.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, December 28, 2013

கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான்..



கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான்..


1.எண்ணங்கள் வெவ்வேறாக இருந்தாலும் , ஒருவர் எண்ணத்திற்கு ஒருவர் மதிப்பு தந்து சொல்வதை காதில் வாங்க வேண்டும்.


2.கணவன் மட்டுமே வேலைக்கு செல்லும் வீட்டில் ,தன்னால் தான் குடும்ப பொருளாதாரம் இயங்குகிறது என்பதை எப்போதும் கணவன் வார்த்தைகளில் வெளிப்படுத்தக் கூடாது.


3.மனைவியும் வேலைக்கு செல்லும் வீட்டில், நானும் தான் வேலைக்கு போறேன் என்ற வார்த்தையை மனைவி அடிக்கடி சொல்லக் கூடாது.


4.இவரிடம்/இவளிடம் இதைச் சொன்னால் பெரிய பூகம்பமே வெடிக்குமோ என்ற பயத்தை ஒரு போதும் மனைவிக்கு கணவனும், கணவனுக்கு மனைவியும் தரக்கூடாது.பொய்யின் ஆரம்பமே பயம் தான்.


5.எவ்வளவு பெரிய சண்டை என்றாலும் உங்கள் இருவர் பற்றி மட்டும் தான் பேச வேண்டும்.கணவன் குடும்பத்தாரை பற்றி மனைவியும், மனைவியின் குடும்பத்தாரை பற்றி கணவனும் பேசவே கூடாது.தவறுகளில் மிகப்பெரிய தவறு இது.


6.மனைவியை தன்னில் ஒரு பாதியாக பார்க்காவிட்டாலும் வேலைக்காரியாய் பார்க்காமல் இருப்பது கணவனுக்கு அழகு.


7.மனைவியை ஏற்றது போல் அவள் குடும்பத்தையும் முழுமனதாய் கணவன் ஏற்க வேண்டும்.கணவனை ஏற்றது போல் அவன் குடும்பத்தையும் முழுமனதாய் மனைவி ஏற்க வேண்டும்.( இப்படி வாழ்ந்தால் முதியோர் இல்லங்கள் நிச்சயம் குறையும்)


8.கணவன் நண்பர்களுடன் ஊர் சுற்றி விட்டு நேரம் கழித்து வீடு வருவது. மனைவியை மட்டும் வீட்டுக்குள்ளே ஆயுள் கைதி ஆக்குவது, அவளை வெளியுலகம் அறியவிடாமல் செய்வது தவறு. படிப்பறிவில்லா பெண்களை சில ஆண்கள் இப்படித்தான் நடத்துகின்றனர்.


9.கணவனும் மனைவியும் தனித் தனியே வெளியில் சென்றால் நேரமாய் வீடு திரும்ப வேண்டும் .அப்படி நியாயமான காரணத்திற்காக தாமதம் ஏற்பட்டால் ஒருவர் சொல்லும் காரணத்தை ஒருவர் நம்பி ஏற்றக் கொள்ளவேண்டும்.


10.அம்மாவின் சமையல் பக்குவத்தை எதிர்பார்த்து மனைவியின் சமையலை சாப்பிட்டு, ஏமாற்றம் என்றதும் அவளை திட்டக் கூடாது. அப்படி திட்டுவேன் தான் என்றால் அதற்கு முன் ஒன்றை யோசியுங்கள். திருமணம் ஆன புதிதில் உங்க அம்மாவும் இப்படித் தான் உங்க அப்பாவிடம் திட்டு வாங்கி இருப்பார்கள் சமையலுக்காக.பக்குவம் பார்த்ததும் வந்து விடக்கூடியதல்ல.பல வருட அனுபவத்தில் வருவது.


நரகமாய் இருக்கும் வீடு சொர்க்கம் ஆவதும், சொர்க்கமாய் இருந்த வீடு நரகம் ஆவதும் கணவன் மனைவி நடந்து கொள்ளும் விதத்தில் தான் இருக்கிறது.

அதிகம் கோபம் கொள்ளும் ஆசிரியரை கையாளுவது?



அதிகம் கோபம் கொள்ளும் ஆசிரியரை கையாளுவது எப்படி?


