.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, January 19, 2014

நம்மாழ்வாரை உயிர்ப்பித்த ‘உழவன் தாத்தா’ பாடல்…

நம்மாழ்வாரை உயிர்ப்பித்த ‘உழவன் தாத்தா’ பாடல்…



‘உழவன் தாத்தா வந்திருக்கேன்
உழவன் தாத்தா வந்திருக்கேன்
அறிவை வாங்கி பரிமாறு
அழிவை நோக்கி போராடு
உரமான உடலோடு
உரமில்லா பயிரோடு…
என்று தொடங்குகிறது அந்த பாடல்…’

தாஜ்நூரின் மயக்கும் இசையில் ஈசன் இளங்கோவின் ஈர்க்கும் வரிகளில் வேல்முருகனின் உருக்கும் குரலில் சேலம் மாநகரமே இந்த பாடலுக்கு ஆட்டம் போட, பொங்கல் திருவிழா அமர்க்களமாக அரங்கேறியது. இதுவரை பொங்கல் தினத்தன்று சினிமா பாடல்களை மட்டும் ஒலிபரப்பி அதற்கு ஆட்டம் போட்டு வந்த பலரும், இது என் பாட்டு என்கிற சந்தோஷத்தோடு ஆடிப் பாடினர்.

இப்படியொரு பாடல் உருவாக காரணமாக இருந்த ஈசன் இளங்கோ என்ன சொல்கிறார்?

“சமீபத்தில்தான் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரை பறிகொடுத்தோம். அந்த ஒரு காரணத்தாலேயே இந்த பொங்கல் ஒருவகையில் துக்ககரமானது என்றாலும், நம்மாழ்வாரின் பணிகளை ஒவ்வொருவரும் தொடர வேண்டும் என்ற வேட்கை மனதிற்குள் இருந்து கொண்டேயிருந்தது.

அவரையே உழவன் தாத்தாவாக ஒவ்வொருவரும் நினைத்து வழிபட வேண்டும். இனி வரும் காலங்களில் கிறிஸ்துமஸ் தாத்தா மாதிரி, காந்தி தாத்தா மாதிரி எங்கள் நம்மாழ்வாரும் உழவன் தாத்தாவாக ஒவ்வொருவரின் உள்ளத்திலும் இடம்பெற வேண்டும் என்று நினைத்தேன். உடனடியாக ஒரு பாடலை நானும் மருத்துவர் சசியும் இணைந்து எழுதினோம்.

எங்கள் சேலம் மண்ணை சேர்ந்த தாஜ்நூர் சென்னையில் பிரபல இசையமைப்பாளராக இருக்கிறார். அந்த பாடலை செல்போனிலேயே அவரிடம் படித்துக் காட்டினேன். என் ஆசையையும் அவரிடம் சொன்னேன். அடுத்த ஒரு மணி நேரத்தில் இதை பாடலாக உருவாக்கி எனக்கு அனுப்பி வைத்துவிட்டார். வேல்முருகன் குரலில் கம்பீரமாக வந்திருந்த அந்த பாடல்தான் இன்று சேலம் நகர் முழுவதும் திரும்ப திரும்ப ஒலிபரப்பப்பட்டது. தமிழர்கள் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தார்கள்.

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் தோற்றத்தில் பலருக்கும் மேக்கப் போட்டு தெருக்களில் உலவ விட்டோம். நம்மாழ்வார் தாத்தா குழந்தைகளுக்கும் குடும்பங்களுக்கும் இனிப்பு வழங்கினார். தாரை தப்பட்டை மேளங்கள் முழங்க அவரை வீதி வீதியாக அழைத்து சென்றோம். சேலம் நகரில் எங்கு திரும்பினாலும் ஒலித்த இந்த உழவன் தாத்தா பாடல் இனி உலகத் தமிழர்களின் இல்லங்களில் எல்லாம் ஒலிக்க வேண்டும். அதுதான் எங்கள் ஆசை என்றார் ஈசன் இளங்கோ.

பாடலை ஒருமுறை யார் கேட்டாலும் அதை ஒலிக்க விட்டு ஆடப்போவது நிச்சயம்.

“கே.பாக்யராஜ் ஊசி போடுவதில் கில்லாடி…” - மன்சூர் அலிகான்



ஆன்ட்ராக் அனிமேஷன் மற்றும் பிலிம் கம்பைன் தயாரிப்பில் முழுக்க முழுக்க மலேசியாவில் உருவாகியுள்ளபடம் ’3 ஜி’ எனப்படும் ‘கௌதம் கனி கிரேஸ்’.

