.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, January 21, 2014

இனி சர்ச்சையில் சிக்க மாட்டேன் - நஸ்ரியா உஷார்..!



 கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று வார்த்தை ஜாலத்துக்காக சொல்லாமல் நய்யாண்டி படத்தில் தான் நடித்ததுபோல் டூப் நடிகையை வைத்து ஆபாச காட்சி எடுத்ததாக இயக்குனரை எதிர்த்து போர்க்கொடி உயர்த்தியவர் நஸ்ரியா நாசிம். இதையடுத்து குறிப்பிட்ட காட்சி நீக்கப்பட்டது.

 இயக்குனர்களுடன் மோதல்போக்கு கடைபிடித்தால் பட வாய்ப்பு பறிபோகுமே என்று அவரிடம் கேட்டபோது, ‘நய்யாண்டி விவகாரம் வெளியில் தெரிந்தது ஒரு வகையில் எனக்கு பிளஸ்தான். என்னை வைத்து படம் எடுப்பவர்கள் நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்பதை புரிந்துகொள்ள அந்த விவகாரம் உதவி இருக்கிறது. அதே நேரம், இனி சர்ச்சையில் சிக்காதபடி பார்த்துக்கொள்கிறேன். என்று தெரிவித்தார்.

நஸ்ரியா தமிழில் நடித்துள்ள திருமணம் என்னும் நிக்ஹா விரைவில் திரைக்கு வரவுள்ளது. இதையடுத்து வாய் மூடி பேசவும் என்ற படத்தில் நடித்து வருகிறார். மலையாளத்தில் 4 படங்களில் நடித்து வருகிறார். ‘சல¢லால மொபைல்ஸ்‘ என்ற படத்துக்காக சொந்த குரலில் நஸ்ரியா பாட்டு பாடி இருக்கிறார்.

 இப்பாடல் இணைய தளங்களில் வெளியாகி உள்ளது. இதுகுறித்து நஸ்ரியா தனது இணைய தள பக்கத்தில் தகவல் வெளியிட்டிருக்கிறார். தான் பாடிய பாடலுக்கு என்ன பொருள் என்பதை விளக்கி இருக்கிறார். ‘கோழிக்கோடு மலையாள பேச்சு வழக்கு இந்த பாடலில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதை எல்லோராலும் எளிதில் புரிந்துகொள்ள முடியாது‘ என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

Monday, January 20, 2014

தனது ஹீரோக்களுக்கு ரஜினிதான் ரோல்மாடல்..! - லிங்குசாமி



ஆனந்தம் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகி ரன் திரைப்படத்தின் மூலம் மிகப் பிரபலமாக அறியப்பட்ட இயக்குனர் லிங்குசாமி தனது படங்களுக்கு ரஜினிதான் ரோல்மாடல் என்று கூறியுள்ளார்.

இயக்குனர் லிங்குசாமியின் வலைப்பதிவில் வெளியிடப்பட்டிருக்கும் அஞ்சான் திரைப்படம் குறித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் உலக நாயகன் கமல்ஹாசனிடம் பேசிக்கொண்டிருந்தபோது, கமல்ஹாசன் “ இத்தன வருட சினிமா அனுபவத்துல என்ன பண்ணக்கூடாதுன்னு தெரிஞ்சிக்கிட்டேன், ஆனா என்ன பண்ணனும்னு தெரியல” என்று கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சிவாஜி கணேசன் நடித்த கர்ணன் திரைப்படத்தை ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் புதுப்புது விசயங்களைக் கற்றுக்கொள்ள முடிகிறது என்றும் கூறியுள்ளார்.

இயக்குனர் லிங்குசாமி தற்பொழுது சூர்யா - சமந்தா நடிக்கும் அஞ்சான் திரைப்படத்தைத் தயாரித்து இயக்கிவருகிறார்.

நீங்க டென்ஷன் பார்ட்டியா? இத கண்டிப்பா படிங்க..!



உடல் நலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், அதற்கு நிறைய செயல்களை கடைபிடிப்பதோடு, ஒருசிலவற்றையும் அடக்கி வாழக் கற்றுக்  கொள்ள வேண்டும். ஒருவர் எதை அடக்க தெரிகிறானோ, இல்லையோ, கோபத்தை அடக்க தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில் கோபத்தால், ஒருவரது  நட்பு எப்படி முறிய வாய்ப்புள்ளதோ, அதேப்போல் உடலில் உள்ள உயிரும் சில சமயங்களில் முறிய வாய்ப்புள்ளது. கோபம் என்பது எந்த நேரத்திலும்  வரும். ஆனால் அந்த கோபம் அளவுக்கு அதிகமானால், அவை உடலில் பல பாதிப்புக்களை ஏற்படுத்தும்.

