'104' என்ற எண்ணுக்கு போன் செய்து இலவச மருத்துவ ஆலோசனைகளைப் பெறும் புதிய திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
இது தொடர்பாக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பொதுமக்கள் இனிமேல் முதலுதவி குறித்த தகவல்கள், மருத்துவ ஆலோசனைகள், தாய், சேய் நலம் பற்றிய தகவல்கள், ரத்ததானம், கண்தானம் பற்றிய தகவல்கள், தொற்று மற்றும் தொற்றா நோய்கள் பற்றிய தகவல்கள், ஊட்டச்சத்து குறித்த தகவல்கள், முதல்வரின் விரிவுபடுத்தப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள வசதிகள், குறிப்பிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் மற்றும் நிலையங்கள் பற்றிய தகவல்கள், மனநல ஆலோசனைகள், எச்.ஐ.வி., பால்வினை நோய்கள் பற்றிய தகவல்கள் மற்றும் சந்தேகங்களை '104' என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.
இதற்காக ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 24 மணிநேர தொலைபேசி '104' மருத்துவ சேவையை முதல்வர் ஜெயலலிதா கொடநாடு முகாமிலிருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறையின் முக்கியமான திட்டங்களை முன்னின்று நிறைவேற்றுவதிலும், டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தின் கீழ் பெண்கள், குழந்தைகள் மற்றும் பிரசவித்த தாய்மார்கள் பற்றிய விவரங்களைக் கணினி மூலம் தினந்தோறும் பதிவு செய்வதற்காக கிராம சுகாதார செவிலியர்களுக்கு ஏற்படும் காலவிரயத்தை குறைக்கும் வகையிலும், அவர்கள் பணி மேம்பாடு அடையும் வகையிலும் அவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படும் என்று கடந்த 2.11.2012 அன்று சட்டமன்றப் பேரவையில் முதல்வர் அறிவித்தார்.
அதன்படி, கிராம சுகாதார செவிலியர்களுக்கு ரூ.19 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் 9,397 விலையில்லா மடிக்கணினிகள் வழங்குவதன் அடையாளமாக 7 கிராம சுகாதார செவிலியர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா மடிக்கணினிகளை வழங்கினார்.
0 comments:
Post a Comment