.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, January 15, 2014

செபி தீவிர நடவடிக்கை -முதலீட்டாளர்களின் குறைகளைக் கேட்டறிய....




 பிபிஓ எனப்படும் வெளிப்பணி ஒப்படைப்பு மையங்கள் மூலம் பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் குறைகளைக் கேட்டறிய பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) திட்டமிட்டுள்ளது. இதற்காக பிபிஓ-க்களிடம் இதற்கு ஆகும் செலவு குறித்து அழைப்பு டெண்டரை கோரியுள்ளது.

200 ஏஜென்டுகளையும் ஒருங்கிணைத்து உதவி மையத்தை இத்தகைய பிபிஓ-க்கள் செயல்படுத்த வேண்டும். இதற்கான அழைப்பு டெண்டர் கோரப்பட்டுள்ளது. ஹெல்ப்லைன் எனப்படும் தொலைபேசி வழி குறைகேட்பு மையத்தை குறைவான பணியாளர்களின் உதவியோடு அதாவது 50 பணியாளர்களுடன் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்குரிய அடிப்படை கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட நிறுவனங்களுக்கு மட்டுமே இதற்கான அனுமதி அளிக்கப்படும். இப்போது 50 ஏஜென்டுகளை ஒருங்கிணைக்கும் வகையிலான இந்த ஹெல்ப்லைன் அடுத்த மூன்று ஆண்டுகளில் 200 பணியாளர்களாக விரிவுபடுத்தப்படும் என்றும் செபி தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு 14 பிராந்தித மொழிகளில் உதவிகளை அளிக்கும் வகையில் இந்த தொலைபேசி வழி குறைகேட்பு மையங்கள் இருக்க வேண்டும். ஆங்கிலம், ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், வங்காளம், மலையாளம், தெலுங்கு, உருது, கன்னடம், ஒரியா, பஞ்சாபி, காஷ்மீரி ஆகிய பிராந்திய மொழிகள் இதில் அடங்கும். ஏற்கெனவே கட்டணமில்லா தொலைபேசி சேவையை வாடிக்கையாளர்களுக்கு செபி ஏற்படுத்தித்தந்துள்ளது. இத்தகைய சேவை 2011-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது.

இத்தகைய சேவையை விரிவுபடுத்தும் வகையில் தற்போது திட்டமிடப்பட்டுள்ளது. ஹெல்ப்லைன் வசதியை ஏற்படுத்தித் தர முன்வரும் நிறுவனங்கள் தங்களைப் பற்றிய தகவலை 21 நாள்களுக்குள் அனுப்ப வேண்டும் என்று செபி அறிவுறுத்தியுள்ளது. இத்தகைய நிறுவனங்கள், வாடிக்கையாளரிடமிருந்து வரும் அழைப்புகளுக்கு ஏற்ப பதில் அளிக்க வேண்டும். யாரிடம் புகார் தெரிவிப்பது மற்றும் வர்த்தக கணக்கு தொடங்குவது உள்ளிட்ட தகவலை அளிக்க வேண்டும்.

இது தவிர, ஏஜென்டுகள் தங்களது வாடிக்கையாளர் பற்றிய முழு தகவலை அதாவது பங்கு பரிவர்த்தனை குறித்த அளிப்பதற்கு முதலீட்டாளர்களுக்கு உதவும் வகையில் இது அமைய வேண்டும். இந்த ஹெல்ப்லைன் வசதியில் வாடிக்கையாளர்கள் கோரினால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பற்றிய தகவலும் அளிக்கப்படும். குறிப்பிட்ட நிறுவனம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டதா இல்லையா என்ற தகவலை அளிக்கும். அத்துடன் நிறுவனம் செயல்படுகிறதா அல்லது நொடித்து போய் மூடப்பட்டுள்ளதா, நிறுவனமே இல்லையா அல்லது பங்குச் சந்தையில் பட்டியலிடப்படவில்லையா என்ற தகவலும் அளிக்கப்படும்.

செபி-யின் வரம்புக்குள் வராத அதேசமயம் பிற புலனாய்வு அமைப்புகள் மூலம் திரட்டப்பட்ட தகவலும் இதில் அளிக்கப்படும். இந்த ஹெல்ப்லைனில் முதலீடு தொடர்பாக ஆலோசனை வழங்கப்பட மாட்டாது. இந்த ஹெல்ப்லைனில் பதிவாகும் அனைத்து அழைப்புகளும் பதிவு செய்யப்பட்டு அது 24 மணி நேரத்துக்குள் செபி-க்கு அனுப்பப்பட வேண்டும். இத்தகைய சேவை அளிக்க முன்வரும் நிறுவனங்கள் பற்றிய மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு அதில் சிறந்த நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனங்களுக்கு 3 ஆண்டுகளுக்கு இத்தகைய சேவை அளிக்க அனுமதி அளிக்கப்படும்.

விருப்பத்தின் பேரில் இது 5 ஆண்டுகளாகவும் நீட்டிக்கப்படக்கூடும். இத்தகைய சேவை அளிக்க விரும்பும் நிறுவனங்கள் நிறுவன சட்டத்தின்கீழ் பதிவு பெற்ற நிறுவனங்களாக இருக்க வேண்டும். கடந்த இரண்டு நிதி ஆண்டுகளில் எத்தகைய புகாரிலும் சிக்காத நிறுவனமாக இருத்தல் அவசியமாகும். கடந்த மூன்று நிதி ஆண்டுகளில் இந்நிறுவன வருமானம் ரூ. 50 கோடிக்கும் குறைவாக இருக்கக் கூடாது. கடந்த ஐந்து ஆண்டுகளில் 2 ஆண்டுகளுக்கு மேல் நஷ்டத்தைச் சந்தித்த நிறுவனமாக இருக்கக் கூடாது என்று செபி தெரிவித்துள்ளது.

ஹெல்ப்லைன் மையத்தில் இரண்டு செபி அதிகாரிகள் நிரந்தரமாக நியமிக்கப்படுவர். குறிப்பிட்ட நிறுவனம் நாஸ்காமில் பதிவு பெற்ற சாப்ட்வேர் நிறுவனமாக இருக்க வேண்டும். ஹெல்ப்லைன் சேவை அளிக்க முன்வரும் நிறுவனங்களிடம் தடையற்ற பேச்சுத் திறன் கொண்ட பணியாளர்கள் இருக்க வேண்டும். நிறுவனத்தின் செயல்பாடு மாதந்தோறும் செபி-யால் ஆய்வுக்குட்படுத்தப்படும். ஹெல்ப்லைன் சேவை அளிக்க முன்வரும் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் குறைந்தபட்சம் பட்டதாரிகளாக இருத்தல் வேண்டும். அத்துடன் எந்த குற்ற பின்னணி கொண்டவராக இருத்தல் கூடாது என்றும் தெரிவித்துள்ளது.

0 comments:

 
back to top