.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, October 11, 2013

'சுட்டினால் புரிந்துகொள்ளும் ஆற்றல் பெற்றவை யானைகள்'!



யானைகள், மற்ற விலங்குகளைப் போலல்லாமல், ஒருவர் சுட்டிக்காட்டுவதைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் படைத்தவை என்று புதிய ஆய்வொன்று கூறுகிறது.


ஜிம்பாப்வேயில் பழக்கப்பட்ட யானைகள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம், யானைகள், முழுமையாக நிரப்பப்பட்ட உணவு வாளிகளை, மனிதர்கள் சுட்டிக்காட்டும்போது, காலியான உணவு வாளிகளிடமிருந்து பிரித்துப் பார்க்கும் திறன் கொண்டவையாக இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டனர்.


சுட்டிக்காட்டும் சைகை, மற்றவர்களிடமிருந்து கிடைக்கும் உதவி மற்றும் ஆதரவு, உயிர்வாழ மிகவும் முக்கியமாக உள்ள சிக்கலான சமூகங்களில் , மிகவும் பயனுள்ள ஒரு தகவல் தொடர்புச் சாதனம் என்று மனிதர்களைப் போலவே யானைகளும் உணர்ந்திருக்கின்றன என்பதை இது காட்டுவதாக இந்த ஆராய்ச்சியை தலைமை தாங்கி நடத்திய ஸ்காட்லாந்தின் செயிண்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் ரிச்சர்ட் பைர்ன் கூறினார்.

அமைதிக்கான நோபல் பரிசு!


2013ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு O.P.C.W அமைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது. நார்வே தலைமையகம் ஓஸ்லோவில் அமைதிக்கான நோபல் பரிசை பெற O.P.C.W அமைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, நோபல் பரிசு தேர்வுக்குழு அறிவித்தது. O.P.C.W அமைப்பு என்பது ரசாயன ஆயுதங்களை தடை செய்யும் அமைப்பு ஆகும். அமைதிக்கான நோபல் பரிசானது பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரூ.7.70 கோடி ரொக்கப் பரிசு ஆகியவற்றைக் கொண்டதாகும்.

11 - nobel pease winner

 


இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசுகளைத் தொடர்ந்து இன்று அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயின் ஆஸ்லோ நகரில் அறிவிக்கப்பட்டது.

 
இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு ரசாயன ஆயுத தடுப்பு அமைப்புக்கு (ஓ.பி.சி.டபுள்யூ) வழங்கப்படுவதாக தேர்வுக்குழு அறிவித்துள்ளது. ரசாயன ஆயுதங்களை ஒழிப்பதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொண்டதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது.


நெதர்லாந்தை தலைமையிடமாகக் கொண்டுள்ள இந்த ரசாயன ஆயுத தடுப்பு அமைப்பில் 190 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பு 1997ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. ஐ.நா.வுடன் இணைந்து பணியாற்றும் இந்த அமைப்பின் ரசாயன ஆயுத ஒழிப்பு குழுவினர், தற்போது சிரியாவில் ரசாயன ஆயுத ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Nobel Peace Prize 2013:

******************************************
 

The weapons watchdog the Organisation for the Prohibition of Chemical Weapons has been announced as the winner of the Nobel Peace Prize 2013.

“ச்சீ..ச்சீ..கெளதம் மேனன் படம் புளிக்கும்!” – சூர்யா ஸ்டேட் மென்ட்!



சூர்யா – கெளதம் மேனன் இருவரும் இணைந்து ‘காக்க காக்க’, ‘வாரணம் ஆயிரம்’ ஆகிய படங்களில் பணியாற்றியிருக்கிறார்கள்.

இந்நிலையில் மீண்டும் ’துருவ நட்சத்திரம்’ என்னும் படத்தில் இணைந்து பணியாற்ற இருப்பதாக அறிவித்தார்கள். சூர்யா, பார்த்திபன், சிம்ரன் மற்றும் பலர் நடிக்க கெளதம் மேனன் இயக்கும் ‘துருவ நட்சத்திரம்’ என்று படப்பூஜை போடப்பட்டு, படத்தின் போஸ்டர்களும் வெளியிடப்பட்டன.அதற்குப் பிறகு எப்போது படப்பிடிப்பு, யாரெல்லாம் சூர்யாவுடன் இணைந்து நடிக்கவிருக்கிறார்கள் என்று எதுவுமே தெரியாமலிருந்த. நிலையில் தற்போது சூர்யா, தான் கெளதம் மேனன் படத்திலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்து இருக்கிறார்.


11 - surya-gautham-menon-

 


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கடந்த 2012ம் ஆண்டு ஜுன் மாதம் கெளதம் மேனன் அவர்கள் இயக்கம் மற்றும் தயாரிப்பில், நான் கதாநாயகனாக நடிப்பதாக முடிவானது. இது அனைவரும் அறிந்த செய்தி. பல்வேறு காரணங்களால் இப்போது நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்ற இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


என்னுடைய திரையுலக அனுபவத்தின் அடிப்படையில், நான் நடிக்கும் படத்தின் கதை, மனதிற்கு முழுத்திருப்தி தந்த பிறகே படப்பிடிப்பு செல்வது என்பதை கொள்கை முடிவாக நடைமுறைப்படுத்தி வருகிறேன். ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பையும், எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்வதே ஒரு நடிகனாக என்னுடைய முதல் கடமையாக கருதுகிறேன்.


