.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, October 6, 2013

ஆனந்த ரயில்கள் - சுற்றுலாத்தலங்கள்!


    ஆனந்த ரயில்கள்
லகளவில் பாரம்பரியமிக்க இடங்களை பட்டியலிட்டுள்ள  யுனெஸ்கோ அவற்றை உலக பண்பாட்டுச் சின்னங்களாக அறிவித்துள்ளது. அதில் இந்தியாவில் 27இடங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் 23இடங்கள் பரிசீலனையில் இருக்கின்றன. இந்தியாவில் உள்ள பண்பாட்டுச் சின்னங்களை டூரிசம் பகுதியில் வாரம்தோறும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இந்தவாரம்....
 
ஆனந்த ரயில்கள்
 
ரயில் பயணம் ஆனந்தமே. பாரம்பரியமிக்க ரயில்களில் பயணம் செய்வது பேரானந்தம். பெருமையும் கூட. இந்தியாவில் அப்படி பெருமைக்குரியவை டார்லிஜிங் இமாலயன் ரயில், நீலகிரி மலைரயில் மற்றும் கல்கா- சிம்லா ரயில்கள். காரணம், இவை மூன்றும் யுனெஸ்கோ அமைப்பால் உலக பண்பாட்டுச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டவை.
 
* டார்லிஜிங் இமாலயன் ரயில்:
 
மேற்குவங்க மாநிலம் சிலிகுரி- டார்ஜிலிங் மலைப்பாதையில் இந்த ரயில் இயக்கப்படுகிறது. இது அழகாக, பொம்மைபோல் இருப்பதால் இருப்பதால் டாய் டிரெய்ன் என்றும் அழைக்கிறார்கள். இமயமலை அடிவாரத்தில் உள்ள சிலிகுரியில் புறப்பட்டு கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2,200 மீட்டர் உயரத்தில் உள்ள டார்ஜிலிங்கை அடைகிறது. பயணதூரம் 86 கி.மீ.
 
குட்டி குட்டி பெட்டிகளை பழைமை வாய்ந்த நீராவி என்ஜின் இழுத்துச் செல்வதைப் பார்க்கும்போதே பரவசம் தொற்றிக்கொள்ளும். இந்த ரயில்பாதை1879 - 1881ம் ஆண்டுகளில் அமைக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கியதாம். இது முதலில் சரக்குபோக்குவரத்துக்காக அமைக்கப்பட்டிருக்கிறது. இரண்டாம் உலகப்போரின் போது சிப்பாய்களையும் ஆயுங்களையும் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டது. அதன்பிறகே பயணிகள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
 
சிறப்புக்குரிய டார்ஜிலிங் இமாலயன் ரயில் 1999-ம் ஆண்டில் யுனெஸ்கோவால் இந்தியாவின் உலக பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. இது உலக அளவில் பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்ட 2வது ரயில் ஆகும். (முதல் ரயில் ஆஸ்திரியாவின் ஸெம்மரிங் ரயில்).
 
* நீலகிரி மலைரயில்:
 
தமிழகத்தில் கோயம்புத்தூர் அருகே மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே மலைப்பாதையில் நீலகிரி மலைரயில் இயக்கப்படுகிறது. 1845ம் ஆண்டில் ரயில்பாதை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 1899ம் ஆண்டில் போக்குவரத்து தொடங்கியது. மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையே மிகவும் சரிவான பாதை என்பதால் தண்டவாளத்தின் நடுவே பல்சக்கரம் அமைத்துள்ளனர். பல்சக்கரங்களை பற்றிக்கொண்டே ரயில் இயங்குகிறது.
 
மேட்டுப்பாளையம் - குன்னூர் வரை நீராவி என்ஜினும் பின்னர் டீசல் என்ஜினும் பயன்படுத்தப்படுகிறது. பயணதூரம் 46கி.மீ.தான் என்றாலும் பயணநேரம் சுமார் ஐந்தரைமணி நேரமாகும். வழியில் 208 வளைவுகள், 16குகைகள், 250 பாலங்கள் உள்ளன. எங்கு திரும்பினும் பசுமை, நீரோடை, காட்டு மிருகங்கள் என இயற்கைமயம் மனதைத் தாலாட்டும்.
 
நீலகிரி மலைரயில் 2005ம் ஆண்டில் யுனெஸ்கோவால் உலக பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.
 
* கல்கா- சிம்லா ரயில்:
 
இமயமலை அடிவாரத்தில் உள்ள குளுகுளு ஜிலுஜிலு நகரம் சிம்லா. இமாசலப்பிரதேச மாநிலத்தின் தலைநகர். கல்கா நகரத்தில் இருந்து சிம்லாவுக்கு ரயில்பாதை அமைக்கப்பட்டதன் பின்னணி முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியாவை ஆண்டுவந்த ஆங்கிலேயருக்கு சிம்லாமீது ஒரு மோகம் உண்டு. காரணம், அங்கு நிலவும் குளுகுளு சீதோஷ்ண நிலை.
 
அதனால் பிரிட்டிஷ் இந்தியாவின் கோடைக்கால தலைநகராக சிம்லாவை மாற்றிக்கொண்டனர். ராணுவத்தின் தலைமை அலுவலகத்தையும் சிம்லாவில் அமைத்தனர். இதற்காக போக்குவரத்து கட்டமைப்பை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அப்போதுதான் கல்கா- சிம்லா ரயில்பாதை அமைக்கப்பட்டது. 1903ம் ஆண்டு முதல் ரயில்போக்குவரத்து தொடங்கியது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2,076 மீட்டர் உயரத்தில் உள்ள சிம்லாவுக்கு ரயிலில் செல்வது சுகமான சூப்பரான அனுபவம்.
 
கல்கா - சிம்லா ரயில் 2008ம் ஆண்டில் உலக பண்பாட்டுச் சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது.
 

ஆனந்த ரயில்களில் உங்களது ஆனந்தப் பயணம் எப்போது?

0 comments:

 
back to top