.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, October 28, 2013

அறிவியல் மேதை சர்.சி.வி.ராமன்!


நவீன உலகின் பெரும்பாலான கூறுகள் விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. நேற்று வரை தெரியாதிருந்ததை இன்று தெரிய வைப்பதுதான் விஞ்ஞானம். இயற்கையின் அடிப்படைகள் என்றும் மாறுவதில்லை. அந்த மாறாத அடிப்படைகளை நமக்கு விளக்குவதுதான் விஞ்ஞானம். விளக்குபவர்கள்தான் விஞ்ஞானிகள். ஒவ்வொரு தேசமும் பல விஞ்ஞானிகளை உலகுக்குத் தந்திருக்கின்றன. அவ்வாறு நமது இந்திய தேசம் உலகுக்குத் தந்தவர்களில் முதன்மையானவர் 'சர்' சி.வி. ராமன்.


1888 ஆம் ஆண்டு நவம்பர் 7ந்தேதி தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் பிறந்தார் சந்திரசேகர வெங்கட ராமன். அவரது தந்தைக்கு அறிவியலிலும், கணிதத்திலும் மிகுந்த ஆர்வம் இருந்தது. இளம்வயதிலேயே அறிவுக்கூர்மை மிகுந்தவராக இருந்தார் சி.வி. ராமன். 1904 ஆம் ஆண்டு அவருக்கு பதினாறு வயதானபோது அவர் சென்னையின் பிரசிடென்சி கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். அந்த ஆண்டில் அவருக்கு மட்டுமே முதல் நிலை தேர்ச்சியும், தங்கப்பதக்கமும் கிடைத்தன. அதே கல்லூரியில் அவர் பல சாதனைகளை முறியடித்து பெளதிகத்தில் முதுநிலை பட்டம் பெற்றார். சி.வி. ராமனின் அறிவியல் திறமை இளம்வயதிலேயே வெளிப்பட்டது. அவருக்கு 18 வயதானேபோது அவருடைய முதல் ஆய்வு அறிக்கை லண்டனில் அறிவியல் சஞ்சிகையில் பிரசுரமானது. அப்போதே அறிவியல் உலகம் அவரை கவனிக்கத் தொடங்கியது.

பின்னர் ஒளி, ஒலி, காந்தசக்தி ஆகியவற்றில் பல ஆராய்ச்சிகளை செய்தார். அவருக்கு அதிக சம்பளத்தில் அரசாங்க வேலை கிடைத்தாலும் சிறிது காலத்தில் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியில் சேர்ந்தார். 1914 ஆம் ஆண்டு கல்கத்தாவில் ஒரு புதிய அறிவியல் கல்லூரி நிறுவபட்டபோது அதன் தலைமை ஆசியராக நியமிக்கப்பட்டார். 1921-ல் அவருக்கு முனைவர் பட்டம் கிடைத்தது. 1924-ல் லண்டன் ராயல் கழகம் அவருக்கு கெளரவ உறுப்பினர் தகுதியை வழங்கியது. அறிவியலில் அவர் ஆற்றிய பங்கை அங்கீகரிக்கும் வகையில் 1929 ஆம் ஆண்டில் இந்தியாவில் செயல்பட்ட பிரிட்டிஷ் அரசாங்கம் ராமனுக்கு 'சர்' பட்டம் வழங்கி கவுரவித்தது. சர் சி.வி. ராமன் பல்வேறு ஆராய்ச்சிகளில் எப்போதுமே ஈடுபட்டிருந்தார்.



