யூகலிப்டஸ் மரத்தின் இலையில் தங்கத் துகள் படிந்திருப்பதை ஆஸ்திரேலியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள கல்கூர்லி என்ற பகுதி தாது வளம் நிறைந்த பகுதி. இங்கு தங்கம் அதிக அளவில் இருப்பதாக 1800ம் ஆண்டுகளிலே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இங்கு காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். மண் வளத்துக்கும், அங்குள்ள தாவரங்களுக்கும் உள்ள தொடர்பு குறித்து இவர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டனர்.
கல்கூர்லி பகுதியில் உள்ள யூகலிப்டஸ் மரத்தின் இலைகளை அதிநவீன எக்ஸரே கருவி மூலம் படம் பிடித்து பார்த்தபோது, அதில் மிக நுண்ணிய அளவில், அதாவது தலைமுடியின் அகலத்தில் 5ல் 1 பங்கு அளவுக்கு தங்க துகள் படிந்திருந்ததை கண்டு பிடித்தனர். இது குறித்து புவிவேதியியல் நிபுணர் மெல் லிண்டர்ன் கூறுகையில், ‘‘யூகலிப்டஸ் மரத்தின் வேர்கள் தரையில் 100 அடி ஆழம் வரை ஊடுருவி தங்கத் துகள் அடங்கிய நீரை உறிஞ்சுகின்றன. தங்கத் துகள் இலைகள் மற்றும் பக்க கிளைகளுக்கு கடத்தப்படுகின்றன. அவை பின்னர் காய்ந்து உதிர்ந்து விடுவதால், மரத்துக்கு பாதிப்பில்லை’’ என்றார்.
இந்த ஆராய்ச்சி கட்டுரை ‘நேச்சர் கம்யூனிகேஷன்’ என்ற ஆய்வு இதழில் வெளியிடப்பட்டு ள்ளது. இதன் மூலம் பூமிக்கு அடியில் உள்ள தாது வளங்களை தோண்டி பார்க்காமலேயே, அங்குள்ள தாவரங்களின் மாதிரிகளை ஆய்வு செய்வதன் மூலம் கண்டுபிடித்துவிடலாம் என்பதை ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பூமியில் பொதிந்துள்ள தாமிரம் மற்றும் துத்தநாகம் போன்ற வளங்க ளையும் இதே முறையில் அங்குள்ள தாவரங்களை ஆராய்வதின் மூலம் கண்டுபிடித்துவிடலாம் என ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். யூகலிப்டஸ் தங்கம் காய்க்கும் மரங்களா என்று ஆஸி. விஞ்ஞானிகளிடம் கேட்டால், 500 மரங்களை அழித்தால்தான், சிறிய மோதிரம் செய்யும் அளவுக்கு தங்கம் கிடைக்கும் என்கின்றனர்.
எக்ஸ்ட்ரா தகவல்
பூமியிலிருந்து இதுவரை 1 லட்சத்து 74 ஆயிரம் டன் தங்கம் எடுக்கப்பட்டுள்ளதாம். உலக தங்க கவுன்சில் இந்த தகவலை தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment