ஒரு புத்தகத்தில் உள்ள அதுவும் 13-ம் பக்கத்தில் உள்ள ஒரு சாத்தான் வெளிவந்து செய்யும் அட்டகாசத்தை படத்தின் கருவாக வைத்து ‘13-ம் பக்கம் பார்க்க’ என்ற படத்தை உருவாக்கி வருகின்றனர்.
ஆர்.வி.கே.பிலிம் மீடியா சார்பில் ஆர்.வினோத் குமார் இப்படத்தை தயாரிக்கிறார். பல வெற்றிப்படங்களுககு கதை, வசனம் எழுதி இணை இயக்குனராக பணியாற்றிய புகழ்மணி இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.
பயங்கர ஆவிகளை ஏவிவிடுவது, பேயோட்டுவது, பில்லி சூனியம் செய்வது போன்ற முரட்டுத்தனமாக கதாபாத்திரத்தில் நளினி நடிக்கிறார். இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் 40 அடி உயர முனீஸ்வரர் சிலை உள்ள கோவிலில் படமாக்கப்பட்டது.
அப்போது நாயகி ஸ்ரீபிரியங்காவை ரத்தக்காட்டேரியிடமிருந்து காப்பாற்ற நளினி மந்திர உச்சரிப்பு செய்வது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. இதை வேடிக்கைப் பார்க்க வந்த பெண்களுக்கு படப்பிடிப்பு தளத்திலேயே சாமி வந்து ஆட ஆரம்பிக்க படப்பிடிப்புக் குழுவினர் பரபரப்பாகிவிட்டனர்.
இப்படத்தில் ரத்தன் மௌலி, ராம் கார்த்திக் இருவருடன் ஸ்ரீபிரியங்கா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் ராம்ஜி, டெல்லி கணேஷ், வையாபுரி, எம்.எஸ்.பாஸ்கர், ரம்யா, சிங்கப்பூர் துரைராஜ் ஆகிய தெரிந்த முகங்களும் நடிக்கின்றனர்.
சென்னை மற்றும் சென்னையைச் சுற்றி இதன் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. முன்னணி இசையமைப்பாளர் ஒருவர் இசையமைக்கும் இப்படத்தின் இசையை பிப்ரவரியில் வெளியிடவுள்ளனர்.