ஆன்லைன் ஷாப்பிங்… ஏமாற்றம் தவிர்க்க உஷார் டிப்ஸ்..!
எந்தத் துறை நன்கு வளர்கிறதோ, அந்தத் துறையில் மோசடி பேர்வழிகளின் நடமாட்டமும் அதிகமாகவே இருக்கும். இதற்கு இணையமும் விதிவிலக்கல்ல. முக்கியமாக, ஆன்லைன் ஷாப்பிங்கில் இன்று நடக்கும் ஏமாற்றுவேலைகள் கொஞ்சநஞ்சமல்ல. எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள், இதிலெல்லாம் சிக்காமல் இருக்க எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்கவேண்டும் என்று சொல்கிறார் பி.கே. ஆன்லைன் தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனத்தின் சீனியர் எக்ஸிக்யூட்டிவ் பிரபு கிருஷ்ணனா
”ஆன்லைன் ஷாப்பிங்கில் பல நல்ல விஷயங்கள் இருப்பது போல ஏமாற்று விஷயங்களும் இருக்கவே செய்கின்றன. போலி பொருட்களை விற்பது, குறிப்பிட்ட காலத்துக்குள் பொருளை டெலிவரி செய்யாமல் இழுத்தடிப்பது, போலி தளங்களை உருவாக்கி ஏமாற்றுவது என சில விஷயங்கள் இதில் உள்ளன. கடந்த மார்ச் மாதம்கூட TimTara என்ற ஆன்லைன் ஷாப்பிங் இணையதளத்தின் நிறுவனர் ஏமாற்று நடவடிக்கைகளால் கைது செய்யப்பட்டார். அந்த இணையதளமும் அதன்பின்னர் மூடப்பட்டது. இதுபோன்ற சம்பவங்களும் அவ்வப்போது நிகழ்கின்றன.
கவர்ச்சிகரமான விளம்பரங்களைச் செய்வதன் மூலம் கனஜோராக மோசடி செய்கின்றன பல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள். அதாவது, 50,000 ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளை வெறும் 500 ரூபாய்க்குத் தருவதாக விளம்பரங்கள் செய்யும். இதை நம்பி பலரும் அந்தப் பொருளை வாங்க போட்டிபோட கடைசியில், யாராவது ஒருவருக்கு மட்டுமே அந்தப் பொருள் கிடைக்கும் என்று சொல்லிவிடும். ஆனால், ஏற்கெனவே கட்டிய பணத்தைத் திரும்பத் தரமாட்டோம், அதற்கு பதில் ஏதேனும் பொருள் வாங்கிக்கொள்ளலாம் என்று சொல்லும். வேறு வழியில்லாமல் நாம் வாங்கும் இந்தப் பொருள், கடையில் விற்கும் விலையைவிட அதிகமாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
இந்த ஏமாற்று வித்தையில் வேடிக்கையான விஷயம், வாடிக்கையாளர்கள் பொருளை வாங்கும்போது சுவாரஸ்யத்தைக் கூட்டவும், வேகமாக அந்த வேலையைச் செய்துமுடிக்கவும் சில ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் ஒரு டெக்னிக்கை பின்பற்றுகின்றன. அதாவது, பொருளை வாங்க இரண்டு நிமிடங்களே அவகாசம் தரும். இதற்குள் நீங்கள் ஆர்டரை புக் செய்ய வேண்டும். இல்லையெனில், இந்த ஆஃபர் உங்களுக்கு கிடைக்காது என்று சொல்வதால், நாம் பரபரப்புக்குள்ளாவோம். ஏற்கெனவே பணம் கட்டிவிட்டோம்; எனவே, இரண்டு நிமிடத்தில் பொருளை வாங்கிவிட வேண்டும். இல்லாவிட்டால் கட்டிய பணம் போய்விடும் என்கிற அவசரத்தில்தான் நாம் செயல்படுவோம். இந்த இரண்டு நிமிடத்தில் பொருட்களை சரியாக புக் செய்ய முடியாமல் பணத்தை இழக்கிறார்கள் பலர்.
