.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, September 13, 2013

என்னால் கமல் வளர்ந்தானா, அவனால் நான் வளர்ந்தேனா - பாலச்சந்தர் பரபரப்பு பேட்டி!



38 வருடத்தி்ற்கு முன்பு வெளிவந்த ‘நினைத்தாலே இனிக்கும்’ படம் தற்போது டிஜிட்டல் முறைப்படி நவீன தொழில்நுட்பத்துடன் வெளியிடப்போகிறார்கள் ராஜ் டி.வி. குடும்பத்தினர். அதுகுறித்து இயக்குனர் கே.பாலச்சந்தர் பேசியதாவது:

இது அற்புதமான விழா. சீன் சீனா நினைத்துப் பார்க்கும்போது இந்த படத்திற்கு ‘நினைத்தாலே இனிக்கும் ’ என்று எப்படி பெயர்வைத்தேன் என்று எனக்கே தெரியவில்லை. எழுத்தாளர் சுஜாதாவிடம் ஒரு பாயின்ட் சொல்லி ஒரு இசைக்குழுவினர் பற்றிய கதை என்று முடிவுசெய்து, டிஸ்கஸ் செய்தோம். 32 நாட்கள் சிங்கப்பூரில் ஷுட் செய்தோம். அவ்வளவு கஷ்டப்பட்டோம். ஆனால் படம் பார்த்தபோது  பட்ட கஷ்டம் மறைந்துபோயிற்று. 38 வருடம் கழித்து இந்தபடம் இப்போது மீண்டும் வெளியிடப்போகிறார்கள் என்றபோது மிகவும் சந்தோஷமாக உள்ளது.

நான் கமலிடம் அவனுக்கும் எனக்குமான உறவுபற்றி ஒன்றே ஒன்று மட்டும் தெரிந்துகொள்‌ள விரும்புகிறேன். ‘அவனால் நான் வளர்ந்தேனா அல்லது என்னால் அவன் வளர்ந்தானா’ என்பதுதான்.  முதலில் என்னால் கமல் வளர்ந்தான். அடுத்த 20 ஆண்டுகளில் அவனால் நான் வளர்ந்தேன். அவனின் ஆர்வம், என் படங்களில் போட்டி போட்டு நடிக்கிற விதம் தமிழகத்திற்கு மட்டுமல்ல, உலகத்திற்கே அதிசயமானவர் கமல். சினிமாவில் என்னென்ன வரப்போகுது என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் கமல் அப்பவே எனக்கு நிறைய டெக்னாலஜி பற்றி சொல்லுவான். எனக்கு படிக்க நேரம் கிடையாது. ஆனால் கமலுக்கு படிக்கிறதே நேரமா இருந்துச்சு அப்போ. இந்த நேரத்தில் நான் ரஜினியை ரொம்ப மிஸ் பண்றேன்.

மரோசரித்ரா என்று டென்ஷனான ஒரு படம் எடுத்தேன். அப்போது எனக்கு புல்லா ரிலாக்ஸ் தேவைப்பட்டது. அடுத்து சீரியசா படம் பண்ண நான் தாங்குவேனா என்று தெரியவில்லை. அதனால் கமலிடம் நார்மலா ஒரு படம் பண்ணனும் என்று சொல்லி டிஸ்கஸ் செய்து படம் எடுத்தேன். அதில் கமல் நடித்தார். படம் முடிந்தபின் முதல் காப்பியின் முதல் பாதியை நானும் கமலும் பார்த்தோம். பிறகு சைலன்டாக வெளியில் வந்துவிட்டோம். படத்தைப்பற்றி எதுவும் பேசவில்லை.லிப்டில் வந்தபோது கமலுக்கு அவர் நண்பரிடமிருந்து போன் வந்தது. அவர் படம் எப்படி வந்திருக்கு என்று கேட்டதற்கு, படத்தில் ஜெயப்பிரதா எப்படி தலையை ஆட்டுவாரோ அப்படி கமல் தலையை ஆட்டினான். அதை நான் பார்த்தேன். அப்போது கமலுக்கு அந்த படம் பிடித்ததா இல்‌லையா என்று தெரியவில்லை. அப்போ கமலுக்கு கதை பத்தவில்லை. அவன் அடுத்தடுத்த கட்டத்துக்கு போயிட்டான். இப்போது அந்த படம் ரிலீசாறத பார்க்கிறப்போ நான்தாண்டா ஜெயித்திருக்கிறேன்’ என்றார்.

