.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, January 10, 2014

மிஸ்டுகால்- தவறிய அழைப்புகளில் தடம் புரளும் வாழ்க்கை..!

மிஸ்டுகால்- தவறிய அழைப்புகளில் தடம் புரளும் வாழ்க்கை!!! எச்சரிக்கை ரிப்போர்ட் :-


மிஸ்டு கால்(Missed Call) – இது ஒரு அழையா விருந்தாளி. மீனைப் பிடிக்க தூண்டில் போட்டு காத்திருப்பவர் போலவே சிலர் மிஸ்டு கால்கள் மூலம் வலை வீசுகின்றனர்.

உலகமெங்கும் விரிக்கப்பட்டுள்ள மிஸ்டு கால் என்ற வலையில் சிக்குபவர்கள் இளம் பெண்களும், திருமணமான பெண்களுமாவர். மிஸ்டுகால்களை தொடுக்கும் பாலியல் வக்கிரப் புத்திக் கொண்டோரின் அம்புகளால் தாக்கப்படுபவர்களில் வளைகுடாவாசிகளின் மனைவிகளும் அடங்குவர் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

மிஸ்டுகால் மூலம் போடப்படும் தூண்டில்

ஆர்குட், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் புகைப்படங்களை போஸ்ட் பதிவது, தகவல்கள், போன் நம்பர்கள் போன்றவற்றைத் தருவதும் மிஸ்டு கால்களுக்கு தூண்டுகோலாக அமைந்துவிடுகிறது. அந்த படங்களை பார்த்து, எண்ணைப் பார்த்து மிஸ்டு கால் பிரச்சினை உருவாகலாம்.

ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால் தெரியாத, எண்களில் இருந்து வரும் மிஸ்டு கால், எஸ்.எம்.எஸ் போன்றவற்றை நிராகரித்து விட்டால் தேவையற்ற சிக்கல்கள் தவிர்க்கப்பட்டு விடும்….!!!

யாரோ அழைத்திருக்கிரார்களே…. முக்கியமான சமாச்சாரமோ என திரும்ப அழைத்தால் போச்சு! சிலர் வீட்டில் இருக்கும் ஆண்களிடம் கொடுத்து பேசச் சொன்னால் அத்துடன் பிரச்சனை முடிந்துவிடலாம். ஆனால், தனிமையில் இருக்கும் பெண்களிடம் தொடர்ந்து வரும் கால்கள் தடுமாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.

கடிதங்கள் மூலமாகவும், பார்வை மூலமாகவும் பெண்களை வீழ்த்திய காலம் மாறிப்போய் மிஸ்டு கால்கள் மூலமாக பெண்களை வெகு விரைவாக எவ்வாறு தங்கள் வலையில் சிக்கவைக்கின்றார்கள் என்பது குறித்து ஆராயும் பொழுது விஞ்ஞானப்பூர்வமாக சில உண்மைகள் புலப்படுகின்றன.

1.வசீகரிக்கும் குரல் காதலுக்கு முக்கிய காரணியாக மாறும்பொழுது ஐம்புலன்களும் அதில் ஒன்றி விடுகின்றன.

2.கடிதத்திற்கோ, மின்னஞ்சலுக்கோ இல்லாத ஈர்ப்பு கேள்விப் புலனுக்கு உண்டு.

3.தன்னை ஒருவர் விரும்புகிறார் என்பதை கேட்பது அனைவருக்கும் விருப்பமான ஒன்றுதான். இது ஒரு மனிதனுக்கு இயற்கையிலேயே உள்ள பலகீனமாகும்.

4.காதலுடன் வாழ்வில் குறுக்கிடும் நபர் வாழ்க்கையின் வெற்றிடத்தை நிரப்புவார் என்றதொரு கற்பனையை தாமாகவே வளர்த்துக்கொள்ளுதல்

அழையா விருந்தாளியின் மனசு!

மிஸ்டுகால் உறவுகளை ஆராயும்பொழுது நமக்கு புலப்படுவது என்னவெனில் மிஸ்டுகால்களை தொடுக்கும் நபரின் எண்ணமாகும். தனது இச்சையை தணித்துக்கொள்ளவும், சொந்த ஆதாயங்களையும் லட்சியமாக கொண்டே ஒருவன் மிஸ்டுகால் என்ற அம்பை எய்துவிடுகிறான்.

