.......................................................................... ....................................................................... ......................................................................
Showing posts with label குட்டிக்கதைகள். Show all posts
Showing posts with label குட்டிக்கதைகள். Show all posts

Sunday, December 29, 2013

உண்மைய சொன்னேன் ..



உண்மைய சொன்னேன் ..

1.ஆஃபீஸ்ல மேனேஜர் லீவு போட்டா நமக்கு வர்ற சந்தோஷம் இருக்கே நாமலே லீவு போட்டா கூட வராது..

2.வேலை தேடுவதை போல் கடினமான வேலை வேறேதும் இல்லை...

3.என்ன தான் நிழல் தந்தாலும் அசைந்து காற்று தராது காங்க்ரீட் சுவர்கள் ..

4.இரு அம்மாகிட்ட சொல்றேன் என்பது பீதிய கெளப்பும் வாசகம் குழந்தைகளுக்கும், அதிமுக எம்.எல்.ஏ களுக்கும்..

5.குடிக்கப்பட்டு கீழே விழுந்துகிடக்கும் பாட்டிலுக்கான மரியாதை கூட, மயங்கி கீழே கிடப்பவனுக்கு கிடைப்பதில்லை..

6.அரிசிக் கஞ்சி குடிச்சா ஏழை , ஓட்ஸ் கஞ்சி குடிச்சா பணக்காரன்...

7.அம்மா உணவகங்களால் பாதிப்பு சரவணபவனுக்கோ வஸந்தபவனுக்கோ அல்ல...ரோட்டோர கையேந்தி பவன்களுக்கு தான்...

8.வெளுத்ததெல்லாம் பாலா இருக்கணும்னு அவசியம் இல்ல பால்டாயிலாவும் இருக்கலாம் ..

கடவுளும் தூதுவர்களும் - குட்டிக்கதைகள்!




கடவுள் நேரடியாக பூமிக்கு வருவதாகச் சொல்லப்படுகிறதே. தன்னுடைய தூதுவர்களை அனுப்பமல் ஏன் அவரே நேரடியாக வரவேண்டும்?”

இது பேரரசர் அக்பர் பீர்பாலை பார்த்து கேட்ட சந்தேகம்

பீர்பால் கூறினார் "இதற்கு உடனே விடை கூற முடியாது, சற்று அவகாசம் வேண்டும்"

சில நாட்கள் கழித்து அக்பர் குடும்பத்தாரோடு கங்கையில் படகில் செல்ல
வேண்டியிருந்தது. ஆழமான பகுதியில் செல்லும் போது அக்பரின் பேரனை தூக்கி பீர்பால் கங்கை நதியில் போட்டு விட்டார்.

அக்பருக்கு ஆத்திரம் வந்தாலும், உடனே ஆற்றில் குதித்து தனது பேரனைக் காப்பாற்றினார்.

பீர்பாலை பார்த்து “முட்டாளே! ஏன் இக்காரியத்தைச் செய்தாய்?” என கோபமாகக் கேட்டார்.

அதற்கு பீர்பால், பேரரசே! உங்களை ஒரு
கேள்வி கேட்கிறேன். குழந்தை தண்ணீரில் விழுந்த பொழுது,
படைத்தளபதியை, என்னை மற்றும் வீரர்களை நோக்கி
‘குழந்தையைக் காப்பாற்று’ என்று ஆணையிடாமல் நீங்கள் குதித்தது ஏன்? என்று கேட்டார்.

அதற்கு அக்பர் "குழந்தையைக் காப்பாற்றுவது
என் கடமையா? அல்லது ஆணையிட்டுக் கொண்டிருப்பது
பெருமையா?" எனப் பதிலுக்கு கேட்டார்.

பீர்பால் அமைதியாக கூறினார், "சக்ரவர்த்தி அவர்களே! நீங்கள் என்னிடத்தில் கடவுள் தானே பக்தர்களைக் காக்க உலகிற்கு வருவது ஏன்?

வேலையாட்கள் இல்லையா? என்று கேட்டீர்கள். எத்தனை பேர் இருந்தாலும், நீங்களே குழந்தையைக் காக்க நினைத்தது போல, ஆபத்தில் இறைவன் தானே வந்து மக்களைக் காப்பான்." என்றார்.

Tuesday, December 24, 2013

புத்தியில்லாதவர்களிடம் பொறுப்பை கொடுப்பது...? குட்டிக்கதைகள்!




ஒரு தோட்டத்தில் நிறைய குரங்குகள் இருந்தன.

பல வருடங்கள் அங்கேயே இருந்ததால் தோட்டக்காரனுக்கும் நண்பர்களாயிருந்தன. தோட்டக்காரன் செய்யும் காரியங்களைப் பார்த்துப் பார்த்து குரங்குகளும் அவற்றைச் செய்து விளயாடும்.

ஒருமுறை தோட்டக்காரன் பக்கத்து ஊருக்குப் போக வேண்டியிருந்தது.

குரங்குகளை அழைத்து விஷயத்தைச் சொன்னான்.

குரங்குகளுக்கு சந்தோஷம். ஆனால், அவற்றுக்கு ஒரு பிரச்னை. எந்தச் செடிக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்றுவது என்று தெரியவில்லை.

 ''அது ஒண்ணும் பெரிய பிரச்னயில்லை. வேர் பெருசா இருந்தா நிறைய தண்ணீர் ஊத்துங்க. சின்ன வேரா இருந்துச்சுனா கொஞ்சமா, ஊத்துங்க'' என்று யோசனை சொன்னான்.

வெளியூர் போய் திரும்பி வந்து தோட்டத்தப் பார்த்த தோட்டக்காரனுக்கு அதிர்ச்சி. அத்தனை செடிகளும் பிடுங்கப்பட்டு காய்ந்து கிடந்தன. ''என்னாச்சு?'' என்றான் தோட்டக்காரன்.

 ''வேர் பெருசா இருக்கா, சின்னதா இருக்கானு பார்க்கிறக்காக, செடியெல்லாம் பிடுங்கினோம்'' என்றன குரங்குகள்.

புத்தியில்லாதவர்களிடம் பொறுப்பை கொடுப்பது, புத்தியில்லாத செயல்.

Thursday, December 19, 2013

பகுத்தறிவு....?



ஒரு மகாராஜாவின் மகன் மிகவும் மக்காக இருந்தான். அதிகாரம் உள்ள பல குடும்பங்களில் இந்த “மக்கு மகன்” பிரச்சனை எப்போதும் உண்டு. அவனுக்கு ஆட்சியை கொடுக்க மக்கள் விரும்பவில்லை. மூத்தவர் சபை எதிர்த்தது. “என்ன செய்யலாம்” என்று அரசர் கவலைப்பட்டார். வெளிநாட்டில் திறமையான கலாசாலையில்  மகனைச் சேர்த்துவிட்டால் அவர்கள் எப்படியும் அறிவாளி ஆக்கிவிடுவார்கள் என்று மகாராஜா முடிவு செய்தார். அங்கு பலதுறைகள் இருந்தன. உயர்தரமான அந்தக் கலாசாலையில் ஐந்து ஆண்டுகள் தங்கிப் படித்துவிட்டு இளவரசன் திரும்பி வந்தான்.

அவனது உடை, நடை, பாவனைகள் என எல்லாம் மாறியிருந்தன. பளிச்சென்று உடையணியப் பழகியிருந்தான். அழகாக நடப்பது, கைகுலுக்குவது, மரியாதையாய்ப் பேசுவது என்று நிறைய மாற்றங்கள். மகாராஜாவுக்கு ஆனந்தம் தாங்கவில்வைல. முதியோர் சபையில் மகனை நிறுத்தி அவர்கள் அனுமதியுடன் அறியாவளியாக்கப்பட்ட மகனை அரசனாக்க நினைத்தார். பலரும் அவனை அறிவாளி என்றே ஒப்புக் கொண்டனர். பல்கலைக் கழகத்தின் சாதனையைய் பாராட்டினர்.

ஒரு வயதானவர் மட்டும் இளவரசனைச் சோதிக்க நினைத்தார். “என்ன படித்தாய்?” என்றார். “நிறைய, நிறைய… சோதிடம் கூட முறையாக கற்றுத் தந்தார்கள். நீங்கள் சோதிடத்தில் கேள்வி கேட்டால் கூடச்  சொல்வேன்” என்றான். வயதானவர் தமது மோதிரத்தை உள்ளங்கையில் வைத்து மூடிக் கொண்டு, “இது என்ன?” என்றார். இளவரசன் யோசித்தான். ஒரு காகிதத்தை எடுத்து கணக்குப் போட்டான். “உங்கள் கையில் உள்ளது வட்டமானது. நடுவில் ஓட்டையானது. ஒளியுடையது” என்று விடை சொன்னான். வயதானவருக்கு உள்ளூர சந்தோஷம். இருந்தாலும், “அடையாளங்களைச் சொல்கிறாயே ஒழிய அது இன்னதென்று சொல்லக்கூடாதா?” என்றார். “அது எங்கள் பாடத்திட்டத்தில் இல்லை” என்றார் இளவரசன். “யூகித்துச் சொல்” என்றார் வயதானவர். உடனே இளவரசன் “பாடத் திட்டத்தில் இல்லையென்றாலும் என் பொது அறிவை வைத்துச் சொல்லி விடுவேன்.. அது ஒரு வண்டிச் சக்கரம்” என்றான்.

முட்டாள். சர்வகலாசாலை சொல்லிக் கொடுத்ததைச் சரியாகச் சொல்லிவிட்டான். ஆனால் வண்டிச்சக்கரத்தை எவரும் உள்ளங்கையில் ஒளித்து வைக்க முடியாது என்ற சின்ன விஷயம்கூட அந்த மடையனுக்குத் தெரிந்திருக்கவில்லை.

முட்டாளையும் படிப்பாளியாக்க முடியும். ஆனால் அறிவாளியாக்க முடியாது.

“You can educate fools; but you cannot make them wish”.

நம்மூர் பழமொழி – ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.

திருக்குறள் கூறுவது:

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்

கடையரே கல்லா தவர்

குறள்விளக்கம்: அறிவுடையார் முன் அறிவில்லாதவர் போல் தாழ்ந்து நின்று, மேலும் கற்க கொள்பவர்களின் ஆர்வத்தைக் கற்றக் கொள்ளாதவர்கள் கடைநிலை மாந்தராகக் கருதப்படுவார்கள்.

 எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவ மென்ப திழுக்கு

குறள்விளக்கம்: நன்றாக சிந்தித்த பிறகே செயலில் இறங்க வேண்டும்; இறங்கிய பிறகு சிந்திக்கலாம் என்பது தவறு.

சமயோசிதத்தின் அவசியம் - குட்டிக்கதைகள்!




திருடனும் தெனாலி ராமனும்..


தெனாலி ராமன் இரவில்படுக்க போகும் முன் திருடன் ஒருவன் தோட்டத்தில் புதரில் மறைந்துருப்பதை பார்த்துவிடுகிறான்...

திருடன் என்று கத்தினால் நிச்சயம் மற்றவர்கள் பிடிப்பதற்குள் ஒடிவிடுவான்...
தனிப்பட்ட முறையில் தெனாலிராமனால் முடியாது...

மனைவியை கூப்பிட்டு வாய்கொப்பளிக்க தண்ணீர் கேட்கிறான்..

சொம்பு சொம்பாக வந்து கொடுக்கிறாள்.

புதரில் மறைந்து இருக்கும் திருடன் மீது கொப்பளிக்கிறான்..

 ''என்னது..எவ்வளவு தண்ணீர் வந்து கொடுப்பது நிறுத்தமாட்டியா.''.கத்துகிறாள் மனைவி.

