மதுரையில் அடியாட்களை வைத்துக்கொண்டு தனக்கென்று தனிராஜ்ஜியத்தை நடத்தி வருகிறார் தணிகலாபரணி. இவர் அரசியலில் இல்லாதபோதும் அங்கு செல்வாக்குள்ளவராக இருக்கிறார். இந்நிலையில் தேர்தல் நடக்க, இவருக்கு ஆதரவான எம்.எல்.ஏவை எதிர்த்து போட்டியிட்ட வேட்வாளர் வெற்றி பெறுகிறார். இதனால், மிகவும் கோபம் அடையும் தணிகலாபரணி வெற்றிப்பெற்ற எம்.எல்.ஏவை வெட்டி சாய்த்து விடுவதால் இவரை போலீஸ் கைது செய்ய முயற்சி செய்கிறது.
தணிகாலபரணி, தன் ஆதரவு ரவுடிகளான நந்தா சரவணன், சாமி, புதுக்கோட்டை சுரேஷ் ஆகியோரை அழைத்து, என்னை கைது செய்த பிறகு மதுரையில் கலவரம் உருவாக வேண்டும். மதுரையே ஸ்தம்பிக்க வேண்டும், பல உயிர்கள் கொல்லப்பட வேண்டும் என்று சொல்லுகிறார்.
அதன்படி அவர் கைது செய்யப்பட, மதுரையில் கலவரம் நடக்கிறது. இதில் பலர் கொல்லப்படுகின்றனர். குறிப்பாக 4 கல்லூரி மாணவிகள் கொல்லப்படுகின்றனர். இதன் பிறகு தணிகாலபரணி ஜாமீனில் வெளிவருகிறார்.
கலவரத்தை ஏற்படுத்திய ரவுடிகளை போலீஸ் கைது செய்துவிடுகிறது. லஞ்சம் கொடுத்து ரவுடிகளை தணிகாலபரணி ஜெயில் இருந்து மீட்கிறார். ரவுடிகளை மீண்டும் கைது செய்ய கோரி கொல்லப்பட்ட 4 கல்லூரி மாணவிகளின் தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.
இத்தகைய சம்பவங்கள் கட்டுப்படுத்த, மதுரை மாவட்ட கலெக்டர், போலீஸ் அதிகாரியான சத்யராஜை பணி நியமனம் செய்கின்றார். இச்சம்பவங்களை பற்றி விசாரணை செய்யவும் அவர் உத்தரவிடுகிறார். தீவிர விசாரணையில் ஈடுபடும் சத்யராஜ் கலவரத்திற்கு காரணம் 3 ரவுடிகள் மற்றும் இவர்களுக்கு பின்னணியில் தணிகாலபரணி என்று தெரிந்து கொள்கிறார். இவர்களை பற்றிய விசாரணை அறிக்கையை அமைச்சரான ராஜ்கபூரிடம் கொண்டு செல்கிறார். இதை அமைச்சர் தட்டி கழிக்கிறார். நீ ஊருக்கு செல் விசாரணையை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறுகிறார். இதனால் சட்டத்தின் முன் இவர்களை ஒன்றும் பண்ணமுடியாது என்று நினைத்து அந்த அறிக்கையை அங்கேயே விட்டுவிட்டு வந்துவிடுகிறார்.
இந்நிலையில் கலவரத்தில் 4 தோழிகளை பறிகொடுத்த 3 கல்லூரி மாணவர்கள் ரவுடி கும்பலை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டுகின்றனர். அந்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட மற்றவொருவரும் இவர்களுடன் சேர்கிறார். சட்டத்தின் முன் ரவுடிகளை தண்டிக்க முடியாத சத்யராஜ், சட்டத்திற்கு எதிரான முறையில் அவர்களை தண்டிக்க முயற்சிக்கும் அந்த நால்வருடன் இணைகிறார்.
இறுதியில் இவர்களை பழிவாங்கினார்களா? என்பதே மீதிக்கதை.
போலீஸ் அதிகாரியான சத்யராஜ் வெற்றிச்செல்வன் கதாபாத்திரத்தில் மிடுக்கான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். சண்டைக்காட்சிகளில் இளமை மாறாத சத்யராஜ் போல் கண்முன் தோன்றுகிறார். வில்லனான தணிகாலபரணி, ஆதிமூலம் கதாபாத்திரத்தில் மிரட்டுகிறார். ரவுடிகளை பழிவாங்கும் நினைக்கும் அஜய்ராகவ், அஜய், யாசர், ராகவேந்தர் ஆகியோர் அவர்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். ரவுடிகளான நந்தா சரவணன், சாமி, புதுக்கோட்டை சுரேஷ் ஆகியோர் திறம்பட நடித்திருக்கிறார்கள். குறிப்பாக புதுக்கோட்டை சுரேஷ், கட்டத்துரை எனும் கதாபாத்திரத்தில் மிரளவைக்கிறார்.
படத்தை சந்திரன் ஒளிப்பதிவு செய்தவிதம் அருமை. 2 பாடல்கள்தான் என்றாலும் பின்னணி இசையில் கலக்குகிறார் இசையமைப்பாளர் பைசல். படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் வந்தாலும் அவர்களை திறம்பட வேலையை வாங்கியிருக்கிறார் இயக்குனர் ரமேஷ் செல்வன்.
மொத்தத்தில் ‘கலவரம்’ கொலைக்களம்.