இந்திய கலாசாரத்தின் ஆணிவேர்களாகவும், அடையாளமாகவும் விளங்கி வருபவை திருக்கோயில்களே. இந்தியாவின் பன்மொழி கலாசாரத்தை ஒரு மெல்லிய நூலிழையில் வலுவாக பிணைத்து காத்து வரும் பெருமைமிகு சின்னங்கள் கோயில்கள். இத்தகைய கோயில்களுக்கு அந்நாட்களில் அரசர்களும், தனவந்தர்களும், பெரும் அரசு பொறுப்பில் இருந்தவர்களும் அசையும், அசையா சொத்துகளை உடமையாக்கி வைத்திருந்தனர். இந்த சொத்துகள் மூலம் கிடைக்கும் வருவாய் அந்த கோயில்களில் அன்றாட பூஜைகள் தடையின்றி நடக்கவும், கோயில்களை நம்பியுள்ள அர்ச்சகர்கள், பிற பணியாளர்களின் ஊதியத்துக்கும் பயன்படுத்தப்பட்டு வந்தது.
அதோடு கோயில்கள் கல்விச்சாலைகளாகவும், வைத்திய சாலைகளாகவும், கலாசார பண்பாட்டு மையங்களாகவும், அவசர காலங்களிலும், இயற்கை சீற்றங்களின் போதும் மக்களை காக்கும் மையங்களாகவும் திகழ்ந்தன. இன்று கோயில்களுக்கு சொந்தமான அந்த சொத்துகள் அனைத்தும் அப்படியே உள்ளதா என்றால் இல்லை. அதே நேரத்தில் இன்றளவும் சொத்துகளுடன் வருவாய் வாய்ப்புள்ள கோயில்களும் ஏராளமாக உள்ளன. சொத்துகள் இருந்தபோதிலும் அவை ஆக்கிரமிப்புக்கு ஆளாகி வருவாய் சரிவர வராமல் உள்ள திருக்கோயில்களும் உள்ளன.
தமிழகத்தை பொறுத்தவரை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 38,500 கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களின் சொத்துகள் மூலம் வரும் வருவாய், உண்டியல் வருவாய், தரிசன டிக்கெட்டுகள், பிரசாத விற்பனை என மொத்தமாக ஆண்டு ஒன்றுக்கு ஈட்டும் வருவாய் இன அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் மூலம் ஆண்டு ஒன்றுக்கு மொத்தமாக ஈட்டப்படும் வருவாய் ரூ.300 கோடியை தாண்டுகிறது.
இந்த வருவாயில் கோயில் பூஜை, அர்ச்சகர், பிற பணியாளர்களுக்கு சம்பளம், அன்னதான திட்டம் என்று போக, மீதியுள்ள தொகை மொத்தமாக அரசின் கஜானாவை சென்றடைகிறது.இந்த வருவாயை கொண்டுதான் பாழடைந்து வரும் கோயில்களுக்கு திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்றும், கும்பாபிஷேகம் நடந்து பல ஆண்டுகளை கடந்த கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்றும், ஒரு கால பூஜைக்கே தடுமாறும் கோயில்களை அடையாளம் கண்டு அந்த கோயில்களில் ஒரு கால பூஜைக்காவது வழிவகை செய்யப்பட வேண்டும்.தமிழகம் முழுவதும் 520 கோயில்களில் நாள் ஒன்றுக்கு 35 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
இதற்காக ரூ. 7 லட்சம் செலவிடப்படுகிறது. ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியுள்ள திருக்கோயில்களின் சொத்துகளை மீட்க வேண்டும். குத்தகை, பாக்கி இனங்கள் அனைத்தும் வசூலிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இந்து சமய ஆன்மிகவாதிகள் மத்தியில் எழுந்துள்ளது.தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பக்தர்களின் பங்களிப்புடன் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு பல கோயில்கள் கும்பாபிஷேகம் கண்டு வருகின்றன. இந்து சமய அறநிலையத்துறை வேலூர் இணை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் வரும் வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இணை ஆணையர் கட்டுப்பாட்டில் 536 கோயில்களும், உதவி ஆணையர் கட்டுப்பாட்டில் ஆயிரம் திருக்கோயில்களும், பிற சிறிய கிராமப்புற கோயில்களும் உள்ளன.
வேலூர் மாவட்டத்தில் சமீபத்தில் கும்பாபிஷேகம் கண்ட கோயில்கள் விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர், ரத்தினகிரி பாலமுருகன், வேலப்பாடி வரதராஜ பெருமாள், சோளிங்கர் லட்சுமி நரசிம்மசுவாமி கோயில், பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோயில், ஒடுகத்தூர் கஜேந்திர வரதராஜ பெருமாள் கோயில், வெட்டுவாணம் எல்லையம்மன் கோயில் என்று பட்டியல் நீள்கிறது. தமிழகத்தில் அதிக வருவாய் உடைய கோயில்களாக பழனி, திருத்தணி, திருச்செந்தூர், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் உட்பட பல கோயில்கள் உள்ளன.
