.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, November 15, 2013

கழிவுகளை அழித்து மனித குலத்தை காப்போம்!

 

கழிவு என்பது எல்லா இடங்களிலும் எல்லோராலும் உருவாக்கப்படுவதே. நகரங்களில் மீதமாகும் கழிவுகளுக்கு வடிகாலாக கிராமங்களை மாற்றிவிடுவது என்பது இயற்கையின் சமநிலையை பாதிக்கும் முக்கிய விஷயங்களில் ஒன்றாகும்.தற்போது வேகமாக மாறிவரும் கலாசார மாற்றங்களினால் புதியன புகுதலும் பழையன கழிதலும் சாதாரணமான நிகழ்வு என்றாலும்கூட பழையவற்றை சுற்றுச்சூழல் மாசுபடாமல் கழிப்பதை மனித சமுதாயம் கற்றுக்கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் சுற்றுச்சூழல் மிகப்பெரிய பாடத்தை நமக்கு கற்றுக்கொடுக்கும்.

முந்தைய காலங்களில் கழிவுகளை ஒரு குழி வெட்டி அதில் கொட்டி அது மக்கியபின் விவசாயத்திற்குப் பயன்படுத்தி வந்தனர். தற்போது கண்ட இடங்களில் கழிவுகளைக் கொட்டுவதால் கிருமிகள் பெருகி நோய்கள் ஏற்படவே வழிவகுக்கின்றன.

கழிவு என்று பார்க்கும்போது திடக்கழிவு, திரவக்கழிவு என்றும், அவற்றில் மக்கும் தன்மையுள்ளது, மக்காத தன்மையுள்ளது என்றும் பிரித்துப் பார்க்க வேண்டும். அரசு தற்போது விளம்பரங்களின் மூலமும் செயல் விளக்கப் படங்கள் மூலமும் கழிவு மேலாண்மை குறித்து மக்களுக்கு அவ்வப்போது விளக்குகிறது. ஆனாலும் சிலர் இதன் முக்கியத்துவத்தை உணராமல் செய்யும் செயல்கள், அவர்களை மட்டுமல்லாது மொத்த மனித சமுதாயத்தையும் பாதிக்கும் செயலாக மாறிவிடுகிறது.

கழிவு மேலாண்மை என்பது முதலில் வீடுகளிலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும். அன்றாடம் வீடுகளில் உருவாகும் கழிவுகளில் மக்கும் கழிவை தனியாகவும், மக்காத கழிவை தனியாகவும் சேகரிக்கவேண்டும். கழிவுகளை அழிக்க நகராட்சி, மாநகராட்சிகளையே நம்பியிராமல் அவற்றை பயனுள்ளவாறு எப்படி மாற்றி உபயோகப்படுத்துவது என்று அரசு மற்றும் தொண்டு நிறுவனங்களின் மூலம் கிடைக்கும் பயிற்சிகளைப் பெற்று மனித குலம் வாழ வழிவகை செய்யவேண்டும்.

கழிவுகளை மக்கவைத்து அதை எடுத்து செடிகளுக்கும் வீட்டுத் தோட்டங்களுக்கும் பயன்படுத்தலாம். தற்போது கழிவுகளிலிருந்து பயோ காஸ், மின்சாரம் தயாரித்தல் என பல்வகை நவீன பயன்பாட்டு முறைகள புழக்கத்தில் உள்ளன.

கழிவுகளை திறந்தவெளிகளில் சேகரிக்காமல் குழிகள் சேகரித்து அவற்றை மூடி மக்க வைத்து உரம் தயாரிக்கலாம்.மக்காத கழிவுகள் என்பது கட்டுமானக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், தொழிற்சாலைகளில் உருவாகும் கழிவுகள். கட்டுமானக் கழிவுகளை நீர் நிலைகளில் கொட்டுவதால் நீர் ஆதாரம் பாழ்படுவதுடன் நீரின் தன்மையும் மாசுபடுகிறது.

பிளாஸ்டிக் கழிவுகள் எப்போதும் அழியாதவை. அவற்றின் உபயோகத்தை குறைக்க வேண்டும். மேலும் பிளாஸ்டிக்கை மறுசுழற்சிக்கு உட்படுத்த வேண்டும். நிலத்தில் இடப்படும் பிளாஸ்டிக் கழிவு எத்தனை காலமானாலும் மக்காமல் அப்படியே மண்ணில் இருந்து கொண்டு நீரின் வழித்தடத்தை அடைத்தும், மரங்களின் வேரினை கீழிறங்க விடாமலும் செய்யும் தன்மை கொண்டதாக இருக்கிறது. இதை உணர்ந்த அரசு தற்போது சாலைகள் அமைக்க இந்த பிளாஸ்டிக் கழிவுகளை உபயோகப்படுத்தும் திட்டத்தை கணடறிந்து செயல்படுத்தி வருகிறது.

தொழிற்சாலைகளில் உருவாகும் கழிவுகள் சில நச்சுத்தன்மையுடயதாக இருக்கின்றன. அங்கு உபயோகப்படுத்தப்படும் வேதிப்பொருள்களின் மீதி அப்படியே நிலத்தில் கொட்டப்படுவதால் நிலத்தின் தன்மையும், நீரின் தன்மையும் மாறிவிடுகிறது. அந்த மாசுபட்ட நீரினை உபயோகப்படுத்தும் மனிதர்களும் விலங்குகளும் நேரடியாக நோய்வாய்ப்படுவதுடன் பல பக்கவிளைவுகளையும் சந்திக்க வேண்டியுள்ளது. தொழிற்சாலைகள் லாபநோக்கை மட்டுமே பிரதானமாக பார்க்காமல் கழிவு மேலாண்மை குறித்து தொழிலாளர்களுக்கு பயிற்சியளித்து வேண்டிய உபகரணங்களை கொண்டு கழிவுகளை அழித்து மனித குலத்தை காக்க வேண்டும்.

நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவர் வாக்கு. ஆனால் நீரின் மகத்துவத்தை மக்கள் உணரவில்லை என்பதுதான் உண்மை. பொதுவாகவே எல்லா நகராட்சிகளிலும், மாநகராட்சிகளிலும் சாக்கடை நீரினை கொண்டுபோய் குளங்களிலும் ஆறுகளிலும் விடுவதை பார்க்கிறோம். இது மிகத் தவறான செயலாகும். சாக்கடை நீரினை சுத்திகரிப்பு செய்து விவசாயத்திற்கு பயன்படுத்தலாம். சமீப நாள்களில் தண்ணீர் நுகர்வு மிக அதிகமாகவே காணப்படுகிறது. மக்கள் தண்ணீரினை அளவாக உபயோகப்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும்.

நமக்கு உள்ளது ஒரே உலகம். நாம் வாழத் தகுந்ததாக இப் பூவுலகை மாற்றியமைக்க எல்லோருமே ஒன்றுசேர்ந்து அக்கறையுடன் பாடுபடவேண்டும்.

0 comments:

 
back to top