உதாரணமாக, மன அழுத்தம், இதய நோய், இரத்த அழுத்தம், தலைவலி, போதிய தூக்கம் இல்லாமை போன்றவை. இத்தகைய பிரச்சனைகள் உடலில்  வந்தால், பின் உடல் நிலையானது மிகவும் மோசமாகி, பின் இறப்பை சந்திக்க நேரிடும். ஆகவே கோபம் கொள்வதால், உடலில் எந்த மாதிரியான  பிரச்சனைகள் வரக்கூடும் என்பது குறித்து கீழே விளக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனி கோபம் கொள்ளலாமா, வேண்டாமா  என்பதை முடிவெடுங்கள்.

மன அழுத்தம்:

 கோபம் அதிகம் வந்தால், மன அழுத்தம் அதிகமாகும். மன அழுத்தம் அதிகமானால், நீரிழிவு, மன இறுக்கம், இரத்த அழுத்தம் போன்ற  பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.

இதய நோய்:

 கோபத்தின் காரணமாக ஏற்படும் படபடப்பு மற்றும் அதிகப்படியான இதய துடிப்பு போன்றவை இதயத்திற்கு பெரும் பாதிப்பை  ஏற்படுத்தும். சில சமயங்களில் அவை இதயத்திற்கு மிகவும் ஆபத்தான விளைவைக் கூட ஏற்படுத்தும்.

தூக்கமின்மை:

எப்போது கோபப்படுகிறோமோ, அப்போது உடலில் உள்ள ஹார்மோன்களானது சுறுசுறுப்புடன் இருக்கும். இதனால் சரியான தூக்கம் கூட  வராது. மேலும் உடலுக்கு வேண்டிய ஓய்வானது கிடைக்காமல், எளிதில் நோய்களானது உடலைத் தாக்கும். சிலசமயங்களில் தூக்கமின்மை ஒருவரை  பைத்தியமாக கூட மாற்றிவிடும்.

உயர் ரத்த அழுத்தம்: 

உயர் ரத்த அழுத்தமானது பல காரணங்களால் நிகழ்ந்தாலும், அதில் கோபமும் ஒன்று. அதிலும் எப்போது கோபம் வருகிறதோ,  அந்த நேரமே உடலில் ரத்த அழுத்தமானது உடனடியாக அதிகப்படியான அளவில் அதிகரிக்கும். அவ்வாறு உடனே அதிகரிக்கும் போது, இதயமானது  பெரும் அளவில் பாதிக்கப்படும்.

சுவாசக்கோளாறு:


 சுவாசக் கோளாறான ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள், கோபப்படும் போது சரியாக சுவாசிக்க முடியாது. ஆகவே ஆஸ்துமா  உள்ளவர்கள், அதிகம் கோபப்பட வேண்டாம். இல்லையெனில் அது மூச்சடைப்பை ஏற்படுத்தி, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும்.

தலைவலி:

எப்போது கோபம் வருகிறதோ, அப்போது இரத்த அழுத்தம் அதிகமாவதால், மூளைக்கும் செல்லும் இரத்த குழாயானது அதிக அளவில்  மூளைக்கு வேகமாக இரத்தத்தை செலுத்தும் போது, மூளையில் ஒரு வித அழுத்தம் ஏற்பட்டு, தலை வலியை உண்டாக்கும். எனவே கோபத்தின்  போது வரும் தலைவலியை குறைப்பதற்கு, உடனே அமைதியாகிவிடுவது நல்லது.

மாரடைப்பு:

 பொதுவாக ஒருவருக்கு மாரடைப்பானது அதிகப்படியாக உணர்ச்சிவசப்படுதல், ஆச்சரியப்படுதல் அல்லது கோபத்தின் காரணமாக ஏற்படும்.  இவற்றில் பெரும்பாலானோர் கோபத்தின் காரணமாகத் தான் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தான், இதய நோயாளிகளிடம் எந்த ஒரு  அதிகப்படியான மகிழ்ச்சியான விஷயத்தையும் அல்லது அவர்களை கோபமூட்டும் விஷயத்தையும் சொல்ல வேண்டாம் என்று மருத்துவர்கள்  கூறுகின்றனர்.

மூளை வாதம்:


 மூளை வாத நோய் ஏற்படுவதற்கு மூளையில் உள்ள இரத்த குழாய்கள் வெடிப்பது தான் காரணம். இந்த மாதிரியான இரத்த குழாய்கள்  வெடிப்பதற்கு முக்கிய காரணம் கோபம். ஏனெனில் கோபத்தினால், இரத்த அழுத்தமானது அதிகப்படியாக இருப்பதால், அவை இரத்த குழாய்களை சில  சமயங்களில் வெடிக்கச் செய்து, உயிரைப் பறித்துவிடும். எனவே எப்போதும் அதிகப்படியான கோபம் கொள்ளக் கூடாது.