இயக்குநர் கெளதம் அவர்களிடம் என்னுடைய இந்தக் கொள்கை முடிவை முதல் நாளே தெளிவாகச் சொல்லி, அதற்கு அவர் சம்மதித்த பிறகே நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றுவது என முடிவு செய்தோம். இதையே ஒப்பந்தமாகவும் செய்துகொண்டோம். ஆனால், ஒப்பந்தம் செய்து, ஒருவருட காலம் கழிந்த பிறகும், கெளதம் அவர்கள் இன்னும் என்னிடம் முழு கதையை திருப்தி அளிக்கும் வகையில் தரவில்லை.


சிங்கம் 2 படம் முடித்த பிறகு ஆறுமாதங்களாக முழுக்கதையையும் எதிர்பார்த்து காத்திருந்தேன். முதலில் பூஜை போட்டுவிடலாம் என்றார். நட்பின் அடிப்படையில் அதற்கும் ஒத்துழைத்தேன். ‘ஒரு டெஸ்ட் ஷுட்’ செய்து ‘கெட்டப்’ மாற்றங்களை முடிவு செய்யலாம் என்றார். தயக்கம் இருந்தாலும், கெளதம் அவர்கள் மீது இருக்கும் நன்மதிப்பின் அடிப்படையில் அதற்கும் ஒத்துழைத்தேன். பல மாதங்களாக ஷுட்டிங் போகாமல், வீட்டில் காத்திருந்தேன். கெளதம் அவர்களிடம் இருந்து, நடிகனாக எனக்கு திருப்தி அளிக்கும் முழுக்கதை கிடைக்கும் என்று இன்றுவரை காத்திருந்தேன். அது நடக்கவில்லை.


முன்பே கெளதம் அவர்கள் ‘சென்னையில் ஒரு மழைகாலம்’ படத்திற்கு பூஜை போட்டு, ஒரு வாரம் ஷுட்டிங் செய்து, எட்டு மாதங்கள் காத்திருந்தும், கடைசியில் அந்த படம் நடக்கவில்லை. இப்போது இந்தப் படத்திற்கும் அதே அனுபவம் தொடர்ந்து ஏற்படுகிறது.


ஆறுமாத கால காத்திருத்தலுக்குப் பிறகு, இனி காத்திருக்க இயலாத சூழல் எனக்கும் ஏற்பட்டுள்ளது. நானும் கெளதம் அவர்களும் கருத்தளவிலும் எதிரெதில் திசையில் பயணிக்கிறோம் என்று தோன்றுகிறது. இந்நிலையில் நாங்கள் இருவரும் தொடர்ந்து பணியாற்ற இயலாது என்று உறுதியாக நினைக்கிறேன்.


ஒரு திரைப்படம் உருவாவதில் பலரின் பங்கு முக்கியமாகவும், அவசியமாகவும் இருக்கிறது. நடிகனாக நம்பிக்கையில்லாமல் செய்த படங்கள், எனக்கு சரியான பாடங்களைத் தந்திருக்கின்றன். நட்பின் அடிப்படையில் கெளதம் அவர்களுடன் இணைந்து பணியாற்ற என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் எடுத்துவிட்டேன். இனி நாங்கள் இருவரும் இப்படத்தில் இணைந்து பணியாற்ற இயலாது. அதனால் கெளதம் அவர்களின் படத்தில் இருந்து விலகி கொள்கிறேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒரு வேளை சாப்பாடு ஜஸ்ட் ஒரு ரூபாய்!


தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாரதி வெறி கொண்டு முழங்கிய தமிழ் இனத்தில்தான், சொட்டுப்பாலுக்கு வக்கில்லாமல், சாலையோர அழுக்கு மூட்டைகளோடு மூட்டைகளாகக் கிடக்கும் குழந்தைகளும், சினிமா நடிகனின் கட்-அவுட்டுக்கு பால் வார்க்கும் புண்ணியவான்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.


11 - erode one rs hotel.Main

 


இந்நிலையில் இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பு நண்பர் ஆரூரன் மூலமாக எனக்கு அந்த மெஸ் அறிமுகமானது. அது ஈரோடு, பவர்ஹவுஸ் ரோடில் நல்லசாமி மருத்துவமனைக்கு எதிரில் இருக்கும் A.M.V மெஸ். சுவையான உணவுப் பதார்த்தங்களை அநேகமாக ஈரோட்டில் யாரும் தராத விலையில் அவர்கள் தருவதாகவே நினைக்கிறேன். சாப்பிடச்சென்ற போது கவனித்ததில் ஆச்சர்யமாக இருந்தது, தங்கள் மெஸ்ஸில் உடல் ஊனமுற்றோருக்கு 10% தள்ளுபடி, கண் பார்வையற்றவர்களுக்கு 20% தள்ளுபடி என்று அறிவிப்பு பலகை வைத்திருந்தது. இன்னொரு பக்க சுவற்றில் கரும்பலகை சீட்டில் எழுதியிருந்து இன்னும் ஆச்சரியத்தை கிளப்பியது. ஒரு ரூபாய் விலையில் மதிய உணவை வழங்குவதாகவும், அதற்கு நல்லெண்ணத்தோடு நிதியுதவி செய்தவர்கள் பெயரை நன்றியோடு குறிப்பிட்டிருந்தார்கள்.


