.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, August 26, 2013

ஒரு நல்ல ரெஸ்யூமை தயாரிப்பதற்கான சிறந்த ஆலோசனைகள்!



               ஒரு நல்ல வேலை வாய்ப்பை பெறுதல் என்ற போர்க்களத்தில், ரெஸ்யூம் என்பது ஒருவரின் சிறந்த ஆயுதம் போன்றது. எனவே, அந்த ஆயுதத்தை எப்படி வடிவமைப்பது என்ற கலையை கற்றுக்கொள்பவர் வெற்றியடைவார்.

அது தொடர்பான விரிவான ஆலோசனைகளை இக்கட்டுரை அலசுகிறது.

எது முக்கியம்

ஒருவர், முதல் தடவை தனது ரெஸ்யூமை தயார் செய்ய தொடங்கும்போது, அவர் செய்த சில முக்கிய சாதனைகள், அவரின் சிறப்பான திறமைகள் மற்றும் ஆற்றல்கள் குறித்து குறிப்பிட மறந்துவிடுவார். மாறாக, வாங்கிய பட்டம் அல்லது டிப்ளமோ படிப்பிற்கான சான்றிதழ்களின் விபரங்கள், படித்து முடித்த வருடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகிய விஷயங்களை மட்டுமே பிரதானமாக குறிப்பிடுவார். இந்த தவறை பலரும் செய்கிறார்கள்.

மாறாக, ரெஸ்யூம் எழுதுபவர்கள், இரைச்சலும், தொந்தரவும் இல்லாத ஒரு தனியிடத்தில் அமர்ந்துகொள்ள வேண்டும். தாங்கள் எந்தப் பணிக்கு விண்ணப்பிக்க போகிறோமோ, அதுதொடர்பாக செய்த சில முக்கிய சாதனைகள், பெற்ற சிறப்பு பயிற்சிகள், தனக்கு இருக்கும் தனித் திறன்கள் ஆகியவற்றைப் பற்றி தெளிவாகவும், முக்கியத்துவம் கொடுத்தும் குறிப்பிட வேண்டும்.

 உங்களின் ஆலோசனைகள்

நீங்கள் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்றால், அந்த நிறுவனத்தைப் பற்றிய விபரங்களை தெளிவாக அறிந்துகொள்வது அவசியம். இணையதளத்தில் விபரங்களைத் தேடினால், குறிப்பிட்ட அளவு தகவல்களே கிடைக்கும். எனவே, அந்த குறிப்பிட்ட நிறுவத்தில் பணிபுரியும் யாரேனும் சில ஊழியர்களை சந்தித்துப் பேசி, தேவையான விபரங்களை தெரிந்துகொண்டு, அங்கே என்னவிதமான பிரச்சினைகள் இருக்கின்றன என்பதையும் தெரிய முயற்சிக்க வேண்டும்.

உங்களின் விண்ணப்பத்தில், பிரச்சினை என்னவென்று குறிப்பிடாமல், அதேசமயம், அதற்கான தீர்வுகளை உங்களின் ஆலோசனை வடிவில் எழுதியனுப்ப வேண்டும். உயர் நிர்வாக கமிட்டியில் இருப்பவர்கள், இதுபோன்ற ஆலோசனைகளால் கவரப்படுவார்கள். எனவே, உங்களுக்கான நேர்முகத் தேர்வு அழைப்புக் கடிதம் இதன்மூலம் உறுதி செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

படிப்பதற்கு எளிதாக...

உங்களின் ரெஸ்யூம் தெளிவாகவும், தரமாகவும் இருக்கும் அதே நேரத்தில், படிப்பவருக்கு எளிதாக இருப்பதும், மிக முக்கியமான அம்சம்.
 