உடல் நாற்றம்... தவிர்க்க வழிகள்


உடல் நாற்றம்... தவிர்க்க வழிகள்

நம் உடலில் சுரக்கும் வியர்வையில் புரதம் உண்டு. அத்துடன் பாக்டீரியா சேரும்போது அந்தப் புரதங்கள் உடைக்கப்பட்டு Propionic என்ற அமிலமாக மாறுகிறது. உடல் நாற்றத்துக்கு அதுதான் காரணம். அதீதமான வியர்வை மற்றும் அதன் காரணமாக உண்டாகும் நாற்றத்துக்கு Acid bromidrosis மற்றும் osmidrosis என்று பெயர்.

பெண்களுக்கு 14 - 16 வயதிலும், ஆண்களுக்கு 15 - 17 வயதிலும் இந்த வியர்வை நாற்றப் பிரச்சனை தீவிரமாக இருக்கும். நமது உடலில் கிட்டத்தட்ட 30 - 40 லட்சம் வியர்வைச் சுரப்பிகள் உள்ளன. ‘எக்ரைன்’ (eccrine) என்கிற வியர்வைச் சுரப்பிகள் நம் உடலில் எல்லா இடங்களிலும் சருமத்தின் அடியில் இருக்கும்.

வெளிப்புறத் தட்பவெப்பநிலை அதிகரிக்கும் போது, அதிலிருந்து உடலைக் காப்பாற்றிக் குளிர்ச்சியாக்கும் பொருட்டு இந்த சுரப்பிகள் தூண்டப்படுவதால்தான் வியர்வை வெளியே வருகிறது. அதனால்தான் நமக்கு முகத்திலோ, கைகளிலோ வியர்க்கும்போது, அது அதிக வாசனையை ஏற்படுத்துவதில்லை.

அப்போக்ரைன் (apocrine) என்கிற சுரப்பிகள் அக்குள், காதுகளின் பின்புறம், அந்தரங்க உறுப்புகளில் அதிகம் காணப்படும். இவை வியர்வையை வெளிப்படுத்தும்போது, அத்துடன் எண்ணெய் பசையான திரவமும் சேர்ந்து வெளியேறுவதால், அந்த இடத்தில் எல்லாம் வியர்க்கும் போது வாசனை அதிகமாக இருக்கிறது.

அதிக சூடாகவோ, அதிகக் குளிர்ச்சியாகவோ இல்லாத வெதுவெதுப்பான தண்ணீரில், தினம் இரு வேளைகள் கட்டாயம் குளிக்க வேண்டும். நிறமும் மணமும் சேர்க்கப்பட்ட ‘பாத் சால்ட்’ கிடைக்கிறது. ஒரு பக்கெட் தண்ணீரில் 1 டீஸ்பூன் பாத் சால்ட் கலந்து குளிக்கலாம். அது முடியாதவர்கள், கொஞ்சம் வேப்பிலையைக் கசக்கிச் சேர்த்து, தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்துக் குளிக்கலாம்.

டீ ட்ரீ அல்லது லேவண்டர் - இந்த இரண்டில் ஏதேனும் ஒரு அரோமா ஆயிலில் சில துளிகளை பஞ்சில் நனைத்து, வியர்வை அதிகம் சுரக்கும் பகுதிகளில் தேய்த்துக் கொள்ளலாம். தினம் இருமுறை டியோடரன்ட் உபயோகிக்கலாம். குளித்து முடித்ததும், உடலைத் துடைத்து விட்டு, வியர்க்க ஆரம்பிக்கும் முன்பே இதை உபயோகிக்க வேண்டும்.

