.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, December 28, 2013

மூடநம்பிக்கைகள் - ஒரு உலகளாவிய பார்வை; Superstition of the World




மூடநம்பிக்கைகள் - ஒரு உலகளாவிய பார்வை....


 எல்லோருக்கும் வணக்கம், நாளுக்கு நாள் விஞ்ஞானம் அசுர வேகத்தில் ஒரு புறம் வளர்ச்சியடைந்து கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் மூட நம்பிக்கைகளும் மூடப்பழக்கங்களும் விஞ்ஞானத்துடன் போட்டி போட்டுக் கொண்டு வளர்ச்சியடைந்து கொண்டுதான் இருக்கிறது.


மூட நம்பிக்கைகளுக்கு உதாரணம் சொல்வதென்றால், இன்னார் முகத்தில் ராசி என்று நினைத்துக்கொண்டிருப்பது, காரை முதலில் இயக்கும் போது கார் டயருக்கு அடியில் எலுமிச்சம் பலத்தை வைத்து நசுக்குவது, புதிய வீட்டுக்கு வாஸ்து செய்யும் நாளன்று கோழி அல்லது ஆடுகளை பலிகொடுப்பது, இப்படி வரிசையாக மூட நம்பிக்கைகளுக்கு இன்று முழுவதும் உதாரணம் சொல்லிக் கொண்டே போகலாம்.


சரி., இந்த மாதிரியான மூட இந்தியாவில் மட்டும்தான் இருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும். ஆம் இந்த மாதிரியான மூட நம்பிக்கைகள் உலகம் முழுவதிலும் உள்ள எல்லா நாடுகளிலும், எல்லா இடங்களிலும் காணப்படுகிறது. அட அவ்வளவு ஏன் உழைப்புக்கு பெயர் போன ஜப்பான் நாட்டு மக்களிடையேயும் கூட சில மூட நம்பிக்கைகள் இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.


ஜப்பான் நாட்டு மக்களிடையே ஒரு வினோதமான பழக்கம் வழக்கத்தில் உண்டு. பாம்புக்கறியை கன்னாபின்னாவென்று வெட்டும் ஜப்பானியர்களுக்கு பாம்பு தோல் என்பது மிகவும் புனிதமான பொருள் ஆகும். பாம்புத் தோலை சிறு சிறு துண்டுகளாக வெட்டி மணி பர்ஸிலும், வீட்டில் பணம் வைக்கும் பீரோக்களிலும் வைத்துக்கொள்கிறார்கள். அப்படி வைத்துக்கொண்டால் பணம் பெருகி பலமடங்கு ஆகிக்கொண்டே இருக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை. அதுவும் வெள்ளை பாம்பின் தோல் என்றால் இன்னுமும் ஸ்பெஷல். எவ்வளவு விலை கொடுத்தும் வாங்க ஜப்பானியர்கள் தயாராக இருப்பார்கள். உழைப்புக்கு பெயர்போன ஜப்பானிய மக்களிடையே இப்படி ஒரு மூடநம்பிக்கை இருப்பது விந்தையிலும் விந்தை.


நம்மவர்கள் முக்கியமான வேலைக்காக வீட்டை விட்டு வெளியே கிளம்பும் போது பூனை குறுக்கே வந்துவிட்டால் அவ்வளவுதான். மீண்டும் வீட்டுக்குள் வந்து தண்ணீர் அருந்தாமல் மீண்டும் வெளியே செல்ல மாட்டார்கள். இதைப்போல கொரிய நாட்டு மக்களிடம் ஒரு வித்தியாசமான பழக்கம் உண்டு. என்னவென்றால் முக்கியமான வேலை நிமித்தமாக வெளியே செல்லும் போது காகத்தை பார்த்து விட்டார்கள் என்றால் அவ்வளவுதான் அப்செட் ஆகிவிடுவார்கள். மீண்டும் வீட்டுக்குள் வந்து அமர்ந்துவிட்டு சிறிது நேரம் கழித்து தான் செல்வார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.


