மக்கள் வாங்கும் ஒவ்வொரு தங்க நகைக்கும் பிரத்யேக தரச் சான்றிதழ் வழங்கும் திட்டம் வரும் 2014ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.இதனால் திருட்டு நகைகளை அதிகாரபூர்வமாக கடைகளில் விற்கும் போக்கு குறையும் என்பதுடன் தங்கம் வாங்குதல் மற்றும் நகை விற்பனை தொடர்பான தில்லுமுல்லு கணக்குகள் முடிவிற்கு வரும் என அரசு கருதுகிறது.
தற்போது தங்க நகைகளின் தரத்திற்கு இந்திய தர நிர்ணய கழகம் (பீ.ஐ.எஸ்.,) ‘ஹால்மார்க்’ முத்திரை வழங்குகிறது. நகைகளில் பதிக்கப்பட்டுள்ள இந்த முத்திரையில் தங்கத்தின் தூய்மையை குறிக்கும் எண் (22 காரட்டிற்கு – 916), விற்பனையாளர் குறியீடு வருடத்தை குறிக்கும் சங்கேத எழுத்து உள்ளிட்டவை அடங்கியுள்ளன.
இவற்றுடன் மேலும் பல விவரங்களை மக்கள் படித்து தெரிந்து கொள்ளும் நோக்குடன் ‘நகை சான்றிதழ்’ திட்டத்தை செயல்படுத்த பீ.ஐ.எஸ்., திட்டமிட்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக, சென்னை, டில்லி, மும்பை, கோல்கட்டா உள்ளிட்ட முக்கிய பெரு நகரங்களில் வரும் புத்தாண்டு முதல் இத்திட்டம் அமலுக்கு வர உள்ளது. இதன் படி மக்கள் வாங்கும் ஒவ்வொரு ‘ஹால்மார்க்’ நகையுடன் அதன் தரம், பயன் படுத்தப்பட்ட இதர உலோகம், பதிக்கப்பட்டுள்ள கற்கள் உள்ளிட்ட விவரங்கள் அச்சிட்ட சிறிய அட்டை வழங்கப்படும்.இந்த சான்றிதழ் அட்டையில், குறிப்பிட்ட நகையின் படமும் இடம் பெற்றிருக்கும்.
இத்தகைய நடைமுறை நகை மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்க உதவும் என்பதோடு சுலபமாக மறு விற்பனைக்கும் உதவும்’ என பீ.ஐ.எஸ்., அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இந்த விதிமுறை அமலுக்கு வரும்பட்சத்தில் குறிப்பாக பெரு நகரங்களில் கடைகளில் திருட்டு நகைகளை விற்பது கட்டுப்படுத்தப்படும். சான்றிதழ் இருந்தால் தான் நகைகளை விற்பனை செய்ய முடியும் என்ற நிலை ஏற்படும்.
அதே சமயம் கடத்தி வரப்படும் நகைகளை விற்பதும் குறையும். இதனால் நகைக் கடைக்காரர்கள் தாங்கள் வாங்கும் தங்கம், தயாரித்த நகைகள் அவற்றின் விற்பனை குறித்த விவரங்களை துல்லியமாகவும், வெளிப்படையாகவும் பராமரிக்கும் நிலை ஏற்படும்.
தற்போது இந்த திட்டம் பெருநகரங்களில் மட்டுமே அமலுக்கு வரஉள்ளது. இதர பகுதிகளில் நடைமுறைப்படுததப்பட மாட்டாது.எனினும் இந்த புதிய விதிமுறையால் பெரு நகர நகைக் கடைக்காரர்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. அவர்களின் வர்த்தகம் இதர சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களுக்கு சென்று விடுமோ என அஞ்சுகின்றனர்.
0 comments:
Post a Comment