கேஸ் இல்லாத டியோடரன்ட் நல்லது. அதை உபயோகிக்கும் போது எரிச்சலோ, குத்தலோ இருந்தால் உபயோகிக்க வேண்டாம். வியர்வையையே நிறுத்தக்கூடிய ஆன்ட்டி பெர்ஸ்பிரன்ட் என்ற பொருளும் மார்க்கெட்டில் கிடைக்கிறது. அலுமினியம் சால்ட் கலந்திருப்பதால் அதை தினசரி உபயோகிப்பது ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல.

முக்கியமான விசேஷம், உடையில் வியர்வைத் தடம் தெரிய வேண்டாம் என நினைக்கிற போது மட்டும் ஆன்ட்டி பெர்ஸ்பிரன்ட் உபயோகிக்கலாம். அதிக வியர்வை இருந்தால் ஆன்ட்டி பாக்டீரியல் சோப் உபயோகிக்கலாம். குளித்து முடித்ததும், ஈரத்தை நன்கு துடைத்துவிட்டு, ஆன்ட்டி பாக்டீரியல் டஸ்ட்டிங் பவுடர் உபயோகிக்கலாம்.

உடைகளை வைக்கும் பீரோ மற்றும் அலமாரிகளையும் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். ஒருமுறை உபயோகித்த உடையை, பிறகு துவைத்துக் கொள்ளலாம் என மற்ற துணிகளோடு சேர்த்து வைக்கக் கூடாது. அதிலுள்ள கிருமிகளும் நாற்றமும் மற்ற உடைகளுக்கும் பரவும். உணவுப்பழக்கம்கூட ஒருவரின் உடல் நாற்றத்துக்குக் காரணமாகலாம்.

பூண்டு, சில வகை அசைவ உணவுகள், அதிக மசாலா சேர்த்த உணவுகள் உதாரணம். காலங்காலமாக உடலில் தேங்கிய அந்த நாற்றத்தைப் போக்க, க்ளோரோஃபில் நிறைந்த பச்சைக் காய்கறிகள், கீரைகள் சாப்பிட வேண்டும். வெட்டிவேரை குளிக்கும் தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்துக் குளித்தாலும் உடல் மணக்கும்.

பட்டைத்தூள் 2 டீஸ்பூன், அரை மூடி எலுமிச்சைப் பழம் இரண்டையும் குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்தால், நாற்றமும் உடல் வலியும் பறந்து போகும். குளியலுக்கென்றே பாத் ஜெல், பாத் ஃபோம், சோப் கிரிஸ்டல்ஸ் என நிறைய கிடைக்கின்றன.

நிதானமான குளியலுக்கு இவற்றையெல்லாம் பயன்படுத்தினால் நாற்றமும் மறையும். அழகும் மேம்படும். வினிகர் அல்லது எலுமிச்சைச் சாற்றில் நனைத்த பஞ்சினை அக்குள் பகுதியில் தடவி விட்டு, சிறிது நேரம் கழித்துக் குளித்தால், வியர்வை நாற்றம் கட்டுப்படும். உடைகள் மட்டுமின்றி, உள்ளாடைகளும் காட்டனாக இருக்க வேண்டியது அவசியம்.

தவளையும் ..கொக்குகளும்.........குட்டிக்கதை



மீன்கள் நிறைந்த குளமொன்றில் அவற்றுடன் ஒரு தவளையும் வாழ்ந்து வந்தது...

மீன்களை கொத்தி உணவாக்கிக் கொள்ள பல கொக்குகள் அந்தக் குளத்தைத் தேடி வருவதுண்டு...அவற்றில் இரு கொக்குகள் தவளைக்கு நண்பனாயின.அவை வந்தவுடன் தவளையை நலம் விசாரித்தப் பின்னரே தங்களுக்கு இரையான மீனைத் தேட ஆரம்பிக்கும்.

