.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, January 20, 2014

சுனந்தா இறந்தது எப்படி? பிரேத பரிசோதனை அறிக்கையில் பரபரப்பு தகவல்கள்..!



மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர், அதிகமான மருந்துகளை சாப்பிட்டதால் இறந்திருக்கலாம் என்று பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா மரணத்தை அடுத்து அவரது உடலின் பாகங்கள் ரசாயன பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. இதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவமனை அதிகாரிகள் கூறுகையில், சுனந்தாவின் உடலை 3 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர்.

அவரது மரணம் இயற்கையானதல்ல, திடீர் மரணம்தான் என்று குழுவினர் கண்டறிந்தனர் என்றனர்.இந்நிலையில், அவர் கடைசியாக எடுத்து கொண்ட உணவில் விஷம் கலந்துள்ளதா, மது குடித்திருந்தாரா என்று அறிய உடலின் பாகங்கள் சிலவற்றை ரசாயன பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் அறிக்கையில், அவரது உடலில் ஆல்கஹால் கலந்திருப்பதற்கான தடயம் இல்லை என்பதால், அவர் குடித்திருக்கவில்லை என தெரியவந்தது.

மேலும், மன அழுத்தத்திற்காக அல்பிராசோலம் எனப்படும் மருந்துகளை அவர் அதிகமாக சாப்பிட்டிருப்பதும் தெரிய வந்தது. இந்த மருந்து அதிகரித்ததால் அவர் உயிரிழந்திருக்கலாம் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த மருந்துகள் தூக்க மாத்திரைகளை போல் மயக்கத்தை தரக்கூடியது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.இதற்கிடையில், சிறப்பு புலனாய்வு படையினர் சசிதரூர் உள்பட 8 பேரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர். மேலும் சசிதரூரின் உதவியாளரும், பத்திரிகையாளருமான நளினி சிங்கிடமும் விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணையில் கிடைத்த வாக்குமூலங்கள், மருத்துவர் அறிக்கைகள், நடைபெற்ற சம்பவங்கள் ஆகியவற்றை ஒப்பிட்டு ஆய்வு செய்து பார்த்து சுனந்தா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அளவுக்கு அதிகமான மருந்துகளை உட்கொண்டதால் இறந்தாரா, அல்லது தற்கொலை நோக்கத்துடன் அதிக மாத்திரைகள் எடுத்து கொண்டாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.

மேலும், சுனந்தா அறையில் தங்கியிருந்த போது அவர் பேசிய தொலைபேசி உரையாடல்கள், இமெயில்கள், டுவிட்டர்கள் ஆகியவற்றையும் சிறப்பு புலனாய்வு படையினர் சேகரித்துள்ளனர். இவற்றை சிறப்பு புலனாய்வு படை தலைவர் அசோக் சர்மா ஆய்வு செய்து வருகிறார்.இந்நிலையில், சுனந்தாவின் பிரேத பரிசோதனை அறிக்கையையும், ரசாயன பரிசோதனை அறிக்கையையும் இன்று மாலையில் டெல்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளனர்.

 இதைத் தொடர்ந்து, பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள், ரசாயன பரிசோதனை செய்த நிபுணர்கள் ஆகியோருடன் சிறப்பு புலனாய்வு படையினர் விவாதிக்கவுள்ளனர்.இதற்கிடையே, ரசாயன மருத்துவ நிபுணர் குழு தலைவர் சுதீர் குப்தா கூறுகையில், எங்களது ஆய்வுகள் முழுமையாக முடிவடைந்து விட்டன.

சுனந்தாவின் உடலில் விஷம் எதுவும் கலக்கப்படவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டு விட்டது. இதயத்தை ஆய்வு செய்ததில் சில மருத்துவ தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றை பிரேத பரிசோதனை அறிக்கையுடன் ஒப்பிட்டு பார்த்து இறுதி முடிவு எடுக்கப்படும்’ என்றார்.மேலும் தடயவியல் நிபுணர்களும் அறையில் எடுத்த மருந்துகள், கைரேகைகள், வியர்வை துளிகள், ரத்த மாதிரி உள்ளிட்டவற்றை வைத்து ஆய்வு செய்வர். பின்னர் இவை அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு, போலீசாரின் விசாரணை அறிக்கைகளுடன் சேர்த்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று எய்ம்ஸ் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்..!



1. நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.


2. கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் (திரிபலா) இவைகளை பொடியாக்கி வெந்நீரில் கலந்து காலையில் குடித்தால் எடை குறையும். சிறிது வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால் உடல் பருமன் குறையும்.


3. அருகம்புல் சாறெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும்.


