.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, December 15, 2013

உங்க சிரிப்பு எப்படி?




* ஓயாமல் சிரிப்பவன்- பைத்தியக்காரன்


* ஓடவிட்டு சிரிப்பவன்- வஞ்சகன்


* இடம்பார்த்து சிரிப்பவன்- எத்தன்


* குழைந்து சிரிப்பவன்- கோமாளி


* இன்பத்தில் சிரிப்பவன்- ஏமாளி


* கண்பார்த்துச் சிரிப்பவன்- காரியவாதி


* யாரும் காணாமல் சிரிப்பவன்- கஞ்சன்


* கற்பனையில் சிரிப்பவன்- கவிஞன்


* வெற்றியில் சிரிப்பவன்- வீரன்


* நினைவோடு சிரிப்பவன்- அறிஞன்

மிரள வைத்த விவேகானந்தரின் `வலிமை’




 ஒருமுறை ராஜஸ்தான் மாநிலத்தில் சுவாமி விவேகானந்தர் ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது, அவர் இருந்த பெட்டியில் அவரைத் தவிர 2 வெள்ளையர் இருந்தனர். விவேகானந்தர் அணிந்திருந்த காவி உடையை பார்த்த அவர்கள், அவருக்கு ஆங்கிலம் தெரியாது என்று நினைத்துக் கொண்டு அவரை கேலியும் கிண்டலும் செய்து கொண்டிருந்தனர். திட்டவும் கூட செய்தனர்.
இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த விவேகானந்தர் அமைதியாகவே இருந்தார். தனக்கு ஆங்கிலம் தெரியும் என்பதை காட்டிக்கொள்ளவே இல்லை.


ஒரு ரெயில் நிலையத்தில் ரெயில் நின்றதும், அங்கிருந்த ஒருவரிடம், `இங்கே தண்ணீர் கிடைக்குமா?’ என்று ஆங்கிலத்தில் கேட்டார் விவேகானந்தர்.


இதை கவனித்த 2 வெள்ளையர்களும் அதிர்ச்சி ஆனார்கள். விவேகானந்தர் தனது இருக்கையில் வந்து அமர்ந்ததும் அவர் அருகில் பவ்வியமாக சென்றனர்.


`நாங்கள் இவ்வளவு நேரமும் உங்களை கேலி செய்தோம். நீங்கள் எங்களை எதிர்த்து ஒரு கேள்விகூட கேட்கவில்லையே… ஏன்..?’ என்று கேட்டனர்.


அதற்கு விவேகானந்தர், `நான் முட்டாள்களை சந்திப்பது இது முதல் தடவை அல்ல’ என்றார். இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த வெள்ளையர்கள், விவேகானந்தரை தாக்க முயன்றனர். விவேகானந்தரும் அதை எதிர்கொள்ள தயாராக எழுந்தார்.


அவரது வலிமையான உடல் அமைப்பையும், பலமான கைகளையும் பார்த்த அவர்கள், அப்படியே பெட்டிப் பாம்பாக அமைதியாகிவிட்டனர். செல்ல வேண்டிய இடம் வரும்வரை அப்படியே இருந்தனர்.


துறவிகளிடம் அமைதி, எளிமை, அன்பு மட்டுமின்றி, வலிமையும் இருக்கும் என்பதற்கு சுவாமி விவேகானந்தரே சிறந்த உதாரணம்.

பெண்கள் பற்றி சில தகவல்கள்....




1. ஆணின் இதயத்தை விட பெண்ணின் இதயம் வேகமாக துடிக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

2. புகழ்பெற்ற பிரெஞ்சு வீராங்கனை ஜோன் ஆப் ஆர்க் பிறந்தது மே 30, 1431

3. கைவிளக்கேந்திய காரிகை நைட்டிங்கேல் அம்மையார் பிறந்தது மே 12, 1820

4. இதுவரை ஒன்பது பெண்கள் சமாதானத்திற்கான நோபல் பரிசு வென்றுள்ளனர்.

5. உலகின் முதல் விண்வெளி வீராங்கணை வாலண்டினா தெரஸ்கோவா 45முறை பூமியை வெற்றிகரமாக வலம் வந்தவர்.

