புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இரு மொபைல் போன்களிலும் முதல் முறையாக தமிழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மொபைல் போன் பயன்பாட்டில், இது தமிழுக்கு கொடுக்கப்பட்ட சிறப்பாகும். இதுவரை நமக்குக் கிடைத்த ஸ்மார்ட் போன்களில், ஐ.ஓ.எஸ். 7 சிஸ்டத்தில் தான், கீ போர்டுடன் கூடிய தமிழ் தளம், ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலேயே சேர்த்து கிடைத்துள்ளது. இதன் மூலம் நாம் தமிழ் கீ போர்டினை நேரடியாகப் பயன்படுத்த முடியும். இதுவரை செல்லினம் என்னும் அப்ளிகேஷனைத் தரவிறக்கம் செய்து, பதிந்து இயக்கி, அதன் வழி தமிழைப் பயன்படுத்தினோம்.
மொபைல் சாதனங்களில், தமிழில் டெக்ஸ்ட் அமைப்பதற்கான கம்ப்யூட்டர் கட்டமைப்பினைத் தருவதில், முத்து நெடுமாறன் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறார். முதன் முதலில் இதனை வடிவமைத்தவரும் இவரே. ஐ.ஓ.எஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் உள்ள தமிழ் எழுத்துக்களும் அவர் வடிவமைத்தவையே. இப்போது ஐ.ஓ.எஸ். சிஸ்டத்தில், அந்த எழுத்துக்களில் டெக்ஸ்ட் அமைப்பதற்கான உள்ளீடு அமைப்பினையும் அவரே வழங்கியுள்ளார்.
இந்த இரு போன்களிலும், தமிழ் 99 மற்றும் அஞ்சல் கீ போர்டுகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்து, நாம் தமிழ் டெக்ஸ்ட்டை உள்ளீடு செய்திடலாம். இனி, இந்த முறையில், ஐபோன்கள் மட்டுமின்றி, ஐபேட், ஐபாட் ஆகிய சாதனங்களிலும் தமிழைப் பயன்படுத்தலாம். இதற்கு முன்னர், தமிழுக்கென உருவாக்கப்பட்ட அப்ளிகேஷன்களை டவுண்லோட் செய்து, பதித்து, பின்னர் அவற்றை இயக்கி நாம் தமிழை உள்ளீடு செய்திட முடியும்.
தற்போது போனில் உள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலேயே இவை தரப்பட்டுள்ளன. எனவே, நேரடியாகவே தமிழைப் பயன்படுத்தலாம். இந்த சாதனங்களில் பயன்படுத்தப்படும் பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப், வைபர் போன்ற சமூக இணைய தளங்களில், நேரடியாகவே தமிழை உள்ளிடலாம். இந்த சாதனங்கள் மூலம், தேடல் வேலையில் ஈடுபடுகையில், தமிழிலேயே டெக்ஸ்ட் அமைத்துத் தேடலாம்.
0 comments:
Post a Comment