ஒரு மாணவராக உங்களுக்கு அதிகமாக வீட்டுப்பாடம் கொடுக்கும் அனைத்து ஆசிரியர்களுமே கொடுமை படுத்தும் ஆசிரியர்களின் வகையறாக்களின் கீழ் வந்து விடுகின்றனர். ஆனால் அது உண்மை இல்லை. உண்மையிலே கொடுமை படுத்தும் கஷ்டமான வகை ஆசிரியர்களை பற்றி இங்கே பார்க்க போகிறோம். பாடம் கற்பிக்கும் துறையை மிகவும் விரும்பினாலும் கூட சில ஆசிரியர்களால் மாணவர்களை பொறுமையாக கையாள தெரியாது. அவர்களே சகித்து கொள்ள முடியாத ஆசிரியர்கள் பட்டியலில் அடங்குவார்கள்.


அப்படிப்பட்டவர்கள் மாணவர்களுடன் தெளிவான மனநிலையில் நடந்து கொள்ள மாட்டார்கள். நீங்கள் டீனேஜ் பருவத்தில் உள்ளவர்கள் என்பதால் உண்மையான சூழ்நிலையை உணர்ந்து கொள்ள ஒரு முறைக்கு இரண்டு முறை உங்கள் எண்ணங்களை அலசுங்கள். சில நேரம் ஏதாவது ஒரு காரணத்திற்காக உங்களுக்கு ஒரு ஆசிரியரை பிடிக்காமல் போகலாம். ஆனால் அவைகளையெல்லாம் ஓரமாக வைத்து விட்டு ஒரு ஆசிரியர் உண்மையிலேயே கஷ்டப்படுத்துவரா என்பதை நிலைமையை வைத்து புரிந்துக் கொள்ளுங்கள்.


உங்கள் வகுப்பில் இருக்கும் மற்ற மாணவர்களை கேட்டால், சில ஆசிரியரால் தங்கள் பள்ளி வாழ்க்கையையே திகிலாக உள்ளது என்று கூறுவார்கள். ஒரு மாணவராக அவ்வகை ஆசிரியர்களை சமாளிக்க உங்களுக்கு கஷ்டமாக இருக்கும். கஷ்டமான ஆசிரியர்களை டீனேஜ் மாணவரான நீங்கள் கையாள சில டிப்ஸ் உள்ளது. உங்கள் குறைகளை எல்லாம் உன்னிப்பாக கவனியுங்கள். பின் இவ்வகை கஷ்டமான ஆசிரியர்களை கையாளுவது மிகவும் கஷ்டம் என்று நீங்கள் உணர்ந்தால் கீழ் கூறிய எளிய, ஆனால் சிறந்த டிப்ஸ்களை பின்பற்றுங்கள்.


எரிச்சல் ஊட்டாதீர்கள்


எரிச்சலை உண்டாக்கினால் உங்கள் ஆசிரியர் கோபத்தின் உச்சிக்கே போய் விடுவார் என்று தெரிந்தால் நீங்கள் அமைதியாகவும் பொறுமையாகவும் இருப்பது நல்லது. பொறுமையாக இருப்பது என்பது ஒவ்வொரு டீனேஜ் மாணவர்களும் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான டிப்ஸாகும். உங்கள் ஆசிரியர் நிலைமையை மோசமாக மாற்றும் அளவிற்கு ஒரு சூழ்நிலையை நீங்களாகவே உருவாக்கி விடாதீர்கள்.


குறைபாடற்ற மாணவராக நடந்து கொள்ளுங்கள்:


குறை கூறிக் கொண்டிருக்கும் ஆசிரியரை கையாள வேண்டுமானால், அந்த ஆசிரியர் சம்பந்தப்பட்ட அனைத்திலேயும் நீங்கள் ஒரு குறைபாடற்ற மாணவராக மாறி விடுங்கள். வீட்டுப்பாடங்களை தினமும் செய்து, ஒழுக்கமாகவும் பணிவாகவும் நடந்து கொள்ளுங்கள். பல ஆசிரியர்களுக்கு குறைபாடற்ற ஒழுக்கமான மாணவர்களையே பிடிக்கும். அதனால் இந்த டிப்ஸை பின்பற்றி கஷ்டமான ஆசிரியர்களை சுலபமாக கையாளலாம்.