 ''என்னது எதிர்த்தா பேசுகிறாய்.''அவள் மேல் துப்புகிறான்

''என்னது கேட்பதுற்க்கு ஆளில்லையா..''அலற துவங்குகிறாள் மனைவி..

தெனாலி ராமன் விட்டீல் பிரசினை என்று பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் வருகிறார்கள்..

 ''என்ன தெனாலிராமா இது '' கேட்கிறார்க்ள..

 ''பாருங்கள்..எவ்வளவு நேரமாக இந்த ஆளின்மீது துப்ப்புகிறேன்..ஒன்றுமே சொல்லவில்லை..ஒரு தடவை துப்பியதும் ஊரை கூட்டி விட்டாள் ''எனகிறான்தெனாலிராமன்...

திருடன் பிடிபடுகிறான்....

சமயோசிதத்தின் அவசியத்தை உணர்த்துகிறது இந்த கதை.

இந்த உலகம் ஒரு கண்ணாடி போன்றது...குட்டிக்கதைகள்!



தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது.

அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிரிச்சி ஏனெனில் சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன.

சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது, அந்த நூறு நாய்களும் பதிலுக்கு "உர்ர்.. உர்ர்.." என்றது.

அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது இருந்தும் கோபம் தாளாமல் "லொள் லொள்" என குறைக்க ஆரம்பித்தது.

எல்லா நாய்களும் சேர்ந்து குறைத்து. அந்த நாய் குறைப்பதை நிறுத்தியவுடன் எல்லா நாய்களும் குறைப்பதை நிறுத்திகொண்டது.

மறுபடியும் கோபமும் பயமும் அதிகமானது.

உடனே வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குறைக்க ஆரம்பித்தது பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன.

இறுதியில் அந்த நாய் பயத்தில் இறந்தே போய் விட்டது.

அந்த நாய் கொஞ்சம் கவனித்து இருந்தால் அதற்க்கு புரிந்திருக்கும்.
1. தான் நுழைந்தது நூற்றுக் கணக்கான கண்ணாடிகளை கொண்ட அறை என்று
2. தன்னை சுற்றி இருந்தது தனது பிம்பங்கள் என்று
3. குறைத்து சுற்றி இருந்த நாய்கள் அல்ல தன் எதிரொலி என்று

 நீதி:


இந்த உலகம் ஒரு கண்ணாடி போன்றது.

நாம் கோபப்பட்டால் பதிலுக்கு கோபம் கிடைக்கும். அன்பு செலுத்தினால் அன்பு கிடைக்கும்.

Wednesday, December 18, 2013

சிறுமியின் பொறுமையும் நற்பண்பும்!



ஒரு ஊரில் தொடர்ந்து சில ஆண்டுகளாக மழை பெய்யவே இல்லை.அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது.மக்கள் பசியால் வாடினார்கள்.

நல்ல உள்ளம் படைத்த செல்வர் ஒருவரிடம் அந்த ஊர் மக்கள் ஒன்று கூடி வந்தனர்.ஐயா! பெரியவர்களாகிய நாங்கள் எப்படியோ பசியை பொருத்து கொள்கிறோம்.சிறுவர்கள்,குழந்தைகள் என்ன செய்வார்கள். நீங்கள்தான் எதாவது உதவி புரிய வேண்டும் என வேண்டினார்கள்.

இரக்க உள்ளம் படைத்த அந்த பெரியவர் “இந்த ஊரில் குழந்தைகள் யாரும் பசியால் வாட வேண்டாம்.ஆளுக்கொரு ரொட்டி கிடைக்குமாறு செய்கிறேன்.என் வீட்டிற்கு வந்து எடுத்துச்செல்லுங்கள் என்றார்.”


மாளிகை திரும்பிய பெரியவர் தன் வேலைக்காரனை அழைத்தார்.”இந்த ஊரில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையை கணக்கெடுத்துக்கொள்.ஆளுக்கொரு ரொட்டி கிடைக்க வேண்டும்.கூடவும் கூடாது.குறையவும் கூடாது” என்று கட்டளையிட்டார்.

வேலைக்காரனும் அப்ப்டியே ஆகட்டும் ஐயா என்று கூறினான்.
வேலைக்காரன் அனைவருக்கும் ரொட்டி வாங்கிக்கொண்டு வந்து மாளிகை வாசலில் குழந்தைகளின் வரவுக்காக காத்திருந்தான்.

சிறிது நேரத்தில் ஊரில் உள்ள குழந்தைகள் அனைவரும் வேலைக்காரனை சூழ்ந்து கொண்டு பெரிய ரொட்டியை எடுப்பதில் குழந்தைகள் ஒவ்வொருவரும் போட்டி போட்டனர்.ஒரே ஒரு சிறுமி மட்டும் அமைதியாக இருந்தாள்.எல்லோரும் எடுத்து சென்றது போக மிஞ்சி இருந்த ஒரு சிறிய துண்டை எடுத்தாள்.அங்கிருந்து மகிழ்ச்சியுடன் சென்றாள்.

இப்படியே நான்கு நாட்கள் நிகழ்ந்தது.எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருந்தார் பெரியவர்.ஐந்தாம் நாளும் அப்படியே நிகழ்ந்தது.எஞ்சியிருந்த சிறிய ரொட்டியை எடுத்துக்கொண்டு புறப்பட்டாள் அந்த சிறுமி.

தன் வீட்டிற்கு வந்த அந்த சிறுமி.அந்த ரொட்டியை தன் தாய்க்கு கொடுத்தாள்.ரொட்டியை பிய்த்தாள் தாய் அதில் இருந்து ஒரு தங்கக்காசு கீழே விழுந்தது.

அந்த தங்கக்காசை எடுத்துக்கொண்டு சிறுமி பெரியவரின் வீட்டிற்கு ஓடி வந்தாள்.”ஐயா இது உங்கள் தங்கக்காசு ரொட்டிக்குள் இருந்தது பெற்றுக்கொள்ளுங்கள்” என்றாள் அந்த சிறுமி.

‘சிறுமியே உன் பொறுமைக்கும் நற்பண்பிற்கும் நான் அளித்த பரிசே இந்த தங்கக்காசு,மகிழ்ச்சியுடன் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு செல்!’ என்றார் பெரியவர்.

துள்ளிக்குதித்தபடி ஓடிவந்த அவள் நடந்ததை அப்படியே தன் தாயிடம் சொல்லி குதூகலித்தாள்!!!

வெற்றி ....?



“நாம் அறிவாளியாவது என்பது வேறு. பிறரை முட்டாளாக்குவது என்பது வேறு”. இரண்டும் ஒன்றாகி விட முடியுமா? நீங்கள் எத்தனைபேரை வேண்டுமானாலும் சுலபமாக முட்டாளாக்கிவிட முடியும். ஆனால் நீங்கள் அறிவாளி ஆவது சுலபமான காரியம் இல்லை. முயற்சி, திறமை இப்படி எவ்வளவோ அதற்குத் தேவை.

இதற்கு சொல்வேந்தர். சுகிசிவம் கூறும் உதாரணம். பள்ளிக்கூடத்தில் படிக்கும் பத்து வயதுப் பெண் தனது முப்பத்துஐந்து வயது அப்பாவிடம் வந்து நின்றாள். விழிகளை அகல விரித்தபடி அப்பாவிடம் ஒரு புதிர் போட்டாள். “அப்பா.. ஒரு குட்டிக் குரங்கு… தனியா மரத்துல உட்கார்ந்து இருக்கு… அந்த மரத்துக்குக் கீழே திடீர்னு வெள்ளம் வந்துடுச்சு… காட்டாத்து வெள்ளம்… திரும்பின பக்கம் எல்லாம் ஓடுது… அந்தக் குட்டிக் குரங்குக்கு நீந்தத் தெரியாது.. பயங்கர வெள்ளம் கீழே… அது எப்படித் தப்பிக்கும் சொல்லுங்கள்?” என்று அப்பாவை அசர வைத்தாள் மகள்.

அரைமணி நேரம் மாறி  மாறி யோசித்த அப்பா முடிவில் தன் தோல்வியை ஒப்புக் கொண்டார். “அந்தக் குட்டிக் குரங்கு எப்படித் தப்பிக்கும் … தெரியலை, நீயே சொல்லு” என்றார் மகளிடம். “ஆம்… இவ்வளவு பெரிய குரங்கு உனக்கே தெரியலை… அந்தக் குட்டிக் குரங்குக்கு மட்டும் எப்படி தெரியும்?” என்று கையை அப்பா முகத்துக்கு நேரே ஆட்டிவிட்டுச் சிட்டாய்ப் பறந்தாள்.

அந்தச் சின்னப் பெண். அவளிடத்திலும் கேள்விக்கு விடையில்லை; ஆனால் அப்பாவைக் குரங்கு என்று கேலி செய்ய, முட்டாளாக்க அரை மணி நேரம் செலவிட்டாள் அந்தச் சின்னப் பெண். இன்றைக்கு இந்தச் சின்னத்தனம் தான் எங்கும் நடக்கிறது.

பிறரை வாய் மூடச் செய்வது, செயலிழக்கச் செய்வது, தோற்றுப் போகச் செய்வது, ஆளவிடாமல் தடுப்பது, முன்னேற முடியாதபடி முதுகை முறிப்பது… இப்படிப் பிறரைத் தோற்கடிப்பதைத் தம்முடைய வெற்றியாகக் கருதுகிறோம். இந்தத் தவறுதலான எண்ணத்திலிருந்து தயவு செய்து வெளியே வரவேண்டும். பிறரைத் தோற்கடிப்பது லட்சியமல்ல… நமது வெற்றியே நமது குறிக்கோள் என்கிற தெளிவு இருக்க வேண்டும்.

நாம் வெற்றி பெற்றால் நமக்கு எதிரிகள் இருக்க மாட்டார்கள். பிறரைத் தோற்கடித்தால் நாம் ஒரு நிரந்தர எதிரியை ஏற்படுத்திக் கொள்கிறோம். நாம் யாரைத் தோற்கடித்தாலும் அவர் நம்மைத் தோற்கடிக்கவே தமது எஞ்சிய காலம் முழுவதையும் செலவிடுகிறார்.

“நாம் வெற்றி பெறுவது வேறு, பிறரைத் தோற்கடிப்பது வேறு, பிறரைத் தோற்கடிப்பதே வெற்றி என்று தவறுதலாக அர்த்தம் கொள்ள வேண்டாம்”.

Tuesday, December 17, 2013

அறிவாளி சிறுவன்...!




அந்த சலூன் கடையை நோக்கி அந்த சிறுவன் வருவதை பார்த்த அந்த கடைக்காரர், தன்னிடம் முடி திருத்திக் கொள்ள வந்தவரிடம் "சார் இப்ப இங்க வர்ற பையன சரியான முட்டாள்னு நீருபிக்கிறேன் பாருங்கன்னு சொல்லிட்டு,


ஒரு கையில் நூறு ரூபாயும் இன்னோரு கையில் இரண்டு ஐந்து ரூபாய் நானயங்களயும் கான்பித்து எது வேனுமோ எடுத்துக்கோ என்றார்.


சிறுவன் இரண்டு ஐந்து ரூபாய்யை மட்டும் எடுத்து சென்றுவிட்டான்.


கடைக்காரர் தன் கஸ்டமரிடம் பெருமையாக சொன்னார் டெய்லி இப்படி தான் சார் ஏமாந்துற்றான்.
முடி வெட்டி விட்டு வெளியே வந்தவர் அந்த சிறுவன் ஐஸ்கிரீம் கடையிலிருந்து வெளியே வருவதை பார்த்தார்.