இன்னும் சில இணையதளங்கள் Free Trail, Half Price போன்று பல ஆஃபர்களை தருகின்றன. இதிலும், பெரும்பாலும் நடப்பது மோசடியே. உண்மையில் இவர்கள் மறைமுக கட்டணங்கள் (Hidden Charges) என்ற பெயரில் அதிகமான பணத்தை உங்களிடமிருந்து கறந்துவிடுவார்கள். உண்மையாகவே இலவசம் என்றால் உங்கள் கிரெடிட், டெபிட் கார்டு தகவல்களைக் கேட்க மாட்டார்கள். இதேபோல, திடீரென இலவச போன், கம்ப்யூட்டர் என்று மின்னஞ்சல், எஸ்.எம்.எஸ். வந்தாலும் அவற்றை நீங்கள் கண்டுகொள்ளவே கூடாது.
உண்மையாக வாடிக்கையாளர்களின் மீது அக்கறை கொண்டிருக்கும் தளங்கள், டிவி வாங்கினால்கூட அதை கொண்டுவந்து தருவதற்கு எந்தக் கட்டணத்தையும் கேட்காது. அப்படியே கேட்டாலும் அது குறைவான தொகையாகவே இருக்கும். பொருளை கொண்டுவந்து தர அதிக கட்டணம் கேட்கும் இணையதளங்களை நம்பக்கூடாது. இதில் இ-பே மட்டும் விதிவிலக்கு, காரணம், அந்தத் தளத்தில் பொருட்களை விற்பவர்கள் பல நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் விலை குறைவாக தருவதால் பொருட்களை கொண்டுவந்து சேர்க்க கட்டணம் கேட்கலாம்.
பொருட்களைத் திரும்ப எடுத்துக்கொள்ளும் வசதியை வழங்க மறுப்பதிலும் பெரும்பாலான தளங்கள் மோசடி செய்கின்றன. ஒரு ஆடையோ, காலணியோ வாங்கும்போது அளவு சரியாக இல்லை என்றால், அதைத் திரும்ப அனுப்பும் வசதி நமக்கு இருக்க வேண்டும். இதற்கு என்ன விதிமுறைகள் என்பதையும் அறிவது அவசியம். ஆனால், ஆர்டர் செய்த பொருளைத் திரும்ப அனுப்பும் முன்பு நீங்கள் அதை சேதப்படுத்தாமல் இருக்க வேண்டும்.
சில ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் தங்களின் தளத்திலேயே விதிமுறைகளை பட்டியல் போட்டிருப்பார்கள். மிக முக்கியமான விதிமுறைகளை நம் கண்ணுக்கு தெரியாதபடி போட்டிருப்பார்கள். அந்த விதிமுறையை நாம் கவனிக்கத் தவறிவிட்டு, பொருட்களை வாங்கிய பின்னர் அது சார்ந்த குறைகளை அவர்களிடம் தெரிவித்தால், நாங்கள்தான் விதிமுறைகளை ஏற்கெனவே சொல்லி இருக்கிறோம் என்பார்கள். பெரும்பாலும் பொருட்களை ரிட்டர்ன் எடுத்துக்கொள்வதிலேயே இந்தப் பிரச்னை வரும்.
ஆன்லைன் ஷாப்பிங் மூலம் ஆர்டர் செய்திருக்கும் பொருளானது கூரியர் மூலமாக நமக்கு அனுப்பப்படும். ஆனால், அந்த கூரியரை பிரித்து பார்க்கும்போது அந்தப் பொருளானது இல்லாமல்கூட இருக்கலாம். வீட்டுக்கு வந்த கூரியரில் பொருள் ஏதும் இல்லை எனில், உடனே ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்துக்கு தெரியப்படுத்துவது அவசியம். ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை அனுப்பியதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடியாமல்போனால், அதன்பிறகு அந்த நிறுவனத்தின் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும் வேலையில் இறங்கலாம். சில ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் மூன்றாம் நபர் விற்பனையாளர்களைக்கொண்டு செயல்படுவதால் அவர்களாலும் ஏமாற்றப்படலாம், ஜாக்கிரதை.