ரெஸ்யூம் எத்தனை பக்கம்

ரெஸ்யூம் தயாரிப்பை பொறுத்தவரை, சில கட்டுப்பெட்டியான விதிகள் வலியுறுத்தி சொல்லப்படுகின்றன. அதாவது, ரெஸ்யூம், பொதுவாக, ஒரு பக்கம் மட்டுமே இருக்க வேண்டும் என்பது. ஆனால், இந்த விதி பெரும்பாலும் புதிதாக படிப்பை முடித்த பட்டதாரிகளுக்கு பொருந்தினாலும், அதை கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய அவசியமில்லை. நிறைய முக்கிய விஷயங்கள் இருந்தால், 2 பக்க ரெஸ்யூம் தயார் செய்யலாம். ஆனால், எக்காரணம் கொண்டும், 2 பக்கங்களுக்கு மிகாமல் ரெஸ்யூம் தயார் செய்யப்பட வேண்டும்.

தகவல் பரிமாற்றம்

உங்களின் ரெஸ்யூமில், உங்களின் பலவித தொடர்புகொள்ளும் விபரங்களைத் தெரிவிப்பது மிக்க நன்று. உங்களின் வீட்டு விலாசம், மொபைல் எண், வீட்டு தொலைபேசி எண், ஈ-மெயில் முகவரி உள்ளிட்ட விஷயங்களை தெரிவிக்கவும். ஏனெனில், உங்களை எந்த நேரத்திலும் எளிதாக தொடர்பு கொள்ளும் வசதியை, வேலை வழங்குநருக்கு, இவற்றின் மூலமாக நீங்கள் வழங்க வேண்டும்.

இவற்றை தவிருங்கள்

நீங்கள் ரெஸ்யூம் தயாரிக்கும்போது, I, My, Me, Mine ஆகிய தனிப்பட்ட pronoun -களை தவிர்ப்பது நல்லது. உதாரணமாக,

I was incharge of the entire purchase function in the ---------- company என்று எழுதுவதற்கு பதில், Incharge of the entire purchase function of the ------- company என்று எழுதலாம்.

முன்அனுபவ விபரம்

உங்களின் முன்அனுபவ விபரங்களைப் பற்றி குறிப்பிடும்போது, சற்று கவனமாக செயல்படுவது நல்லது. உதாரணமாக, எந்த நிறுவனம், உங்களின் பணி நிலை, காலகட்ட விபரம், நிறுவனத்தின் பெயர் மற்றும் விலாசம் ஆகிய விபரங்களைத் தெளிவாக குறிப்பிட வேண்டும்.

மேலும், அவற்றின் காலவரிசையை சரியாக குறிப்பிட வேண்டும். உதாரணமாக, தற்போது பணிபுரிந்துகொண்டிருக்கும் நிறுவன விபரத்தை முதலிலும், இதற்கு முன்னர் இருந்ததை அடுத்ததாகவும், பின்னர் மற்றதை, அடுத்தடுத்த வரிசையிலும் குறிப்பிடலாம்.

தொழில்நுட்ப சவால்

பல நிறுவனங்களில், ரெஸ்யூம்களின் ஆரம்ப ஸ்கிரீனிங் பணியை, கணினிகளே மேற்கொள்கின்றன. நீங்கள், ரெஸ்யூமை பிரின்ட் வடிவில்(hard copy) அனுப்பினால், கீழ்கண்ட அம்சங்களை கவனத்தில் கொள்ளவும். அவை,
* பிரின்ட் எடுத்த அசல் ரெஸ்யூமை அனுப்ப வேண்டும். எக்காரணம் கொண்டும் அதன் நகலை(xerox) அனுப்பக்கூடாது. Times New Roman அல்லது Courier ஆகிய டைப் எழுத்துக்களைப் பயன்படுத்த வேண்டும். மேலும், எழுத்தின் அளவு 11 அல்லது 12 என்ற அளவில் இருக்க வேண்டும். அதேசமயம் bold facing -ஐ தவிர்க்க வேண்டும்.

* உங்கள் படிப்பு உள்ளிட்ட விபரங்களைத் தெரிவிக்கும் வகையில், அட்டவணை எதையும் பயன்படுத்த வேண்டாம்.

* ரெஸ்யூமின் மேல் பகுதியில் உங்களின் பெயரை குறிப்பிட வேண்டும்.

