.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, October 7, 2013

'பேராசை பெரு நஷ்டம் ' (நீதிக்கதை)




 
 
கந்தன் என்ற ஒரு ஏழை தன் மனைவியுடன் குடிசையில் வாழ்ந்து வந்தான்.வயதாகி விட்டதால் வேலைக்கும் செல்ல முடியாததால்...அவர்கள் உண்ண உணவின்றி தவித்தனர்.


இந்நிலையில் ஒரு நாள் அவன் ஆண்டவனை நோக்கி ...'இறைவா எங்களை ஏன் இப்படி படைத்தாய்...இது இப்படியே நீடித்தால்....வறுமை தாங்காது...நாங்கள் இறப்பதை தவிர வேறு வழியில்லை' என வேண்டினான்.


உடன் இறைவன் நேரில் தோன்றி....அவனுக்கு வாத்து ஒன்றை பரிசளித்தார்.உடன் அந்த வாத்து ஒரு பொன் முட்டை இடும் என்றும்...அதை அன்றன்று அவன் விற்று தன் வாழ்நாளைக் கழிக்கலாம் என்றும் கூறி மறைந்தார்.


வாத்து தினம் முட்டையிட ...அவர்கள் வாழ்வு தினமும் இனிதாகக் கழிந்தது.


ஒரு நாள் கந்தனின் மனைவி அவனிடம் 'தினம் தினம் இது பொன் முட்டையிட்டு அதை விற்று நாம் பிழைக்கிறோம்.அதற்கு பதில் இதை அறுத்து அதன் வயிற்றில் உள்ள மொத்த பொன் முட்டைகளையும் எடுத்து விற்று நாம் பெரிய பணக்காரராக ஆகிவிடலாமே' என்றாள்.


கந்தனும் அவளது பேச்சைக் கேட்டு..அந்த வாத்தை பிடித்து அதன் வயிற்றைக் கிழித்தான்.ஆனால் அதன் வயிற்றில் ஏதும் இல்லை....மற்ற வாத்துக்களைப் போலவே இருந்தது.


முட்டாள் கந்தனும்,மனைவியும் தினமும் அடையும் லாபத்தை விட்டு ஒரே நாளில் பணக்காரராகும் பேராசையுடன் செயல்பட்டதால் இருந்ததையும் இழந்தனர்.


' பேராசை பெருநஷ்டம் '.
 

Sunday, October 6, 2013

மருத்துவத்திற்கு பயன்படும் இலை காய்கறி!




We used to fry the cabbage plays an important role. We realize that a lot of cabbage, one of the benefits of knowing.



நாம் பொரியலுக்கு பயன்படுத்துவதில் முட்டைகோஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. இலைக்காய்கறிகளில் ஒன்றான முட்டைகோஸின் நன்மைகள் பற்றி  நாம் அதிகம் தெரிந்திருப்பதில்லை. முட்டைகோஸ் வெள்ளை, சிவப்பு, பச்சை மற்றும் ஊதா போன்றவை நிறங்களில் உள்ளது. இவை அனைத்தும்  ஆரோக்கியம் தரும் உணவுகளே. இதில் பைட்டோ நியூட்ரியண்டுகள் மற்றும் வைட்டமின்களான ஏ, சி மற்றும் கே போன்ற சத்துகளை கொண்டுள்ளது.

இவை உடலை தாக்கும் புற்றுநோய், இதயநோய், போன்றவற்றை தடுக்கும். இதில் நார்சத்துகளை கொண்டுள்ளதால் செரிமான பிரச்சனை மற்றும்  மலச்சிக்கல் பிரச்சனைகளை சரிசெய்கிறது.  குறிப்பாக முட்டைகோஸை சமைக்கும் போது அளவுக்கு அதிகமாக வேகவைத்து சாப்பிடக்கூடாது.  ஏனெனில் அதிகளவு வேகவைக்கும் போது அதன் சத்துகள் வெளியாகிவிடும்.

முட்டைகோஸில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருட்களை அதிகளவு கொண்டுள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், புற்றுநோயை  ஏற்படுத்தும் செல்கள் வளர்வதை முற்றிலும் தடுக்கும். மேலும் ஆய்வு ஒன்றிலும், முட்டைகோஸ் சாப்பிட்டால், புற்றுநோய் வளர்வதை தடுக்கலாம்  என்று கண்டறியப்பட்டுள்ளது. அல்சரால் அவதிப்படுபவர்கள், முட்டைக்கோஸை ஜூஸ் போட்டு சாப்பிட்டு வந்தால், அல்சரை விரைவில்  குணப்படுத்தலாம். ஏனெனில் இதில் அல்சரை குணப்படுத்தும், குளுட்டமைல் அதிக அளவில் நிறைந்துள்ளது.



