.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, January 20, 2014

கணவரின் சம்பளத்தை மனைவி தெரிந்து கொள்ள முழு உரிமை!- ஆர் டி ஐ தகவல்!




”வீட்டு பராமரிப்பு காரணங்களுக்காக அரசு ஊழியர்களின் சம்பள விபரத்தை தெரிந்துகொள்ள அவர்களின் மனைவிக்கு முழு உரிமை உள்ளது. மேலும், ஆர்டிஐ சட்டத்தின்படி, பொதுமக்களுக்காக வேலை செய்யும் அரசு உழியர்களின் சம்பள விபரத்தை சம்மந்தப்பட்ட அலுவலகங்கள் அவர்களாகவே ஆர்டிஐ அலுவலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். ”என்று மத்திய தகவல் ஆணையத்தின் கமிஷனர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

டெல்லியை சேர்ந்த ஜோதி ஷெகராவத் என்பவர், டெல்லி மாநில அரசின் உள்துறையில் பணிபுரியும் தனது கணவரின் சம்பள விபரத்தை கேட்டு கணவரின் அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.

ஆனால், தனது சம்பள விபரத்தை தெரிவிக்க கூடாது என பெண்ணின் கணவர் அலுவலகத்தில் கடிதம் கொடுத்தார். அதை தொடர்ந்து பெண்ணின் கோரிக்கையை அலுவலகம் நிராகரித்தது.

இதனால் அந்த பெண், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ கணவரின் சம்பள விவரத்தை கேட்டு மத்திய தகவல் ஆணையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, இது போன்று வரும் விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட அலுவலகங்கள் நிராகரிக்க கூடாது.

அது ஆர்டிஐ சட்டத்திற்கு எதிரானது. மேலும், அபராதத்திற்குரிய செயல் என டெல்லி உள்துறை அலுவலகத்திற்கு தகவல் ஆணையர் கண்டனம் தெரிவித்தார்.

இது பற்றி மத்திய தகவல் ஆணையத்தின் கமிஷனர் ஸ்ரீதர் ஆச்சார்யலு,”வீட்டு பராமரிப்பு காரணங்களுக்காக அரசு ஊழியர்களின் சம்பள விபரத்தை தெரிந்துகொள்ள அவர்களின் மனைவிக்கு முழு உரிமை உள்ளது.

மேலும், ஆர்டிஐ சட்டத்தின்படி, பொதுமக்களுக்காக வேலை செய்யும் அரசு உழியர்களின் சம்பள விபரத்தை சம்மந்தப்பட்ட அலுவலகங்கள் அவர்களாகவே ஆர்டிஐ அலுவலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.

அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம், மக்களின் வரி பணத்திலிருந்து தான் வழங்கப்படுகி றது. மேலும், அவர்களின் சம்பள பட்டியலை தெரிவிப்பது ஆர்டிஐ சட்டத்தின்படி கட்டாயமாகும். எனவே, இதுபோன்று சம்பளவிபரத்தை தெரியபடுத்துவது மூன்றாவது நபருக்கு தெரிவிப்பதாக கருத இயலாது.

இது போன்று சம்பள விபரம் கேட்டு வரும் விண்ணப்பங்களை மூன்றாவது நபருக்கு தெரிவிக்க இயலாது என கூறி நிராகரிக்க முடியாது”என்று அவர் தெரிவித்தார்.

வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற பாடகர் எஸ்.பி.பி-க்கு உடல் நலக்குறைவு...



தென் ஆப்ரிக்காவில் சர்வதேச இந்திய திரைப்படவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழா இந்திய மற்றும் தென்னாப்ப்ரிக்க நாடுகளுக்கு இடையே கலாச்சார மற்றும் சகோதரத்துவ தொடர்புகளை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்படுகிறது. இருநாடுகளின் பிராந்திய மொழிகளுக்கும் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.

சனிக்கிழமை இரவு அன்று தொடங்கப்பட்ட இவ்விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக சென்னை எக்ஸ்பிரஸ் என்ற இந்தி திரைப்படத்தின் பாடல் வரிகளை 15 மொழிகளில் பாடிய பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியனுக்கு (67) வாழ்நாள் சாதனையாளருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

விருதுபெற்ற அவருக்கு உடனடியாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தும் அவருக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டது என்பது குறித்து விவரம் வெளியிடப்படவில்லை.