பிரேசில் நாட்டை எடுத்துக்கொண்டால் அங்கு ஒரு வித்தியாசமான பழக்கம் வழக்கத்தில் உண்டு. அங்கே எந்த ஹோட்டலுக்கு சென்று காப்பி அல்லது டீ கேட்டீர்கள் என்றால் கப்பை எடுத்துக்கொண்டு முதலில் அதில் சர்க்கரையைத்தான் போடுவார்கள் பிறகுதான் தேயிலை தூள், டிகாஷன் மற்றும் பால் சேர்ப்பார்கள். மறந்தும் கூட கப்பில் முதலில் பாலையோ அல்லது டிகாஷனையோ ஊற்ற மாட்டார்கள்.


காபியோ அல்லது டீயோ தாயாரிக்கும் போது முதலில் சர்க்கரையை போட்டால் பணம் நம்மிடம் வந்து குவியும் என்றும் அவ்வாறில்லாமல் இறுதியில் சர்க்கரையை போட்டால் நம்மிடம் இருக்கும் எல்லா பணமும் நம்மை விட்டு போய் நாம் ஏழைகள் ஆகிவிடுவோம் என்பதும்  அங்கே காலம் காலமாக வழக்கத்தில் இருந்துவரும் ஒரு நம்பிக்கை ஆகும். தெரியாத்தனமாக அங்கே டீ அல்லது காப்பி தயார் செய்கையில் முதலில் சர்க்கரை அல்லாமல் வேறு எதையும் போட்டோமானால் அவ்வளவுதான் நம்மை அடிதுவைத் தெடுத்துவிடுவார்கள்.


நம்ம ஊரில் நரிகொம்பு விற்கும் நரிக்குறவர்களை போல மெக்ஸிகோ நாட்டில் மிகவும் பிரபலமானவர்கள் முயலின் வால் மற்றும் தோல் விற்பவர்கள் ஆவர். காரணம், வீட்டில் முயல் தோலோ அல்லது வாலோ இருந்தால் அவ்வீட்டில் வசிப்பவர்கள் எல்லாருடைய முயற்சிகளும் எந்த தடையும் இல்லாமல் வெற்றியடைந்து சிறப்பாக வாழ்வார்கள் என்பது மெச்சிக்கோ நாட்டு மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும்.


எந்த பாத்திரமாக இருந்தாலும் சரி, ஒரு வேலை அது புதிய பாத்திரங்களாகவே இருந்தாலும் சரி, அந்த பாத்திரத்தின் ஏதாவது ஒரு இடத்தில் சிறிய நசுங்கள்கள் இருந்தாலும் அந்த பாத்திரங்களை ரஷ்ய மக்கள் பயன்படுத்த மாட்டார்கள், அதே போல் உடைந்த கண்ணாடியிலும் ரஷ்ய நாட்டு மக்கள் முகம் பார்க்க மாட்டார்கள்.


இதைப்போல எண்ணற்ற மூடநம்பிக்கைகளும் மூட பழக்கங்களும் உலகெங்கும் எல்லா நாடுகளிலும் எல்ல இடங்களிலும் உண்டு, ஆகையால் மூடநம்பிக்கைகளும் மூடப்பழக்கங்களும் இந்தியாவில் மட்டும் தான் காணப்படுகிறது என்று எண்ணி நம் மக்களை வசை பாடிக்கொண்டிருக்க வேண்டாம். அது எல்லா நாடுகளிலும் உள்ள எல்லா இடங்களிலும் புரையோடிக்கிடக்கும் ஒரு பழக்கம் தான்.

கணவருக்கு பயப்படலாமா?




`என் கணவரை நினைச்சாலே பயமாக இருக்கிறது…’ என்று சில பெண்கள் சொல்வார்கள். பயம் என்பது திருடனுக்கு போலீஸ் மீது ஏற்படலாம். கணவன்_மனைவி உறவென்பது போலீஸ் திருடன் போன்றதல்ல.


கணவன் மீது மரியாதை இருக்க வேண்டும். அதையும் மீறி இருவருக்கும்ளும் இருக்க வேண்டியது நட்பு.