இது குறித்து உணவகத்தில் உரிமையாளர் திரு. வெங்கட்ராமன் அவர்களிடம் கேட்டபோது, ”ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப் பட்டிருப்பவர்கள் பெரும்பாலும் வசதி இல்லாதவர்களாகவும், கிராமப்புறத்தை சார்ந்தவர்களாகவும் இருப்பார்கள். அவர்களுக்கான உணவு மருத்துவமனையில் வழங்கப்படும். அதே சமயம் நோயாளிகளுக்கு துணையாக ஒருவர் உடன் இருப்பர், அவர்களுக்கான உணவிற்கு அவர்கள் வெளியில்தான் செல்ல வேண்டும். 


சில நேரங்களில் விபத்துகளில் சிக்கி 108மூலம் மருத்துவமனைக்கு வரும் ஏழைகளுக்கு அடுத்த நாள் உணவு என்பதே கேள்விக்குறிதானே!? ஒருவேளை உணவிற்கான செலவு என்பது பலருக்கு இயலாத ஒன்று. அதை மனதில் கொண்டு தினமும் மருத்துவமனையில் 20 பேருக்காக ஒரு ரூபாயில் உணவு வழங்க, அதற்கான டோக்கன்களை மருத்துவமனையில் தருகிறோம். மருத்துவமனையில் அவர்கள் தேர்ந்தெடுத்து அனுப்பும் 20 பேருக்கு ஒரு ரூபாயில் மதிய சாப்பாட்டை அளிக்கிறோம்” என்றார்.


ஒரு பிளாஸ்டிக் பையில், சாப்பாடு, சாம்பார், ரசம், மோர், பொறியல், அப்பளம் என பார்சல் சாப்பாடு தயாராக மதிய நேரங்களில் டோக்கனோடு வருபவர்களின் பசியாற்ற காத்திருக்கிறது.


கையில் டோக்கனோடு சாப்பாடு வாங்க வரும் நபர்களைப் பார்க்கும் போது, அவர்கள் கண்களில் ஒரு நம்பிக்கையும், மகிழ்ச்சியையும் ஒரு சேரக் காண முடிந்தது. ஒரு ரூபாய்க்கு சாப்பாடு குறித்து அவர்களிடம் கேட்கும் போது மிகுந்த மகிழ்ச்சியாக உணர்வதாக சொல்கிறார்கள். மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று, உணவு எடுத்துக்கொள்ளும் நிலையில் இருக்கும் தங்கள் உறவுக்காரரான நோயாளியோடு பகிந்துகொள்வதாக நெகிழ்ந்து கூறுகின்றனர்.


சாதாரணமாக தங்கள் மெஸ்ஸில் 25 ரூபாய்க்கு விற்கும் சாப்பாட்டை 24 ரூபாய் தள்ளி வெறும் ஒரு ரூபாய்க்கு கொடுக்கும் நல்ல மனதினரை நினைக்கும் போது வணங்கத் தோன்றுகிறது.


ஒரு ரூபாய்க்கு உணவு வழங்கும் திட்டத்திற்கு பங்களிக்க விரும்பும் நபர்களிடமிருந்து நன்கொடையை ஏற்றுக்கொண்டு, நன்கொடையளிக்கும் நல்லவர்களின் பெயர்களை தினமும் பெயர்பலகையில் வெளியிடுவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.


நன்கொடை அளிக்க விரும்புவோர் அணுக வேண்டிய முகவரி Mr.N.Venkataraman, Srii AMV Mess, Near Nallasamy Hospital, Power House Road, ERODE-638001 Cell: 99443-80076. நேரிடையாக வங்கியில் செலுத்த விரும்புவோருக்கு…. V.Venkataraman ING Vysya Bank, Erode Branch SB A/c. 405010065939 / IndusInd Bank Erode SB A/c.0034-B75420-050.


எல்லோரும் தொழில் செய்வது லாபம் என்ற நோக்கத்தை அடிப்படையாக வைத்தே என்ற போதிலும், லாபத்தைத் தாண்டி தங்களால் முடிந்த அளவிற்கு மற்றவர்களுக்கு அதே தொழில் மூலம் உதவ வேண்டும் என்ற நல்ல உள்ளங்களை வாழ்த்துவதும், ஊக்குவிப்பதும் மனித நேயமுள்ள அனைவருமே அடிப்படையாக செய்ய வேண்டிய ஒன்று.

 
back to top