6. இரண்டுமுறை நோபல் பரிசு பெற்ற மேடம் கியுரி சிறுவயதில் வீட்டுவேலை செய்யும் வேலைக்கார சிறுமியாக தம் வாழ்க்கையை பல கஷ்டங்களுக் கிடையே துவக்கினார்.

7. ஆங்கில கால்வாயை நீந்தி கடந்த முதல் இந்திய பெண் ஆரதி சாகா.

8. ஆங்கிலக் கால்வாயை மிக வேகமாக நீந்திய ஒரே ஆசிய வீராங்கனை அனிதா சூட். 81/4 மணி நேரத்தில் நீந்திக்கடந்தார்.

9. இந்திய விமானப்படையில் முதன் முதலில் பெண்கள் ஜூலை19,1993ல் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

10. வெளிநாட்டு தூதுவராக சென்ற முதல் இந்தியப் பெண் டாக்டர் விஜயலட்சுமி பண்டிட்.

11. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி.

12. உலகின் முதல் பெண் பிரதமர் சிரிமாவோ பண்டாரநாயகா.

13. தமிழகத்தின் முதல் பெண் ஆளுநர் திருமதி பாத்திமா பீவி.

14. இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி திருமதி பிரதீபா பாட்டில்.

15. பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய முதல் நாடு நியுசிலாந்து.

16. இந்தியாவின் முதல் பெண் உயர்நீதிமன்ற நீதிபதி அண்ணா சாண்டி.

17. இந்தியாவின் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற பெண்மணி

18. மிகக் குறைந்த வயதில் ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் வென்ற பெண்மணி மார்டினா ஹிங்கிஸ்.

19. இந்தியாவின் முதல் பெண் பேருந்து ஓட்டுனர் வசந்தி

20. இந்தியாவின் முதல் பெண் பைலட் துர்கா பேனர்ஜி

21. இந்தியாவை ஆண்ட முதல் பெண் சுல்தானா ரஸியா பேகம்.

22. இந்தியாவின் மனித கம்ப்யூட்டர் என்றழைக்கப்படும் பெண் சகுந்தலா தேவி.

23. விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியப் பெண் கல்பனாசாவ்லா

24. இந்தியாவின் முதல் பெண் மக்களவை சபா நாயகர் மீரா குமார்.

25. இந்தியாவின் முதல் பெண் முதல்வர் சுஜேதா கிருபாளினி......

எது பெண்ணியம் - மகளுக்கும் சகோதரிகளுக்கும்!



ஒரு ஆண் செய்யும் அசிங்கத்தையும் அருவருப்பானதையும் கேவலமானதையும் பார்த்து அதைப் போல ஒரு பெண் செய்தாலென்ன என நினைப்பதுதான் பெண்ணியமா?

கேவலமானவற்றை செய்யும் ஆணோடு போட்டியிட்டு அதைப் போல அல்லது அதை விட கீழ்த்தரமாக செய்து காண்பிப்பதுதான் பெண்ணியமா?

ஆண்களைப் போல் ஆடை அணிவது, 'இன்னும் குறைப்பேன் என்ன பந்தயம்?' எனக் கேட்டு அங்கங்கள் வெளியில் தெரிய ஆடை குறைப்பு, தலை முடியை சிறிதாக்கிக் கொள்வது, மேற்கத்திய நாகரிகம் செல்லும் திக்கை நோக்கியே பயணிப்பது, இதுதான் பெண்ணியம் என சில பெண்கள் சூடு வைத்துக் கொள்கின்றனர்.

பல்லாயிரம் ஆண்டுகளாக ஆணாதிக்கத்தின் இரும்புச் சங்கிலிகளை அறுத்து வந்த பெருமை பெற்ற பெண்களை சிறிது யோசியுங்கள். அவர்கள் இம்முறையில் கீழ்த்தரமானதை செய்ததாலா பெருமை பெற்றனர்? மனித குலத்தை உயர்த்தும் செயலிற்சிறந்த ஆண்களோடு போட்டியிட்டு அவர்களைப் போல அல்லது அதை விடவும் சிறப்பாக செயலாற்றிக் காண்பித்ததாலேயே பெண் குலத்துக்கு பெருமை சேர்த்தனர்.