அழையா விருந்தாளியாக வீட்டின் வாசலை தட்டும் பொழுது அவனை வரவேற்க வேண்டுமா? புறக்கணிக்க வேண்டுமா? என்ற முடிவை எடுக்கும் சுதந்திரம் வீட்டுக்காரனுக்கு உண்டு. எவ்வித அறிமுகமும் இல்லாமல் வீட்டுக் கதவை தட்டுபவனை வரவேற்பதால் வீட்டுக்காரருக்கு எவ்வித பலனும் ஏற்படப் போவதில்லை. எவரேனும் இவ்வாறு அழையா விருந்தாளியாக வீட்டிற்குள் நுழைந்தால் அதில் 99 சதவீதமும் தவறான நோக்கமே அடங்கியிருக்கும்.

இதனைப் புரிந்துகொள்ளாமல் படித்த, அனுபவம் வாய்ந்த பெண்கள் கூட முன்னும் பின்னும் யோசிக்காமல் மிஸ்டுகால்களின் வலையில் சிக்கி விடுவதை நாம் காண்கிறோம்.

இதற்கு என்ன காரணம்?

1.வெற்றிகரமான இல்லற வாழ்க்கைக்கு தேவையான கல்வி நமது குடும்பங்களில் இருந்தோ, கல்வி நிலையங்களில் இருந்தோ , மார்க்க நிறுவனங்களில் இருந்தோ கிடைப்பதில்லை.

2.நவீன காலக்கட்டத்தில் வளர்ச்சியடைந்துள்ள தொழில்நுட்பங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் வாயிலாக உருவாகும் அபாயங்கள் குறித்து இந்நிறுவனங்கள் எச்சரிக்கை விடுப்பதில்லை.

3.தகவல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் குறித்து சமூகம் அலட்சியமான போக்கை கையாண்டு வருகிறது. காலத்தின் சூழலுக்கு ஏற்றவாறு பழைய சம்பிரதாயங்களில் இருந்து மாத்தி யோசிக்க சமூகம் தற்பொழுதும் தயாராகவில்லை.

4.தன் மீதான அதீத நம்பிக்கையில் வளரும் இந்த தகாத உறவுகள் வெகுவிரைவில் தீவிரமடைந்துவிடுகிறது.

5.பெண்களில் தீவிரமாக காணப்படும் எதனையும் எளிதில் உள்வாங்கும் குணம் பாலியல் ரீதியான தவறுகளை புரிய துணைபுரிகின்றது.

6.நவீன காலக்கட்டத்தில் பெண்களுக்கு கிடைத்துள்ள பொருளாதார சுதந்திரம் செல்ஃபோன் தொடர்புகளை அதிகரிக்க செய்கிறது.

7.தொலைக்காட்சி சேனல்களில் காட்டப்படும் எந்த மோசமான காட்சிகளையும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து காணும் சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். புதிய தலைமுறையினருக்கு இடையே ஆண்-பெண் உறவுகள் குறித்த பார்வையில் கலாச்சார வீழ்ச்சியை உருவாக்க இது காரணமாகிறது.

8.இல்லற வாழ்க்கையில் தம்பதியினர் இடையே பரஸ்பர அன்பும், பிணைப்பும் வறட்சியாக காணப்படுவதால் தாம்பத்தியம் குறித்த கனவு மாளிகைகள் தகர்ந்து போகின்றன. இல்லற வாழ்க்கையில் வெறும் உடல் இச்சை மட்டுமே குறிக்கோளாக இருக்கும் பொழுது வெகுவிரைவில் திருமண வாழ்க்கை சலித்துப் போகிறது.

9.வளைகுடாவாசிகளைப் பொறுத்தவரை திருமணம் முடிந்த சில வாரங்களிலேயே கணவன்-மனைவி இடையே பிரிவு ஏற்பட்டு விடுகிறது. விடுமுறை முடிந்து கணவன் வெளிநாட்டுக்கு திரும்புகையில் தம்பதியினர் இடையே உண்மையான அன்பும், நேசமும், காதலும் முறையாக பரிமாறப்படாத சூழல் உருவாகிவிடுகிறது. இத்தகையதொரு சூன்யமான சூழலில் வரும் மிஸ்டுகால்கள் முக்கியத்துவம் பெற்றுவிடுகின்றன.