இதில் உள்ள அதிகப்படியான வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, உடலை நோய்கள் தாக்காதவாறு பாதுகாக்கும்.  முட்டைகோஸில் பீட்டா-கரோட்டீன் அதிக அளவில் இருப்பதால், அது கண்புரையை தடுக்கிறது. எடையை குறைக்க நினைப்போர், தினமும் ஒரு கப்  வேக வைத்த முட்டைகோஸ் அல்லது முட்டைகோஸ் சூப் சாப்பிட்டால், உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம்.



பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை முட்டைகோஸ் ஈடுசெய்யும்.  நரம்புகளுக்கு வலு கொடுக்கும்.  நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். முட்டைகோஸை நீரில்  போட்டு சிறிது நேரம் ஊறவைத்து அந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் வறட்சியான சருமம் பளபளப்படையும். எலும்புகளுக்கு வலு கொடுக்கும்.  இதில் சுண்ணாம்புச்சத்து அதிகமிருப்பதால் எலும்புகளும் பற்களும் உறுதியாகும்.

ஆனந்த ரயில்கள் - சுற்றுலாத்தலங்கள்!


    ஆனந்த ரயில்கள்
லகளவில் பாரம்பரியமிக்க இடங்களை பட்டியலிட்டுள்ள  யுனெஸ்கோ அவற்றை உலக பண்பாட்டுச் சின்னங்களாக அறிவித்துள்ளது. அதில் இந்தியாவில் 27இடங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் 23இடங்கள் பரிசீலனையில் இருக்கின்றன. இந்தியாவில் உள்ள பண்பாட்டுச் சின்னங்களை டூரிசம் பகுதியில் வாரம்தோறும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இந்தவாரம்....
 
ஆனந்த ரயில்கள்
 
ரயில் பயணம் ஆனந்தமே. பாரம்பரியமிக்க ரயில்களில் பயணம் செய்வது பேரானந்தம். பெருமையும் கூட. இந்தியாவில் அப்படி பெருமைக்குரியவை டார்லிஜிங் இமாலயன் ரயில், நீலகிரி மலைரயில் மற்றும் கல்கா- சிம்லா ரயில்கள். காரணம், இவை மூன்றும் யுனெஸ்கோ அமைப்பால் உலக பண்பாட்டுச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டவை.
 
* டார்லிஜிங் இமாலயன் ரயில்:
 
மேற்குவங்க மாநிலம் சிலிகுரி- டார்ஜிலிங் மலைப்பாதையில் இந்த ரயில் இயக்கப்படுகிறது. இது அழகாக, பொம்மைபோல் இருப்பதால் இருப்பதால் டாய் டிரெய்ன் என்றும் அழைக்கிறார்கள். இமயமலை அடிவாரத்தில் உள்ள சிலிகுரியில் புறப்பட்டு கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2,200 மீட்டர் உயரத்தில் உள்ள டார்ஜிலிங்கை அடைகிறது. பயணதூரம் 86 கி.மீ.
 
குட்டி குட்டி பெட்டிகளை பழைமை வாய்ந்த நீராவி என்ஜின் இழுத்துச் செல்வதைப் பார்க்கும்போதே பரவசம் தொற்றிக்கொள்ளும். இந்த ரயில்பாதை1879 - 1881ம் ஆண்டுகளில் அமைக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கியதாம். இது முதலில் சரக்குபோக்குவரத்துக்காக அமைக்கப்பட்டிருக்கிறது. இரண்டாம் உலகப்போரின் போது சிப்பாய்களையும் ஆயுங்களையும் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டது. அதன்பிறகே பயணிகள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
 
சிறப்புக்குரிய டார்ஜிலிங் இமாலயன் ரயில் 1999-ம் ஆண்டில் யுனெஸ்கோவால் இந்தியாவின் உலக பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. இது உலக அளவில் பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்ட 2வது ரயில் ஆகும். (முதல் ரயில் ஆஸ்திரியாவின் ஸெம்மரிங் ரயில்).
 
* நீலகிரி மலைரயில்:
 
தமிழகத்தில் கோயம்புத்தூர் அருகே மேட்டுப்பாளையம்- ஊட்டி இடையே மலைப்பாதையில் நீலகிரி மலைரயில் இயக்கப்படுகிறது. 1845ம் ஆண்டில் ரயில்பாதை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 1899ம் ஆண்டில் போக்குவரத்து தொடங்கியது. மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையே மிகவும் சரிவான பாதை என்பதால் தண்டவாளத்தின் நடுவே பல்சக்கரம் அமைத்துள்ளனர். பல்சக்கரங்களை பற்றிக்கொண்டே ரயில் இயங்குகிறது.
 
மேட்டுப்பாளையம் - குன்னூர் வரை நீராவி என்ஜினும் பின்னர் டீசல் என்ஜினும் பயன்படுத்தப்படுகிறது. பயணதூரம் 46கி.மீ.தான் என்றாலும் பயணநேரம் சுமார் ஐந்தரைமணி நேரமாகும். வழியில் 208 வளைவுகள், 16குகைகள், 250 பாலங்கள் உள்ளன. எங்கு திரும்பினும் பசுமை, நீரோடை, காட்டு மிருகங்கள் என இயற்கைமயம் மனதைத் தாலாட்டும்.
 