பழங்காலத்தைப் போல் இன்று பெண்களின் வளர்ச்சிக்கு பெரும் தடைக்கற்களாக ஆண்கள் இல்லை என்னுமளவுக்கு ஆண்கள் மாறியுள்ளனர். அது மட்டுமின்றி பெண் வளர்ச்சிக்காகவும் விடுதலைக்காகவும் சமீப கால இந்தியாவில் பாடுபட்டவர்களில் பெரும்பாலோர் இராஜா ராம் மோகன்ராய், தந்தை பெரியார், திரு.வி.க., பாரதி, பாரதிதாசன் போன்ற ஆண்கள்தான்.

முதலில் திறந்து விடப்பட்டுள்ள வழிகளில் பயணம் செய்ய பெண்கள் தயாராக வேண்டும். ஓட்டுரிமை மறுக்கப்பட்ட காலம் போய் இன்று 33 விழுக்காடு இட ஓதுக்கீடு இலக்கை பெற முயற்சித்துப் பெருங்கள். நாளை இது 50 விழுக்காடு நோக்கிய பயணமாயிருக்கட்டும்.

கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் பெண்கள் சாதிக்கிறார்கள். பெண்களால் இயலாது எனப்பட்ட காவல் துறை, இராணுவம் ஏன் விண்வெளி வரை பெண்கள் உயர்ந்திருக்கிறார்கள்.

ஆனாலும் பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்ற பெரும் பழியை வரதட்சனை, மருமகள் கொடுமை போன்றவற்றால் இன்னும் பெண்கள் சுமக்கிறார்கள். இவற்றையெல்லாம் உடைத்து வெளி வருவதில்தான் பெண் முழு விடுதலை நோக்கி வருவாள்.

மிகக் கேவலமான கற்பப்பை சுதந்திரம், நினைத்ததை எல்லாம் செய்யும் கட்டுப்பாடற்ற சுதந்திரம், முடிவெடுக்கும் அதிகாரம் இவை கிடைத்து விடுதல்தான் பெண் விடுதலை என சில பெண்கள் பிதற்றித் திரிகின்றனர்.

இல்லை. பெண் விடுதலை என்பது சுயத்தை இழக்காமல், அதாவது பெண்களுக்குரிய தனித்தன்மைகளை இழக்காமல் எல்லா உரிமைகளும் பெற்று வாழ்வதே ஆகும்.

தாய்மைப்பேறு, தாய்ப்பால் கொடுத்தல், ஒரே ஆணோடு வாழ்தல் இவையனைத்தும் பெண்களுககே உரிய தனித்தன்மைகள். இவற்றை விட்டு விலகுவது காலப்போக்கில் பண்பாட்டுச் சீரழிவை விதைத்து, உயரிய கலாச்சாரத்தைக் கெடுத்து, பெண்களுக்கே எதிரான விளைவுகளைத்தான் தரும்.

ஆண்களோடு உடல் வலுவில் பெண்கள் போட்டியிட முடியாது போலவே பெண்ணின் இத்தகு தனித்தன்மைகளில் ஆண்களும் போட்டியிடவே முடியாது. இதுதான் இயற்கை நியதி.

பெண்ணிணமற்ற ஆணிணமும், ஆணிணமற்ற பெண்ணிணமும் உலகில் நிலைக்குமா? சேர்ந்திருந்தால்தானே நிலைக்கும்.

என் மகளே! சகோதரிகளே! எது உண்மையான விடுதலையோ அதை நோக்கிய பயணத்தை செலுத்துங்கள். பொது வாழ்விலும் சொந்த வாழ்விலும் சில நியதிகளை கடைபிடித்துக் கொண்டே உரிமைகளுக்காகவும் விடுதலைக்காகவும் போராடி வெற்றி பெருங்கள். அப்போதுதான் உங்களோடு இந்த சமுதாயமும் உயரும்.
 
back to top