கோடை காலத்தில் ஊட்டிக்கு சுற்றுலா செல்பவர்கள் பெரும்பாலும் முதுமலைக்கு போகாமல் திரும்ப மாட்டார்கள். அங்கு நடக்கும் யானை சவாரி பிரபலமானது. காட்டு யானைகளை கண்டாலே தொடை நடுங்கி ஓடும் நமக்கு, இந்த யானைகளை கண்டால் வருடி பார்க்க தோன்றும். கொஞ்சம் கூட பயம் வராது. இயல்பாக காட்சியளிக்கும். இதற்கு காரணமே முகாமில் யானைகளுக்கு வழங்கப்படும் பயிற்சி தான்.
முதுமலை யானை முகாம் தோன்றியதில் ஒரு வரலாற்று பின்னணியே உண்டு. நூறு ஆண்டுகளுக்கு முன் வரை இந்த வனப்பகுதியில் மரங்களை வெட்டி எடுத்து செல்லும் பணிகளுக்கு யானைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மரங்களை கொண்டு செல்லும் யானைகள் தினமும் ஓய்வெடுப்பதற்கு 1910ம் ஆண்டு முதுமலை அருகே ஜேம்ஹட் என்ற இடத்தில் ஒரு முகாமை ஆங்கிலேய அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.
பின்னர் அந்த பகுதியில் ஏற்பட்ட வறட்சியால் யானைகளுக்கு தண்ணீர் கிடைப்பது கூட சிக்கலானது. அப்போது மாயாற்றில் தண்ணீர் செல்லவே 1927ம் ஆண்டு தெப்பக்காட்டுக்கு முகாமை மாற்றியுள்ளனர். அப்போது முதல் தெப்பக்காட்டிலேயே முகாம் இயங்கி வருகிறது. இந்த முகாமில் பராமரிக்கப்பட்ட யானைகளுக்கு ஒவ்வொரு விதமான வேலைகளும் வழங்கப்பட்டுள்ளன. 6 வயது முதல் 15 வயது வரையிலான யானைகளுக்கு இலகுவான வேலைகளும், 15 வயது முதல் 25 வயது வரையிலான யானைகளுக்கு கொஞ்சம் கடினமான மரங்களை தூக்கும் வேலைகளும் வழங்கப்பட்டுள்ளன. 25 வயது முதல் 40 வயது வரையிலான யானைகளுக்கு தான் வேலையே அதிகம்.
மிக கடினமான அனைத்து வேலைகளையும் இந்த யானைகள் தான் செய்யவேண்டும். அதன் பின்னர் மீண்டும் கொஞ்சம் பணி சுமை குறையும். 58 வயதானால் போதும். ராஜ மரியாதை தான். அரசாங்க வேலையில் இப்போது 58 வயதினருக்கு ஓய்வு கொடுப்பது போல் இந்த யானைகளுக்கும் ஓய்வு கொடுப்பது இப்போதும் நடைமுறையில் உள்ளது. பின்னர் முகாமிலேயே பராமரிக்கப்படும். எந்த வேலையும் கொடுப்பதில்லை. மற்ற யானைகளுக்கு போல் அவ்வப்போது தேவையான உணவு, மருத்துவ வசதிகள் வழங்கப்படும். முகாமில் ஏதாவது நிகழ்ச்சிகள் நடக்கும் போது மட்டும் இந்த யானைகளுக்கு முதல் மரியாதை உண்டு. இந்த முகாமில் அதிக ஆண்டுகள் வசித்த யானை ரதி. 77 வயதை கடந்து கடந்த 10 நாட்களுக்கு முன் மரணம் அடைந்தது. தற்போது 68 வயதான பாமா முகாமில் ஓய்வெடுத்து வருகிறது.
வனப்பாதுகாப்பு சட்டம் 1927ல் அமலுக்கு வந்த பின்னர் மரங்கள் வெட்டுவது குறைந்தது. அதன் பின்னர் முகாமில் வளர்க்கப்படும் யானைகளை சவாரிக்கு பயன்படுத்துவது, வனக்கொள்ளைகளை தடுப்பது, காட்டு யானைகளால் தொல்லை ஏற்படும் பகுதிகளுக்கு அழைத்து சென்று விரட்டியடிப்பது போன்ற பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது மொத்தம் 24 யானைகள் உள்ளன. இதில் 1972ல் ஒரே யானைக்கு பிறந்த இரட்டையர்கள் சுஜய், விஜய் ஆகியோரும் அடக்கம்.
தென்னிந்தியாவில் உருவான முதல் யானை முகாம் என்பது பலர் அறியாத விஷயம். 1910ம் ஆண்டு முதுமலை அருகே ஜேம்ஹட் என்ற இடத்தில் ஒரு முகாமை ஆங்கிலேய அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். பின்னர் அந்த பகுதியில் ஏற்பட்ட வறட்சியால் யானைகளுக்கு தண்ணீர் கிடைப்பது கூட சிக்கலானது. அப்போது மாயாற்றில் தண்ணீர் செல்லவே 1927ம் ஆண்டு தெப்பக்காட்டுக்கு முகாமை மாற்றியுள்ளனர். அப்போது முதல் தெப்பக்காட்டிலேயே முகாம் இயங்கி வருகிறது.
0 comments:
Post a Comment