வானளாவிப் பரந்து விரிந்திருக்கும் இணையதளத் தொடர்புகளின் சேவை எல்லையை ஆழ்கடலின் அடியிலும் பயனளிக்கும் வகையில் விரிவுபடுத்த அமெரிக்க விஞ்ஞானிகள் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர்.
சுனாமி அறிவிப்பு, மாசுபாடுகள் கண்டறிதல் மற்றும் நிகழ்வுகள் கண்காணிப்பு போன்றவற்றைக் கண்டறிவதற்கும் ஆழ்கடல் இணையதள இணைப்புகளை ஏற்படுத்தும் சோதனை முயற்சியில் அவர்கள் வெற்றி பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலம் சார்ந்த வயர்லெஸ் நெட்வொர்க்குகள், செயற்கைக்கோள் மற்றும் ஆண்டெனா வழியாக வரும் தரவுப் பரிமாற்றத்திற்கு ரேடியோ அலைகளைச் சார்ந்திருந்தன.
ஆனால், தண்ணீருக்கடியில் இவற்றின் செயல்பாடு சக்தி வாய்ந்ததாக இருக்காது என்பதால் பொதுவாக ஒலி அலை சார்ந்த தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. தற்போது இணையதளப் பயன்பாடுகள் மூலம் ஏற்படுத்தப்படும் வயர்லெஸ் நெட்வொர்க்குகள் கடலுக்கடியில் இருந்து தரவுகளைச் சேகரிக்க முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் திறமையாகச் செயல்படும் என்று இத்திட்டத்தின் முன்னணி ஆராய்ச்சியாளரும், பஃபெல்லோ பல்கலைக்கழகத்தின் மின்பொறியியல் இணை பேராசிரியருமான டொம்மாசோ மெலோடியா தெரிவிக்கின்றார்.
சுனாமி போன்ற பேரழிவு ஏற்படும் காலங்களில் ஒரு ஸ்மார்ட்போன் அல்லது கணினியில் யாருக்கும் கிடைக்கும் இந்தத் தகவலை வைத்து மக்களைக் காப்பாற்ற முடியும் என்று இவர் கூறுகின்றார்.
பல அமைப்புகள் உலகளவில் இந்த முறையைப் பயன்படுத்தினாலும் கட்டமைப்பு மாறுபாடு காரணத்தினால் அவற்றுள் செய்திகளைப் பகிர்ந்தளித்தல் என்பது இயலாத ஒன்றாக உள்ளது.
ஆனால், நீருக்கடியில் பயன்படுத்தப்படும் இந்த புதிய மேம்படுத்தப்பட்ட தொடர்புகளில் தகவல் பரிமாற்றங்கள் எளிதாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். சோதனை முயற்சியில் வெற்றி பெற்றுள்ள இந்தப் புதிய தொழில்முறை பேரழிவுக் காலங்களில் கடலோர மக்களை முன்கூட்டியே எச்சரித்துப் பாதுகாக்க உதவும் என்று விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment