38 வருடத்தி்ற்கு முன்பு வெளிவந்த ‘நினைத்தாலே இனிக்கும்’ படம் தற்போது டிஜிட்டல் முறைப்படி நவீன தொழில்நுட்பத்துடன் வெளியிடப்போகிறார்கள் ராஜ் டி.வி. குடும்பத்தினர். அதுகுறித்து இயக்குனர் கே.பாலச்சந்தர் பேசியதாவது:
இது அற்புதமான விழா. சீன் சீனா நினைத்துப் பார்க்கும்போது இந்த படத்திற்கு ‘நினைத்தாலே இனிக்கும் ’ என்று எப்படி பெயர்வைத்தேன் என்று எனக்கே தெரியவில்லை. எழுத்தாளர் சுஜாதாவிடம் ஒரு பாயின்ட் சொல்லி ஒரு இசைக்குழுவினர் பற்றிய கதை என்று முடிவுசெய்து, டிஸ்கஸ் செய்தோம். 32 நாட்கள் சிங்கப்பூரில் ஷுட் செய்தோம். அவ்வளவு கஷ்டப்பட்டோம். ஆனால் படம் பார்த்தபோது பட்ட கஷ்டம் மறைந்துபோயிற்று. 38 வருடம் கழித்து இந்தபடம் இப்போது மீண்டும் வெளியிடப்போகிறார்கள் என்றபோது மிகவும் சந்தோஷமாக உள்ளது.
நான் கமலிடம் அவனுக்கும் எனக்குமான உறவுபற்றி ஒன்றே ஒன்று மட்டும் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். ‘அவனால் நான் வளர்ந்தேனா அல்லது என்னால் அவன் வளர்ந்தானா’ என்பதுதான். முதலில் என்னால் கமல் வளர்ந்தான். அடுத்த 20 ஆண்டுகளில் அவனால் நான் வளர்ந்தேன். அவனின் ஆர்வம், என் படங்களில் போட்டி போட்டு நடிக்கிற விதம் தமிழகத்திற்கு மட்டுமல்ல, உலகத்திற்கே அதிசயமானவர் கமல். சினிமாவில் என்னென்ன வரப்போகுது என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் கமல் அப்பவே எனக்கு நிறைய டெக்னாலஜி பற்றி சொல்லுவான். எனக்கு படிக்க நேரம் கிடையாது. ஆனால் கமலுக்கு படிக்கிறதே நேரமா இருந்துச்சு அப்போ. இந்த நேரத்தில் நான் ரஜினியை ரொம்ப மிஸ் பண்றேன்.
மரோசரித்ரா என்று டென்ஷனான ஒரு படம் எடுத்தேன். அப்போது எனக்கு புல்லா ரிலாக்ஸ் தேவைப்பட்டது. அடுத்து சீரியசா படம் பண்ண நான் தாங்குவேனா என்று தெரியவில்லை. அதனால் கமலிடம் நார்மலா ஒரு படம் பண்ணனும் என்று சொல்லி டிஸ்கஸ் செய்து படம் எடுத்தேன். அதில் கமல் நடித்தார். படம் முடிந்தபின் முதல் காப்பியின் முதல் பாதியை நானும் கமலும் பார்த்தோம். பிறகு சைலன்டாக வெளியில் வந்துவிட்டோம். படத்தைப்பற்றி எதுவும் பேசவில்லை.லிப்டில் வந்தபோது கமலுக்கு அவர் நண்பரிடமிருந்து போன் வந்தது. அவர் படம் எப்படி வந்திருக்கு என்று கேட்டதற்கு, படத்தில் ஜெயப்பிரதா எப்படி தலையை ஆட்டுவாரோ அப்படி கமல் தலையை ஆட்டினான். அதை நான் பார்த்தேன். அப்போது கமலுக்கு அந்த படம் பிடித்ததா இல்லையா என்று தெரியவில்லை. அப்போ கமலுக்கு கதை பத்தவில்லை. அவன் அடுத்தடுத்த கட்டத்துக்கு போயிட்டான். இப்போது அந்த படம் ரிலீசாறத பார்க்கிறப்போ நான்தாண்டா ஜெயித்திருக்கிறேன்’ என்றார்.
0 comments:
Post a Comment