அத்துடன் கோயில் உண்டியல் வருவாயை அரசின் கஜானாவிற்கு கொண்டு செல்லாமல், அந்த நிதியை நலிவடைந்த கோயில்களுக்கு பரவலாக்கப்பட்டு செலவிடப்பட வேண்டும் என்பதே ஆன்மீகவாதிகளின் எதிர்பார்ப்பு.திருக்கோயில்களின் அசையா சொத்துகள்: கோயில்களுக்கு சொந்தமாக ஆண்டுக்கு இருபோகம் விளையக்கூடிய 4 லட்சத்து 78 ஆயிரத்து 546 ஏக்கர் விளைநிலங்கள் உள்ளன. இவற்றை 1 லட்சத்து 23 ஆயிரத்து 729 பேர் குத்தகைக்கு விவசாயம் செய்து வருகின்றனர்.
பல்வேறு அரசு மற்றும் பொது உபயோகங்களுக்காக 135.69 ஏக்கர் நிலங்கள் வழங்கப்பட்டுள்ளன. கோயில் சொத்துகள் தொடர்பாக கடந்த மார்ச் 31ம் தேதி வரை 33,347 வழக்குகள் தொடரப்பட்டது. இதில் 17,191 வழக்குகளுக்கு முடிவு காணப்பட்டு ரூ.14.86 கோடிக்கு வசூலிக்கப்பட்டுள்ளது. 16,156 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளுடன் தொடர்புடைய நிலுவைத்தொகை ரூ.18.45 கோடியாகும். அசையா சொத்துகள் மூலம் ஆண்டுக்கு ரூ.59 கோடி வருவாய் கிடைக்கிறது.
வறுமையில் வாடும் கோயில் ஊழியர்கள்
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர். இவர்களில் கிளார்க் என்றால் கோயில் வருவாய் அடிப்படையில் ரூ.1,500 முதல் ரூ.3,000ம் வரையும் அதற்கு கீழே உள்ள அர்ச்சகர்கள், பூசாரிகள், பிற பணியாளர்கள் அனைவரும் ரூ.1,500 வரையே ஊதியமாக பெறுகின்றனர். இதிலும் ரூ.100 முதல் ரூ.750 வரை ஊதியம் பெறும் ஊழியர்களும் வருகின்றனர். இந்த வருவாயில் வாழ்க்கையை நடத்துவது கஷ்டம் என்பதால் இதற்கும் அரசு ஒரு முற்றுப்புள்ளி வைத்து, திருக்கோயில் பணியாளர்களையும் அரசு ஊழியர்களை போல பணிவரன்முறைபடுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.
கோயில்களின் வருவாய்
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 36,488 கோயில்களும், மடங்கள் 56ம், கோயிலுடன் இணைந்த மடங்கள் 58ம், சமண கோயில்கள் 17, சிறப்பு அறக்கட்டளை கோயில்களாக 1,721 கோயில்களும், சிறப்பு நிர்வாகத்தின் கீழ் 189 கோயில்களும் என 38,529 உள்ளன. இதில் ஆண்டுக்கு ரூ.10 ஆயிரத்துக்கும் மேல் வருவாய் உள்ள கோயில்கள் 34,336, ரூ.10 ஆயிரத்துக்கு மேல் ரூ.2 லட்சத்துக்குள் வருவாய் உள்ள கோயில்கள் 3,402. ரூ.2 லட்சத்துக்கு மேல் ரூ.10 லட்சத்துக்குள் வருவாய் உள்ளவை 557, ரூ.10 லட்சத்துக்கு மேல் வருவாய் உள்ள கோயில்கள் 234.கிராமப்புற திருக்கோயில் திருப்பணிகள் திட்டத்தின் கீழ் 10 கோயில்கள் முதல்கட்டமாக இந்த நிதி ஆண்டில் திருப்பணிகள் செய்யப்பட உள்ளது. இத்திட்டத்தில் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உபரி நிதியில் இருந்து ரூ.2 கோடி நிதி கடந்த நிதி ஆண்டு பெறப்பட்டது. இதில் தமிழகம் முழுவதும் தலா ரூ.50 ஆயிரம் வீதம் 256 கோயில்களுக்கு வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிதி ஆண்டு மேலும் 300க்கும் மேற்பட்ட கோயில்கள் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளன.
ஒரு கால பூஜைக்கு வழி
ஒரு கால பூஜையும் நடைபெறாமல் தள்ளாடும் பின்தங்கிய பகுதிகளில் உள்ள 11 ஆயிரத்து 931 கோயில்களில் ஒரு கால பூஜை தொடர்ந்து நடைபெற ரூ.1 லட்சம் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர 539 கோயில்களில் பொதுமக்கள் பங்களிப்பு ரூ.10 ஆயிரம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை பங்களிப்பு ரூ.90 ஆயிரம் சேர்த்து ரூ.1 லட்சம் வங்கியில் டெபாசிட் செய்யப்பட உள்ளது. அதில் இருந்து வரும் ரூ.750 வட்டியை கொண்டு கோயில் பூசாரி ஒரு கால பூஜையை தொடர்ந்து மேற்கொள்ள வழி செய்யப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment