.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, January 7, 2014

ஒரு ஊர்ல ஒரு ஊழல் கணக்கு ?






புள்ளி விவரங்கள் பொதுவாக போரடிக்கக்கூடியவை. சமயத்தில் அதுவே சுவாரசியம் கொள்ளச் செய்துவிடுவதும் உண்டு. அக்கப்போர் விவரங்களாக இருக்கும் பட்சத்தில் கேட்கவே வேண்டாம். பக்கத்து வீட்டுக்காரரின் பாஸ்புக் கீழே கிடந்தால் எடுத்து அப்படியேவா கொடுத்துவிடுவோம்? அவசரமாகத் திறந்து ஒரு புரட்டு புரட்டமாட்டேன் என்றால் நீங்கள் மகாத்மா. நானெல்லாம் பாபாத்மா.

இங்கே கவனியுங்கள். இது ஒரு புள்ளி விவரம். பக்கத்து வீட்டுக்காரரின் பாஸ்புக் போன்ற ஒன்று. இந்தியாவின் பக்கத்து வீட்டுக்காரர் சம்பந்தப்பட்டது. கடந்த வருடம் மட்டும் சீனாவில் 36,907 அரசு அதிகாரிகள் ஊழல் விவகாரங்களில் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கண்டு பிடித்திருக்கிறார்கள். இந்த முப்பத்தி ஆறாயிரத்தி சொச்சம் பிரகஸ்பதிகளும் ஈடுபட்ட ஊழல்களின் எண்ணிக்கை 27,236. அதாகப்பட்டது, சில ஊழல்களில் கூட்டணி செயல்பட்டிருக்கிறது.

ஆச்சா? மேற்படி 27,236 ஊழல்களில் 21,848 கேஸ்கள் மிகப் பெரியவை. அதாவது ஊழல் செய்த தொகை பெரிது என்று பொருள். சதவீதக் கணக்கில் சொல்வதென்றால் 80.2 சதவீத ஊழல்கள் பெரும் ஊழல்கள். இந்த எண்பது சதவீத ஊழலில் 16,510 ஊழல்கள் மிக நேரடியாக மக்கள் பணத்தைக் கொள்ளையடித்த வகையில் சேருபவை. இந்த ரக ஊழல்களில் மட்டும் 23,017 அதிகாரிகள் ஈடுபட்டிருக்கிறார்கள்.

மூச்சைப் பிடித்துக் கொள்ளுங்கள். இத்தனை ஊழல்கள் நடந்திருந்தாலும் இதில் தேர்ந்தெடுத்த 12,824 ஊழல்களைக் குறித்துத்தான் அரசுக்குப் பெரும் கவலை. இந்தப் பன்னிரண்டாயிரத்தி சொச்ச ஊழல்களின் மொத்த மதிப்பு 910.57 மில்லியன் டாலர் (சுமார் ரூ.5670 கோடி) என்பது மட்டுமல்ல காரணம். சம்மந்தப்பட்ட உயரதிகாரிகளில் சிலபேரின் பெயர்கள் வெளியே வந்தால் மானம் மரியாதையெல்லாம் மொத்தமாகப் போய்விடும் என்கிற அச்சம்.

வருஷம் முழுக்க ஊழல் நடக்கும்போது பக்கத்தில் இருந்து கண்காணித்து, நடந்து முடிந்ததும் கர்ம சிரத்தையாக லிஸ்டு போட்டார்களா என்றெல்லாம் கேட்கப்படாது. உலகெங்கும் ஊழல் நடந்தபடிதான் இருக்கிறது. சீனாவில் மட்டும் ஒரு டிபார்ட்மெண்ட் இப்படி கர்ம சிரத்தையாகக் கணக்கெடுத்துப் புள்ளிவிவரம் கொடுக்கிறது. அதுதான் வித்தியாசம்.

இத்தனை ஊழலர்களையும் என்ன செய்யலாம் என்று இனி யோசிப்பார்கள். பொலிட் பீரோ தீர்ப்புக் கொடுக்குமா அல்லது காட்ரெஜ் பீரோவில் வைத்துப் பூட்டிவிடுவார்களா என்று இப்போது சொல்வதற்கில்லை. சீனாவின் மிகப்பெரிய பிரச்சினையாக ஊழல் உருவெடுத்து வருவது கடந்த சில ஆண்டுகளாகவே பேசப்பட்டு வருகிற சங்கதி.

என்ன பிரச்சினை என்றால் ஊழல் நடக்கும் இடம் கண்டறியப்படுகிறது. இன்னார் இதில் சம்மந்தப்பட்டிருக்கிறார் என்று சுட்டிக்காட்ட முடிகிறது. ஆதாரங்கள் திரட்ட முடிகிறது. வளைத்துப் பிடிக்கவும் முடிகிறது. ஆனால் நிரூபித்தல் என்று வரும்போது பல வழக்குகள் புஸ்ஸாகிவிடுகின்றன. எனவே சீர்திருத்தங்களை நீதித் துறையில் இருந்து தொடங்கவேண்டும் என்று பலமாகக் குரலெழும்பத் தொடங்கியிருக்கிறது.

இந்த வருஷம் ஊழலை மெயின் அஜண்டாவாக எடுத்துக்கொண்டு மிகக் கடுமையான தண்டனைகள் மூலம் அச்சம் பரப்பி ஊழலைக் குறைக்க சீன அரசாங்கம் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. அவர்கள் ஊழலை ஒழிக்கட்டும். நாம் கொசு ஒழிக்க முயற்சி செய்வோம்.

0 comments:

 
back to top