.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, October 2, 2013

மேய்வதைத் தவிர்ப்போம்: படிப்பதை பழக்கப் படுத்துவோம்!


தற்போது செய்தித்தாளை சில நொடிகளில் புரட்டிவிட்டுச் செல்வதும், விரல் நுனியில் உலகம் எனக் கூறிக்கொண்டு கணினியின் முன் அமர்ந்து நுனிப்புல் மேய்வதுபோல செய்திகளைப் படிப்பதும், நிகழ்வுகளைப் பார்ப்பதும் வாசிப்பாளர்களிடையே அதிகமாகக் காணப்படுகிறது.


ஒரு செய்தி அல்லது நிகழ்வு எதனை வெளிப்படுத்த முனைகிறது, அதன் மூலமாக புரிந்துகொள்ளவேண்டியது என்ன என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும். அதற்குப் பின்னர் அடுத்த செய்தி அல்லது நிகழ்வினைப் படிக்க ஆரம்பிக்கும்போது அதனதன் அடிப்படை கருத்துகள் எளிதாக மனதில் பதிந்துவிடும். காட்சி ஊடகத்தில் செய்திகளைப் படிக்கும்போதோ, நிகழ்வுகளைப் பார்க்கும்போதோ அவை உள்ளது உள்ளவாறே மனதில் பதிந்துவிடும்.


2 - paper reading

 



நாளிதழ்களில் மேம்போக்காக தலைப்புச் செய்திகளை மட்டும் பார்த்துவிட்டுச் செல்வதைத் தவிர்த்து, சற்று உன்னிப்பாகப் படித்தால் பல புதிய சொற்களையும், சொற்றொடர்களையும், பயன்பாடுகளையும் தெரிந்துகொள்ள வாய்ப்புள்ளது.


அரசியல் தொடங்கி அறிவியல் வரை ஒவ்வொரு துறையிலும் அவ்வப்போது பல புதிய சொற்கள் உருவாகின்றன. தொடர்ந்து படித்தால்தான் அவ்வப்போது அறிமுகமாகின்ற புதிய சொற்களைப் புரிந்துகொள்ள முடியும். “அதற்கெல்லாம் தேவையில்லை’, “வாசித்து என்ன ஆகப்போகிறது?’ அவ்வப்போது இணையதளங்களில் பார்த்துவிடுகின்றோம்’ என்றெல்லாம் கூறுவதைத் தவிர்க்க வேண்டும்.


அறிவியல், பக்தி, சோதிடம், திரைப்படம் வேலை வாய்ப்பு போன்ற குறிப்பிட்ட பகுதிகள் வெளிவரும் நாள்கள் மட்டுமே செய்தித்தாளை வாங்குவதை விட்டு அவரவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு ஏதேனும் ஒரு செய்தித்தாளை தெரிவு செய்து, அதனை தினமும் படிப்பதை நடைமுறையில் கொள்வது நல்லது. அப்பொழுதுதான் நாட்டு நடப்புகளை அறிந்து கொள்ள முடியும். என்றாவது ஒருநாள் படிக்காமல் விட்டுவிட்டால் அன்று வந்திருந்த முக்கியமான செய்தியையோ, கட்டுரையையோ நாம் இழக்க நேரிடும். கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோ தினமும் 300 பக்கங்களுக்கு மிகாமல் உலகச் செய்திகளைப் படிப்பாராம்.


பல அரசியல் பிரமுகர்களும், வேறு பல துறையைச் சார்ந்தவர்களும் தினமும் படிப்பதையும், எழுதுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். உள்ளூர் செய்தி தொடங்கி உலகச் செய்திகள் வரையில் அறிய, நாள்தோறும் குறைந்தது 30 நிமிடங்களாவது நாளிதழைப் படிப்பதற்காக ஒதுக்குவது நல்லது.


அவ்வாறே நூல் படிப்பதற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும். கதைகள், கட்டுரைகள், சாதனையாளர்களின் வரலாறு, ஆன்மிகம், கலை, இலக்கியம், அறிவியல், பயணக்கட்டுரைகள் என பலவகையான நூல்கள் உள்ளன. சார்லி சாப்ளினுக்கு புதிய சொற்கள் மேல் அலாதிப் பிரியம் என்றும், தினமும் ஒரு புதிய சொல்லைத் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருப்பார் என்றும், அதனை நடைமுறையில் பயன்படுத்துவார் என்றும் கூறுவர். அவர் தன்னுடைய சுயசரிதையில் அதிகமான புதிய சொற்களைப் பயன்படுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நூல் படிக்கும் பழக்கத்தை மேற்கொள்ளும் முன்பாக எந்த நூலைப் படிக்க வேண்டும் என்ற ஐயம் மனதில் தோன்றும். பல நூல்களைப் படிக்கப் படிக்க நாளடைவில் தானாகவே எந்த நூலைப் படிப்பது என்ற தெளிவு கிடைத்துவிடும்.


நூல் என்பது நமக்கு சிறந்த நண்பன் என்பதை மனதில் கொண்டு, நாளிதழ் வாசிக்க நேரம் ஒதுக்குவதைப் போல தினமும் 50 பக்கங்களுக்குக் குறையாமல் ஏதாவது ஒரு நூலைப் படிப்பது நல்லது.


படிப்பதால் மனம் தெளிவாகிறது. நினைவாற்றல் பெருகுகிறது. நற்சிந்தனை மேம்படுகிறது. நாளிதழ்களைப் படிப்பதால் அன்றாட நிகழ்வுகளைத் தெரிந்துகொள்ளமுடிகிறது. அவ்வாறே நூல்களைப் படிக்கும்போது நமக்குள் எதையாவது சாதிக்கவேண்டும் என்ற எண்ணம் மேலிட ஆரம்பிக்கிறது.
ஜவஹர்லால் நேரு தன் மகள் இந்திரா காந்தியிடம் வரலாறு படிப்பதோடு மட்டுமன்றி வரலாறு படைக்கவும் வேண்டும் என்று கூறுவாராம். அவ்வாறான உயரிய சிந்தனையை மனதில் வைத்து வரலாற்றைப் படைக்க முடியும் என்ற குறிக்கோளோடு படிக்க வேண்டும்.


நாளிதழையோ, நூலையோ படித்து முடித்தபின்னர் நண்பர்களிடமும், குடும்பத்தாரிடமும் படித்தவை பற்றி விவாதிக்கலாம். அதன் மூலம் பல புதிய கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளலாம். புதிய சொல், புதிய செய்தி, புதிய உத்தி, புதிய நடை, புதிய வரலாறு என்று ஒவ்வொரு நிலையிலும் ரசித்து ரசித்துப் படிக்கலாம்.


இதுவரை இப்பழக்கம் இல்லாதவர்கள் வாசிப்புப் பழக்கத்தை இன்று முதல் தொடங்கலாம். நண்பர்களையும் இவ்விதப் பழக்கத்தை மேற்கொள்ள அறிவுறுத்தலாம். வாசிப்புக்கென நேரத்தை ஒதுக்கி, வீட்டில் ஒரு நூலகத்தை உருவாக்கி நூல் எண்ணிக்கையைப் பெருக்கினால் வீடும் நாடும் வளம் பெறும்.

0 comments:

 
back to top