மத்திய தரைக்கடல் பகுதியை தாயகமாகக் கொண்ட பீட்ரூட் உலகின் பல பகுதியில் சாகுபடி செய்யப்படுகிறது. பீட்ரூட் ஒரு குளிர்பிரதேச வேர் காய்கறியாகும். பீட்ரூட்டை வேக வைத்தும், வேக வைக்காமல் பச்சையாக உண்ணவும் மற்றும் ஊறுகாய் போடவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் இலைப்பகுதியை கீரையாகவும் கால்நடை தீவனமாகவும் பயன்படுத்தலாம். பீட்ரூட்டில் தண்ணீர்சத்து, புரதச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் சி, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் பொட்டாசியம் சத்து அதிகமாக உள்ளது. பீட்ரூட்டில் கிரிம்சன், குளோப், டெட்ராய்ட், டார்க்ரெட்,ரெட்பால் மற்றும் ஊட்டி1 என்ற ரகங்கள் அதிகமாக பயிர் செய்யப்படுகுன்றன.
பீட்ரூட் சாகுபடி செய்ய கடினவகை நிலத்தை தவிர்க்க வேண்டும். மிகவும் குறைந்த வெப்பநிலையை தாங்காது. ஆகையால் 10 டிகிரி சென்டிகிரேடுக்கு மேல் வெப்பநிலை இருக்குமாறு சாகுபடி செய்ய வேண்டும். மண்ணில் கார அமிலத்தன்மை 6-7 ஆக இருக்க வேண்டும். மலைப்பகுதியில் வருடம் முழுவதும் , தரைப்பகுதியில் குளிர் காலங்களிலும் சாகுபடி செய்யலாம்.
ஒரு எக்டேருக்கு 5 முதல் 6 கிலோ விதை தேவைப்படுகிறது. நிலத்தை நன்றாக உழுது பண்படுத்தி, உயரப்பாத்திகள் 30 செ.மீ இடைவெளியில் தயார் செய்ய வேண்டும். ஒரு எக்டர் நிலத்திற்கு 20 டன் தொழு எருவும், 60 கிலோ தழைச்சத்தும், 60 கிலோ மணிச்சத்தும் மற்றும் 100 கிலோ சாம்பல் சத்தும் அடியுரமாக இட வேண்டும். பின்பு நட்ட 30 நாட்கள் கழித்து 60 கிலோ தழைச்சத்து மேலுரமாக இட வேண்டும். விதை ஊன்றியவுடன் நீர் பாய்ச்சுதல் அவசியம். பின்பு 7 முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விடுதல் வேண்டும்.
நடவு செய்த 20 நாள் கழித்து பயிர் கலப்பு செய்தல் வேண்டும். பின்னர் களைகளை எடுத்து மண் அணைக்க வேண்டும். பொதுவாக வேர் அழுகல்நோயும், இலைப்புள்ளி நோயும் தாக்கும்.வேர் அழுகல் நோயைக் கட்டுப்படுத்த 10 கிராம் பைட்டலாம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். இலைப்புள்ளி நோயைக் கட்டுப்படுத்த 2 கிராம் இண்டோபில் எம் 45 மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
நடவுக்குபின் 120 நாள் கழித்து பீட்ரூட் அறுவடைக்குத் தயாராகும். அறுவடை செய்யும் போது நிலம் மிதமான ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும். பருவமழை பொழியும் இந்த குளிர்காலத்தில் முறையாக விதைநேர்த்தி செய்தால் ஒரு எக்டேர் நிலத்தில் 20 முதல் 25 டன் வரை பீட்ரூட் மகசூல் கிடைக்கும். தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து குளிர்காலமாக இருப்பதால் தரைப்பகுதியில் பீட்ரூட் சாகுபடி ஏற்றதாக உள்ளது என வேளாண்மை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
0 comments:
Post a Comment