4. ஆமணக்கின் வேரை இடித்து தேன் கலந்து நீரில் இரவு ஊற வைத்து காலையில் கசக்கிப் பிழிந்து, நீரை வடிகட்டி குடித்தால் உடல் பருமன் குறையும்.


5. பாதாம் பவுடரை எடுத்து சிறிது தேன் கலந்து காலையில் சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.


6. கேரட்டுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும்.


7. வெள்ளரி, நெல்லி, கோஸ், கொத்தமல்லி, முருங்கை, திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, பப்பாளி, அன்னாசி, எலுமிச்சை, கொய்யா, புதினா, வெங்காயம், தர்பூசணி, பேரிக்காய், கறிவேப்பிலை, வாழைத்தண்டு இவைகளை சாறு எடுத்து குடிக்க உடல் எடை குறையும்.


8. கரிசலாங்கண்ணி இலையை, பாசி பருப்புடன் சேர்த்து சமைத்து தினமும் சாப்பிட உடல் எடை குறையும். சோம்பு எடுத்து சுத்தம் செய்து தண்ணீர்விட்டு காய்ச்சி அடிக்கடி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.


9. ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்மளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும்

பாலிவுட்டில் ‘சுப்பிரமணிபுரம்’..!



இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது சசிகுமாரின் சுப்பிரமணிபுரம்.

கடந்த மூன்று வருடங்களில் தமிழில் வெளியான மிகச்சிறந்த படங்களில் ஒன்று சுப்பிரமணியபுரம்.

கதை சொன்னவிதமும், காட்சிகளின் நேர்த்தியும் உலகத்தரத்தில் அமைந்திருந்தன.
இந்தப்படத்தினை சசிகுமாரின் லைஃப் டைம் படம் என்று கூட சொல்லலாம்.

இந்தப் படத்தின் பாதிப்பில் நிறைய படங்கள் தமிழில் மட்டுமின்றி மலையாளத்திலும் வெளியாயின.

அனைவரையும் கவர்ந்த இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் தனது எண்ணத்தை சசிகுமார் சமீபத்தில் தெரியப்படுத்தினார்.

இந்தியில் தானே ரீமேக் செய்ய வேண்டும் என்பதற்காக படத்தின் ரீமேக் உரிமையை இதுவரை தன்னிடமே வைத்துள்ளார். பலர் கேட்டும் சுப்பிரமணியபுரத்தின் ரீமேக் உரிமையை அவர் தரவில்லை.

சுப்பிரமணியபுரம் இந்தி ரீமேக்கில் அனுராக் காஷ்யபும் ஆர்வம் காட்டி வருகிறார். அவர் படத்தின் ஸ்கிரிப்ட் மற்றும் வசனத்தில் பங்களிப்பு செலுத்துவார் என தெரிகிறது.

மேலும், அனுராக்கின் தயாரிப்பு நிறுவனம் இந்த ரீமேக்கை தயாரிக்கவும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இணையத்துக்குள் சிக்கிக் கொண்ட இளைய சமுதாயம்..!



தற்போதைய இளைய சமுதாயம் இணையம் என்னும் மாய வலைக்குள் சிக்கி மூழ்கிக் கொண்டிருக்கிறது. இணையம் என்பது பரந்து விரிந்த விஷயமாக இருந்தாலும், அதன் ஒரு புள்ளிக்குள்ளேயே இளைய சமுதாயம் சுற்றி சுற்றி வருவதால், அதன் சிறகுகள் பறப்பதற்கு பதிலாக முடமாக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் தெரிந்து கொள்ள இயலாத விஷயங்களே இருக்க முடியாது, பார்க்க முடியாத விஷயங்களே இல்லை, எத்தனையோ பல்கலைக்கழகங்கள் இணையம் வாயிலாக படிப்புகளை வழங்கி வருகிறது, நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் அந்த நபரை, இணையத்தின் வாயிலாக நாம் இருக்கும் இடத்தில் இருந்து பார்க்க முடியும், பேச முடியும், எங்கோ ஒரு தலைவர் பேசுவதை இணையத்தின் மூலமாக உடனுக்குடன் நாம் தெரிந்து கொள்ள முடிகிறது என இணையத்தைப் பற்றிய நல்ல விஷயங்களை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

ஆனால், இந்த நல்ல விஷயங்களில் ஒன்றையாவது நமது இளைய சமுதாயம் பயன்படுத்திக் கொள்கிறதா? செல்பேசியில் சிக்கி சீரழிந்த நமது இளைஞர்கள், தற்போது, செல்பேசியில் இணைய சேவையைப் பெற்று மேலும் வேகமாக அழிவுப் பாதையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இணையமும், தொலைத்தொடர்பும் மக்களின் அறிவு வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் பயன்படும் என்ற எண்ணம் தற்போது மறுக்கப்பட்டு, இளைய சமுதாயத்தின் சீரழிவுக்கே இதுதான் காரணமாக உருமாறிவிட்டது.