இதையடுத்து அவரை தனிவிமானம் மூலம் சென்னை கொண்டு வருவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்து விருந்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

பெற்றோரால் பேஸ்புக்-கில் இருந்து வெளியேறிய ’டீன்’களின் எண்ணிக்கை 110 கோடி..!



கட்ந்த ஆண்டில் பெற்றோருக்கு பயந்து அல்லது பெற்றோர்ககளின் கண்காணிப்பையடுத்து பேஸ்புக் சமூக வலைதள பயன்பாட்டாளர்களில் கிட்டத்தட்ட 110 கோடி கல்லூரி மாணவ, மாணவியர் தங்கள் கணக்குகளை நீக்கியுள்ளதாக ‘டிஜிட்டல் கன்சல்டன்சி ஆஸ்டிரேடஜி லேப்’ வெளியிட்ட ஆய்வறிக்கை மூலம் தெரிய வருகிறது.

அண்மையில் இந்த ஆய்வகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் பேஸ்புக் சமூக வலைதளத்தின் “அட்வர்டைசிங் பிளாட்பார்மில்” உள்ள டேட்டாக்களை ஆய்வு செய்தனர். தற்போது 4.29 கோடி உயர் நிலைப்பள்ளி மாணவர்களும், ஏழு கோடி கல்லூரி மாணவ, மாணவியரும் பேஸ்புக் வலைதளத்தில் கணக்குகள் வைத்துள்ளனர்.

இது கடந்த 2011ம் ஆண்டை ஒப்பிடும்போது 110 கோடி குறைவு. மேலும் இந்த வலைதளத்தில் இருந்து வெளியேறிய கல்லூரி மாணவ, மாணவியர், தற்போது “வாட்ஸ்அப்”, “டுவிட்டர்” மற்றும் “ஸ்நாப்ஷாட்” போன்ற வலைதளங்களில் கணக்குகளைத் துவக்கி உள்ளனர்.

இதுகுறித்து கல்லூரி மாணவ, மாணவியரிடம் நடத்திய ஆய்வில் ”தங்களுடைய பெற்றோரும் பேஸ்புக் வலைதளத்தில் கணக்குகளை வைத்திருப்பதால் தங்களின் அனைத்து செயல்பாடுகளையும் அவர்கள் அறிந்து கொள்வதால்.ஏனைய வலைதளங்களில் இதே போன்ற கணக்குகளை துவக்கி தனிப்பட்ட வாழ்க்கை முதல் அனைத்தையும் பகிர்ந்து கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.

‘எனக்கான இடம் காத்திருக்கிறது’ - விதார்த் நம்பிக்கை



 புதிதாக வரும் நடிகர்களுக்கெல்லாம் முன் உதாரணமாக இருப்பவர் நடிகர் விதார்த். ‘மைனா’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் அனைவரது பாராட்டையும் பெற்றவர், தற்போது வீரம் படத்தில் அஜித் ‘தல’ ரசிகர்களின் உள்ளத்தையும் கொள்ளை கொண்டிருக்கிறார். “சினிமாவில் உண்மையாக உழைப்பவர்களுக்கு வெற்றி தள்ளிப் போகலாம், ஆனால் தவறிப் போகாது” என்ற நம்பிக்கையில் உறுதியாக இருக்கும் விதார்த்தை ‘தி இந்து’வுக்காக சந்தித்தோம்.

‘மைனா' பார்ட் 2-ல நடிச்சுட்டு இருக்கீங்கன்னு கேள்விப்பட்டோம்?
‘மைனா’ பார்ட் 2-ல்லாம் கிடையாது. ‘மைனா ‘ மாதிரி ஒரு கதையில நடிச்சிட்டிருக்கேன், அவ்வளவுதான். இன்னைக்குத்தான் ஷுட்டிங் தொடங்குச்சு. ‘காடு’ன்னு படத்துக்கு பெயர் வச்சிருக் கோம். ‘மைனா’ படத்துல என்னோட நடிச்ச தம்பி ராமையா கூட திரும்பவும் நடிக்கிறேன். ஸ்டாலின் ராமலிங்கம் தான் இயக்குநர். அவரோட வாழ்க்கையை சினிமாவா எடுக்கிறார். ‘மைனா’ மாதிரியே காட்டுக்குள்ளே நடக்குற காதல் கதை தான். இந்தப் படத்துல சமூகத்திற்கான ஒரு விஷயத்தையும் பதிவு பண்றோம்.