10.ஒரு குழந்தை பிறந்த உடன் தாம்பத்தியத்தின் வசந்தம் அணைந்து போவதைத் தான் பொதுவாக காண்கிறோம். முற்றிலும் இயந்திர மயமாகிப்போன வாழ்க்கையில் புதிய வசந்தங்களை மனம் தேட துவங்குகிறது.

தொடர்கதையாகும் துயரங்கள்!

மிஸ்டு கால் மூலமாக இளம்பெண்களின் அந்தரங்க வாழ்வில் ஊடுருவும் ஆசாமி உடனான உறவில் ஒரேயொரு அடிப்படையாக அமைவது செல்ஃபோன் நம்பர் மட்டுமே. இந்த ஆசாமி, குடிகாரனாகவோ, போதைப் பொருளுக்கு அடிமையானவனாகவோ, பெண்களை ஆபாச வலையில் சிக்கவைத்து அதன் மூலம் சம்பாதிப்பவனாகவோ, மனநோயாளியாகவோ, ரெளடியாகவோ இருக்கலாம்.

மேலே கூறப்பட்ட நபர்களுக்கு காதலும், பாலியலும் எல்லாம் ஆதாயமும், பொழுது போக்குமாகும். முறையான வழிகாட்டுதல்கள் இன்றி பாலியல் வக்கிரத்திற்கு அடிமையாகிப் போன விடலைப் பையன்களும் இதில் அடங்குவர். இத்தகைய நபர்கள் மிஸ்டுகால்களை விடுத்து காதில் ஓதும் மந்திரங்களை நம்பும் இளம் பெண்கள் வரப்போகும் துயரங்களை விலைக் கொடுத்து வாங்குகின்றனர்.

சிம் கார்டை மாற்றுவதன் மூலம் மிஸ்டுகால்களை தொடுத்து இளம் பெண்களின் வாழ்க்கையை தொலைத்தவர்கள் தப்பித்து விடுகின்றார்கள்.

தற்பொழுது குறைந்த கட்டணத்தில் இணையதளம் வாயிலாக இயங்கும் சட்டமுறையற்ற தொலைபேசி கார்டுகள் மூலமாகவும் அழைத்து தொந்தரவு கொடுக்கின்றனர். இதில் அழைத்தவர் யார் என்பதை கண்டுபிடிக்க முடியாததால் அனாமதேயர்களுக்கு பாதுகாப்பாக அமைந்துவிடுகிறது.

இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்களில் ஒரு சிலரே சைபர் செல்லில் புகார் அளிக்கின்றனர். திருமணமான பெண்களுக்கோ மிஸ்டுகால்கள் பலவகையான பாதிப்புகளை ஏற்படுத்திவிடுகிறது. இங்கே சில பெண்கள் துயரங்களுக்கு அப்ரூவர்களாக மாறிவிடுகின்றார்கள். இரண்டு குடும்பங்களிலும் சண்டைகளும், சச்சரவுகளும் உருவாகின்றன. குழந்தைகள் கவனிப்பாரற்ற சூழலுக்கு தள்ளப்படுகின்றார்கள். இறுதியாக தற்கொலையில் அபயம் தேடும் அவலநிலைக்கு மிஸ்டுகால்களால் பாதிக்கப்படுகின்றவர்கள் செல்கிறார்கள்.

செல்ஃபோன்களின் தேவை அதிகரித்ததை தொடர்ந்து ஆயிரக்கணக்கான குடும்ப உறவுகள் தகர்க்கப்பட்டுள்ளன. எத்தனையோ திருமண உறவுகள் விவகாரத்தை நோக்கிச் சென்றுள்ளன. எத்தனையோ இளம்பெண்கள் ஓடிப்போய் கடைசியில் ஆபத்துகளில் சிக்கியுள்ளனர். மன நல மருத்துவமனைகளும், குடும்ப நீதிமன்றங்களும் இதற்கு சாட்சியம் வகிக்கும். பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பங்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டு அது மாறாத வடுவாக மாறிவிடுகிறது.

உண்மையில் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற சமூகரீதியான உணர்வுதான் இன்று ஒழுக்க விழுமியங்கள் ஓரளவு பேணப்படுவதற்கு காரணமாகும்.

டீ தூளில் - எது ஒரிஜினல்?எப்படிக் கண்டுபிடிப்பது?




