.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, October 16, 2013

சுனாமியைக் கண்டறிவதற்கு கடலுக்கடியில் இன்டர்நெட்: விஞ்ஞானிகள் முயற்சி!


  சுனாமியைக் கண்டறிவதற்கு கடலுக்கடியில் இன்டர்நெட்: விஞ்ஞானிகள் முயற்சி

 வானளாவிப் பரந்து விரிந்திருக்கும் இணையதளத் தொடர்புகளின் சேவை எல்லையை ஆழ்கடலின் அடியிலும் பயனளிக்கும் வகையில் விரிவுபடுத்த அமெரிக்க விஞ்ஞானிகள் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர்.

சுனாமி அறிவிப்பு, மாசுபாடுகள் கண்டறிதல் மற்றும் நிகழ்வுகள் கண்காணிப்பு போன்றவற்றைக் கண்டறிவதற்கும் ஆழ்கடல் இணையதள இணைப்புகளை ஏற்படுத்தும் சோதனை முயற்சியில் அவர்கள் வெற்றி பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலம் சார்ந்த வயர்லெஸ் நெட்வொர்க்குகள், செயற்கைக்கோள் மற்றும் ஆண்டெனா வழியாக வரும் தரவுப் பரிமாற்றத்திற்கு ரேடியோ அலைகளைச் சார்ந்திருந்தன.

ஆனால், தண்ணீருக்கடியில் இவற்றின் செயல்பாடு சக்தி வாய்ந்ததாக இருக்காது என்பதால் பொதுவாக ஒலி அலை சார்ந்த தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. தற்போது இணையதளப் பயன்பாடுகள் மூலம் ஏற்படுத்தப்படும் வயர்லெஸ் நெட்வொர்க்குகள் கடலுக்கடியில் இருந்து தரவுகளைச் சேகரிக்க முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் திறமையாகச் செயல்படும் என்று இத்திட்டத்தின் முன்னணி ஆராய்ச்சியாளரும், பஃபெல்லோ பல்கலைக்கழகத்தின் மின்பொறியியல் இணை பேராசிரியருமான டொம்மாசோ மெலோடியா தெரிவிக்கின்றார்.

சுனாமி போன்ற பேரழிவு ஏற்படும் காலங்களில் ஒரு ஸ்மார்ட்போன் அல்லது கணினியில் யாருக்கும் கிடைக்கும் இந்தத் தகவலை வைத்து மக்களைக் காப்பாற்ற முடியும் என்று இவர் கூறுகின்றார்.

பல அமைப்புகள் உலகளவில் இந்த முறையைப் பயன்படுத்தினாலும் கட்டமைப்பு மாறுபாடு காரணத்தினால் அவற்றுள் செய்திகளைப் பகிர்ந்தளித்தல் என்பது இயலாத ஒன்றாக உள்ளது.

ஆனால், நீருக்கடியில் பயன்படுத்தப்படும் இந்த புதிய மேம்படுத்தப்பட்ட தொடர்புகளில் தகவல் பரிமாற்றங்கள் எளிதாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். சோதனை முயற்சியில் வெற்றி பெற்றுள்ள இந்தப் புதிய தொழில்முறை பேரழிவுக் காலங்களில் கடலோர மக்களை முன்கூட்டியே எச்சரித்துப் பாதுகாக்க உதவும் என்று விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, October 15, 2013

டைபாய்ட் காய்ச்சலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறை!



டைபாய்ட் காய்ச்சலைப் பரவும் கிருமி மனித உடலில் ஒரு முறை நுழைந்து விட்டால் அது நிரந்தரமாக மனிதக் குடலில் ஒட்டிக் கொள்கிறது.


மிகக் கடுமையான காய்ச்சலை கொடுக்கும் டைபாய்ட் கிருமியிடம் இருந்து நம்மை தற்காத்துக் கொள்வதற்கு சில வழிமுறைகளைக் கையாள வேண்டும்.


அதற்கு, பாதுகாக்கப்பட்ட உணவு மற்றும் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட உணவை மட்டுமே உண்ண வேண்டும்.


நன்கு காய்ச்சி ஆற வைத்த நீரை மட்டுமே பருக வேண்டும்.


சாப்பிடும் முன்பு கைகளை நன்கு கழுவ வேண்டும்.


எந்த பழங்களையும் கழுவாமல் சாப்பிடக் கூடாது.


டைபாய்ட் காய்ச்சலுக்கு என்று இருக்கும் தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை போட்டுக் கொள்ள வேண்டும்.


சாலையோரம் விற்கப்படும் குளிர்பானங்களில் ஐஸ் கட்டிகளை போட்டுக் கொள்வதை தவிர்க்கவும்.

மிக உயர்ந்த தொட்ட பெட்டா சிகரம் - சுற்றுலாத்தலங்கள்!

தமிழகத்தின் மிக உயர்ந்த சிகரம் என்றும், தென்னிந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய மலை என்றும் கூறப்படுகிறது தொட்ட பெட்டா. கடல் மட்டத்தில் இருந்து 8,650 அடி உயரத்தில் உள்ளது தொட்ட பெட்டா மலை. இது மிக அடர்ந்த வனப்பகுதியைக் கொண்ட மலையாகும்.


இது தமிழக அரசின் சுற்றுலா துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஊட்டியில் இருந்து சுமார் 9 கிலோ மீட்டர் தொலைவில் ஊட்டி - கோத்தகிரி சாலையில் தொட்ட பெட்டா மலை அமைந்துள்ளது. இந்த மலையில் இருந்து சாமுண்டி மலை அழகாகக் கண்டு ரசிக்கலாம்.