அவனை கூப்பிட்டு ஏம்ப்பா இந்த வயசுல கூட உனக்கு நூறுக்கும், ஐஞ்சு ரூபாய்க்கும் வித்தியாசம் தெரியாதா என கேட்டார்.


சிறுவன் ஐஸ் கிரீமை நக்கிக்கொன்டே சொன்னான் அந்த நூறு ரூபாய எடுத்திட்டா அன்னையோட இந்த விளையாட்டு முடிஞ்சிறும் அங்கிள்!!


கடைகாரனை பாவமாய் பார்த்து சிரித்துவிட்டு போனார் கஸ்டமர்,

இதுதான் உண்மையான நட்பு..!




கார்கில் போரின் போது இரண்டு நண்பர்கள் களத்தில் இருந்தனர்.எதிரிகள் சுற்றி வளைத்து சுடும்போது ஒருவன் மட்டும் குண்டடி பட்டு விழுந்து கிடந்தான்.

நான் என் நண்பனை எப்படியாவது தூக்கி வந்து விடுகிறேன் எனக்கு உத்தரவு கொடுங்கள் கமேண்டர் என்றான்.மறைந்து இருந்து தாக்குவது தான் சரியான வழி ,நீ அங்கு போவதால் உன் உயிர்க்கு தான் ஆபத்து என்றார் கமேண்டர்.

நீ போவது என்றால் போ, ஆனால் நீ போவதால் எதுவும் நடந்துவிட போவதில்லை என்று கமெண்டர் சொன்னார்.அதையும் மீறி தன் நண்பனை காப்பாற்ற ஓடினான், அவனை தோளில் தூக்கி கொண்டு வரும்போது எதிரிகள் சுட்டனர். இவனுக்கும் அடிப்பட்டது, அதையும் மீறி அவனை தூக்கி கொண்டு வந்தான்.

கமேண்டர் அவனை பரிசோதித்து பார்த்தார் அவன் நண்பன் இறந்து போய் இருந்தான்.நான் அப்போழுதே சொன்னேன் நீ அவனை காப்பாற்றப்போவதால் எந்த உபயோகமும் இல்லை ,இப்போது பார் நீயும் அடிப்பட்டு கிடக்கிறாய் என்றார் கமேண்டர்.

நான் போனது தான் சார் சரி என்றான்.என்ன சொல்கிறாய் உன் நண்பன் இறந்து கிடந்தான் நீ சொல்வது எப்படி சரியாகும் என்று கேட்டார் கமேண்டர்.

நான் அங்கு போகும்போது என் நண்பன் உயிருடன் தான் சார் இருந்தான்.”என்னை காப்பாற்ற நீ வருவாய் என்று எனக்கு தெரியும் நண்பா” என்று சொல்லிவிட்டு தான் சார் இறந்தான் .அந்த ஒரு வார்த்தை எனக்கு போதும் சார் இந்த காயம் எல்லாம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை என்றான்.

இதுதான் உண்மையான நட்பு.

Monday, December 16, 2013

முள்ளம் பன்றியும் ஓநாய்யும்! - குட்டிக்கதைகள்!



தன் முன்னாள் வந்து நின்ற ஓநாயை கோபமாக பார்த்து தன் முட்களைச் சிலிர்த்து நின்றது முள்ளம் பன்றி. ஓநாய் உடனே பதற்றத்துடன், பயப்படாதே முள்ளம் பன்றி, உன் அழகை ரசிக்கத்தான் வந்திருக்கேன் என்றது. என்னது? நான் அழகா? ஆமாம். நீ செம அழகு. ஆனா உன் உடம்புல இருக்கிற முல்லுதான் உன் அழகை கெடுக்குது, என்றது ஓநாய்.



ஆனா, அதுதானே என்னைப் பாதுகாக்குது என்றது முள்ளம்பன்றி, உண்மைதான். ஆனா, அதை எடுத்துட்டினா, நீ இன்னும் அழகாயிடுவே, யாருக்கும் உன்னை கொல்லனும்னு மனசே வராது. ஓநாயின் பசப்பு வார்த்தையில் மயங்கிய முள்ளம்பன்றி, தன் முட்களை எல்லாம் மழித்துவிட்டு ஓநாய் முன் வந்து நின்றது.



இப்போ நான் இன்னும் ஆழகாயிருக்கேனா? என்று கேட்டது. அழகாய் மட்டும் இல்லை, அடிச்சு சாப்பிடுவதற்கு வசதியாகவும் இருக்கு, என்றபடி முள்ளம்பன்றி மேலே பாய்ந்தது ஓநாய்.



நீதி:              "வீண் புகழ்ச்சிக்கு மயங்காதே".

முக்கியமானது..



வகுப்பறைக்குள் நுழைகிறார் நிர்வாகப் பாடங்கள் எடுக்க வந்த ஒரு பேராசிரியர்.

''மாணவர்களே, இன்று நாம் செய்முறை விளக்கத்துட‎ன் ஒரு பாடத்தைக் கற்போம்.''

வாய்ப்புறம் அகலமாய் இருந்த, ஒளி ஊடுருவக் கூடிய ஒரு பெரிய பிளாஸ்டிக் ஜாடியை எடுத்து வரச் செய்தார் பேராசிரியர். ஜாடி ஒரு மேஜையி‎ன் மீது வைக்கப்படுகிறது. ஏழெட்டு பெரிய கற்களை எடுத்து வரச் செய்த பேராசிரியர் அவற்றையும் மேஜையி‎ன் மீது வைக்கிறார். பி‎ன், கற்களை ஒவ்வொ‎‎ன்றாக எடுத்து ஜாடிக்குள் போட ஆரம்பிக்கிறார்.

ஜாடி நிறைந்தவுட‎ன் மாணவர்களைப் பார்த்துக் கேட்கிறார், ''ஜாடி நிறைந்து விட்டதா?''

அனைத்து மாணவர்களும் கோரஸாக, ''யெஸ்.. ஸார்!''

சலனமில்லாமல் ''நல்லது'' எ‎ன்ற பேராசிரியர், பி‎ன் சிறு ஜல்லிக் கற்களைக் கொண்டு வரச் செய்தார். அவற்றை ஒவ்வொ‎ன்றாக எடுத்து ஜாடியினுள் போட ஆரம்பித்தார். பெரிய கற்களி‎ன் இடைவெளிகளில் ஜல்லிக்கற்கள் நுழைந்தன. ஜாடியைக் குலுக்கி விட, ஜல்லிகள் கிடைத்த இடைவெளிகளை ஆக்கிரமிப்பு செய்தன.

ஜாடி நிறைந்தவுட‎ன் மாணவர்களைப் பார்த்துக் கேட்கிறார். ''ஜாடி நிறைந்து விட்டதா?''

வகுப்பறையில் நிசப்தம். ஒரு மாணவர் மட்டும் ''அப்படி நிச்சயமாக சொல்லிவிட முடியாது'' எ‎ன்றார்.

மெல்லிய பு‎ன்னகையுடன் ''நல்லது'' எ‎ன்ற பேராசிரியர், பி‎ன் ஒரு வாளி நிறைய ஆற்று மணலைக் கொண்டு வரச் செய்தார். மணலை கொஞ்சம் கொஞ்சமாக அள்ளிப் போடப் போட, கிடைத்த இடைவெளிகளில் மணல் ஆக்கிரமிப்பு செய்ய ஆரம்பித்தது. ஜாடியைக் குலுக்கி விட, மேலும் மணலை அள்ளிப் போட முடிந்தது.

ஜாடி நிறைந்தவுட‎ன் மாணவர்களைப் பார்த்துக் கேட்கிறார். ''ஜாடி நிறைந்து விட்டதா?''

இப்பொழுது, வகுப்பறை முழுவதும் கோரஸாக, ''நிச்சயமாக ‏இல்லை!''

சிரித்த பேராசிரியர் ''நல்லது'' எ‎ன்றவாறே, ஒரு வாளி நிறைய தண்ணீரைக் கொண்டு வரச் செய்தார். தண்ணீரை ஊற்ற ஊற்ற மணலைக் கரைத்துக் கொண்டு தண்ணீர் நிறைந்தது ஜாடியினுள்.

ஜாடி நிறைந்தவுட‎ன் மாணவர்களைப் பார்த்துச் பேச ஆரம்பிக்கிறார் பேராசிரியர். ''ஜாடி நிறைந்து விட்டதா எ‎ன்று ‏இப்போது நான் கேட்கப் போவதில்லை. ‏இதிலிருந்து நீங்கள் கற்றுக் கொண்ட பாடம் எ‎ன்ன?''

ஒரு மாணவர் எழுந்தார். ''நமது நேர நிர்வாகம் எ‎ன்பது குறிப்பிட்ட வேலைகளை அதற்குள் செய்கிறோம் எ‎ன்பதல்ல; எவ்வளவு வேலை செய்து கொண்டிருந்தாலும் குறிப்பிட்ட கால அளவுக்குள் மேலும் சில சிறிய வேலைகளையும் முடிக்க முடியும்''

''இல்லை.. அதுவல்ல பாடம்'' பேராசிரியர் பதிலுரைத்தார்:

''பெரிய கற்களை நீங்கள் முதலில் ஜாடிக்குள் போடாவிடில், பி‎ன்னர் எப்போதுமே அவற்றை நீங்கள் போட முடியாது; ஜல்லிகளும் மணற்துகள்களும் அடைத்துக் கொண்டிருக்கும். வாழ்க்கையை ஒரு ஜாடியாக கற்பனை செய்து கொள்ளுங்கள். பெரிய கற்கள் எ‎ன்பவை இ‏ங்கே உங்கள் அ‎ன்பிற்குரியவர்களை, உங்கள் த‎ன்னம்பிக்கையை, உங்கள் கல்வியை, உங்கள் எதிர்காலக் கனவுகளை, குறிக்கோள்களைக் குறிக்கி‎ன்றன. இவற்றை அந்தந்தக் கால நேரங்களில் சரியாக உள்ளிடாவிட்டால் பி‎ன்னர் அவற்றை உள்ளிட முடியாது. விளைவு?''

''ஆகவே, ‏இன்று வீட்டுக்குச் செல்லுங்கள். ந‎ன்றாகத் தூங்குங்கள். காலையில் எழுந்து உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள், 'பெரிய கற்கள் என்பவை எ‎ன் வாழ்க்கையில் யாவை' எ‎ன்று''

Sunday, December 15, 2013

கஷ்டத்தை தூக்கி போடு - குட்டிக்கதைகள்!



ஒரு நாள் காலை ஒரு சிறிய எறும்பு ஒரு இறகை தூக்க முடியாமல் தூக்கி செல்வதை பார்த்தேன்.அது என்னதான் செய்கிறது என்று அதையே பார்த்து கொண்டு இருந்தேன்.


அந்த எறும்பு போகின்ற வழியில் நிறைய தடைகள் இருந்தன அது சில நேரம் தூக்கி கொண்டும் சில நேரம் அந்த இறகை இழுத்து கொண்டும் சென்றது.ஒரு இடம் வந்ததும் சிறிய இடைவெளி ஒன்று இருந்தது,அது தன் முன் காலால் தூக்கி வைத்து பார்த்தது பின்பு பின் காலால் நீட்டி எக்கி பார்த்தது அந்த எறும்பால் முடியவில்லை.


இறகை வைத்து விட்டு சுற்றி சுற்றி வந்தது.பிறகு அந்த இறகை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தி இடைவெளி மீது பாலம் மாதிரி வைத்து விட்டு இந்த வழியாக ஏறி அந்த வழியாக இறங்கி விட்டது.மீண்டும் அந்த இறகை தூக்கி கொண்டு நடக்க ஆரம்பித்து விட்டது.