பல இணையதளங்கள் உற்பத்தியாளர் வாரன்டியுடன்தான் (Manufacturer Warranty)பொருளை விற்கின்றன. ஒரு குறிப்பிட்ட பொருள் சந்தை விலையைவிட மிகக் குறைவாக இருந்தால், உற்பத்தியாளர் வாரன்டி தராமல் மோசடி செய்துவிடுகின்றன சில நிறுவனங்கள். அப்படியே வாரன்டி தந்தாலும் அதற்கான பொறுப்பு அந்த ஆன்லைன் நிறுவனமா அல்லது உற்பத்தி செய்த நிறுவனமா என்கிற விஷயத்தில் நம்மை குழப்பி ஏமாற்றிவிடும்.
ஆன்லைன் ஷாப்பிங் செய்யும்போது இப்படி நடக்கும் மோசடிகளில் நாம் சிக்கி ஏமாறாமல் இருக்க சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
* பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளை ரூ.100 அல்லது 200-க்கு தருகிறோம் என்று சொல்லும் தளங்களை ஒதுக்குவது நல்லது.
* பொருள் ஏலத்தில் (Auction, Bid) விற்கப்படும்போது பொருளின் விலை சந்தை விலையைவிட சற்றே குறைவாக மட்டுமே இருக்கவேண்டும். மிக அதிக விலையுள்ள பொருளை, மிகக் குறைந்த விலைக்கு ஏலத்தில் விற்றால் அது போலியாக இருக்க வாய்ப்புள்ளது.
* நீங்கள் ஆர்டர் செய்யும் பொருளின் பெயர் சரியாக உள்ளதா என்பதைச் சோதித்து பார்ப்பதும் அவசியம். சில தளங்களில் எழுத்துப்பிழை போன்று இருந்தாலும், அவை போலி பொருட்களை அவ்வாறு விற்கின்றன. உதாரணம்,
Nokia – Noika, Samsung Galaxy Note – Galaxy Note..
*பொருளை வாங்கும்போது, அதை ஏற்கெனவே வாங்கியவர்களின் கருத்தை வாங்கும் தளத்திலோ அல்லது இணையத்திலோ தேடிவிட்டு வாங்க வேண்டும்.
* ஒரு பொருளை ஆர்டர் செய்தவுடன் நமக்கு அது அவசியமில்லை என்று தோன்றும் அல்லது வேறு ஒரு பொருளை வாங்கத் தோன்றும். அம்மாதிரியான சமயங்களில் நீங்கள் ஆர்டர் செய்த பொருளை கேன்சல் செய்யும் வசதியைக் குறிப்பிட்ட தளம் உங்களுக்கு வழங்குகிறதா என்று கவனித்து விட்டு, வாங்குவதற்கான வேலையில் இறங்குவது நல்லது. அதோடு முழுப்பணமும் உங்களுக்கு வந்து சேரும்படியாகவும் இருக்க வேண்டும். ஆர்டரை கேன்சல் செய்தால் பெரும்பாலும், ஐந்து முதல் ஏழு நாட்களுக்குள் உங்கள் பணம் திரும்ப வந்துவிடும்.
* கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங் மூலம் பணம் செலுத்துபவர்கள் மிக மிக பாதுகாப்பான தளம் என்று நம்பிக்கை இருந்தால் மட்டுமே பயன்படுத்துங்கள். இல்லை என்றால், பொருளை வாங்கும்போது பணம் தருகிற மாதிரி (Cash On Delivery) வைத்துக்கொள்ளுங்கள்.
* முதல்முறையாக ஆன்லைன் மூலம் பொருள் வாங்குபவர்கள் அதுகுறித்து நன்கு பரிச்சயம் கொண்டவர் மூலம் வாங்கலாம்.
* ஆர்டர் செய்த பின்னர் உங்களுக்கு வரும் மின்னஞ்சல், குறுஞ்செய்தி போன்றவற்றை பொருள் உங்களுக்கு கிடைக்கும் வரை பத்திரமாக வைத்திருக்கவும்.”