சூரிய ஒளி தண்ணீரிலும், ஐஸ் கட்டியிலும், மற்றப்பொருட்களிலும் எவ்வாறு பயணிக்கிறது என்பதை ஆர்வத்துடன் ஆராய்ந்தார். ஒளி அவ்வாறு பல்வேறு பொருட்களில் பயணிக்கும்போது புதிய கோடுகள் உருவாவதை அவர் கணித்துக் கூறினார். அந்த முக்கியமான கண்டுபிடிப்புக்கு அவரது பெயரே சூட்டப்பட்டது. அந்தக் கோடுகள் "ராமன் கோடுகள்" என்றும், அந்த விளைவு "ராமன் விளைவு" என்றும் இன்றும் அழைக்கப்படுகிறது. அந்தக் கண்டுபிடிப்பு நிகழ்ந்தது 1928 ஆம் ஆண்டு பிப்ரவரி 28ந்தேதி. அந்த அரும் கண்டுபிடிப்புக்காக சர் சி.வி. ராமனுக்கு 1930 ஆம் ஆண்டு பெளதிகத்துக்கான 'நோபல் பரிசு' வழங்கப்பட்டது. நோபல் பரிசை வென்ற முதல் தமிழர் சர் சி.வி. ராமன் என்பதும் குறிப்பிடதக்கது. அவருக்கும், இந்தியாவுக்கும் பெருமை தேடித்தந்த கண்டுபிடிப்பு நிகழ்ந்த பிப்ரவரி 28-ம் தேதியை சிறப்பிக்கும் வகையில், தேசிய அறிவியல் தினமாக ஒவ்வொரு ஆண்டும் நமது அரசு கொண்டாடுகிறது.

இந்தியாவில் அப்போது அறிவியல் ஆராய்ச்சிக்கு உகந்த சூழ்நிலை நிலவாததால் நமது தேசத்தில் எதுவும் பெரிய அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழ முடியாது என்பதுதான் விஞ்ஞானிகளின் அனுமானமாக இருந்தது. அந்த எண்ணத்தை தகர்த்ததால் சர் சி.வி.ராமனின் அறிவியல் பங்களிப்பு இந்தியாவுக்கு மட்டுமல்ல தமிழர்களுக்கும் மிகப்பெரிய ஒன்றாக கருதப்படுகிறது. அதே கண்டுபிடிப்புக்காக லண்டன் ராயல் கழகம் சர் சி.வி. ராமனுக்கு 'ஹியூம்' பதக்கம் வழங்கி சிறப்பித்தது. இந்திய அரசாங்கம் அவருக்கு 1954-ல் “பாரத ரத்னா” விருது வழங்கியது. 1958 ஆம் ஆண்டு “லெனின் அமைதி” பரிசையும் வென்றார் சர் சி.வி. ராமன். 1943-ல் அவரது பெயரிலேயே ராமன் ஆராய்ச்சிக் கழகம் பெங்களூரில் நிறுவப்பட்டது. அந்தக்கழகத்தில் அவர் தன் வாழ்க்கை முழுவதும் ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டார். இந்தியாவிற்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்த்த சர் சி.வி. ராமன் 1970 ஆம் ஆண்டு நவம்பர் 21ந்தேதி பெங்களூரில் காலமானார்.

“ராமன் விளைவு” என்ற அவரது அறிவியல் கண்டுபிடிப்பு உலகின் தொழிற்துறை வளர்ச்சியில் பெரும் பங்காற்றியிருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவர் என்ற தகுதியை ஒரு தமிழனால் பெற முடியும் என்பதை வாழ்ந்து காட்டியவர் சர் சி.வி. ராமன். பிறப்பிலேயே அவர் அறிவுக்கூர்மை உடையவராக இருந்தாலும், அவரிடம் விடாமுயற்சி, கடும் உழைப்பு, தன்னம்பிக்கை போன்ற நல்ல குணங்களும் இருந்தன. இவையெல்லாம் சேர்ந்ததால்தான் அவரால் பிரகாசிக்க முடிந்தது. அறிவியல் வரலாற்றில் இடம் பிடிக்க முடிந்தது. சர் சி.வி. ராமன் அளவுக்கு நமக்கு அறிவுக்கூர்மை இல்லாவிட்டாலும்கூட விடாமுயற்சியோடு தன்னம்பிக்கையுடன் கடும் உழைப்பையும் நம்பினால் நமக்கும் நாம் விரும்பும் வானம் வசப்படாமல் போகாது.

0 comments:

 
back to top