ஆன்லைனில் படம் காட்டலாம்; புதிய இணையதளம்.
லைவ் ரிலே போல இணையத்தில் லைவாக புகைப்படங்களை பகிர்ந்து கொள்ள முடிந்தால் எப்படி இருக்கும் ? இந்த அனுபவத்தை சோதித்து பார்க்க லைவ்.பிக்ஸ்.இயோ சேவையை பயன்படுத்தி பார்க்க வேண்டும். அடிப்படையில் புகைப்பட பகிர்வு சேவையான இந்த தளம் இணையம் வழி புகைப்படங்களை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள உதவுகிறது. புகைப்பட பகிர்வு சேவை தான் ஏற்கனவே நிறைய இருக்கின்றனவே என்று அலுத்துக்கொள்ளும் முன் கவனிக்க, இந்த சேவை புகைப்பட பகிர்வில் புதுமையை கொண்டு வந்திருக்கிறது .
எல்லா புகைப்பட பகிர்வு சேவை போலவே ,இதிலும் முதலில் பகிரவேண்டிய புகைப்படத்தை பதிவேற்ற வேண்டும். புகைப்படம் என்பதைவிட புகைப்படங்களை பதிவேற்றினால் சிறப்பாக இருக்கும். உடனே உங்கள் புகைப்பட்டத்துக்கான இணைய முகவரி ஒன்று உருவாக்கி தரப்படும். அந்த முகவரியை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த முகவரியை கிளிக் செய்தால் நண்பர்கள் கிளிக் செய்தவுடன் அசந்து போவார்கள். காரணம் நீங்கள் அனுப்பிய புகைப்படங்களை அவர்களால் பார்க்க முடியும் என்பது மட்டும் அல்ல: அந்த படங்களின் பின்னே உள்ள கதைகளை நீங்கள் விவரிப்பதை அவர்கள் கேட்கலாம் என்பதால் தான் இந்த அசரல். ஆம் , புகைப்படங்களை கிளிக் செய்ததுமே இந்த சேவை ஒரு தனி அரட்டை அறையை உருவாக்கி கொடுக்கும். இம்ங்கிருந்து நீங்கள் ஒவ்வொரு புகைப்படம் எடுக்கப்பட இடம் பற்றி வரணனை செய்ய நண்பர்கள் கேட்டு ரசிக்கலாம்.
எங்காவது விடுமுறைக்கு போய்வந்ந்தால் விட்டுக்கு வந்த நண்பர்களிடம் ஆல்பத்தை காட்டி சுற்றுலா அனுபவத்தை விவரிப்பது போல , இந்த சேவை ஆன்லைனில் நண்பர்களிடம் புகைப்படம் பின்னே உள்ள கதைகளை பகிர்ந்து கொள்ள உதவுகிறது.
இப்போது சொல்லுங்கள் , புதுமையான புகைப்பட பகிர்வு சேவை தானே.
இணையதள முகவரி: http://live.pics.io/