இதில் மலேசிய முன்னணி நடிகர்கள் லண்டன் டான், சசிதரன், சங்கீதா, கவிதா,  மாஸ்டர் மித்ரன், மாஸ்டர் சுகுமாரன், பேபி கிருபாஸ்ரீ ஆகியோருடன் நம்ம ஊர் கே. பாக்யராஜ் முக்கியமான விஞ்ஞானி பாத்திரத்தில் நடித்துள்ளார். பி.கே.ராஜ் இயக்கியுள்ளார். இசை ஆதிஷ் உத்ரியன், பாடல்கள் குகை.மா.புகழேந்தி .

இந்த 3 ஜீனியஸஸ் எனப்படும் ‘கௌதம் கனி கிரேஸ்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று மாலை ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் நடந்தது.

பாடல்களை வெளியிட்டு கே.பாக்யராஜ் பேசும் போது தன் மலேசிய அனுபவத்தைக் கூறினார்

“நான் இந்தப் படத்தில் நடிக்கப் போகும் போது ஒரு நடிகராகப் போனேன். வரும் போது ஒரு உறவினராக திரும்பி வந்தேன். இந்த முழுப்படமும் மலேசியாவிலேயே எடுத்தார்கள்.

நான் மலேசியா  நாட்டைப் பார்த்து மூன்று விஷயங்களில் பொறாமைப் பட்டேன்.

‘ஒன் மலேசியா’ என்பதான் அவர்களது தாரக மந்திரம். அங்கே எல்லாரும் மலேசியன் என்கிற ஒற்றுமையுடன் இருக்கிறார்கள். நம் தமிழர்களும் அவர்களுடன் இரண்டறக் கலந்து ஒற்றுமையாக இருக்கிறார்கள்.

இன்னொரு விஷயம் அங்கு நள்ளிரவு 3 மணிக்குப் போனாலும் கடைகள் திறந்திருக்கின்றன. சாப்பாடு ஓட்டல்கள் திறந்திருக்கும். அங்கும் ஒரு கூட்டம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும். எந்த உணவுக்கும் பஞ்சமில்லை. ‘என்னய்யா ஊரு இது விடிய  விடிய சாப்பிடறாங்க…’ என்று ஆச்சரியப் பட்டேன்.

மூன்றாவது விஷயம் அங்கு மூணுநாளைக்கு ஒரு முறை, நாலு நாளைக்கு ஒரு முறை மழை பெய்கிறது. எனக்குப் பொறாமையாக இருந்தது. இது மாதிரி நம் நாட்டில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? நாம் விவசாயத்துக்கு தண்ணீர் கேட்டு எவ்வளவு போராட்டம் வேலை நிறுத்தம் எல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது..? அவர்கள் நாட்டை நினைத்தேன் பொறாமையாக இருந்தது. இதுமாதிரி படங்கள் வெற்றி பெற்றால் மேலும் படங்கள் வரும். இரு நாட்டு உறவும் வலுப்படும்…” இவ்வாறு பேசினார்.

நடிகர்  மன்சூர் அலிகான் பேசும்போது “இந்தப் படம் நல்ல முயற்சி. மலேசியாவைக் கண்ணாடி போல காட்டியுள்ளார்கள். பார்க்க அருமையாக வந்துள்ளது. இளம் விஞ்ஞானிகள் பற்றிய கதை. இதில் பாக்யராஜ் அவர்கள் விஞ்ஞானியாக வருகிறார். கையில் ஊசியுடன் தோன்றுகிறார். அவர் ஊசி போடுவதில் பெரிய கில்லாடி.

ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி ஒரு ஊசி போட்டார். அதோட தாக்கம் இன்றைக்கும் இருக்கிறது. போட்டது முருங்கைக்காய் என்கிற ஊசி. அதற்கு முன்னாடி எல்லாம் முருங்கைக் காயை எவனும் சீந்த மாட்டான். கண்டுக்கவே மாட்டான். ஆனால் அவர் போட்ட போடுல உலகம் முழுக்க முருங்கைக்காய் கலக்கியது. எங்க ஊர் பக்கத்திலிருந்தெல்லாம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். இதற்கெல்லாம் காரணமான பாக்யராஜ் இப்படத்தில் நடித்துள்ளார். படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.” என்று கலகலப்பூட்டினார்.

நிகழ்ச்சியின் தொடக்கமாக மலேசியாவில் நடனப் பள்ளி நடத்திவரும் குருஸ்ரீ .ஆர். சந்திரமோகனின் நடன நிகழ்ச்சி இடம்பெற்றது.இது அனைவரையும் கவர்ந்தது.