நீலகிரி மலைரயில் 2005ம் ஆண்டில் யுனெஸ்கோவால் உலக பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.
 
* கல்கா- சிம்லா ரயில்:
 
இமயமலை அடிவாரத்தில் உள்ள குளுகுளு ஜிலுஜிலு நகரம் சிம்லா. இமாசலப்பிரதேச மாநிலத்தின் தலைநகர். கல்கா நகரத்தில் இருந்து சிம்லாவுக்கு ரயில்பாதை அமைக்கப்பட்டதன் பின்னணி முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியாவை ஆண்டுவந்த ஆங்கிலேயருக்கு சிம்லாமீது ஒரு மோகம் உண்டு. காரணம், அங்கு நிலவும் குளுகுளு சீதோஷ்ண நிலை.
 
அதனால் பிரிட்டிஷ் இந்தியாவின் கோடைக்கால தலைநகராக சிம்லாவை மாற்றிக்கொண்டனர். ராணுவத்தின் தலைமை அலுவலகத்தையும் சிம்லாவில் அமைத்தனர். இதற்காக போக்குவரத்து கட்டமைப்பை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அப்போதுதான் கல்கா- சிம்லா ரயில்பாதை அமைக்கப்பட்டது. 1903ம் ஆண்டு முதல் ரயில்போக்குவரத்து தொடங்கியது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2,076 மீட்டர் உயரத்தில் உள்ள சிம்லாவுக்கு ரயிலில் செல்வது சுகமான சூப்பரான அனுபவம்.
 
கல்கா - சிம்லா ரயில் 2008ம் ஆண்டில் உலக பண்பாட்டுச் சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது.
 

ஆனந்த ரயில்களில் உங்களது ஆனந்தப் பயணம் எப்போது?

சிங்கமும்..ஈ யும்..(நீதிக்கதை)




ஒரு காட்டில் சிங்கம் ஒன்று இருந்தது.அது தனது பலத்தாலும், கர்ஜனையாலும் காட்டில் இருந்த அனைத்து மிருகங்களையும் பயமுறுத்தி வந்தது.
பயம் காரணமாய் அனைத்து மிருகங்களும் சிங்கத்திடம் அடக்கமாய் இருந்து வந்தன.
இந்நிலையில் 'ஈ" ஒன்று பயமின்றி சிங்கத்தின் மீது வந்து அமர்ந்தது.
அதைப் பார்த்ததும் சிங்கம் கோபமுற்று கர்ஜனை செய்தபடியே..'உன்னை என் பற்களால் கடித்துக் குதறுவேன்..நகங்களால் பிறாண்டுவேன்' என்றது.
அதற்கு ஈ யோ நீ பலசாலியாய் இருக்கலாம்..உன்னைப் பார்த்து மற்ற மிருகங்கள் பயப்படலாம்.ஆனால் நான் பயப்பட மாட்டேன்.இன்னும் சொல்லப்போனால்..நீ சொன்னபடி உன்னையே நீ பற்களால் கடித்துக் கொள்ளவும், நகங்களால் பிறாண்டிக் கொள்ளவும் செய்வேன்" என்றது.
சிங்கம் கோபத்துடன் சவால் விட..ஈ பறந்து வந்து சிங்கத்தின் மூக்கிலும்,முகத்திலும் அமர்ந்து அதைக் கடித்தது. ஈ முதுகில் அமர்ந்த போது..அதை விரட்ட சிங்கம்.தன் பற்களால் முயன்ற போது..ஈ பறந்து விட சிங்கம் தன் முதுகைத் தானே கடித்துக் கொண்டது.
ஈ சிங்கத்தின் முகத்தில் அமர்ந்த போது, அதை விரட்ட தன் கால் நகங்களால் முயல..ஈ பறக்க...சிங்கம் தன் நகங்களால் தன் முகத்தையே பிறாண்டிக் கொண்டது.
சிங்கத்தை நன்கு இம்சை செய்து விட்டு ஈ பறந்தது.
அப்போதுதான் சிங்கத்திற்கு புரிந்தது..தான் உடலளவில் வீரமாய் இருந்தாலும்..ஒரு சிறு ஈ தன்னை சங்கடப் படுத்தி விட்டதே என..உருவத்தைக் கண்டு யாரையும் எடை போடக் கூடாது என உணர்ந்தது.
இதைத்தான் வள்ளுவரும்..

உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்
கச்சாணி யன்னார் உடைத்து

என்றார்.
(பொருள்- உருவத்தால் சிறியவர்கள் ஆனாலும் யாரையும் கேலி செய்து அலட்சியப் படுத்த்க் கூடாது. பெரிய தேர் ஓடக் காரணமாய் இருப்பது சிறிய அதன் அச்சாணியே)

 
back to top