே தொடங்கப்பட வேண்டியது அவசியம்” என்கிறார்  ‘நேச்சுரல்ஸ் டபிள்யூ’ உரிமையாளர் வீணா குமாரவேல். இளமையைத் தக்க வைத்துக்கொள்ள ஆசைப்படுவோருக்கு அவரது ஆலோசனைகள் நிச்சயம்  உதவும். ‘‘நமது சருமம், 20 வயதில் இருப்பது மாதிரி 40 வயதிலோ, 40ல் இருப்பது மாதிரி 60 வயதிலோ இருப்பதில்லை. 20களின் தொடக்கத்தில்,  சருமத்தின் செல்கள், மீள்தன்மையையும் ஈரப்பதத்தையும் இழக்கத் தொடங்கும்.

சருமத்தில் அது வரை இருந்த மிருதுத்தன்மை மாறி, ஒருவித வறட்சியையும் மெலிதான கோடுகளையும் பார்க்கலாம். சருமத்தின் அழகுக்கும்  பூரிப்புக்கும் காரணமான எலாஸ்டின் மற்றும் கொலாஜன் என்கிற இரண்டு புரதங்களின் சுரப்பும் குறையத் தொடங்கும். அதற்கு மிக முக்கிய காரணம்  வெயில். கூடிய வரையில் வெயிலில் செல்வதைத் தவிர்ப்பதும், தினம் இரண்டரை லிட்டர் தண்ணீர் குடிப்பதும், 30 வயதில் அடியெடுத்து  வைப்போருக்குப் பாதுகாப்பளிக்கும்.

30ல் அடியெடுத்து வைப்போருக்கு, கண்களுக்கடியில் மெலிதான கோடுகள் தென்பட ஆரம்பிக்கும். சருமம் வறண்டு போவது, சருமத்தில் ஆங்காங்கே  சிவப்பு மற்றும் பிரவுன் நிறப் புள்ளிகள் தோன்றுவது, கண்களுக்கடியில் வீக்கம், வாயைச் சுற்றியும் நெற்றியிலும் கோடுகள் போன்றவை தோன்றலாம்.  கொலாஜன் மற்றும் எலாஸ்டின் ஆகிய புரதங்களின் சுரப்பு இன்னும் அதிகமாகக் குறையத் தொடங்குவதன் விளைவுகளே இவை.

40 வயதுக்குப் பிறகு சருமத்தில் உண்டாகிற பிரச்னைகளை சரி செய்து, பழைய தோற்றத்துக்குத் திரும்பச் செய்வது சற்றே சிரமமானதுதான்.  அதனால்தான், 40 பிளஸ்ஸில் இருப்பவர்கள் எடை குறைக்கும் முயற்சிகளை மேற்கொள்ளும்போது, அவர்களது முகத்தசைகள் தொய்வடைந்து,  முதுமைத்தோற்றம் தெரிகிறது. எலாஸ்டின், கொலாஜன் சுரப்பு இல்லாததால், சருமம் உறுதி இழந்து, தொய்வடைகிறது. சுருக்கங்களும் கோடுகளும்  இன்னும் சற்று ஆழமாகத் தெரியும்.

50 வயதில் சருமச் சுருக்கங்களும் கோடுகளும் வெளிப்படையாகவே தெரியத் தொடங்கும். மெனோபாஸ் காலகட்டம் என்பதால், பெண்களின் உடலில்  நிகழும் ஹார்மோன் மாற்றங்களும் சரும அழகைப் பெரிதாகப் பாதிக்கும். இவை எல்லாம் அந்தந்த வயதுக்குரிய இயற்கையான மாற்றங்கள்.  இளமையில் இருந்தே சருமப் பராமரிப்பில் அக்கறை காட்ட ஆரம்பிக்கிறவர்களுக்கு, இந்த மாற்றங்கள் தள்ளிப் போவதுடன், நீண்ட காலம் இளமைத்  தோற்றம் தக்க வைக்கப்படுகிறது. அதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும்?

தினமும் சருமத்துக்கு கிளென்சர், டோனர், மாயிச்சரைசர் உபயோகிக்க வேண்டும். வயதாக ஆக கொழுப்பு உணவு தவிர்த்து, முழு தானிய உணவுகள்,  மீன், காய்கறிகள், பழங்களை அதிகம் சேர்க்க வேண்டும். உப்பையும் சர்க்கரையையும் பாதியாகக் குறைப்பது நல்லது. சோயா உணவுகளை அதிகம்  சேர்த்துக் கொள்ளலாம்.

மெனோபாஸில் இருப்போருக்கு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க சோயா உதவும்.வால்நட்  மற்றும் பிரேசில் நட், பாதாம் ஆகியவை இளமைக்கு உதவக்கூடியவை. தக்காளி, பப்பாளி, கிவி, ஆரஞ்சு, திராட்சை, மாதுளை, அவகேடோ, ஸ்ட்ராபெர்ரி  ஆகிய பழங்களும், பசலைக்கீரை, பீட்ரூட், கிரீன் டீ, டார்க் சாக்லெட் போன்றவையும் இளமைத் தோற்றத்துக்கான உணவுகள்.

 
back to top