நான் மிகவும் ஆச்சரியப்பட்டு போனேன்.ஒரு சிறிய எறும்பு எவ்வளவு லாவகமாக இந்த பக்கம் இருந்து அந்த பக்கம் சென்றது, ஆனால் ஆறறிவு படைத்த நாம் சிறிய இடர்வந்தாலும் துவண்டு போகிறோம்.


அந்த எறும்பு கடைசியாக அதன் வீட்டை அடைந்தது.அந்த எறும்பின் வீட்டு நுழைவுவாயில் ஒரு சிறிய ஓட்டை மட்டுமே இருந்தது.அது அந்த இறகை உள்ளே எடுத்து செல்ல எவ்வளவோ முயற்ச்சி செய்து பார்த்தது ஆனால் எறும்பால் முடியவில்லை.ஒரு கட்டத்தில் அது அந்த இறகை தூக்கி போட்டுவிட்டு சென்றுவிட்டது.


எறும்பு அந்த இறகை அங்கு இருந்து எடுத்து வரும்போது அது சுமையாக தெரியவில்லை எப்போது அது தனக்கு பயன்படாது என்று தெரிந்ததோ அப்போதே அதை தூக்கி போட்டுவிட்டு தன் வேலையை பார்க்க தொடங்கிவிட்டது.


நம்ம வாழ்க்கையும் இப்படித்தான்.பணம் சம்பாதிக்க கஷ்டப்படுறோம்,வேலை செய்ய கஷ்டப்படுறோம்,குடும்ப பாரத்தை சுமக்க கஷ்டப்படுறோம்.அந்த இறகு மாதிரி தான் நம்ம கஷ்டமும்.கஷ்டத்தை தூக்கி போட்டுட்டு நாம பாட்டுக்கு நம்ம வேலைய பார்த்துகிட்டே போகணும்.

Saturday, December 14, 2013

அடுத்தவர் அறிவையும் பயன்படுத்துங்கள்!



ஒரு விஞ்ஞானியால் தன் வாழ்நாளில் எத்தனை பேரறிவுடன் இருந்தாலும் எத்தனை கண்டுபிடிப்புகளைச் செய்ய முடியும்? தொடர்ந்து படிப்பதற்கு முன் கண்களை மூடிக் கொண்டு சிந்தித்து ஒரு பதிலை எண்ணி வைத்துக் கொள்ளுங்கள்.

எவ்வளவு நினைத்தீர்கள்? ஐந்து, பத்து, ஐம்பது? விஞ்ஞானத்தைப் பற்றியும் ஆராய்ச்சியைப் பற்றியும் சிறிதாவது தெரிந்து வைத்திருப்பவர்கள் அதற்கும் மேலே செல்வது கடினம். ஆனால் ஒரே ஒரு விஞ்ஞானி 1093 கண்டுபிடிப்புகளைச் செய்து அத்தனைக்கும் patents தன் பெயரில் வைத்திருந்தார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? அவர் தான் தாமஸ் ஆல்வா எடிசன். அத்தனைக்கும் அவர் கண்டுபிடிப்புகள் சாதாரணமானவை அல்ல. மின்சார பல்பு முதல் இன்று நாம் கண்டு மகிழும் திரைப்படம் (அவர் அதை Kinetoscope என்று அழைத்தார்) வரை பல மிகப்பெரிய கண்டுபிடிப்புகளும் அதில் அடங்கும்.

அவர் எப்படி அதை சாதித்தார் தெரியுமா? தன்னுடைய அறிவு, அனுபவம் மட்டுமல்லாமல் அடுத்தவர் அறிவு மற்றும் அனுபவத்தையும் முழுமையாகப் பயன்படுத்தினார். ஒரு பொருள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடும் முன் அப்பொருள் பற்றி அதுவரை வெளியான எல்லா நூல்களையும் ஒன்று கூட பாக்கி விடாமல் படித்து விடுவார். மற்றவர்கள் கண்டுபிடித்து நின்ற இடத்திலிருந்து தன் ஆராய்ச்சியைத் தொடங்கினார். எனவே அவர்கள் செய்திருந்த தவறுகளைச் செய்யாமல் தன்னைக் காத்துக் கொள்ள முடிந்தது. அவர்களது பல வருட அனுபவங்களின் பயனை அவர் எடுத்துக் கொண்டதால் தான் இத்தனை மகத்தான சாதனைகளை தன் வாழ்நாளிலேயே அவரால் செய்ய முடிந்தது.

இப்படி அடுத்தவர் அனுபங்களைப் பயன்படுத்துவது விஞ்ஞான ஆராய்ச்சிக்கு மட்டுமல்ல, எல்லாவற்றிற்கும் பொருந்தும். அடுத்தவர் அனுபவங்களைப் பயன்படுத்திக் கொண்டால் ஒழிய நாம் அந்த அறிவைப் பெற நம் வாழ்நாள் முழுவதும் செலவழிக்க வேண்டி வரும். அப்படிச் செய்தால் கற்ற அறிவைப் பயன்படுத்த மீதி நாட்கள் நமக்குப் போதாமல் போய் விடும்.

ஒரு வேலையைச் சிறப்பாக செய்து கொண்டிருப்பவன் அந்தத் திறமையைப் பெற்றதெப்படி அதைப் பயன்படுத்துவது எப்படி என்று அற்புதமாக உங்களுக்குத் தெரிவிக்கக்கூடும், உங்களுக்கு கற்றுக் கொள்ளும் ஆர்வமிருந்தால். ஒரு மாபெரும் வெற்றி நிலையை எட்டியவனைக் கூர்ந்து கவனித்தால், வெற்றியடைய வைத்த அம்சங்களை ஆர்வத்துடன் ஆராய முடிந்தால் வெற்றிக்கான வழிகளை நீங்கள் சுலபமாக நீங்கள் கற்க முடியும். அந்த அம்சங்களை உங்களிடத்தில் கொண்டு வர முடிந்தால் வெற்றி நிச்சயமே. அதோடு நின்று விடாதீர்கள். அதைத் தொடக்கமாக வைத்துக் கொண்டு மேலும் அதிக வெற்றிகளைக் குவிக்கப் புது வழிகள் உள்ளனவா என்று யோசித்து செயல்பட்டு மேலும் அதிகமாய் சாதிக்கப் பாருங்கள்.

வெற்றி அடைந்தவர்களிடமிருந்து மட்டுமல்ல தோல்வி அடைந்தவர்களிடமிருந்து கூட எத்தனையோ கற்க முடியும். தோல்வியடைய வைத்த குணாதிசயங்களை ஆராய்ந்து உணர்ந்தால் அதுவும் கூட எத்தனையோ உங்களுக்கு சொல்லித்தரும். நீங்கள் அந்த குணாதிசயங்களை உங்கள் வாழ்க்கையில் இருந்து நீக்கினால் தோல்வியையும் உங்கள் வாழ்க்கையில் இருந்து நீக்க முடியும்.

இப்படி நாம் கூர்ந்து நம்மைச் சுற்றிலும் கவனித்தால் எப்படியெல்லாம் இருக்க வேண்டும், எப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்று தங்கள் வாழ்க்கையையே உங்களுக்கு உதாரணமாகக் காட்டும் பல மனிதர்களைப் பார்க்கலாம். உண்மையான புத்திசாலிகள் அதிலிருந்தே நிறைய கற்றுக் கொள்கிறார்கள். எத்தனையோ தவறுகளையும், முட்டாள்தனங்களையும் செய்யாமல் தங்களைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள்.

ஆனால் அவனை என்ன கேட்பது, இவனை என்ன கவனிப்பது என்று அலட்சியமாய் இருப்பவர்கள் எத்தனையோ படிப்பினைகளை இழக்கிறார்கள். அவர்கள் தலையெழுத்து, தானாகப் பட்டுத் தான் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டியதாகி விடுகிறது. அந்தத் தலையெழுத்தை நீங்கள் தவிர்க்கலாமே.

வைக்கோல்போராய் இருக்காதீர்கள்!

வைக்கோல்போர் பற்றி எரிவதைப் பார்த்திருக்கிறீர்களா? கொழுந்து விட்டு எரியும் அந்தப் பெரும்தீ அந்த நேரத்தில் மிகவும் பிரகாசமாய் தெரியும். தகதவென்று பிரம்மாண்டமாய் எரியும் அந்த செந்தழல் சிறிது நேரம் கழித்துப் பார்த்தால் அணைந்து போயிருக்கும். பின் ஒளியும் இல்லை. வெப்பமும் இல்லை.

பலருடைய ஆர்வமும் அந்த வைக்கோல்போரைப் போல் தான். திடீரென்று தோன்றி ஜொலித்து பிரம்மாண்டமாய் தெரிந்து அவர்களை சாகசம் புரிய வைக்கும். அந்த சமயத்தில் அவர்களைப் பார்ப்பவர்களுக்கு இவர்கள் இந்தத் துறையில் மிகப் பெரிய ஆளாக, வெற்றியாளராக வருவார் என்று தோன்றுமளவு அவர்களது உற்சாகமும் திறமையும் இருப்பதுண்டு. நானும் அப்படிச் சிலரைப் பார்த்திருக்கிறேன். அப்படிப் பெரிதாக அவர்களிடம் எதிர்பார்திருக்கிறேன். ஆனால் சில காலம் கழித்து அவர்களைச் சந்தித்த போது அந்த சுவட்டைக் கூட என்னால் பார்க்க முடிந்ததில்லை.

அவர்களிடம் அதை நினைவுபடுத்திக் கேட்டால் "அதெல்லாம் ஒரு காலம்" என்பது போன்ற பதில் கிடைக்கும். சில சமயங்களில் வேறொரு துறையில் இதே ஆர்வத்துடன் அவர்கள் எதையோ செய்து கொண்டிருப்பார்கள். இன்னொரு வைக்கோல்போர்.... எல்லாம் சொற்பகாலப் பிரகாசமே.

அது போன்ற நபர்கள் எல்லாம் சராசரிக்கும் மேற்பட்ட அறிவு கூர்மையுடையவர்களே. சில சமயங்களில் அசாதாரண திறமைசாலிகளே. அவர்களிடம் உள்ள மிகப்பெரிய குறை திடீரென்று சலித்துப் போவதே. கைதட்டல்களும், பாராட்டும் குறைய ஆரம்பிக்கும் போது அவர்கள் ஈடுபாடும், முயற்சியும் கூடக் குறைந்து போகிறது. அவர்களுக்கு அதில் சலிப்பேற்பட்டு விடுகிறது. ஒரு த்ரில் இருப்பதில்லை. ஆரம்பித்தில் இருந்த 'inspiration' பிறகு இருப்பதில்லை. மனம் இயல்பாகவே வேறொன்றை நாட ஆரம்பிக்கிறது. ஆனால் அவர்களுக்கு அதற்கான காரணம் சொல்லத் தெரிவதில்லை.

அவர்களை விடக் குறைந்த திறமை உள்ளவர்கள் சோபிக்கும் போது மட்டும் அவர்களுக்குக் கோபம் வருகிறது. 'இவனெல்லாம் இன்னைக்கு இதில பெரிய ஆள். எல்லாம் நேரம் தான்' என்று புலம்புவதை நம்மால் கேட்க முடியும். ஆனால் இவர்கள் ஒரு மிகப் பெரிய உண்மையை மறந்து விடுகிறார்கள். 'ஒரு வேலையைப் பாதியிலேயே விட்டு விட்டுப் போனவர்களை உலகம் நினைவில் வைத்திருப்பதில்லை'. இவர்களை விடத் தகுதி குறைவாக இருந்தாலும் பாதியில் விடைபெற்று விடாமல் தாக்குப் பிடித்திருக்கிறான் என்பதே அந்த சோபித்தவனுக்கு சாதகமாக இருந்திருக்கிறது என்பதை உணரத் தவறி விடுகிறார்கள்.