ஏழைகளின் உற்சாக பானம், இப்படி பாஷாணமாக மாற்றப்படுவது எப்படி? இதோ சில பகீர் உண்மைகள்:

இலவம் பிஞ்சு: இலவம்பஞ்சுக் காயைப் பறித்து, காயவைத்து அரைத்து தேயிலைத் தூளுடன் கலந்து விடுகிறார்கள். இதில் தயாரிக்கப்படும் தேநீர் அடர்த்தியாக, படு ஸ்ட்ராங்காக இருக்கும். பால் எவ்வளவு தண்ணீராக இருந்தாலும் தேநீர் ‘திக்’ காகவே இருக்குமாம்!

முந்திரிக் கொட்டை: முந்திரிக் கொட்டை பழமாகும் முன்னர் கடித்தால் வாய் புண்ணாகி விடும். அந்தக் கொட்டையின் தோலைக் காய வைத்து பொடியாக்கி, தேயிலைத் தூளுடன் கலக்கிறார்கள். நிறத்தைக் கூட்டுவதற்காக இதனுடன் சோடியம் கார்பனேட் ரசாயனத்தைச் சேர்க்கிறார்கள். சலவை சோப்புடன் சேர்க்கப்படும் ஆபத்தான ரசாயனம் இது!

மஞ்சனத்தி இலை – குதிரை சாணம்: மஞ்சனத்தி இலையைக் காய வைத்து அரைத்து, காய்ந்த குதிரைச் சாணத்துடன் கலந்து தேயிலையுடன் கலப்படம் செய்தால், மினுமினுக்கும் கலப்படத் தேயிலைத் தூள் ரெடி!

புளியங்கொட்டை: புளியங் கொட்டையை லேசாக வறுத்து, ரொம்பவும் மிருதுவாக அரைக்காமல் தேயிலைத் தூள் பதத்தில் அரைத்து, தண்ணீர் சேர்த்துக் காய வைத்து (அப்போதுதான் துவர்ப்பு தெரியாமல் இருக்குமாம்) தேயிலைத் தூளுடன் கலந்து விடுகிறார்கள்!

மரத்தூள், தேங்காய் நார்: மலிவாக அல்லது இலவசமாக சில இடங்களில் கிடைக்கும் மரத் தூள்தான் கலப்படக்காரர்களின் முதல் சாய்ஸ். மரத் தூளுடன் சாயப்பட்டறைகளில் பயன்படுத்தும் ரசாயனத்தைச் சேர்த்து தேயிலைத் தூளுடன் கலக் கிறார்கள். இதுதவிர, டீக்கடைகளில் பயன்படுத்தி குப்பையில் போடும் தேயிலைத் தூளைச் சேகரித்தும் கலப்படத் தூளைத் தயாரிக்கிறார்கள்.

ஓரிஜினல் தேயிலைத் தூளின் விலை ஒரு கிலோ 270 முதல் 310 வரை விற்கப்படுகிறது. ஆனால், கலப்படத் தேயிலைத்தூள் கிலோ 60-க்கே கிடைக்கிறது. பெரும்பாலான ரோட்டோர டீக் கடைகளில் நாம் அருந்துவது கலப்படத் தேநீர்தான். இதை அருந்தினால் சில ஆண்டுகளில் தோல் ஒவ்வாமை, செரிமானக் கோளாறு, அல்சர், மூட்டு வலி, கிட்னி பாதிப்பு, புற்று நோய் போன்றவை ஏற்பட நிறையவே வாய்ப்பு இருக்கிறது.

எப்படிக் கண்டுபிடிப்பது?

கண்ணாடி டம்ளரில் குளிர்ந்த நீரை ஊற்றி தேயிலைத் தூளை ஒரு சிட்டிகை விடுங்கள். உடனடியாகப் பொன் நிறமாக தண்ணீர் மாறினால் அது கலப்படத் தூள்!

எது ஒரிஜினல்?

தேயிலைச் செடியின் நுனியில் இருக்கும் மென்மையான இரட்டை இலை, அதன் நடுவில் இருக்கும் ஒரு மொட்டு, இவற்றை ஒட்டிக் கீழே இருக்கும் லேசாக முற்றிய இலை ஒன்று… இதைப் பறித்து சுமார் எட்டு மணி நேரம் மிஷினில் வாட்டி, ரோலரில் அரைத்தால் அதுதான் ஒரிஜினல் தேயிலைத் தூள். இதைக் குளிர்ந்த நீரில் கொட்டினால், நீரின் நிறம் மாற 10 நிமிடங்களுக்கும் மேல் ஆகும்.