ரெண்டு வருஷத்திற்கு முன்னாடியே இந்தப் படத்தோட கதை தெரியும். கடைசியா பார்த்தப்போ, இந்த படத்தோட முழுக்கதையையும் ஸ்டோரி போர்டு பண்ணிட்டார். அதுக்குப் பிறகு முக்கியமான காட்சிகள் எல்லாத்தையும் இப்படித்தான் எடுக்கப் போறேன்னு அனிமேஷன் பண்ணி எனக்கு லேப்டாப்புல போட்டு காண்பிச்சார். எனக்கு புதுசா இருந்தது. எல்லாரும் படம் முடிஞ்ச உடனே பண்ற வேலைகள் எல்லாத்தையும், இவரு படத்துக்கு முன்னாடி பண்றதைப் பார்த்து பிரமிச்சு போயிட்டேன். இப்போ ஷுட்டிங் தொடங்கியாச்சு. ‘வீரம்’ வெற்றிக்குப் பிறகு ஒரு நல்ல படத்தோட ஷுட்டிங்ல புது வருஷத்தை தொடங்கியிருக்கேன்.

வீரம் ஹிட் ஆன பிறகு அஜித் உங்ககிட்ட பேசினாரா?

பட ரிலீஸுக்கு முந்தின நாள்தான் சென்னைக்கு வந்தார் அஜித். பட ரிலீஸ் அன்னைக்கு காலைல 7 மணிக்கு எல்லாம் போன் பண்ணிட்டார். நியூ இயர், பொங்கல் வாழ்த்துகள் எல்லாம் சொல்லிட்டு, படம் பாத்திட்டீங்களான்னு கேட்டார். ‘இல்ல சார்.. ஷுட்டிங்ல இருக்கேன். நாளைக்கு தான் போறேன்’னு சொன்னேன். முதல் ஷோ பாத்தவங்க எல்லாம் நெட்ல நல்லாயி ருக்குன்னு எழுதினதைப் பார்த்து அவரு பயங்கர உற்சாகமாக பேசினார். எல்லாம் பேசிட்டு முடிச்சிட்டு, ‘நீங்க ஒரு தனி ஹீரோ. என்கூட சேர்ந்து நடிச்சதுக்கு ரொம்ப நன்றி’ அப்படினு சொன்னார். ‘சார்.. உங்களோட தீவிர ரசிகன் நான். உங்க கூட சேர்ந்து நடிக்க வாய்ப்பு கொடுத்ததிற்கு நான் தான் நன்றி சொல்லணும்’னு சொன்னேன். போனை கட் பண்ணும் போது கூட, ‘படம் முடிஞ்சுருச்சுனு விட்றாதீங்க. அப்பப்போ போன் பண்ணுங்க. சென்னை வந்ததுக்கு அப்புறம் வீட்டுக்கு வாங்க’ன்னு சொன்னார்.

நீங்க ஒரு ஹீரோ. ‘வீரம்’ படத்துல 4 தம்பிகள்ல ஒருத்தரா நடிக்க எப்படி சம்மதிச்சீங்க?
நான் அஜித்தோட தீவிர ரசிகன். இயக்குநர் சிவா என்கிட்ட கதை சொல் றேன்னு சொன்னப்போ கூட, ‘அஜித் கூட நடிக்கிறேன். போதும் கதை எல்லாம் வேண்டாம்’னு சொல்லிட்டேன். ஏன்னா எனக்கு அஜித்தை அவ்வளவு பிடிக்கும். ‘மைனா' படத்துக்கு பிறகு அவரை சந்திச்சு பேசணும்னு ஆசைப்பட்டேன். அவர்கூட நடிக்க வாய்ப்பு வரப்போ எப்படி மாட்டேன்னு சொல்ல முடியும்.

‘பட்டைய கெளப்பணும் பாண்டியா’ படத்துல காமெடில பட்டைய கிளப்பியிருக்கீங்கனு இயக்குநர் சொல்லியிருக்காரே?

காமெடி படங்கள் பண்றது எனக்கு பிடிக்கும். ஏன்னா காமெடி எனக்கு நல்லா வரும். 'பட்டைய கெளப்பணும் பாண்டியா' படம் 100 சதவீதம் காமெடி படம்தான். நானும் சூரியும் சேர்ந்து செம காமெடி பண்ணியிருக்கோம். எனக்கு காமெடியும் வரும்னு நம்பிக்கையை கொடுத்த படம். கண்டிப்பா என்னை விட சூரிக்கு பெரிய ப்ரேக் கிடைக்கும்.