”உதவி சக்கரம்” ...?




ஒரு நாள் சாயங்கால வேளையில் வயதான பெண்மணி ஒருவர் கார் அருகில் வெகு நேரமாக நிற்பதை ஒருவர் கவணித்தார்.வாகணங்கள் செல்லும்போது அந்த பெண்மணி கை காட்டி நிறுத்தப்பார்த்தார் ,ஆனால் எந்த வாகனமும் நிற்கவில்லை.


அந்த நபர் அருகில் சென்று என்ன பிரச்சனை என்று அந்த பெண்மணியிடம் கேட்டார்.கார் டயர் பஞ்சர் ஆகி விட்டது என்று அந்த பெண்மணி கூறினார்.


என் பெயர் தயாளன் நீங்கள் காரில் உட்காருங்கள் நான் டயர் மாத்தி கொடுக்கிறேன் என்று டயரை கழட்ட ஆரம்பித்தார்.சிறிது நேரத்தில் மிகவும் கஷ்டப்பட்டு டயரை மாத்தினார் .


அந்த பெண்மணி உங்களுக்கு நான் எவ்வளவு பணம் தர வேண்டும் என்று கேட்டார்.நான் சிறியதாக ஒரு டீக்கடை நடத்தி வருகிறேன் ,அதில் இருந்து வரும் பணமே எனக்கு போதும்.நீங்கள் பணம் எதுவும் தரவேண்டாம் என்றார்.


நீங்கள் கஷ்டப்படும் நேரத்தில் என்னாலான உதவி செய்தேன் அவ்வளவே.நீங்கள் பண உதவி செய்ய வேண்டும் என்றால் வேறு யாராவது ஒரு நபர் கஷ்டத்தில் இருக்கும்போது என்னை நினைத்து பாருங்கள், அவர்களுக்கு உதவி செய்யுங்கள் என்றார்.


உதவி செய்வது என்பது ஒரு சக்கரம் மாதிரி சுழன்று கொண்டே இருக்க வேண்டும்.நான் உங்களுக்கு உதவி செய்தேன் நீங்கள் வேறு யாருக்காவது கஷ்டத்தில் இருக்கும்போது உதவி செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு தயாளன் நடக்க ஆரம்பித்தார்.


அந்த பெண்மணி தயாளனை ஆச்சரியத்துடன் பார்த்து விட்டு காரை எடுத்து கொண்டு சென்றார்.வழியில் தலைவலி எடுப்பது போல் இருக்கவே அருகில் உள்ள டீக்கடை அருகே காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார்.


டீக்கடை பார்ப்பதற்க்கு ரொம்பவே பரிதாபமாக இருந்தது,உள்ளே இருந்து ஒரு பெண் வந்து என்ன வேண்டும் அம்மா என்று கேட்டார்.வயதான பெண்மணி டீ கடையில் வேலை செய்யும் பெண்ணை பார்த்தார், அந்த பெண் ஒன்பது மாத கர்ப்பிணி என்பதை அவரிடம் பேசி தெரிந்து கொண்டார்.


குடிக்க டீ கொண்டு வாம்மா என்றார்.தயாளன் சொன்னது அவருக்கு நினைவு வந்தது.அந்த அம்மா டீ குடித்துவிட்டு 5000 ரூபாய் பணத்தை டேபிள் மேல் வைத்து விட்டு சென்று விட்டார்.


டீ கடையில் வேலை செய்த பெண் காபி டம்பளரை கழுவி வைத்து விட்டு வந்தார். டேபிளில் கட்டாக பணம் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.அதை எடுத்து கொண்டு அந்த வயதான பெண்மணியிடம் கொடுக்க ஓடினார்,அதற்குள் கார் கிளம்பி சென்று விட்டது.


கடையில் இருக்கும் வேலை எல்லாம் முடித்து விட்டு, கையில் அந்த வயதான பெண்மணி விட்டு சென்ற பணத்தையும் எடுத்து கொண்டு வீட்டுக்கு சென்றார்.