கோடைகாலம் வந்தது.குளம் வற்றியது...மீதமிருந்த மீன்களும் மடிந்தன...தவளை மட்டும் செய்வதறியாது திகைத்தது.

அப்போது அதன் நண்பர்களான கொக்குகள் .. தவளையைத் வேறு தண்ணீர் உள்ள இடத்தில் விடுவதாகக் கூறின.

ஆனால் தவளை என்னால் உங்களுடன் சேர்ந்து பறக்க முடியாதே என்று கூறியது.

அப்போது ஒரு கொக்கு ..ஒரு பெரிய குச்சியைக் கொண்டு வந்து ..அதன் நடுவில் தவளையைக் கவ்விக் கொள்ளச் சொன்னது.

குச்சியின் இரு முனையையும் இரு கொக்குகளும் பிடித்துக்கொண்டு பறப்பதாகவும்...ஆனால் எக்காரணம் கொண்டும் தவளை தன் வாயைத் திறக்கக் கூடாது என்றன...

தவளையும் ஒப்புக் கொண்டது.

அப்படி அவை பறக்கும் போது தெருவில் நின்றிருந்த சில சிறுவர்கள் ..'தவளை பறக்குது'..'தவளை பறக்குது' என கத்தினர்.

அச்சத்தத்தைக் கேட்ட தவளை கொக்குகள் சொன்னதை மறந்து 'அங்கு என்ன சத்தம்' என்று கேட்க வாயைத் திறந்தது.கீழே விழுந்து படு காயமடைந்தது.

தன்னைவிட அறிவில் சிறந்தவர்கள் கூறும் அறிவுரையைக் கேட்டு நடக்க வேண்டும்...இல்லாவிட்டால் அந்த தவளையைப் போல துன்பமே வந்து சேரும்...

மரமும் ..கிளியும்.........குட்டிக்கதை



பல பறவைகள் ஒரு மரத்தில் கூடு கட்டி..அதில் பழுக்கும் பழங்களை உண்டு மகிழ்ந்து வந்தன.

ஒரு சமயம்..மழையில்லாமல்,மரம் வாட ஆரம்பித்தது..அதன் இலைகள் உதிர்ந்தன..பூக்கவில்லை..பழுக்கவில்லை அம்மரங்கள்.

அம்மரத்தை நம்பி..அது காய்க்கும் பழங்களை நம்பி வாழ்ந்த பறவைகள் வேறு இடம் தேடி ஓட ஆரம்பித்தன.

ஒரு கிளி மட்டும் ..அந்த மரத்தை விட்டுப் போகாமல்...மரத்தினடமே இருந்தது...பட்டினியால் வாடியது..தினமும் கடவுளை வேண்டியது.

ஒரு நாள் கடவுள் அந்த கிளி முன் தோன்றி.. 'தினமும் என்னை வேண்டுகிறாயே...உனக்கு என்ன வேண்டும் என்றார்.

'இறைவா..இந்த மரம் மீண்டும் பூத்து ..காய்க்க வேண்டும் என்றது கிளி..

'இந்த மரத்தைப் பற்றி யோசிக்காது...மற்றப் பறவைகள் போல் நீயும் ஓடியிருக்கலாமே என்றார் கடவுள்.

அதற்குக் கிளி..'இந்த மரம் பழுத்து இது நாள் வரை எங்களை காத்தது...இன்று இது தண்ணீர் இன்றி துன்பப்படுகிறது...இச்சமயத்தில் நம்மைக் காத்ததை மறந்து..இதை விட்டு ஓடுதல் சுயநலமில்லையா..பாவமில்லையா' என்றது கிளி.

கிளியின் சுயநலமற்றத் தன்மையைப் போற்றிய இறைவன் ..அம்மரம் மீண்டும் தழைக்க ..மழையை பொழிய வைத்து அருளினார்.

ஒருவர் செய்த நன்றியை மறக்காது..அவர்கள் துன்புறும்போது அவர்களுடன் சேர்ந்தே ஆறுதலாய் இருக்கவேண்டும்.
 
back to top