நட்பு மீது வாழ்க்கை நடத்தும் ஜோடிகள் அதிக மகிழ்ச்சியாக இருப்பார்கள். பிரச்சினைகளை தைரியமாக சமாளிப்பார்கள். இவர்கள் `இல்லற’ வாழ்க்கையும் ரொம்ப ஜாலியாக இருக்குமாம்.


சில குடும்பங்களில் கணவன்_மனைவி உறவு வாத்தியார் மாணவி என்ற நிலையில் அமைந்து விடுகிறது. சமையலில் பெயர் வாங்க வேண்டும். நடை, உடை, பாவனையில் அவர் பாராட்ட வேண்டும். விழுந்து விழுந்து உபசரித்து `சபாஷ்’ வாங்க வேண்டும் என்ற ரீதியில் அத்தகைய மனைவிகள் நடந்து கொள்கிறார்கள்.


இப்படிப்பட்ட எதிர்பார்ப்புகளும் வாழ்க்கை சிறக்க உதவுவதில்லை. கடுமையாக மனைவி உழைத்தும், கணவருக்காக தன்னை மாற்றிக் கொண்டும் அதற்குரிய பிரதிபலனை கணவன் வழங்காதபோது அவள் மனதொடிந்து எதிர்மறையாக நடக்கத் தொடங்கி விடுவாள்.


உங்க வீட்டில் நீங்க எப்படி? பயப்படவோ, எப்போதும் பாராட்டுக்காக உழைக்கவோ செய்யாதீர்கள். அன்பை, நட்பை வெளிப்படுத்துங்கள் அது போதும்… ஆயிரம் விதத்தில் உங்களுக்கும் பிரிக்க முடியாத இறுக்கத்தை ஏற்படுத்தி விடும்.

ஆதார் அட்டை பெறுவது எப்படி?




கேஸ் இணைப்பு பெறுவது, பாஸ்போர்ட் பெறுவது உள்ளிட்டவற்றுக்கு ஆதார் அட்டை அவசியமாக்கப்பட்டுள்ளதால் அதை உடனே பெறுவது நல்லது.


கேஸ் இணைப்பு பெற, பாஸ்போர்ட் வாங்க, வீடு வாங்க விற்க, பி.எப். கணக்கு துவங்க அல்லது அதில் இருந்து பணத்தை எடுக்க, வங்கி கணக்கு துவங்க என்று பலவற்றுக்கும் ஆதார் அட்டை அவசியம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் ஆதார் அட்டை வழங்கும் மையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்துக் கிடப்பதை பார்க்க முடிகிறது.


ஆதார் அட்டை பெறுவது எப்படி?


1. ஆதார் அட்டை பெற பதிவு செய்ய கட்டணம் எதுவுமில்லை. ஒருவர் ஒரு முறை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.


2. ஆதார் பதிவு மையங்களுக்கு சென்று உங்களின் அடையாள அட்டை மற்றும் இருப்பிடச் சான்றை காண்பிக்கவும்.


3. ஆதார் அட்டை பெற அடையாள அட்டை மற்றும் இருப்பிடச் சான்றுக்கு 33 வகை ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அடையாள அட்டை மற்றும் வசிப்பிடச் சான்றாக வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் உள்ளிடவை ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.


4. புகைப்படத்துடன் கூடிய பான் கார்டு, அரசு ஐடி கார்டு ஆகியவை அடையாளச் சான்றாக எடுத்துக்கொள்ளப்படும். இருப்பிடச் சான்றாக நீங்கள் ஆதார் அட்டை கேட்டு விண்ணப்பிக்கும் சமயத்திற்கு முன்னதாக உள்ள 3 மாதங்கள் செலுத்திய தண்ணீர், மின்சாரம், தொலைபேசி கட்டண பில்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.


5. ஒரு வேளை உங்களிடம் மேற்கூறிய சான்றுகள் இல்லையென்றால், கெசட்டட் ஆபீசர் அல்லது தாசில்தார் வழங்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும்.


