நாம் கீரிப்பிள்ளை என்று சொல்லும் உயிரினம் இந்தியாவைத்தவிர மற்ற நாடுகளில் இல்லை. கீரிக்கும் பாம்புக்கும் ஒத்துவராது என்பது நமக்குத் தெரிந்ததுதான். ஒரு சமயம் மேற்கிந்திய தீவுகளில் ஒன்றான ஜமைக்காவில் ‘‘பெரிதிலேன்ஸ்’’ என்று அழைக்கப்படும் விஷப்பாம்புகள் அதிகம் இருந்தன. அவற்றால் கடிபட்டு இறந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகம். பெருகி வந்த அந்த பாம்புகளை எப்படி கட்டுப்படுத்துவது என்று அங்கு வசித்தவர்கள் தவித்தனர்.
அப்போதுதான் இந்தியாவில் கீரிப்பிள்ளை என்ற உரியினம் இருப்பதும், அதற்கு பாம்புகள்தான் பிடித்தமான உணவு என்பதும் அவர்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இந்தியாவை தொடர்பு கொண்டார்கள். இங்கிருந்து நூற்றுக்கணக்கான கீரிப்பிள்ளைகள் கப்பலில் அனுப்பப்பட்டன. அங்கு இறங்கிய கீரிப்பிள்ளைகளுக்கு அந்த நாடு மிகவும் பிடித்துப்போனது. காரணம் எங்கு பார்த்தாலும் அவற்றுக்கு பிடித்த உணவான பாம்புகள் சுற்றிவந்ததுதான்.
வயிறு நிறைய பாம்புகளை பிடித்துச்சாப்பிட்ட அவை காடு நிறைய குட்டிகளையும் போட்டது. இதனால் ஒரு சில ஆண்டுகளில் ஜமைக்கா முழுவதும் கீரிப்பிள்ளைகள் அதிகரித்து பாம்புகளின் எண்ணிக்கை குறைந்தது. இதனால் மிகவும் சந்தோஷப்பட்ட அங்குள்ள மக்கள் கீரிகளை தங்கள் செல்லப்பிள்ளைகளாக வளர்க்கத் தொடங்கினர். ஆனால் அந்த சந்தோஷம் சிறிது காலத்திற்குத்தான் நீடித்தது.
காரணம் பாம்புகளை ஒட்டுமொத்தமாக அழித்த கீரிப்பிள்ளைகள் உணவின்றி தவித்தன. இதனால் வீடுகளில் மக்கள் வளர்த்த கோழி, வாத்துகளை பிடித்து சாப்பிடத்தொடங்கின. இதுதொடர்ந்த நிலையில் அவற்றிடம் இருந்த தங்கள் வளர்ப்பு பறவைகளை காப்பாற்றுவது அங்கிருந்தவர்களுக்குபெரிய வேலையாகிப்போனது.
பாம்பை எப்படி ஒழிப்பது என்று யோசித்து கீரிப்பிள்ளைகளை நாட்டுக்குள் கொண்டு வந்த அவர்கள், பின்னர் கீரியை எப்படி ஒழிப்பது என்று யோசிக்கும் நிலை உருவானது. இதன் மூலம் ஒன்று மட்டும் அந்த நாட்டு மக்களுக்கு தெளிவாக புரிந்தது. பாம்புகளை ஒழிப்பது சுலபம்...ஆனால் கீரிகளை அதுபோல ஒழிக்க முடியாது என்பதுதான் அது.