கொலம்பஸ் தன்னுடைய உலகப் பயணத்தைப் பாதியிலேயே நிறுத்தி திரும்பிச் சென்றிருந்தால் அவர் பெயர் சரித்திரத்தில் நின்றிருக்குமா? இத்தனைக்கும் வழியில் அவர் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. வழியில் பல பிரச்சினைகள். கப்பலில் அவருடன் வந்த மாலுமிகளும் பாதியில் முணுமுணுக்க ஆரம்பித்தார்கள். ஆனால் ஆரம்பித்த பயணத்தை ஒரு உறுதியுடன் அவர் முடித்ததால் தான் அவரை உலகம் நினைவில் வைத்துள்ளது.

Inspiration' தோன்றும் போது மட்டும் ஈடுபடுகிற போது நீங்கள் வைக்கோல்போர் போல் எரிகிறீர்கள் என்பதை நினைவில் வைத்திருங்கள். "Inspiration" என்பது ஒரு துவக்கம் மட்டுமே. அது ஒரு ஆரம்ப அக்னியே. ஆனால் அந்த அக்னியைத் தூண்டி விட்டுக் கொண்டே இருக்கிற வேலையை உலகம் செய்யும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம். ஒருநாள் உலகம் உங்களைப் பாராட்டலாம். அன்று உண்மையில் உள்ளே உள்ள அக்னி பிரகாசமாய் ஜொலிக்கலாம். ஆனால் மறுநாள் உலகம் தன் கவனத்தை வேறு பக்கம் திருப்பக் கூடும். இல்லையில் உங்களை அது விமரிசிக்கக் கூடச் செய்யலாம்.

அப்போதும் உள்ளே உள்ள அக்னியை அணையாமல் காத்துக் கொள்ளும் திறமையை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். நீங்கள் உள்ள துறையில் தாக்குப் பிடிக்க வேண்டும். மற்றவர்களது கருத்துக்களை விடவும் அதிகமாய் உங்கள் நம்பிக்கையும், உறுதியும் இருக்க வேண்டும். அப்படிச் செய்ய முடிகிற போது தான் நீங்கள் ஒரு வெற்றியாளனாக உருவெடுக்க முடியும்.

அதற்கு ஒரே ஒரு ராஜ மார்க்கம் தான் உள்ளது. உங்களுக்குத் திறமை உள்ளது என்று நம்பும் துறையில் சதா உங்கள் சிந்தனை இருக்கட்டும். அதில் அடுத்தவர்கள் கவனிக்கா விட்டாலும் ஏதாவது முயற்சிகள் மேற்கொண்டே இருங்கள். அதில் சாதித்தவர்களைப் பார்த்து பாடங்கள் கற்றுக் கொள்ளுங்கள். மனம், சொல், செயல் என்று தினமும் நம்பிக்கையுடன் ஈடுபடுகிற போது தான் உள்ளே உள்ள அக்னி அணையாமல் காக்கப் படுகிறது. உங்கள் வெற்றி உறுதி செய்யப்படுகிறது.

எதற்கும் தயாராக இருங்கள்

'Positive Thinking' மற்றும் 'Positive Approach' பற்றி எல்லோரும் ஏராளமாக எழுதியும் சொல்லியும் ஆகி விட்டது. நல்லதையே எண்ணுங்கள், நல்லதையே எதிர்பாருங்கள், உங்கள் வாழ்வில் நல்லதே பெருகக் காண்பீர்கள் என்று ஆராய்ச்சியாளர்களும் கூறுகிறார்கள். அது உண்மை தான் என்றாலும் அதிலும் சிக்கல்கள் இல்லாமல் இல்லை. நல்லதையே எதிர்பார்த்திருந்து விட்டு நல்லது நடக்காமல் போகையில் ஏமாற்றத்தின் அளவும் அதிகமாகவே ஆகி விடுகிறது. எதிர்பார்த்தது நடக்காமல் போகும் போது மனக்கசப்பு தான் அதிகம் மிஞ்சுகிறது. அப்படியானால் பாசிடிவ் அப்ரோச் என்கிற வழியே தவறா?

இல்லை. 'Positive Thinking/Approach' என்பது உண்மையில் நல்லதே நடக்கும் என்று எதிர்பார்க்கச் சொல்வதைக் காட்டிலும் அதிகமாக நடப்பதை எல்லாம் நமக்குப் பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்கிற அணுகுமுறையே. எது நடந்தாலும் தளர்ந்து விடாமல் சந்திக்கத் தயாராக இருப்பதே அதன் குறிக்கோள்.

எத்தனை தான் படித்தும், கேட்டும், சிலாகித்தாலும் தினசரி வாழ்க்கையினை சந்திக்கும் போது பல சமயங்களில் பெரும்பாலானோரது Positive Thinking/Approach எல்லாம் தகர்ந்து போய் விடுகிறது என்பதே யதார்த்தமான உண்மை. அதற்கு என்ன செய்வது?

தத்துவஞானியும், ரோமானியச் சக்கரவர்த்தியுமான மார்க்கஸ் அரேலியஸ் தன்னுடைய டைரியில் தான் இன்று நன்றி கெட்டவர்களையும், நயவஞ்சகர்களையும் சந்திக்கக்கூடும் மன அமைதியை இழக்க வைக்கக்கூடிய சம்பவங்களில் சிக்கக்கூடும் என்பது போன்ற பிரச்சினையான சாத்தியக்கூறுகளை எழுதி வைத்து விட்டு, தினமும் காலை அதைப் படித்து விட்டுத் தான் தன் நாளைத் தொடங்குவாராம். ராஜ்ஜியம் பரிபாலனம் செய்யும் சக்கரவர்த்தி இயல்பாக சந்திக்கக் கூடிய அது போன்ற சாத்தியக்கூறுகளை ஆரம்பத்திலிருந்தே எதிர்பார்த்திருந்து, அவற்றை கையாள வேண்டிய வழிமுறைகளையும் யோசித்தும் வைத்திருந்த அவரது தயார் நிலை அவர் மன அமைதியை இழக்காமல் காத்தது என்று உறுதியாகச் சொல்லலாம்.

பிரச்சினைகளும் சவால்களும் தான் பலரை நிலைகுலைய வைக்கின்றன என்றில்லை. பழகிப் போன ஒரு வாழ்க்கை முறை மாறத் துவங்கும் போதும் அந்த மாற்றத்தை பலர் சங்கடமாகவே நினைக்கின்றனர். உலகில் மாற்றம் ஒன்றே நிச்சயம் என்பது மாபெரும் உண்மை. அப்படி இருக்கையில் மாற்றம் நிகழும் போது தயார்நிலையில் இல்லாமல் இருப்பதும், மாற்றமே கூடாது என ஆசைப்படுவதும் அறிவீனம் அல்லவா?

எனவே எதுவும் எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என்பதை உணர்ந்திருங்கள். மாறுதல் நிகழும் போது அதை உற்சாகமாக எதிர்கொண்டு அதை உங்கள் முன்னேற்றத்திற்கு உபயோகித்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமுள்ள மாற்றங்களும் நிகழ்வுகளும் மட்டுமே ஏற்பட வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். உலகம் உங்கள் விருப்பப்படி இயங்குவதில்லை. எல்லாமே ஒரு காரணத்தோடு தான் நடக்கின்றன. அவை நடக்கையில் சிணுங்குவதும் குமுறுவதும் வாழ்க்கை ஓட்டத்தை எளிதாக்குவதற்கு பதிலாக மேலும் மோசமாக்குகின்றன.

எனவே நல்லதே எண்ணுங்கள். நல்லதையே வாழ்க்கையில் பிரதானப்படுத்துங்கள். ஆனால் விதி உங்களை முன்னேற்றவும், பதப்படுத்தவும் எதிர்பாராத சிக்கல்களை உங்கள் வழியில் அனுப்பி வைக்கக்கூடும். அதற்கு எப்போதும் தயார்நிலையில் இருங்கள். வருத்தத்துடனும், ஏமாற்றத்துடனும் வருவதை சந்தித்து மனதைப் பாழாக்கி, மூளையை மழுங்கடிப்பதற்குப் பதிலாக தெளிந்த மனத்துடன் மூளையைக் கூராக்கி இதை எப்படிக் கையாள வேண்டும் என்று சிந்திக்கக் கற்றுக் கொண்டால் எதனாலும், யாராலும் உங்கள் முன்னேற்றம் தடைப்படுவதில்லை.

முடியாதது முயலாதது மட்டுமே

ஒரு மைல் தூரத்தை ஓடிக் கடக்க குறைந்த பட்சம் நான்கு நிமிடங்கள் வேண்டும் என்று பல காலமாக எல்லாரும் நம்பி இருந்தார்கள். 1954 ஆம் ஆண்டு வரை வெளியான எல்லா அறிவியல் ஆராய்ச்சிக் கட்டுரைகளும் மனித உடலால் அதற்கு மேல் வேகமாக ஓட முடியாது என்று ஒருமித்த கருத்தை அறிவித்தன. ஆனால் 1954 ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் தேதி ரோஜர் பேனிஷ்டர் என்பவர் ஒரு மைல் தூரத்தை நான்கு நிமிடங்களுக்கு முன்னதாக ஓடிக் கடந்து அது வரை நிலவிய அறிவியல் நம்பிக்கையைப் பொய் ஆக்கினார்.

அவர் பயிற்சியின் போது தன் இலக்கான மைலை நான்காகப் பிரித்துக் கொண்டார். ஒவ்வொரு கால் மைலையும் 58 வினாடிகளுக்கு முன் கடக்க வேகத்தை மேற்கொண்டார். மிகவும் கஷ்டமான அந்த வேக இலக்கை எட்டி சிறிது ஓய்வு எடுத்துக் கொள்வார். பின் அடுத்த கால் மைலைக் கடப்பார். பல முறை பயிற்சி எடுத்து சிறிது சிறிதாக வேகத்தைக் கூட்டி, ஓய்வைக் குறைத்துக் கொண்டு வந்தார். கடைசியில் அவர் பந்தயத்தில் 3 நிமிடம் 59.6 வினாடிகளில் அந்த மைல் இலக்கைக் கடந்தார். அடுத்த நான்கு வருடங்களில் அவரைப் போல் 46 பேர் அந்த "ஓரு மைல்-நான்கு நிமிடம்" என்ற உடற்கூறு ஆராய்ச்சியளர்களின் கருத்தை முறியடித்தார்கள்.

ஆகவே இளைஞர்களே, எதையும் இது வரை சாதித்தவர்களை வைத்தோ, வல்லுனர்களின் கருத்தை வைத்தோ தீர்மானிக்காதீர்கள். முடியாதது என்பது முயலாதது மட்டுமே. மனித சக்தி எல்லை இல்லாதது. அதன் எல்லைகளைக் கண்டவர்கள் இன்று வரை இல்லை. முடியாதது என்பது கிடையாது. எல்லா சாதனையாளர்களும் "முடியாது" என்ற கருத்தை ஏற்றுக் கொள்ளாமல் தொடர்ந்து முயன்றவர்கள் தான். சுற்றிலும் "முடியாது, ஆகாது" என்று பலரும் சொல்லும் போதும், ஆரம்பத் தோல்விகள் அடைந்த போதும், தொடர்ந்து முயன்றவர்களுக்குள் சாதித்துக் காட்ட வேண்டும் என்ற ஒரு அக்னி இருந்திருக்கிறது.