* அதேசமயம், உங்கள் ரெஸ்யூமை soft copy முறையில் வழங்கினால், குறிப்பிட்ட key word -களை ரெஸ்யூம் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். ஏனெனில், விண்ணப்பிக்கப்படும்  பதவிக்காக, வேலை வழங்குநர்கள் அவற்றை எதிர்பார்க்கிறார்கள். அந்த key words, உங்கள் ஸ்பெஷலைசேஷன் துறையுடன் தொடர்புடையவை.

* கணினிகள் உங்கள் ரெஸ்யூமை ஸ்கிரீனிங் செய்கையில், அந்த வார்த்தைகளின் எண் அடிப்படையில், சம்பந்தப்பட்ட key words -களை தேடும். எனவே, அவை இல்லையெனில், உங்களின் ரெஸ்யூம் ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்கப்பட்டுவிடும்.
 
சில நொடிகள்தான்...

பொதுவாக, உங்களின் ரெஸ்யூமை படிக்க, நேர்முகத் தேர்வாளர், அதிகபட்சமாக 10 முதல் 20 நிமிடங்களே எடுத்துக்கொள்வார். அந்த நேரத்திற்குள், அவரை ஈர்க்கும் விதமாக, நீங்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு பொருத்தமாக, உங்களிடம் இருக்கும் தகுதிகளை highlight செய்து குறிப்பிட வேண்டும்.

ஒரே மாதிரி ரெஸ்யூமை, வேறுபட்ட நிறுவனங்களில், வேறுபட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கையில் வழங்கக்கூடாது. பல விஷயங்கள் ஒரே மாதிரியே இருந்தாலும், objective statement என்பது மாறும். குறிப்பிட்ட பணிக்கு தேவையான தகுதி நிலைகள் அதற்குள்தான் தெரிவிக்கப்பட்டிருக்கும். எனவே, பல மாதிரிகளில் ரெஸ்யூம்களை வடிவமைத்து, அவற்றை pen drive மூலமாக சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.

தனித்தன்மை

வேலைதேடும் பல இளைஞர்கள், Microsoft Word -ன் ரெஸ்யூம் templates மற்றும் wizards பயன்படுத்துகிறார்கள். இது தவறில்லை என்றாலும், உங்களின் சொந்த வடிவமைப்பை(design) பயன்படுத்துவதே சிறந்தது. ஏனெனில், இதன்மூலம், நீங்கள் தனித்து அடையாளம் காணப்படுவீர்கள்.

அனுபவத்தை தெரிவித்தல் முறை

உங்களின் பழைய பணி அனுபவங்களை தெரிவிக்கையில்,
I was responsible for ----------
My duties included ---------------
I was incharge of ---------

போன்ற நடைகளில் குறிப்பிடாதீர்கள். மாறாக,
My
contributions were -----------
My accomplishments were ---------
My interventions were -----------

போன்ற நடைகளில் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான், வேலை வாய்ப்பு சந்தையில் உங்களுக்கான மதிப்பு உயரும்.

நேர்மறை அம்சங்கள்

உங்கள் ரெஸ்யூமில், நேர்மறை அம்சங்கள் இடம்பெறுவது முக்கியம். ஆனால், சிலருக்கு, தனது நேர்மறை விஷயமாக எதை குறிப்பிடுவது அல்லது எது இருக்கிறது என்ற சந்தேகமும், குழப்பமும் தோன்றும். அந்த நிலையில், உங்களுடன் முன்பு பணியாற்றிய நபர்களிடம், நீங்கள் கண்டுணர்ந்த குறைகளைப் பற்றி யோசித்துப் பாருங்கள்.

அந்தக் குறைகள் உங்களிடம் இல்லையெனில், அதுவே உங்களின் நேர்மறை அம்சங்கள். எனவே, அவற்றை குறிப்பிட தயங்க வேண்டாம். உதாரணமாக,

* Being punctual
* Creative
* Caring for minute details
* Reliable
* Following systems and procedure
* Efficiency minded
* Cost conscious
* Waste control
போன்றவற்றை சொல்லலாம்.