`ஐ` - ல் புதுமை அசத்தும் ஷங்கர்..!




 கற்பனையில் மட்டுமே நாம் நினைத்துப் பார்க்கக்கூடிய, பிரம்மாண்டமான காட்சிகளை திரையில் சாத்தியமாக்கிக் காட்டுவதுதான் இயக்குநர் ஷங்கரின் ஸ்டைல்.

தொழில்நுட்பத்தில் புதிதாக எது வந்தாலும், உடனே அதனை முதல் ஆளாகப் பயன்படுத்தி விட வேண்டும் என்பதில் கமலுக்குப் போட்டியாக எப்போதும் களத்தில் நிற்பவர். திரையில் எவையெல்லாம் சாத்தியமில்லையோ அது அனைத்தையும் சாத்தியம்தான் என்று ஹாலிவுட்டுக்கு இணையாக நிலைநாட்டி வருபவர்.

தொழில்நுட்பத்தையும் காட்சியமைப்பையும் இணைப்பதில் ஷங்கருக்கு இணை அவர்தான் என்றநிலையில் தற்போது விக்ரம், ஏமி ஜேக்‌ஷனை வைத்து இயக்கிவரும் ‘ஐ' படத்தில் என்ன புதுமையைச் சேர்த்து ரசிகர்களை மலைக்க வைக்கப் போகிறார் என்று விசாரித்தபோது, ஆச்சரியமூட்டும் பல தகவல்கள் கிடைத்தன. ஷங்கர் படங்களில் கிராபிக்ஸ் நுட்பத்தின் உச்சம் ‘எந்திரன்' என்றால், கண்டிப்பாக ஒப்பனைக் கலையின் உச்சமாக ‘ஐ' இருக்கப் போவது உறுதி என்கிறார்கள்.

# ‘அவதார்', ‘லார்ட் ஆஃ தி ரிங்ஸ்', ‘ஹாபிட்' என உலகளவில் பரபரப்பைக் கிளப்பிய படங்களின் மேக்கப் விஷயங்களில் பட்டையைக் கிளப்பிய ‘வேட்டா ஸ்டூடியோஸ்' நிறுவனத்தை ‘ஐ’ படத்தின் சிறப்பு ஒப்பனைக்காக அழைத்து வந்திருக்கிறார் ஷங்கர். வேட்டா ஸ்டூடியோஸின் லேட்டஸ்ட் மேக்கப் தொழில்நுட்பத்தால் விக்ரமின் லுக் பேசப்படும் என்கிறது ஷங்கரின் வட்டாரம்.

# ‘ஐ' படத்தில் விக்ரமிற்கு மட்டுமில்லாமல், கதையில் இடம்பெறுகிற முக்கியக் கதாபாத்திரங்களுக்கும் இந்நிறுவனத்தின் மேக்கப் நிபுணர்களே தங்களது வித்தை மூலம் உயிரூட்டியிருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், ஏறக்குறைய 30% காட்சிகளில் ஒப்பனையின் மூலமாக மிரட்ட இருக்கிறார்கள். இந்தப் படத்தின் விக்ரமின் தோற்றங்களில் ஒன்று மனிதனா மிருகமா என்று குழப்பத்தை உருவாக்கும் ஒரு லுக். இதில் விக்ரமின் உருமாற்றத்தைப் பார்த்து ரசிகர்கள் மிரளப்போவது உறுதி என்கிறார்கள் ஷங்கரின் உதவி இயக்குநர்கள்.

# கபிலன் வரிகளில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான ஒரு பாடலுக்காக விக்ரம் நடனமாடியிருக்கிறார். இதற்காகப் பிரபலமான டான்ஸ் மாஸ்டர்களான ‘பாஸ்கோ - சீஸர்’ இருவரின் வித்தியாசமான நடன அசைவுகளில் விக்ரம் தூள் கிளப்பியிருக்கிறாராம்.

# இப்படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பை தொடங்கிய போது ஷங்கர், நாற்பத்தொரு நாட்கள் சென்னையில் ஷூட் செய்திருக்கிறார். பொதுவாகப் பாடல் மற்றும் சண்டைக் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஷங்கர், இந்தப்படத்திலும் ஒரு பாடல் மற்றும் ஒரு சண்டைக் காட்சியை அதிக நாட்கள் செலவிட்டு எடுத்திருக்கிறார்.