பிரசவ செலவுக்கு என்ன செய்ய போகிறோம் என்று புலம்பி கொண்டு இருந்த தன் கணவருக்கு இந்த பணத்தை காட்ட வேண்டும் என்று அருகில் சென்றார்.ஆனால் மிகுந்த அசதியால் தூங்கி கொண்டு இருந்தார் நம்ம தயாளன்.


”எதை நாம் செய்கிறோமோ, அதுவே நமக்கும் நடக்கும்”....

Friday, December 27, 2013

லைப் ஸ்டைலால் ஏற்படும் விளைவுகள்!





வயிற்று பிடிப்பு - ஜலதோஷம், தலைவலி போலத்தான் இந்த பாதிப்பும் எல்லா வயதினருக்கும் ஏதாவது ஒரு காரணத்தால் ஏற்படும். ஆனால், சமீப காலமாக, இளம் தலைமுறையினருக்கு பரவலாக வருகிறது. வயிற்றில் உள்ள தசைப்பிடிப்பு, வயிற்று வலி, மலச்சிக்கல், வாந்தி, பேதி, வயிறு உப்பி காணப்படுவது போன்ற குறைபாடுகள் எல்லாம் சாதாரணமாக வருபவை என்று நினைக்கக்கூடாது.

இந்த பாதிப்பின் ஒட்டுமொத்த பெயர், இர்ரிடபிள் பவல் சிண்ட்ரோம் (ஐ.பி.எஸ்.,) நேரத்திற்கு சாப்பிடாமல், வேலை பளு என்று ஏதாவது ஒரு காரணத்தை கூறி, கண்ட கண்ட நேரத்தில் சாப்பிடுவதால் ஏற்படும். அதுபோல, அதிக காரம், கொழுப்பு சார்ந்த உணவுகளை சாப்பிடுவதால், ஏற்படும் வாழ்க்கை முறை மாறுவதால் இப்போதுள்ள இளைய தலைமுறையினருக்கு அடிக்கடி வருகிறது. இதற்கு காரணம், அவர்களிடம் தொற்றியுள்ள மேற்கத்தியபாணி உணவுமுறை மட்டுமல்ல; வேலை பளு, தனி நபர் குணங்களை பொறுத்து ஏற்படும் மன அழுத்தமும் ஒரு முக்கிய காரணம். சரியான நேரத்தில், சரியான உணவை சாப்பிடாததுடன், மன அழுத்தமும் இருந்தால், அப்படிப்பட்டவர்களுக்கு ஐ.பி.எஸ்., கோளாறு அதிகமாக இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் இப்போது உறுதி செய்துள்ளனர்.

மூன்று வகை:

வயிற்று வலி, தசைப்பிடிப்பு போன்றவற்றால் அடிவயிற்றில் 'சுரீர்' என்று பெரும் வலி ஏற்படும். தொடர்ந்து வலிக்கும் போது எரிச்சலும் வரும்; சாப்பிட்ட உணவு ஜீரணிக்கவும் செய்யாது. இதையடுத்து வயிற்று, குடல் பகுதியில் பிரச்சினை தொடரும். ஐ.பி.எஸ்., கோளாறை மூன்றாக மருத்துவ நிபுணர்கள் பிரிக்கின்றனர்.

* அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படும் அடிவயிற்றில் வலி நீடிக்கும்.
* சிலருக்கு பேதி மட்டும் அடிக்கடி ஏற்படும். இதுவும் ஐ.பி.எஸ்., தான்.
* சிலருக்கு மலச்சிக்கல், பேதி இரண்டும் சேர்ந்தே இருக்கும். இது மூன்றாவது வகை.

அறிகுறிகள்:

அடிவயிற்றில் லேசாக 'சுரீர்' என்று வலி ஏற்படும். வயிறு உப்பியது போல தோன்றும். அடிக்கடி காஸ் பாதிப்பு இருக்கும். காரணமில்லாமல் திடீரென பேதி ஏற்படும்; மலச்சிக்கலும் நீடிக்கும். பாதிக்கப்பட்டவர் போகும் மலத்தில் சளி கலந்திருக்கும். உடல் எடை சிலருக்கு குறையும். வாந்தியும் ஏற்படும். ஏதாவது சாப்பிட்டபடியே இருக்கத் தோன்றும். காரணம் என்ன?