ஒவ்வொருவரும் அப்படியொரு அக்னியை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள். அந்த அக்னி உங்களைச் சோம்பி இருக்க விடாது. சலிப்படைய விடாது. அரை குறை முயற்சிகளோடு திருப்தியடைய விடாது. விதியையோ, அடுத்தவர்களையோ தடையாக நினைக்க விடாது. அப்படி ஒரு அக்னி உங்களுக்குள்ளும் இருக்குமானால் வானம் கூட உங்களுக்கு எல்லையல்ல.

இளைஞர்களே, உங்கள் இலக்குகள் பெரிதாக இருக்கட்டும். ஆனால் அந்தப் பெரிய இலக்கை ரோஜர் பேனிஷ்டர் செய்து கொண்டது போல சிறு சிறு இலக்குகளாய் பிரித்துக் கொள்ளுங்கள். ஒவ்வொன்றையும் உற்சாகமாக அணுகுங்கள். முழு மனதுடன் முயலுங்கள். இலக்கு பெரியதாக இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக தோல்விகள் வரலாம். எங்கு தவறு செய்தோம் என்று ஆராய்ந்து அடுத்த முயற்சியின் போது திருத்திக் கொள்ளுங்கள். ஒவ்வொரு முயற்சியிலும் முந்தியதை விட சற்று அதிக முன்னேற்றம் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். இதை மட்டும் உங்களால் செய்ய முயன்றால் உங்களால் முடியாதது என்று எதுவும் இல்லை. முடியாது என்று நீங்களாக பின் வாங்கினால் ஒழிய நீங்கள் என்றுமே தோல்வி காணப் போவதில்லை.

அலட்சியம் என்றும் எதையும் சாதித்ததில்லை.

அது மாபெரும் நூல்களை எழுதியதில்லை. மனதை மயக்கும் இசையை இசைத்ததில்லை. உயர்ந்த ஓவியங்களை வரைந்ததில்லை. புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்ததில்லை. நாலு பேருக்கு நன்மை பயக்கும் செயல்களைச் செய்ததில்லை. வீரதீர பராக்கிரமங்களை நிகழ்த்தியதில்லை. மேன்மைக்குரிய இந்த செயல்கள் எல்லாம் உற்சாகத்தினாலும், ஊக்கத்தாலும் இதயபூர்வமாக செய்யப்பட்டவை. லட்சியத்தின் வெளிப்பாடுகள்.

அலட்சியம் எதையும் முக்கியம் என்று நினைப்பதில்லை. புதியதாக முயற்சிகள் எடுப்பதில்லை. எதிலும் சீரிய கவனம் வைப்பதில்லை. எண்ணங்களையும், செயல்களையும் ஒழுங்குபடுத்திக் கொள்வதில்லை. திட்டமிடுவதிலை. கஷ்டப்பட்டு உழைக்கத் தயாராவதில்லை. குறிக்கோள் வைத்துக் கொள்வதில்லை. உற்சாகம் கொள்வதில்லை. ஆனால் சாதனைகளும் சரித்திரங்களும் இதற்கு எதிர்மறையான குணங்களினாலாயே சாத்தியமாகின்றன.

ஒரு வயல்வெளியைப் பாருங்கள். உழுது, பயிரிட்டு, கதிர்கள் அரும்பி நிற்கும் அந்த அழகுக் காட்சி ஒரு லட்சியத்தின் விளைவு. அதில் ஒரு திட்டமுண்டு. காலம் பார்த்து முறைப்படி செய்த உழைப்புண்டு. அதில் ஒரு பயனுண்டு. அந்த வயல்நிலம் இலட்சியத்தின் விளைவு.

முள்களும், பார்த்தீனியமும், சகட்டுமேனிக்கு வளர்ந்து ப்ளாஸ்டிக் காகிதங்கள் சிக்கிக் கொண்டு இருக்கும் ஒரு கண்காணிக்கப்படாத நிலத்தைப் பாருங்கள். அதில் குறிக்கோளும் இல்லை. எந்த மனித முயற்சியும் இல்லை. எல்லாம் தானாக வளர்ந்தது. தானாக வந்து சிக்கியது. அதனால் எந்தப் பயனும் இல்லை. அந்தப் பாழ்நிலம் அலட்சியத்தின் விளைவு.

எது எக்கேடோ கெட்டுப் போனால் எனக்கென்ன என்பது அலட்சியம். தானாக எது நடந்தாலும் சரி என்று இருப்பது அலட்சியம். முக்கியமான முடிவுகளைத் தானாக எடுக்காமல் இருப்பது அலட்சியம். போகின்ற வழி எது என்று அறியாதிருப்பது அலட்சியம். தன் வாழ்க்கைக்குத் தானே பொறுப்பு எடுக்காமல் இருப்பது அலட்சியம்.

எதையும் லட்சியம் செய்யாமல் வாழ்பவர்கள் யாரும் லட்சியம் செய்யாத நிலைக்குத் தள்ளப்படுவார்கள். வாழ்க்கையின் உண்மையான சந்தோஷத்தை அறியாமலேயே, வாழ்ந்த சுவடு தெரியாமலேயே மறைந்து போவார்கள். வாழ்க்கையில் முக்கியமான அம்சங்களில் காட்டும் அலட்சியத்திற்கு மனிதர்கள் தரும் விலை மிக அதிகம்.

'அன்னியன்' திரைப்படத்தில் சமூக அலட்சியம் பற்றி மிக அழகாக சொல்லியிருக்கிறார்கள். அந்தப் படத்தின் கதாநாயகன் அலட்சியக்காரர்கள் ஒவ்வொருவரையும் கருட புராணத்தில் சொல்லியிருக்கும் சித்திரவதைக்கு உள்ளாக்குவான். அது கற்பனை. அது போல மனிதன் தன் தனிப்பட்ட வாழ்க்கையில் அலட்சியமாக இருந்து விட்டால் வேறு ஒரு நபர் வந்து தண்டிப்பதில்லை. மோசமான விளைவுகளை சந்தித்து தன்னைத் தானே தண்டித்துக் கொள்கிறான். எனவே வாழ்க்கையில் அலட்சியமாக இருந்து விடாதீர்கள்.

விதியா? மதியா?

ஒருவன் ஒரு ஞானியிடம் சென்று கேட்டான். "மனித வாழ்க்கையில் எல்லாவற்றையும் தீர்மானிப்பது அவன் விதியா, இல்லை அவன் மதியா?".

ஞானி சொன்னார். "ஒரு காலை உயர்த்தி மறு காலால் நில்"

கேள்வி கேட்டவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஆனாலும் இடது காலை உயர்த்தி வலது காலால் நின்றான்.

ஞானி சொன்னார். "சரி அந்த இன்னொரு காலையும் உயர்த்து"

அவனுக்குக் கோபம் வந்து விட்டது. நம் நடிகர் வடிவேலு மாதிரி "என்ன சின்ன பிள்ளைத்தனமாக இருக்கு" என்று சீறினான். "இரண்டு காலையும் உயர்த்தி எப்படி ஐயா நிற்பது?"

ஞானி அமைதியாகச் சொன்னார். "நான் காலைத் தூக்கச் சொன்ன போது எந்தக் காலைத் தூக்குவது என்று தீர்மானம் செய்தது உன் மதி. ஒரு முறை தீர்மானித்த பிறகு மறு காலையும் ஒருசேரத் தூக்கி நிற்க முடியாது என்பது விதி. பாதியை உன் மதி தீர்மானிக்கிறது. மீதியை உன் விதி தீர்மானிக்கிறது"

அந்த ஞானியின் வார்த்தைகளில் சூட்சுமமான இன்னொரு உண்மையும் இருக்கிறது. விதி என்பதே முன்பு நாம் மதி கொண்டு தீர்மானித்ததன் பின் விளைவாகவே பெரும்பாலான நேரங்களில் இருக்கின்றது.

விதியையும் மதியையும் விளக்க இன்னொரு உதாரணமும் மிகப் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

வாழ்க்கை ஒரு விதத்தில் சீட்டாட்டத்தைப் போல. குலுக்கிப் போடும் போது எந்தச் சீட்டுகள் வருகின்றன என்பது விதி. கையில் வந்த சீட்டுக்களை வைத்து எப்படி நீங்கள் ஆடுகின்றீர்கள் என்பது மதி. எந்தச் சீட்டு வர வேண்டும் என்பதை நம்மால் தீர்மானிக்க முடியாது. ஆனால் சீட்டுக்கள் கைக்கு வந்த பின் ஆடுவது நம் மதியிடம் உள்ளது. நல்ல சீட்டுக்கள் வந்தும் ஆட்டத்தைக் கோட்டை விடுபவர்கள் உண்டு. மோசமான சீட்டுக்கள் வந்தாலும் கவனமாகவும், புத்திசாலித்தனமாகவும் ஆடி வெற்றி பெறுபவர்களும் உண்டு.

சிந்திக்கையில் வாழ்க்கையை விதியும் மதியும் சேர்ந்தே தீர்மானிக்கிறது என்பதே உண்மையாகத் தோன்றுகிறது. ஆனால் மன உறுதியும், கடின உழைப்பும் மதியுடன் சேரும் போது அது விதியைத் தோற்கடித்து விடுகின்றது என்பதற்கு ஹெலன் கெல்லர் அருமையான உதாரணம்.

குருடு, செவிடு, ஊமை என்ற மிகப்பெரிய உடல் ஊனங்களை விதி ஹெலன் கெல்லருக்குக் கொடுத்தது. ஆனால் மன உறுதியாலும், கடின உழைப்பாலும் பேசும் சக்தியைப் பெற்றதோடு பிற்காலத்தில் சிறந்த பேச்சாளராகவும் புகழ் பெற்றார்.

விதி நமக்குத் தருவதை அப்படியே ஏற்றுக் கொண்டு முடங்கிக் கிடக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அதையே மூலதனமாக எடுத்துக் கொண்டு மதியால் எத்தனையோ செய்ய முடியும். கால நேர சூழ்நிலைகளைக் கணக்கில் கொண்டு மதி கொண்டு உழைத்தால் அந்த விதியும் வளைந்து கொடுக்கும்.

எனவே விதி மிக சக்தி வாய்ந்ததாக இருக்கலாம். ஆனால் விதி மட்டுமே ஒருவனது வாழ்க்கையைத் தீர்மானித்து விடுவதில்லை என்பது மதி படைத்த மனிதர்களுக்கு நற்செய்தி.

நல்ல நண்பன் - குட்டிக்கதைகள்!



ஒரு ஊரில் ஒரு இளைஞன் இருங்தான். அவன் எப்போதும் கோபப்படும் சுபாவத்தை கொண்டவன். ஒரு முறை அவனது நண்பன் அவனிடம் ஆணிகள் நிரம்பிய பையை கொடுத்தான். நீ எப்போதெல்லாம் கோபப்படுகிறாயோ அப்போதெல்லாம் ஒரு ஆணியை இந்த சுவற்றில் அடிக்கவும் என்றான்,


இளைஞ்சனும் அப்படியே செய்து வந்தான். முதல் நாள் அவன் 35 ஆணிகளை அடித்தான், மறு நாள் 30 என்று இப்படியாக குறைந்து கொண்டு வந்தது. சில நாட்கள் கழித்து அவன் கோபப்படுவதை நிறுத்தி விட்டான். அதணால் அவன் ஆணிகளை அடிக்கவில்லை. அதை அவனது நண்பன் பார்த்து பெருமை பட்டான். அவனை முழுவதுமாக திருத்த ஆசைப்பட்ட அவன் அவனிடம் அடித்த ஆணிகளை பிடுங்க சொன்னான்.