முதல் நிலை ஆய்வு

உங்கள் ரெஸ்யூம் ஒரு நிறுவனத்தை அடைந்ததும், முதலில், மனிதவளத் துறையினரால்தான்(HR) பகுப்பாய்வு செய்யப்படும். அவர்கள், நிர்வாகப் பிரிவை சேர்ந்தவர்கள். அவர்களுக்கு, உங்களின் தொழில்துறையைப் பற்றிய நுணுக்கமான விஷயங்கள் தெரிந்திருக்கும் என்பதை சொல்ல முடியாது. எனவே, முடிந்தளவு, உங்களின் Professional jargon -களை பயன்படுத்த வேண்டாம்.

அனைவராலும் புரிந்துகொள்ளக்கூடிய, உலகளவில் பெரும்பாலும் பயன்படுத்தக்கூடிய வார்த்தைகளையே பயன்படுத்தவும். இதன்மூலம், உங்களின் ரெஸ்யூம் reader friendly என்பதை உறுதி செய்ய வேண்டும். அதேசமயம், உங்களின் பிரச்சினை தீர்க்கும் திறன் மற்றும் அனுபவங்களை குறிப்பிட தவறவே கூடாது.

இதை செய்யாதீர்கள்

உங்கள் ரெஸ்யூமில், Reference பற்றி குறிப்பிடாதீர்கள். நீங்கள் நேர்முகத் தேர்வுக்கான அழைப்பை பெற்றவுடன், அவர்களை, எதிர்கால தகவல் தொடர்புக்கு வைத்துக்கொள்ள முடியும். அதேசமயம், தேவைப்பட்டால், ரெபரன்ஸ் விபரம் அனுப்பப்படும் என்பதை ரெஸ்யூமில் இடம் இருந்தால் குறிப்பிடலாம். மேலும், ரெபரன்ஸ் நபர்களை தயாராக வைத்திருப்பது அவசியம்.

இன்றைய நிலையில், பணி வழங்குநர்கள், நீங்கள் குறிப்பிட்ட ரெபரன்ஸ் நபர்களை மட்டுமே தொடர்பு கொள்வதில்லை. உங்களின் பழைய நிறுவனங்கள் மற்றும் நீங்கள் தற்போது பணிபுரியும் நிறுவனங்களைக்கூட தொடர்பு கொள்கிறார்கள்.

எழுத்துப் பிழை

ரெஸ்யூம் தயாரான பிறகு, அதை எழுத்துப் பிழை சரிபார்க்க, கணினியின் உதவியை நாடுவது பலரின் வழக்கமான உள்ளது. ஆனால், அதை மட்டுமே முழுமையாக நம்புவது தவறு. ஏனெனில், பல கணினி அமைப்புகளில், அமெரிக்க ஆங்கில நடைமுறைதான் உள்ளது. நமக்கு அதிகம் தெரிந்தது பிரிட்டன் ஆங்கிலம். நமக்கு வேலை தரும் இந்திய நிறுவன அதிகாரிகளுக்கும் அப்படித்தான். அதேநேரத்தில், கணினியும் சில காரணங்களால், சில தவறுகளை சுட்டிக் காட்டாமல் விட்டுவிட வாய்ப்புண்டு.

எனவே, உங்கள் ரெஸ்யூமை hard copy எடுத்து, அதை ஒரு எழுத்து விடாமல், ஒரு வரி விடாமல் நீங்களே கவனமாக படிக்கவும். இதன்மூலம், எந்தவொரு தவறையும் எளிதாக கண்டுபிடிக்கலாம். ஏனெனில், மனித மூளையைவிட, வலிமையான கணினி என்று இந்த உலகில் எதுவுமில்லை. எதிர்காலத்திலும் இருக்க முடியாது. எழுத்து மற்றும் இலக்கணப் பிழைகள், பணி வழங்கும் நிறுவனங்களுக்கு பிடிக்காத விஷயங்கள். உங்களின் ஒட்டுமொத்த மதிப்பையே அது குலைத்துவிடும்.

0 comments:

 
back to top