சுனந்தா இறந்தது எப்படி? பிரேத பரிசோதனை அறிக்கையில் பரபரப்பு தகவல்கள்..!



மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர், அதிகமான மருந்துகளை சாப்பிட்டதால் இறந்திருக்கலாம் என்று பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா மரணத்தை அடுத்து அவரது உடலின் பாகங்கள் ரசாயன பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. இதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவமனை அதிகாரிகள் கூறுகையில், சுனந்தாவின் உடலை 3 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர்.

அவரது மரணம் இயற்கையானதல்ல, திடீர் மரணம்தான் என்று குழுவினர் கண்டறிந்தனர் என்றனர்.இந்நிலையில், அவர் கடைசியாக எடுத்து கொண்ட உணவில் விஷம் கலந்துள்ளதா, மது குடித்திருந்தாரா என்று அறிய உடலின் பாகங்கள் சிலவற்றை ரசாயன பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் அறிக்கையில், அவரது உடலில் ஆல்கஹால் கலந்திருப்பதற்கான தடயம் இல்லை என்பதால், அவர் குடித்திருக்கவில்லை என தெரியவந்தது.

மேலும், மன அழுத்தத்திற்காக அல்பிராசோலம் எனப்படும் மருந்துகளை அவர் அதிகமாக சாப்பிட்டிருப்பதும் தெரிய வந்தது. இந்த மருந்து அதிகரித்ததால் அவர் உயிரிழந்திருக்கலாம் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த மருந்துகள் தூக்க மாத்திரைகளை போல் மயக்கத்தை தரக்கூடியது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.இதற்கிடையில், சிறப்பு புலனாய்வு படையினர் சசிதரூர் உள்பட 8 பேரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர். மேலும் சசிதரூரின் உதவியாளரும், பத்திரிகையாளருமான நளினி சிங்கிடமும் விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணையில் கிடைத்த வாக்குமூலங்கள், மருத்துவர் அறிக்கைகள், நடைபெற்ற சம்பவங்கள் ஆகியவற்றை ஒப்பிட்டு ஆய்வு செய்து பார்த்து சுனந்தா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அளவுக்கு அதிகமான மருந்துகளை உட்கொண்டதால் இறந்தாரா, அல்லது தற்கொலை நோக்கத்துடன் அதிக மாத்திரைகள் எடுத்து கொண்டாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.

மேலும், சுனந்தா அறையில் தங்கியிருந்த போது அவர் பேசிய தொலைபேசி உரையாடல்கள், இமெயில்கள், டுவிட்டர்கள் ஆகியவற்றையும் சிறப்பு புலனாய்வு படையினர் சேகரித்துள்ளனர். இவற்றை சிறப்பு புலனாய்வு படை தலைவர் அசோக் சர்மா ஆய்வு செய்து வருகிறார்.இந்நிலையில், சுனந்தாவின் பிரேத பரிசோதனை அறிக்கையையும், ரசாயன பரிசோதனை அறிக்கையையும் இன்று மாலையில் டெல்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளனர்.

 இதைத் தொடர்ந்து, பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள், ரசாயன பரிசோதனை செய்த நிபுணர்கள் ஆகியோருடன் சிறப்பு புலனாய்வு படையினர் விவாதிக்கவுள்ளனர்.இதற்கிடையே, ரசாயன மருத்துவ நிபுணர் குழு தலைவர் சுதீர் குப்தா கூறுகையில், எங்களது ஆய்வுகள் முழுமையாக முடிவடைந்து விட்டன.

சுனந்தாவின் உடலில் விஷம் எதுவும் கலக்கப்படவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டு விட்டது. இதயத்தை ஆய்வு செய்ததில் சில மருத்துவ தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றை பிரேத பரிசோதனை அறிக்கையுடன் ஒப்பிட்டு பார்த்து இறுதி முடிவு எடுக்கப்படும்’ என்றார்.மேலும் தடயவியல் நிபுணர்களும் அறையில் எடுத்த மருந்துகள், கைரேகைகள், வியர்வை துளிகள், ரத்த மாதிரி உள்ளிட்டவற்றை வைத்து ஆய்வு செய்வர். பின்னர் இவை அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு, போலீசாரின் விசாரணை அறிக்கைகளுடன் சேர்த்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று எய்ம்ஸ் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
back to top