2011ல் இளம் விஞ்ஞானிகள் விருது பெற்ற லேடி வெலிங்டன் பள்ளி மாணவிகள் கௌசியா, பவானி இருவரும் சிடி வெளியீட்டு விழாவில் சிடியைப் பெற்றுக் கொண்டனர். பரிசளித்தும் பாராட்டப் பட்டனர்.

தயாரிப்பாளராகும் அஜித்..?



தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கவிருக்கிறாராம் அல்டிமேட் ஸ்டார் அஜித்.

தனுஷ், விஷால், ஆர்யா போன்ற நடிகர்கள் தங்களது தயாரிப்பில் தாங்களும் நடித்துக்கொண்டு மற்ற நடிகர்களுக்கும் வாய்ப்பளித்து வருகிறார்கள்.

இந்த பட்டியலில் விரைவில் அஜீத்தும் சேருகிறாராம். ஒரு நேரத்தில் தான் நடித்த படங்கள் சறுக்கி வந்தபோது, தன்னை வைத்து தைரியமாக படம் தயாரித்தவர்களுடன் சேர்ந்து தானும் பங்குதாரராக செயல்பட்ட அஜித், இந்த முறை, தனக்காக தயாரிப்பாளராகவில்லையாம்.

நல்ல திறமையான நடிகர், இயக்குனர்களை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு தயாரிப்பாளராகிறாராம்.

இதுபற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. என்றபோதும், தலயின் தாராள குணமறிந்த சில இளவட்ட நாயகர்கள் ஆதரவு கேட்டு தலசமூகத்தை நாடியுள்ளார்களாம்.

எஸ். வி. சேகர் மகனின் .‘நினைவில் நின்றவள்.’ ஆல்பம்..!



ரவிச்சந்திரன்–கே.ஆர்.விஜயா நடித்து, பல வருடங்களுக்கு முன்பு திரைக்கு வந்த படம், ‘நினைவில் நின்றவள்.’ இதே பெயரில், ஒரு புதிய படம் தயாராகி இருக்கிறது.இந்த படத்தில், எஸ்.வி.சேகரின் மகன் அஸ்வின் சேகர் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். அஸ்வின் சேகர் ஏற்கனவே ‘வேகம்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து இருந்தார். இது, அவருக்கு இரண்டாவது படம்.

படத்தை பற்றி எஸ்.வி.சேரிடம் கேட்டபோது,”இது, கருணை கொலையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம். இதுவரை சொல்லப்படாத ஒரு காதல் கதை. ஒவ்வொரு பெண்ணும் தனக்கு இப்படி ஒரு கணவர் வரவேண்டும் என்று ஆசைப்படுகிற மாதிரி, கதாநாயகனின் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

படத்தில், அடுத்த காட்சி என்ன என்று யூகிக்க முடியாதபடி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மறைந்த கவிஞர் வாலி, என் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார். அதன் அடையாளமாக அவர் இறப்பதற்கு முன், இந்த படத்துக்காக 4 பாடல்களை எழுதிக் கொடுத்து இருக்கிறார். இமான் இசையமைத்துள்ளார். சென்னை, ஏற்காடு ஆகிய இடங்களில் படம் வளர்ந்து இருக்கிறது.

படத்தில் கீர்த்தி சாவ்லா, காயத்ரி ஆகிய 2 கதாநாயகிகள் நடித்து இருக்கிறார்கள். சின்னி ஜெயந்த், முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ‘‘நிலா அது வானத்து மேலே’’ என்ற பழைய பாடல், ‘ரீமிக்ஸ்’ செய்யப்பட்டுள்ளது. சீர்காழி சிவசிதம்பரம் பாடியிருக்கிறார். அந்த பாடலுக்கு கவர்ச்சி நடிகை சோனா, கீர்த்தி சாவ்லா ஆகியோருடன் அஸ்வின் சேகர் நடனம் ஆடியிருக்கிறார்.

கே.மணிகண்டன் குமரவேல், டாக்டர் சித்ரலட்சுமி குமரவேல் ஆகிய இருவரும் தயாரித்து இருக்கிறார்கள். இந்த படத்தை டைரக்டு செய்த அகத்திய பாரதி புற்று நோய் காரணமாக மரணம் அடைந்து விட்டார். அவருடைய 2 மகள்களின் படிப்பு செலவுக்காக ரூ.1 லட்சம் வழங்க முடிவு செய்து இருக்கிறோம்.படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் ஒரு ‘கட்’ கூட கொடுக்காமல், ‘யு’ சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்.’’ என்றார்
 
back to top