# சில காட்சிகள், ஒரு பாடல், ஒரு சண்டைக்காட்சி ஆகியவற்றை சீனாவில் 45 நாட்கள் எடுத்திருக்கிறார். மிகவும் கஷ்டப்பட்டுப் படமாக்கிய காட்சிகள் சீனாவில் படமாக்கிய காட்சிகள்தானாம்.

# சீனா, பாங்காக், ஜோத்பூர், கொடைக்கானல், பொள்ளாச்சி, சென்னை, பெங்களூர், மைசூர், ஒரிசா ஆகிய இடங்களில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். ஒரு பாடல் மற்றும் க்ளைமாக்ஸ் காட்சிகளைச் சென்னையில் படமாக்கத் திட்டமிட்டு பிரம்மாண்ட அரங்கம் அமைக்கும் பணி படுதீவிரமாக நடைபெற்றுவருகிறது.

# ஏமி ஜாக்சனுக்குத் தமிழ் தெரியாது என்பதால் தமிங்கிலீஷில் எழுதிக் கொடுத்துக் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். முக்கியமான காட்சிகளை எல்லாம், எப்படிப் பேசவேண்டும் என்று ரெக்கார்ட் செய்து, ஏமி ஜாக்சனைக் கேட்கச் சொல்லி இருக்கிறார்கள். ஏமி அவ்வாறே பேசி நடித்துக் கொடுத்திருக்கிறார்.

# விக்ரமின் எடையை ஷங்கர் குறைக்கச் சொல்லவே இல்லை. ஆனால் அவரே முன்வந்து, எடையைக் குறைத்து நடித்துக்கொண்டிருக்கிறார். இடையே ஷங்கர் விக்ரமிற்கு போன் செய்து, “சாப்பிடுங்க. ஹெல்த் முக்கியம்” என்று சொல்லியிருக்கிறார். ஆனால், விக்ரம் தான் விடாப்பிடியாக உடம்பை அநியாயத்திற்கு இளைக்க வைத்திருக்கிறார்.

# தமிழ் திரை டிஜிட்டல்மயமாகி வரும் நிலையில் ஃபிலிம் ரோலில் படமாக்கி வருகிறார் ஷங்கர். ஒளிப்பதிவில் பி.சி.  ராம் அனைத்துக் காட்சிகளையும் இழைத்திருக்கிறார் என்கிறது படக்குழு.

# ‘ஐ' படத்தில் மொத்தம் 6 பாடல்கள். கபிலன், கார்க்கி இருவரும் தலா மூன்று பாடல்களை எழுதியிருக்கிறார்கள்.

# ஹாரிபாட்டர் படங்களின் கிராஃபிக்ஸ் காட்சிகள் மூலம் உலகப் புகழ்பெற்ற ரைசிங் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்குப் பொறுப்பேற்றிருக்கிறது.  னிவாஸ் எம்.மோகன் மேற்பார்வையில் ரைசிங் சன் பிக்சர்ஸ் பணியாற்றிவருகிறது.

# படம் தொடங்கப்பட்டபோது, ஒரு பாடலுக்காக மெட்டு ஒன்றைப் போட்டுக் கொடுத்திருக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான். ஆனால் ஷங்கர், இதை வேறொரு சூழ்நிலைக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறிவிட்டார். சில மாதங்கள் கழித்து வேறொரு பாடலுக்கு அந்த மெட்டை உபயோகப்படுத்தலாம் என்று ஷங்கர் கேட்க, ரஹ்மான் “அது போட்டு ரொம்ப காலமாச்சு. புதுசா போட்டுத்தர்றேன்” என்று கூறியிருக்கிறார்.

# அதிக லொகேஷன்கள், செட்டுகள் என நிறைய இடங்களில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். சீனர்களே இந்த இடங்களெல்லாம் எங்கே இருக்க்கிறது என்று அசரும் அளவிற்கு சீனாவில் படமாக்கப்பட்ட காட்சிகள் இருக்க போவது உறுதி என்கிறார்கள். ஒவ்வொரு பாட்டையும் வித்தியாசப்படுத்திக் காட்ட வேண்டும் என்று உழைத்திருக்கிறார்கள்.