 சிறந்த சுற்றுலா தலமாக விளங்கும் தொட்டபெட்டா, காலை எட்டு மணி முதல் மாலை 5 மணி வரையில் மட்டுமே பொது மக்களின் பார்வைக்காக திறந்திருக்கும். பின்னர் மூடப்படும். இங்கு ஏராளமான சினிமா படப்பிடிப்புகள் நடந்துள்ளன. அங்கு செல்லும் தமிழக சுற்றுலாப் பயணிகளில் பலரும், அந்த படம் இங்கு எடுக்கப்பட்டது, இந்த பாடல் காட்சி இங்குதான் எடுத்துள்ளார்கள் என்ற வசனத்தை தவறாமல் கூறுவார்கள்.


நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த தொட்ட பெட்டா மலைக்கு கன்னடத்தில் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. அதாவது தொட்ட என்றால் பெரிய என்றும், பெட்டா என்றால் மலை என்றும் கன்னடத்தில் பொருள் கூறுவர். அதன் அடிப்படையிலேயே இந்த பெரிய மலைக்கு தொட்டபெட்டா என்று பெயர் வந்துள்ளது.


ஆனால், இந்த மலை சங்க காலத்தில் தோட்டி மலை என்று அழைக்கப்பட்டுள்ளது. தொல்காப்பியத்தில் இந்த மலையின் பெயர் நளிமலை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


ஊட்டியில் இருந்து சாலை வழியாக தொட்ட பெட்டா செல்லலாம். போகும் வழி எங்கும் பச்சை பசேலென்று இயற்கைக் காட்சிகள் உங்கள் கண்களுக்கு விருந்தளிக்கும். தொட்ட பெட்டா மலையின் ஒரு பகுதி வரையில் மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. அதன் பிறகு சற்று குறுகலான பாதையில் நடந்து செல்ல வேண்டும்.


தொட்ட பெட்டா மலையில் வாகனத்தில் செல்லும் போது வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதேப்போல, தொட்ட பெட்டா மலையின் மீதும் சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இங்கு ஏப்ரல் முதல் ஜூன் மற்றும் செப்டம்பர் முதல் அக்டோபர் வரை சுற்றுலா செல்ல உகந்த காலங்களாகும்.


அங்கிருந்து இயற்கை அழகைக் கண்டு ரசிக்க இரண்டு தொலைநோக்கிகள் அமைக்கப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டத்தின் முழு அழகையும் இந்த தொலைநோக்கிகள் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன. சுற்றுலா சீசன் நேரத்தில் ஒரு நாளைக்கு சுமார் 4000 பேர் வரை இந்த தொலைநோக்கி வழியாக நீலகிரியை கண்டு களிப்பார்கள் .


தொட்டபெட்டா சிகரத்தின் மேல் ஒரு அழகான பூங்காவும் சுற்றுலாத் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. குழந்தைகளும், இளசுகளும் பார்த்து மகிழ ஏற்ற இடமாக அது உள்ளது. புகைப்பட பிரியர்களுக்கு ஏற்ற இடமும் கூட.


வாகனத்தில் இருந்து இறங்கி நடக்கும் பாதையில் சில கடைகளும் ஆங்காங்கே முளைத்துள்ளன. பச்சைக் காய்கறி முதல் சூடான பஜ்ஜி வரை அங்கு கிடைக்கின்றன.


குளிர் காலங்களில் ஊட்டியை விட இங்கு மிக அதிகமாக குளிர் நிலவுகிறது. எனவே, இங்கு கால நேரத்தில் சுற்றுலா செல்ல புறப்படுவோர் மறக்காமல் சுவெட்டரைக் கொண்டு செல்வது நல்லது.

ரூ.8 கோடி செலவில் வண்டலூரில் சைக்கிள் ரேஸ் உள் விளையாட்டரங்கம்!


 


சைக்கிள் ரேஸ் பிரியர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தி... சென்னையில் முதல் முறையாக சைக்கிள் ரேஸ் உள்விளையாட்டரங்கம் கட்டப்பட உள்ளது. இந்த விளையாட்டரங்கத்துக்கான இடம் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளது.நகரின் மையப்பகுதியில் இந்த விளையாட்டு அரங்கம் அமைய வேண்டுமென்பதற்காக செனாய் நகர் திருவிக பூங்கா அருகே ஒரு இடத்தை தேர்வு செய்ய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்டிஏடி) கோரிக்கை வைத்தது.

 

இந்த இடத்தையும், வண்டலூரில் தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக வளாகத்தையும் மாநகராட்சி ஆய்வு செய்தது.
இறுதியில், வண்டலூரில் சைக்கிள் ரேஸ் உள்விளையாட்டரங்கம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:


செனாய் நகரில் நிலத்தின் மதிப்பு மிக அதிகமாக உள்ளது. அந்த இடத்தை வருவாய் அதிகமாக கிடைக்கும் வேறு பணிக்கு பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளோம். அதனால், சைக்கிள் ரேஸ் உள்விளையாட்டரங்கை வண்டலூரில் அமைக்க முடிவு செய்துள்ளோம்.


இதன் திட்ட மதிப்பீடு ரூ.8 கோடி. கட்டுமானப்பணிகள் அடுத்தாண்டு ஜனவரி மாதம் தொடங்கும். சுமார் ஆறரை ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள இந்த அரங்கில் வீரர், வீராங்கனைகள் பயிற்சி செய்ய தனி தளம், போட்டிகள் நடத்துவதற்கான தளம் என சர்வதேச தரத்தில் அமைக்கப்பட உள்ளது. பணிகள் தொடங்கி ஓராண்டில் நிறைவு பெறும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
 
back to top