இளைஞ்ஞனும் அப்படியே செய்தான். அதை பார்த்த அவன் நண்பன் அவனிடம் சொன்னான்.


என் நண்பனே. நீ நான் சொன்னபடியே எல்லா வேலைகளையும் செய்தாய். இப்போது நீ அடித்த ஆணிகள் பிடுங்கப்பட்டு விட்டன. ஆணால் ஆணி அடித்த இடங்களில் உள்ள ஓட்டைகளை பார்.இந்த சுவர் முன்னால் இருந்த மாதிரி இல்லை. எல்லா இடங்களிலும் ஓட்டைகள் உள்ளன. அது போலத்தான் நீ கோபத்தில் சொல்லும் வார்த்தைகளும், செயல்களும் ஒரு வடுவை உன்டாக்கி விடும். நீ என்னதான் உன் செயல்களுக்கு மன்னிப்பு கேட்டாலும் அந்த வடு மாறாது, மறையாது. நீ வார்த்தைகளால் உன்டாக்கும் வடுவிற்கும், செயல்காளால் உன்டாக்கும் வடுவிற்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை.


என் நண்பனே, உண்மையை சொல்லப் போனால் நண்பர்கள் ஒரு அரிய பொக்கிஷங்கள். அவர்கள் உன்னை சிரிக்க வைப்பார்கள். உன் வாழ்க்கையில் நீ உயர தட்டிக் கொடுப்பார்கள். நீ சொல்வதை காது கொடுத்து கேட்ப்பார்கள். நீ நல்ல நிலமைக்கு வரும் போது உன்னை புகழ்வார்கள். அதையும் இதைய பூர்வமாக செய்வார்கள். அதை தான் நான் இப்போது செய்தேன்,


நீதி: 


தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு

Tuesday, December 10, 2013

நம்முடைய நான்கு மனைவிகள்! குட்டிக்கதைகள்!


ஒருவனுக்கு நான்கு மனைவிகள் இருந்தார்கள். ஆனால் அவன் தனது நான்காவது மனைவியை மட்டும் மிக அதிகமாக நேசித்தான். அந்த மனைவியின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றினான். அவளுக்கு தேவையானதை எல்லாம் செய்துகொடுத்தான்.
 


அவன் தனது மூன்றாவது மனைவியைக்கூட நேசித்தான். ஆனால் அவளை தனது நண்பர்களுக்கு முன்னால் காட்டிக்கொள்ள பயந்தான். பிறரோடு ஓடிவிடுவாளோ என்று பயந்தான்.


அவன் தனது இரண்டாவது மனைவியையும் நேசித்தான். ஆனால் தன...க்கு பிரச்சினைகள் வரும்போது மட்டும் அவளிடம் போவான். அவளும் அவனுடைய பிரச்சினைகளில் உதவினாள்.


ஆனால் அவன் ஒருபோதும் தனது முதல்மனைவியை நேசிக்கவே இல்லை. ஆனால் அவளோ அவன்மீது மிகவும் நேசம் வைத்திருந்தாள். அவனது எல்லா தேவைகளையும் அவள் கவனித்துக்கொண்டாள்.


ஒருநாள்...


அவன் மரணப்படுக்கையில் விழுந்தான். தான் இறக்கப்போவதை உணர்ந்துவிட்டான். தான் இறந்த பின் தன்னுடன் இருக்க ஒரு மனைவியை விரும்பினான். எனவே தன்னுடன் சாக யார் தயாராய் இருக்கிறார்கள் என அறிந்துகொள்ள விரும்பினான்.


தான் அதிகம் நேசித்த நான்காவது மனைவியை அழைத்தான். அவளோ அதிரடியாக மறுத்துவிட்டு அவனை விட்டு நீங்கினாள்.


அவன் தனது மூன்றாவது மனைவியை அழைத்தான். அவளோ நீயோ சாகப்போகிறாய். நான் வேறு ஒருவருடன் போகப்போகிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள்.


பிறகு தனது இரண்டாவது மனைவியை அழைத்துக் கேட்டான். அவளும் சாரி என்னால் உன் கல்லறைவரைக்கும் கூட வரமுடியும். கடைசி வரை உன்னுடன் வரமுடியாது என்று மறுத்துவிட்டாள்.


நொந்துபோன அவன் இதயம் தளர்ந்து போனது. அப்போதுதான் அவனது முதல் மனைவியின் குரல் ஒலித்தது. ‘’ நீ எங்கே போனாலும் நான் உன்னுடனே இருப்பேன். உன்னுடன் நான் கண்டிப்பாக வருவேன் ‘’ என்று சொன்னாள்.


ஆனால் அவளோ எலும்பும் தோலுமாக சாகும் தருவாயில் இருந்தாள். காரணம் அவன் அவளை நன்கு கவனித்துக் கொள்ளாததுதான். அவன் வருந்தினான். நான் நன்றாக இருக்கும் போதே உன்னையும் சரியாகக் கவனித்திருக்கவேண்டும். தவறிவிட்டேன் என்று அழுதான். அந்த வருத்தத்திலேயே மரித்தும் போயினான்.
 


உண்மையில் நாம் அனைவருக்குமே இந்த நான்கு மனைவியர் உண்டு.
 


1. நான்காவது மனைவி நமது உடம்பு. நாம் என்னதான் வாழ்நாள் முழுக்க நன்றாகக் கவனித்துக் கொண்டாலும் கடைசியில் நம்முடன் வரப்போவதில்லை. நாம் இறந்ததும் அதுவும் அழிந்து போகிறது.
 


2. மூன்றாவது மனைவி நமது சொத்து சுகம்தான். நாம் மறைந்ததும் அவை வேறு யாருடனோ சென்றுவிடுகிறது.
 


3. நமது இரண்டாம் மனைவி என்பது நமது குடும்பம் மற்றும் நண்பர்கள். அவர்கள் நமது கல்லறை வரையில் தான் நம்முடன் கைகோர்ப்பார்கள். அதற்குமேல் நம்முடன் கூட வரப்போவதில்லை.
 
 

4. நாம் கவனிக்காமல் விட்ட முதல் மனைவி நமது ஆன்மா. நாம் நன்றாக இருக்கும் போது நம்மால் கவனிக்கப்படாமல் நலிந்து சிதைந்து போய் இருந்தாலும் நம்முடன் இறுதி வரை கூட வரப்போவது நமது ஆன்மாதான்.

Sunday, December 8, 2013

புத்தி உள்ளவன் பிழைத்து கொள்வான்.........



ரஷ்ய ஜெயிலில் மூன்று தூக்குதண்டனைக் கைதிகள் இருந்தனர்.இறக்குமுன் அவர்களின் கடைசி மூன்று ஆசைகள் என்ன என்று கேட்கப்பட்டது.


முதல் கைதியின் ஆசை:நல்ல பெண்,நல்ல மது ,லெனின் சமாதிக்கு அருகில் புதைக்கப்பட வேண்டும்.மூன்று ஆசைகளும் நிறைவேற்றப்பட்டன.


இரண்டாவது கைதியின் ஆசைகள் ;நல்ல பெண்,நல்ல உணவு,ஸ்டாலின் சமாதிக்கருகில் புதைக்கப்பட வேண்டும்.அவனுடைய ஆசைகளும் நிறைவேற்றி வைக்கப்பட்டன.


மூன்றாவது கைதி தனது முதல் ஆசையாக மாம்பழம் கேட்டான்.அப்போது மாம்பழ சீசன் இல்லை.எனவே தூக்கு தண்டனை ஆறு மாதம் ஒத்தி வைக்கப்பட்டது.


ஆறு மாதத்திற்குப்பின் மாம்பழம் வாங்கிக் கொடுத்து இரண்டாவது ஆசையைக் கேட்டனர்.செர்ரிப் பழம் என்று பதில் வந்தது.அப்போது செர்ரிப் பழ சீசன் இல்லை என்பதால் மறுபடியும் தூக்கு தண்டனை ஆறு மாதம் தள்ளி வைக்கப்பட்டு,பின் செர்ரிப்பழம் வாங்கிக் கொடுக்கப்பட்டது.


மூன்றாவது ஆசையாக அவன் சொன்னான்,''என் உடல் தற்போதைய அதிபரின் சமாதிக்கருகில் புதைக்கப்பட வேண்டும்.''அதிகாரிகள் அதிர்ந்துவிட்டனர்,''என்ன சொல்கிறாய்,நீ?அவர் உயிருடன் அல்லவா இருக்கிறார்! ''கைதி அமைதியாகச் சொன்னான்,''அவர் இறக்கும் வரை நான் காத்திருக்கிறேன்.

உடல் உறுப்புகள் சண்டையிட்டால்?-ஒரு கற்பனை!



ஒரு நாள் உடல் உறுப்புகளுக்குள் தங்களுள் யார் பெரியவர் என்ற வாக்குவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அவைகளுக்குள் நடந்த உரையாடல்.


ஆள் காட்டி விரல்: நான் இல்லன்னா ஒரு மனிதனால் ஒரு பொருளையோ அல்லது ஒரு நபரையோ சுட்டிக் காட்ட முடியுமா?


மோதிர விரல்: இது என்ன பெரிய விஷயம்! மனிதன் என்மேல்தான் மோதிரம் போடுகிறான். அதனால் நான் அவனுக்கு அழகைக் கூட்டுகிறேன். மனிதனுக்கே தெரிகிறது, யாருக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று. அதனால் எனக்கு தங்க மோதிரம் மாட்டி அழகு பார்க்கிறான். ஏன் உங்களில் ஒருவருக்கு மோதிர விரல் என்று பெயர் இல்லை?


சுண்டு விரல்: டேய்! மோதிரம் போடுவதெல்லாம் ஒரு பெரிய விஷயமாடா? மனிதனை படைத்தவர் கடவுள். அவரை கை கூப்பி வணங்கும்போது நான்தான் முதலில் இருக்கிறேன். எனவே நான்தான் பெரியவன்.


நடு விரல்: டேய் பொடிப் பசங்களா! விரல்களில் நான்தான் மிக உயரமானவன். அதனால் மனிதன் எந்த செயல் செய்தாலும் நான்தான் உயர தெரிவேன். எனவே உங்களில் உயர்ந்த மனிதன் நான்தான்.


கட்டை விரல்: டேய்! சும்மா வாய மூடுங்கடா! என்னமோ நீங்கதான் பெரியவங்கன்னு அலட்டிக்கிறீங்க? நான் இல்லாம நீங்க நாலுபேரும் வீண். எந்த ஒரு மனிதானாலும் நான் இல்லாமல் எந்த ஒரு வேலையையும் செய்யமுடியாது. ஒரு பொருளை பிடித்து எடுக்கக் கூட முடியாது. மேலும் மனிதர்கள் ஒரு போட்டியில் வெற்றிபெற்றுவிட்டால் என்னை நிமிர்த்தி மற்ற விரல்களை மடக்கி வெற்றிபெற்றதை குறிக்கிறார்கள். தோல்விபெற்றால் இதேபோன்று தலைகீழாக காட்டுகிறார்கள். மனித வாழ்கையில் வெற்றி தோல்வியைக் குறிக்கப் பயன்படும் நானே பெரியவன்.


