கிராமத்தில் தாய், தங்கையுடன் வாழ்ந்து வருகிறார் நாயகன் அனித். படித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருக்கும் இவருக்கு மாமன் மகளாக வருகிறார் நாயகி வைதேகி. இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பெற்றோர்கள பேசி வைத்ததால், வைதேகி, அனித்தையே சுற்றிச் சுற்றி வருகிறார். ஆனால் அனித்தோ, வைதேகியை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்.
இந்நிலையில் அனித்துக்கு சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை கிடைக்கிறது. சென்னை கிளம்பும் அனித்துக்கு வைதேகி செல்போன் வாங்கிக் கொடுத்து அனுப்புகிறார். சென்னையில் நண்பர்களுடன் தங்கி வேலைக்கு சென்று வருகிறார் அனித். ஒருநாள், அவருக்கு ஒரு மிஸ்டு கால் வருகிறது. அந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ள, மறுமுனையில், நன்மா (மற்றொரு நாயகி) பேசுகிறார். இந்த மிஸ்டு கால் நட்பு தொடர்கிறது.
காலப்போக்கில் இந்த நட்பு, பார்க்காமலேயே காதலாக மாற... அனித் தனது மாமா மகளினை வைதேகியை முழுவதுமாக மறந்துவிட்டார். மாறாக, நன்மாவை உயிருக்கு உயிராக நேசிக்கிறார். நன்மாவோ, அந்த அளவுக்கு தீவிரமாக இல்லாமல், பொழுதுபோக்கிற்காகவே மட்டுமே அனித்துடன் பேசி வருகிறார்.
இந்நிலையில், சென்னைக்கு வரும் தாய்-தங்கையிடம் நன்மாவை வரவழைத்து அறிமுகம் செய்ய நினைத்தார் அனித். ஆனால், கடைசி நேரம் வரையில் நன்மா வரவேயில்லை. இதனால் விரக்தியடையும் அனித், மீண்டும் தொடர்பு கொள்ள முயன்றார். எந்த வகையிலும் நன்மாவை தொடர்பு கொள்ள முடியவில்லை. பிறகுதான் தெரிந்தது, நன்மா தன்னை ஏமாற்றிவிட்டார் என்று.
இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளான அனித்தின், மனநிலை பாதிக்கப்படுகிறது. பெண்களைக் கண்டாலே, அவர்களின் செல்போன்களை பிடுங்கி உடைப்பது போன்ற செயல்களில் ஈடுகிறார்.
இறுதியில் இவர் பித்தம் தெளிந்து சகஜ நிலைக்கு வந்தாரா? நன்மாவின் நிலை என்ன? என்பதே மீதிக்கதை.
அறிமுகமாகியிருக்கும் நாயகன் அனித், நன்மாவிடம் செல்போனில் பேசும் காட்சிகள், அவரை நினைத்து உருகும் காட்சிகளில் பளிச்சிடுகிறார். ஹீரோவுக்குரிய நல்ல உடல் அமைப்பு இருந்தாலும் அவருக்கான ஆக்சன் காட்சிகள் இல்லாதது ஏமாற்றம்.
அறிமுக நாயகிகள் இருவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து பாராட்டை பெறுகிறார்கள். குறிப்பாக பேச்சிலேயே நாயகனுக்கு சூடேற்றி விடும் காட்சியில் நன்மா நன்றாக நடித்திருக்கிறார். வைதேகியோ, துறுதுறுவென கிராமத்துப் பெண்ணாக வலம் வந்து ரசிகர்களை கவர்கிறார்.
இன்றைய காலகட்டத்தில் செல்போனால் நடக்கும் அவலங்களையும், கலாச்சார சீரழிவுகளையும் சிறப்பாக பதிவு செய்திருக்கிறார். இருப்பினும் காட்சிகள் மற்றும் படத்தொகுப்பு ரசிகர்களை சுண்டி இழுக்காமல் போனது படத்திற்கு பின்னடைவு. மனோபாலா, இமான் அண்ணாச்சி, கிரேன் மனோகர் உள்ளிட்ட சிறு கதா பாத்திரங்கள் படத்துடன் ஒன்றியுள்ளனர்.
மோகன்ஜியின் இசையமைப்பில் பாடல்கள் கேட்கும் ரகம். கன்னிப்பொண்ணு மனசு அது கரும்புடா... ஏதாவது நீயாக..., யாரோ அவள், யாரோ... பெண் மனது... என 4 பாடல்களே இப்படத்தில் இடம்பெற்றிருந்தாலும் நான்கும் நான்கு முத்துக்களாக படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.
மொத்தத்தில் விடியும் வரை பேசு, கடலை போடும் இளைஞர்களுக்கு எச்சரிக்கை..!