‘மைனா’ படத்தோட வெற்றிக்குப் பிறகு பெரியளவிற்கு உங்களோட படங்கள் ஹிட்டாகல. அதுக்கு என்ன காரணம்?

என்னை பொறுத்தவரை படங்களை சரியா கொண்டு போய் சேர்க்கலைன்னுதான் நினைக்கிறேன். ‘மைனா’க்கு பிறகு நான் நடிச்ச படங்கள் வந்ததே நிறைய பேருக்கு தெரியல.அதுமட்டுமல்லாம, ‘மைனா’ படத்துக்குப் பிறகு நிறைய பேர் அதே பாணியில் என்கிட்ட படங்கள் எதிர்பார்க்கு றாங்க. இது எனக்கு மட்டுமல்ல.. எல்லா ஹீரோக்களுக்கும் இதே மாதிரி நடக்குது. ஒரு படம் ஹிட்டாயிட்டா உடனே அதே சாயல்ல படம் பண்ணுங்கனு சொல்றாங்க.

என்னை பொறுத்தவரை ஒரு படம் நடிச்சா, ஒரு நடிகனா நல்லா பண்ணியிருக்கனா அதை மட்டும்தான் பாக்குறேன். 'மைனா' வெற்றிக்கு நிகரா ஒரு படம் கொடுக்கல அப்படிங்குறது உண்மை தான். அதை ‘ஆள்', 'காடு' படங்கள் கண்டிப்பா பூர்த்தி பண்ணும்.

படத்துல நடிக்க உங்க வீட்ல எதிர்ப்பு வந்திருக்குமே? எப்படி சமாளிச்சீங்க?

எங்க வீட்டுல எங்கப்பாதான் எல்லாமே. வறுமைக் கோட்டுக்கு கீழே இருந்த குடும்பம்தான். சிங்கப்பூர், மலேசியா, கனடால எல்லாம் எங்கப்பா வேலை பார்த்துதான் கொஞ்சம் மேலே வந்தோம். அதனால எங்கப்பா எப்போதுமே, எல்லாமே பசங்க விருப்பம்தான் அப்படினு விட்டுருவார். உனக்கு என்ன தோணுதோ பண்ணுனு சொல்லிடுவார். முதல்ல டிரைவராகப் போறேன்னு சொன்னேன். சரினு லைசன்ஸ் எல்லாம் எடுத்துக் கொடுத்தார். அப்புறமா.. நடிகனாக போறேன்னு கூத்துப் பட்டறைல சேர்ந்தேன். சரிப்பானு சொன்னார். குடும்பத்துல இருக்குறவங்கதான் நடிகன் எல்லாம் வேண்டாம் சொன்னாங்க. எங்கப்பா என் மேல அவ்வளவு நம்பிக்கை வைச்சிருந்தார். நான் நடிகனாக ஆனதற்கு எங்க வீட்டுல இருந்து எதிர்ப்புனு எதுவுமே இல்ல.

இப்போ சினிமால உங்களோட வளர்ச்சியைப் பார்த்து உங்கப்பா என்ன சொல்றார்?

ரொம்ப சந்தோஷமாக இருக்கார். ‘ஜன்னல் ஓரம்’ படத்தை நான் நைட் ஷோ பாத்துட்டு வீட்டுக்கு அதிகாலை 3 மணிக்கு போனேன். எங்கப்பா படம் பாத்துட்டு தூங்காம காத்திருந்தார். நான் கதவை திறந்து உள்ளே போனதுமே, என்னை கட்டிப்பிடிச்சு “நல்லா பண்ணிருக்கடா... சூப்பர்.. பிரமாதம்.. இன்னும் பண்ணணும். விட்டுறதே..” அப்படினு சொல்லிட்டு தூங்க போயிட்டார். எங்கப்பா சொன்ன வார்த்தையைக் கேட்டு நான் அன்றைக்கு தூங்கவே இல்லை. அந்த வார்த்தைகள் என் காதுக்குள்ள கேட்டுக்கிட்டே இருந்துச்சு. அது தான் எனக்கு உரம். கண்டிப்பா எனக்கான இடம் காத்துக்கிட்டு இருக்கு.
 
back to top