# சில காட்சிகளையும், புகைப்படங்களையும் ரஜினிக்குக் காட்டியிருக்கிறார் ஷங்கர். அக்காட்சிகள், படங்களை எல்லாம் பார்த்துவிட்டு எப்படி எடுத்தீர்கள் என்று ஆர்வமாகக் கேட்டுப் பாராட்டு தெரிவித்திருக்கிறார் ரஜினி.

# ஷங்கரின் கிரியேட்டிவிட்டி யைப் பார்த்து, மிரண்டுபோன ‘வேட்டா ஸ்டூடியோஸ்' நிறுவனத்தினர் இனிமேல் என்ன படம் பண்ணினாலும் சொல்லுங்க. கண்டிப்பா பண்ணலாம் என்று கூறியிருக்கிறார்களாம்.

#   இதுவரை தொடாத களமான ரெமாண்டிக் த்ரில்லர் வகையில் ‘ஐ’யை இயக்கியிருக்கிறார். இந்தப்படத்திற்காக எழுத்தாளர்கள் சுபாவுடன் இணைந்திருக்கிறார்.

# சின்னப் படங்களின் இயக்குநர்களே 10 உதவி இயக்குநர்களை வைத்துப் பணியாற்றிவரும் இக்காலத்தில் ஷங்கரிடம் 5 உதவி இயக்குநர்கள் மட்டுமே பணியாற்றியிருக்கிறார்கள். 1 அசோசியேட் இயக்குநர், 4 உதவி இயக்குநர்கள். படத்தின் இசைவெளியீட்டை மே மாதம் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். 

8-ம் வகுப்பு தேறியவர்களா ?இத படிங்க.....





சில்லரை விற்பனைச் சார்ந்த பிரிவுகளில் வேலைவாய்ப்புகள் அதிகளவில் உள்ளதை கருத்திற்கொண்டு தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டுக் கழகம் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்துடன் இணைந்து பத்தாயிரம் இளைஞர் களுக்கு சில்லரை விற்பனையாளர் பணிக்கான குறுகியகால 21 நாள் திறன் பயிற்சியினை வழங்க திட்டமிட்டுள்ளது.இப்பயிற்சியானது தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிறுவனங்களில் அளிக்கப்படும். இப்பயிற்சி தமிழக அரசால் முழுக்க முழுக்க இலவசமாக வழங்கப்படுகிறது.

விண்ணப்பங்கள் கிடைக்குமிடம்: இன்று (10.01.2014) முதல் சென்னை, தஞ்சாவூர், வேலூர், திருநெல்வேலி, மதுரை, சேலம், விருதுநகர், கடலூர், காஞ்சிபுரம், தர்மபுரி, நாகர்கோவில், சிவகங்கை, விழுப்புரம், நாமக்கல், திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, திருவாரூர், திருவண்ணாமலை, ஈரோடு மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

தகுதி: இப்பயிற்சியில் சேர குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 வயது முதல் 45 வயது வரையான ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

பயிற்சி காலம்: 3 வாரம். தினமும் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பம் உள்ளவர்கள் பயிற்சி நிலையத்தில் அளிக்கப்படும் விண்ணப்பத்தினையும் பூர்த்தி தேவையான சான்றிதழ்கள் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் சமீபத்தில் எடுக்கப்பட்ட இரண்டு புகைப்படங்கள், அசல் கல்வி சான்று, சாதி சான்று, இருப்பிட முகவரிக்கான சான்றாக குடும்ப அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், கடவு சீட்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றின் ஏதேனும் ஒன்றின் அசல் சான்றிதழ்களை நேரில் வரும்போது கொண்டு வரவேண்டும்.

பயிற்சி அளிக்கப்படும் இடம்: மேற்குறிப்பிட்ட கல்வித்தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு தமிழகத்தில் உள்ள மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள 20 கூட்டுறவு மேலாண்மை நிலையங்களிலும் 21 நாள் இலவச பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சியின் முடிவில் தனியார் துறை சில்லரை விற்பனை சேவை நிறுவனங்களில் பணிபுரிய ஏதுவாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெறும்.

இப்பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் தமிழகத்திலுள்ள 20 கூட்டுறவு மேலாண்மை நிலையங்கள் மற்றும் சென்னை அண்ணா நகரில் உள்ள நடேசன் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் அதற்கான விண்ணப்பங்கள் பெற்று பயிற்சியில் சேருமாறு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக இயக்குநர் முத்துவீரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
 
back to top