.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, December 16, 2013

முக்கியமானது..



வகுப்பறைக்குள் நுழைகிறார் நிர்வாகப் பாடங்கள் எடுக்க வந்த ஒரு பேராசிரியர்.

''மாணவர்களே, இன்று நாம் செய்முறை விளக்கத்துட‎ன் ஒரு பாடத்தைக் கற்போம்.''

வாய்ப்புறம் அகலமாய் இருந்த, ஒளி ஊடுருவக் கூடிய ஒரு பெரிய பிளாஸ்டிக் ஜாடியை எடுத்து வரச் செய்தார் பேராசிரியர். ஜாடி ஒரு மேஜையி‎ன் மீது வைக்கப்படுகிறது. ஏழெட்டு பெரிய கற்களை எடுத்து வரச் செய்த பேராசிரியர் அவற்றையும் மேஜையி‎ன் மீது வைக்கிறார். பி‎ன், கற்களை ஒவ்வொ‎‎ன்றாக எடுத்து ஜாடிக்குள் போட ஆரம்பிக்கிறார்.

ஜாடி நிறைந்தவுட‎ன் மாணவர்களைப் பார்த்துக் கேட்கிறார், ''ஜாடி நிறைந்து விட்டதா?''

அனைத்து மாணவர்களும் கோரஸாக, ''யெஸ்.. ஸார்!''

சலனமில்லாமல் ''நல்லது'' எ‎ன்ற பேராசிரியர், பி‎ன் சிறு ஜல்லிக் கற்களைக் கொண்டு வரச் செய்தார். அவற்றை ஒவ்வொ‎ன்றாக எடுத்து ஜாடியினுள் போட ஆரம்பித்தார். பெரிய கற்களி‎ன் இடைவெளிகளில் ஜல்லிக்கற்கள் நுழைந்தன. ஜாடியைக் குலுக்கி விட, ஜல்லிகள் கிடைத்த இடைவெளிகளை ஆக்கிரமிப்பு செய்தன.

ஜாடி நிறைந்தவுட‎ன் மாணவர்களைப் பார்த்துக் கேட்கிறார். ''ஜாடி நிறைந்து விட்டதா?''

வகுப்பறையில் நிசப்தம். ஒரு மாணவர் மட்டும் ''அப்படி நிச்சயமாக சொல்லிவிட முடியாது'' எ‎ன்றார்.

மெல்லிய பு‎ன்னகையுடன் ''நல்லது'' எ‎ன்ற பேராசிரியர், பி‎ன் ஒரு வாளி நிறைய ஆற்று மணலைக் கொண்டு வரச் செய்தார். மணலை கொஞ்சம் கொஞ்சமாக அள்ளிப் போடப் போட, கிடைத்த இடைவெளிகளில் மணல் ஆக்கிரமிப்பு செய்ய ஆரம்பித்தது. ஜாடியைக் குலுக்கி விட, மேலும் மணலை அள்ளிப் போட முடிந்தது.

ஜாடி நிறைந்தவுட‎ன் மாணவர்களைப் பார்த்துக் கேட்கிறார். ''ஜாடி நிறைந்து விட்டதா?''

இப்பொழுது, வகுப்பறை முழுவதும் கோரஸாக, ''நிச்சயமாக ‏இல்லை!''

சிரித்த பேராசிரியர் ''நல்லது'' எ‎ன்றவாறே, ஒரு வாளி நிறைய தண்ணீரைக் கொண்டு வரச் செய்தார். தண்ணீரை ஊற்ற ஊற்ற மணலைக் கரைத்துக் கொண்டு தண்ணீர் நிறைந்தது ஜாடியினுள்.

ஜாடி நிறைந்தவுட‎ன் மாணவர்களைப் பார்த்துச் பேச ஆரம்பிக்கிறார் பேராசிரியர். ''ஜாடி நிறைந்து விட்டதா எ‎ன்று ‏இப்போது நான் கேட்கப் போவதில்லை. ‏இதிலிருந்து நீங்கள் கற்றுக் கொண்ட பாடம் எ‎ன்ன?''

ஒரு மாணவர் எழுந்தார். ''நமது நேர நிர்வாகம் எ‎ன்பது குறிப்பிட்ட வேலைகளை அதற்குள் செய்கிறோம் எ‎ன்பதல்ல; எவ்வளவு வேலை செய்து கொண்டிருந்தாலும் குறிப்பிட்ட கால அளவுக்குள் மேலும் சில சிறிய வேலைகளையும் முடிக்க முடியும்''

''இல்லை.. அதுவல்ல பாடம்'' பேராசிரியர் பதிலுரைத்தார்:

''பெரிய கற்களை நீங்கள் முதலில் ஜாடிக்குள் போடாவிடில், பி‎ன்னர் எப்போதுமே அவற்றை நீங்கள் போட முடியாது; ஜல்லிகளும் மணற்துகள்களும் அடைத்துக் கொண்டிருக்கும். வாழ்க்கையை ஒரு ஜாடியாக கற்பனை செய்து கொள்ளுங்கள். பெரிய கற்கள் எ‎ன்பவை இ‏ங்கே உங்கள் அ‎ன்பிற்குரியவர்களை, உங்கள் த‎ன்னம்பிக்கையை, உங்கள் கல்வியை, உங்கள் எதிர்காலக் கனவுகளை, குறிக்கோள்களைக் குறிக்கி‎ன்றன. இவற்றை அந்தந்தக் கால நேரங்களில் சரியாக உள்ளிடாவிட்டால் பி‎ன்னர் அவற்றை உள்ளிட முடியாது. விளைவு?''

''ஆகவே, ‏இன்று வீட்டுக்குச் செல்லுங்கள். ந‎ன்றாகத் தூங்குங்கள். காலையில் எழுந்து உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள், 'பெரிய கற்கள் என்பவை எ‎ன் வாழ்க்கையில் யாவை' எ‎ன்று''

0 comments:

 
back to top