வயிற்றில் குடல்பகுதியில் செல்லும் உணவை ஜீரணிக்கச் செய்யும் போது, அவற்றை மலக்குடலில், தள்ளுவதற்கு தசைகள் உதவுகின்றன. சாப்பிடும் உணவு ஜீரணிப்பதற்கேற்ப, வயிற்று சுவரில் உள்ள தசைகள் விரிந்து சுருங்கியபடி செயல்படும் வயிற்று பிடிப்பு உள்ளவர்களுக்கு இந்த தசைகள் விரிந்து, சுருங்கும் செயல்பாட்டில் மாற்றம் ஏற்படும்.

சில சமயம் மிக பொதுவாக இருக்கும். சில சமயம் வேகமாக இயங்கும். இதனால் தான் மலச்சிக்கல், வாந்தி, பேதி ஏற்படுகிறது.

முன்னெச்சரிக்கை:

நேரத்திற்கு சாப்பிடுவதை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். ஏதோ காரணம், சொல்லி தாமதப்படுத்துவது, சில சமயம் அதிகம் சாப்பிடுவது கூடவே கூடாது.

நார்ச்சத்து உட்பட எல்லா சத்துக்களும் உள்ள வகையில் தினமும் உணவு வகைகளை சாப்பிட வேண்டும். கொழுப்பு, எண்ணெய் சமாச்சாரங்களை அறவே தள்ளி விட வேண்டும்.

சில உணவுகள் செரிமானம் ஆக நேரம் பிடிக்கும்; காய்கறி, நார்ச்சத்து உள்ள உணவுகள் சீக்கிரம் ஜீரணம் ஆகும்.

வந்த பின்....

* அடிக்கடி பேதி ஏற்பட்டால், நார்ச்சத்து உணவுகளை தவிர்க்க வேண்டும்.
* மலச்சிக்கல், பேதி ஏற்பட்டால், டாக்டர் சொன்னபடி உணவு உட்கொள்ள வேண்டும்.
* எந்த வித வயிற்றுக்கோளாறும் வராமல் தடுக்க, சரியான நேரத்தில் சாப்பிட்டு, உடற்பயிற்சி செய்து வந்தால் போதும்.

மன அழுத்தம்:

நாம் சாப்பிடும் உணவுகளால், ஏற்படும் பாதிப்பு தான் ஐ.பி.எஸ்., என்று தான் இதுவரை டாக்டர்கள் கூறிவருகின்றனர். ஆனால் மன அழுத்தமும் முக்கிய காரணம் என்று இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மன அழுத்தம்தான் சர்க்கரை, ரத்த அழுத்தத்துக்கு முக்கிய காரணம் என்று ஏற்கனவே நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்த நிலையில், வயிற்று பிடிப்புக்கும் அதுதான் காரணம் என்பது தெரியவந்துள்ளதால், ஐ.பி.எஸ்.,க்கான அறிகுறி ஏற்பட்டால், உடனே டாக்டரிடம் காட்டி விடுவது நல்லது.

உணவு நிர்வாகம்:

வயிற்றுக் கோளாறு எதுவாக இருந்தாலும், அதற்கு அடிப்படை ஐ.பி.எஸ்., ஆகத்தான் இருக்கும். உணவு நிர்வாகம் சரியில்லாவிட்டால், இதில் ஆரம்பித்து, பெரிய கோளாறில் கொண்டு விடும் ஆபத்து உள்ளது. பால் போன்ற சில பொருட்கள், சில காய்கறிகள், பழங்கள் சிலருக்கு அலர்ஜியாக இருக்கும். அப்படி அலர்ஜி ஏற்பட்டாலும், ஐ.பி.எஸ்., ஏற்படும். அதனால், அந்த உணவுகளை தவிர்ப்பது தான் சரியானது.

லைப் ஸ்டைல்:

இளைய தலைமுறையினரின் வாழ்க்கை முறை, உணவு முறை அடியோடு மாறியுள்ளதால், பெண்களில் பத்தில் ஆறு பேர், ஆண்களில் நான்கு பேருக்கு இந்த பாதிப்பு காணப்படுகிறது என்று சமீபத்தில் நடத்திய சர்வேயில் தெரியவந்துள்ளது.
 
back to top