கைகள்: உங்களில் யாரும் பெரியவர்கள் அல்ல. நாங்கள் இருவர்தான் பெரியவர்கள். ஐந்து விரல்களையும் எப்படி உபயோகிக்க வேண்டுமோ அப்படி உபயோகித்து மனிதனுக்கு பயன்படுகிறோம். நாங்கள் இல்லாமல் நீங்கள் எப்படி இயங்க முடியும். மனிதன் சாப்பிட மற்றும் பொருட்களை தூக்க உதவுவது நாங்கள்தான்.


கால்கள்: நாங்கள் இல்லையென்றால் மனிதன் ஒரு அசைவற்றை பொருள்போன்றுதான். எங்கும் எழுந்து செல்ல இயலாது. மனிதன் வேலை செய்து சம்பாரிக்க உதவுவதே நாங்கள்தான். எனவே நாங்களே பெரியவர்கள்.


முதுகு: நான்தான் மனிதனுக்கு பிடிப்பைத் தருகிறேன். நான் இல்லையென்றால் மனிதனை எப்படி நடக்க வைப்பாய்? முதுகெலும்புகள் ஒரு மனிதனுக்கு உயிர் நாடி போன்றவை.


கண்கள்: நாங்கள் இல்லையென்றால் மனிதன் எந்த பொருளையும் பார்க்கமுடியாது. வேலை செய்வதும் கடினம். இயற்கை அழகையும் ரசிக்க முடியாது. எனவே நாங்கள்தான் பெரியவர்கள்.


காதுகள்: நாங்கள் மனிதர்களுக்கு கேட்கும் திறனை கொடுக்கவில்லையென்றால் மற்றவர்கள் பேசுவதை கேட்கவே முடியாது.


வாய்: மனிதன் பேசினால்தானே கேட்கமுடியும். நான்தான் பேச உதவுகிறேன். மேலும் மனிதன் உயிர் வாழ தேவை உணவு. அந்த உணவை சாப்பிட உதவுவது நான்தான். எனவே பெரியவனும் நான்தான்.


பற்கள்: நீ என்ன உணவு சாப்பிட ஒரு நுழைவு வாயில் போன்றுதான். அந்த உணவை அரைத்து அவனுக்கு ஆயுளைக் கொடுப்பது நான்தான். ஏனெனில் “நொறுங்கத்தின்றால் நூறு வயது” என்று பெரியவர்கள் கூறியிருக்கிறார்களே.


நாக்கு: நீ உணவை அரைக்கிறாய், ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அந்த உணவை சரிவர உனக்கு தள்ளிவிடுவது நான்தான். மேலும் “உப்பில்லாப் பண்டம் குப்பையிலே” என்று பெரியவர்கள் கூறியிருக்கிறார்கள். அந்த உப்பு போன்ற சுவைகளை மனிதனுக்கு புரிய வைப்பது நான்தான். எனவே நான்தான் பெரியவன் என்பதில் துளி கூட சந்தேகமில்லை.


வயிறு: நீங்கள் அனைவரும் உணவு சாப்பிட மட்டுமே பயன்படுகிறீர்கள். ஆனால் அந்த உணவை செரிக்க வைத்து மனிதனுக்குத் தேவையான சக்தியை கொடுப்பது நான்தான். அதனால்தான் மனிதன் உயிர் வாழ்கிறான். எனவே நான்தான் பெரியவன்.


மூக்கு: மனிதன் சாப்பிடவில்லையென்றால் கூட சில நாட்கள் உயிர் வாழ்வான். ஆனால், மூச்சி விடாமல் உயிர் வாழ்வது கடினம். மேலும் நல்ல உணவு அல்லது கெட்டுப்போன உணவு என்பதை என்னை வைத்து முகர்ந்து கண்டுபிடிக்கின்றனர். எனவே நான்தான் பெரியவன்.


தலை: என்னங்கடா அறிவு இல்லாம பேசுகிறீர்கள்? நான் இல்லையென்றால் நீங்கள் வெறும் முண்டம். அதை புரிந்துகொண்டு பேசுங்கள்.


மூளை: நான் உன்னுள் இல்லையென்றால் நீ வெறும் மண்ணுதான். அத தெறிஞ்சிக்கிட்டு பேசு. ஒரு மனிதன் வாழ்கையில் வெற்றி பெற அவன் திறமைசாலியாக இருக்கவேண்டும். அந்த திறமை என்னால்தான் கிடைக்கிறது. ஆறாவது அறிவு இருப்பதால்தான் அவன் மனிதன். நான் இல்லையென்றால் மனிதன் வெறும் மிருகம்தான். உடல் உறுப்புகள் அனைத்தையும் இயக்குவதே நான்தான். எனவே நீங்கள் என் பக்கத்தில் கூட நிற்க முடியாது.


இப்படியாக உடலின் அனைத்து உறுப்புகளும் சண்டையிட்டுக்கொண்டு இருந்தன. இடையில் இதயம் குறுக்கிட்டது.


இதயம்: எல்லாம் ஆளு ஆளுக்கு ஏதேதோ சொன்னீங்க. ஆனா உங்களை உயிரோடு வத்திருப்பதே நான்தான். நான் உடல் உறுப்புகளுக்கு ரத்தத்தை தூய்மைப்படுத்தி கொடுக்கவில்லையென்றால் நீங்கள் இறந்துவிடுவீர்கள். பிறகு மனிதனும் இருக்கமாட்டான். மேலும் மனிதர்களின் குணம் அவன் இதயம் சம்பந்தப்பட்டது. ஒரு நல்லவனாக இருந்தால் “அவனுக்கு நல்ல மனம் இருக்கிறது” என்று என்னைத்தான் கூறுவார்கள். ஆக மனித வாழ்க்கை என்பது இதயம் சார்ந்தது. நான் துடிப்பதை நிறுத்திவிட்டால் மனிதன் இறந்துவிடுவான்.


இதயம் கூறியது மெய்யான உண்மை என்பதால் “அண்ணே! நீங்கதான் மனித உடம்பில் பெரியவர். நாங்கள் அனைவரும் அதை ஏற்றுக்கொள்கிறோம்.” என்று அனைத்து உறுப்புகளும் கூறின.


இதயம்: அப்படியல்ல. நான் மட்டும் இருந்தால் மனிதன் உயிர் வாழ முடியாது. அனைவரும் முக்கியம்தான். தலையில் அடிபட்டு இறந்தவன் கூட இருக்கிறான், வயிற்றில் கத்தியால் குத்துபட்டு இறந்தவனும் இருக்கிறான் மற்றும் தண்டுவடத்தில் அடிபட்டு இறந்தவன் கூட இருக்கிறான். எனவே நம்மில் நான் பெரியவன் நீ பெரியவன் என்று இருக்கக்கூடாது.


இந்திய மனிதர்களைப் பாருங்கள். தங்களுக்குள் சாதி, மதம், இனம் மற்றும் மொழியால் பிரிந்து கிடக்கிறார்கள். ஆனாலும் எல்லாரும் ஒரே இனம் போன்று வேற்றுமையில் ஒற்றுமை காண்கிறார்கள். அப்படிபட்ட மனிதர்களுக்குள் இருக்கும் நாம் சண்டையிட்டுக்கொள்ளலாமா? நாமும் ஒற்றுமையாக இருந்தால்தான் மனிதன் நன்கு வாழ முடியும்?


அனைத்து உறுப்புகள்: ஆமாம் அண்ணே! நாங்கள் செய்தது தவறுதான். இனிமேல் நாங்கள் சண்டையிட்டுக்கொள்ளமாட்டோம்.


இப்போது அனைத்து உறுப்புகளும் ஒற்றுமையாக இருப்போம் என்று சபதம் எடுத்துக்கொண்டுவிட்டன. அவைகளின் சபதத்தை நாமும் ஏற்போம்.

Thursday, December 5, 2013

பெரியவருக்கு பரம திருப்தி !! குட்டிக்கதைகள்!

வயதான ஒருவரின் வீட்டிற்கு முன்னால் தினசரி இரவு, இளைஞர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அவருக்கு அது மிகத் தொந்தரவாக இருந்தது. ஒரு நாள் இளைஞர்கள் சப்தம் போட்டுக்கொண்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது பெரியவர் அவர்களிடம் போய்,

”நான் ஓய்வு ஊதியம் வாங்குபவன். எனக்குப் பிடித்தமான கிரிக்கெட்டை நீங்கள் எல்லோரும் விளையாடுவது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.நீங்கள் தினசரி விளையாடினால் நான்உங்களுக்கு வாரம் ஐம்பது ரூபாய் கொடுக்கிறேன்,” என்றார்.

இளைஞர்களுக்கு மிகவும் ஆச்சரியம்! தாங்கள் விருப்பத்துடன் விளையாடுவதற்குப் பணமா!

அவர்கள் தினசரி விளையாடினார்கள்.

ஒரு வாரம் முடிந்தவுடன் பெரியவர் அவர்களிடம் ஐம்பது ரூபாயைக் கொண்டு வந்து கொடுத்தார்.

இரண்டாவது வாரம் அவர்கள் பணம் கேட்ட பொது, திடீரென செலவு வந்து விட்டதாகக் கூறி இருபது ரூபாய் தான் கொடுத்தார்.

மூன்றாவது வாரம் ஓய்வு ஊதியம் இன்னும் வரவில்லை எனக் கூறி பத்து ரூபாய் கொடுத்தார்.

நான்காவது வாரம், தன்னால் இனி வாரம் ஐந்து ரூபாய் தான் கொடுக்க இயலும் என்றார்.

இளைஞர்களுக்குக் கோபம் வந்து விட்டது.

 "வாரம் முழுவதும் விளையாடுவதற்கு வெறும் ஐந்து ரூபாயா? இனி நாங்கள் இங்கே விளையாட வரமாட்டோம்.” என்று கூறிச் சென்று விட்டனர்.

பெரியவருக்கு இப்போது பரம திருப்தி !!!

கல்லெறிந்தவனுக்கும் கருணை!

அந்த நாட்டுக்கு மகான் ஒருவர் வந்தார். அவரை தரிசிக்க பெரும் கூட்டம் திரள்கிறது என்பதை அறிந்த அந்த நாட்டு மன்னனுக்குப் பொறாமை.


'பண பலமும் அதிகார பலமும் கொண்ட தன்னை விட, அந்த மகான் எந்த விதத்தில் உயர்ந்தவர்?' என்று எண்ணியவன், இது பற்றி அறிய மாறு வேடத்தில், மகானின் இருப்பிடத்துக்குச் சென்றான்.


அங்கு, மரத்தடியில் அமர்ந்து அருளாசி வழங்கிக் கொண்டிருந்தார் மகான். அப்போது, திடீரென்று பறந்து வந்த கல் ஒன்று மகானின் நெற்றியை பதம் பார்த்தது. கூட்டத்தினர் கல்லெறிந்தவனைப் பிடித்து, தண்டிக்க முற்பட்டபோது, மகான் தடுத்தார்.


''ஏனப்பா என் மேல் கல்லெறிந்தாய்?'' என்று அவனைப் பார்த்துகேட்டார் மகான். அவன், ''பழம் பறிப்பதற்காகக் கல் எறிந்தேன்.


 அது, தங்கள் மேல் விழுந்து விட்டது!'' என்றான்.அவனை ஆறுதலுடன் அணைத்துக் கொண்ட மகான், சுற்றி இருப்பவர்களைப் பார்த்துக் கூறினார்:


''பாருங்கள்... தன் மேல் கல்லெறிந்தவனுக்கு, பழங்களைத் தருகிறது மரம். நாம் மட்டும் தண்டனை தரலாமா?''


'பகைவனுக்கு அருளும் நல்லுள்ளம் உடையவரே உண்மையில் உயர்ந்தவர்!' என்பது அந்த மன்னனுக்குப் புரிந்தது.

 
back to top