படிப்புக்காகவும், செய்திகளை அறிந்து கொள்ளவும், செய்திகளை பரிமாறிக் கொள்ளவும் எத்தனை இளைஞர்கள் கம்ப்யூட்டரையோ, மொபைலையோ பயன்படுத்துகிறார்கள்.. மிகச் சிலரே. அதற்கு பதிலாக பேஸ்புக் எனப்படும் இணையத்தில் அல்லவா தங்களது வாழ்நாளை எவ்வித குற்ற உணர்ச்சியும் இன்றி கரைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் நடந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், பொறியியல் மற்றும் தகவல் தொலைத்தொடர்பு படிப்புகளில் படித்துக் கொண்டிருக்கும், படித்து முடித்து வேலை செய்யும் இளைஞர்களிடம் சமுதாயத்தைப் பற்றி கேள்விகள் கேட்கப்பட்டன.

தற்போது சமுதாயம் சந்திக்கும் அவலங்கள் பற்றி அவர்களுக்குத் தெரிந்த விஷயம் பூஜ்யமாகத்தான் இருந்தது.

இது ஒரு சாதாரண விஷயமாக எடுத்துக் கொண்டால் சாதாரணம் தான். ஆனால், நமது இளைய சமுதாயத்தின் பொது அறிவுக்கு இவர்கள் ஒரு உதாரணம் என்று எடுத்துக் கொண்டால் அது சமுதாயத்தின் அசாதாரண விஷயம் என்பது தெரிய வரும்.

சமுதாயத்தில் தற்போதிருக்கும் ஒரு அவல நிலை குறித்துக் கூட இளைஞர்கள் தகவல்களை தெரிந்து வைத்துக் கொள்வதில்லை. செய்தித்தாள் படிக்கும் பழக்கம் மாணவர்களிடையே குறைந்து வருகிறது. இதற்கு உடனடி காரணத்தையும் பலர் வைத்திருக்கிறார்கள்.

 அதாவது, அதிகப்படியான கல்விச் சுமையை காரணம் கூறுகிறார்கள். கல்விக் சுமை காரணமாக செய்தித் தாள் படிக்க முடியாமல் போகும் அதே இளைய சமுதாயம், மொபைலில் பேசவோ, பேஸ்புக் அப்டேட் செய்யவோ தவறுவதில்லை.

நூறில் 25 சதவீதத்தினர் செய்தித்தாள் படித்தால், நூற்றுக்கு நூற்று ஐம்பது பேர் பேஸ்புக் தொடர்பில் இருக்கிறார்கள். பேஸ்புக்கிலும் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அவற்றை எல்லாம் யார் பார்ப்பது? நமக்குத் தேவையானது, நமது நண்பர்களைப் பற்றி கிண்டல் செய்வதும், நமது அழகான புகைப்படங்களை அப்டேட் செய்து அதற்கு பல நூறு லைக் பெறுவதுமே.

இதெல்லாம் இளைய சமுதாயத்தின் பொழுதுபோக்கு அம்சங்களாக இருப்பதில் தவறில்லை. ஆனால் இது ஒரு போதையாக மாறிவிடக் கூடாது. இதனால் எதிர்காலமே சூன்யமாகிவிடக் கூடாது என்பதுதான் தற்போதைய கவலை.

இணையத்தின் மூலம் எதிர்காலத்தை நல்ல முறையில் உருவாக்கிக் கொள்ளலாம். ஒரு நாளைக்கு ஒரு செய்தியையாவது படிப்பதையும், ஒரு தலைவரின் வாழ்க்கை வரலாறை அறிந்து கொள்வதையும், படிப்பு மற்றும் பணி நிமித்தமான விஷயங்களை படித்து உங்களை அதற்கேற்ற வகையில் உருவாக்கிக் கொள்வதையும் வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

நீங்கள் படித்த விஷயங்களை உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து உங்களை அறிவுஜீவியாக மாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் வழி பின்பற்றி உங்கள் நண்பர்களும் வருவார்கள்.

பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொருவருக்கும் அவசியமாகிறது. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போல வெறும் கல்லூரி படிப்பு மட்டுமே வாழ்க்கையின் லட்சியத்தை அடைய போதுமானதாகாது என்பதை நினைவில் கொண்டு இனியாவது இணையத்தை முன்னேற்றப் பாதையில் பயன்படுத்துவோம்.

 
back to top