6. எம்.பி. அல்லது எம்.எல்.ஏ./ கெசட்டட் ஆபீசர்/ தாசில்தார்/ பஞ்சாயத்து தலைவர் ஆகியோர் வழங்கும் புகைப்படத்துடன் கூடிய இருப்பிடச் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும்.


7. பதிவு மையத்தில் உங்கள் புகைப்படம், கைரேகை, கண்ணின் கருவிழி ஸ்கேன் ஆகியவை எடுக்கப்படும்.


8. ஒரு முறை மட்டுமே பதிவு செய்ய வேண்டும். ஏனென்றால் ஒருவருக்கு ஒரு ஆதார் எண் தான் வழங்கப்படும்.


9. நீங்கள் அளித்த தகவல்கள் சரிபார்க்கப்படும். அவை சரியாக இருந்தால் ஆதார் நம்பர் உங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.


10. ஆதார் எண் கிடைக்க 60 முதல் 90 நாட்கள் வரை ஆகலாம்.


11. ஆதார் கடிதங்களை அச்சடிப்பது வினியோகிப்பது இந்தியா போஸ்ட்டின் வேலை.


12. ஆதார் கடிதங்களை உரியவிரடம் கொடுக்க இந்தியா போஸ்ட் சாதாரணமாக 3-5 வாரங்கள் எடுத்துக்கொள்ளும்.

குளிர்காலத்தில் பீட்ரூட் சாகுபடி !




மத்திய தரைக்கடல் பகுதியை தாயகமாகக் கொண்ட பீட்ரூட் உலகின் பல பகுதியில் சாகுபடி செய்யப்படுகிறது. பீட்ரூட் ஒரு குளிர்பிரதேச வேர் காய்கறியாகும். பீட்ரூட்டை வேக வைத்தும், வேக வைக்காமல் பச்சையாக உண்ணவும் மற்றும் ஊறுகாய் போடவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் இலைப்பகுதியை கீரையாகவும் கால்நடை தீவனமாகவும் பயன்படுத்தலாம். பீட்ரூட்டில் தண்ணீர்சத்து, புரதச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் சி, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் பொட்டாசியம் சத்து அதிகமாக உள்ளது. பீட்ரூட்டில் கிரிம்சன், குளோப், டெட்ராய்ட், டார்க்ரெட்,ரெட்பால் மற்றும் ஊட்டி1 என்ற ரகங்கள் அதிகமாக பயிர் செய்யப்படுகுன்றன.


பீட்ரூட் சாகுபடி செய்ய கடினவகை நிலத்தை தவிர்க்க வேண்டும். மிகவும் குறைந்த வெப்பநிலையை தாங்காது. ஆகையால் 10 டிகிரி சென்டிகிரேடுக்கு மேல் வெப்பநிலை இருக்குமாறு சாகுபடி செய்ய வேண்டும். மண்ணில் கார அமிலத்தன்மை 6-7 ஆக இருக்க வேண்டும். மலைப்பகுதியில் வருடம் முழுவதும் , தரைப்பகுதியில் குளிர் காலங்களிலும் சாகுபடி செய்யலாம்.


ஒரு எக்டேருக்கு 5 முதல் 6 கிலோ விதை தேவைப்படுகிறது. நிலத்தை நன்றாக உழுது பண்படுத்தி, உயரப்பாத்திகள் 30 செ.மீ இடைவெளியில் தயார் செய்ய வேண்டும். ஒரு எக்டர் நிலத்திற்கு 20 டன் தொழு எருவும், 60 கிலோ தழைச்சத்தும், 60 கிலோ மணிச்சத்தும் மற்றும் 100 கிலோ சாம்பல் சத்தும் அடியுரமாக இட வேண்டும். பின்பு நட்ட 30 நாட்கள் கழித்து 60 கிலோ தழைச்சத்து மேலுரமாக இட வேண்டும். விதை ஊன்றியவுடன் நீர் பாய்ச்சுதல் அவசியம். பின்பு 7 முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விடுதல் வேண்டும்.


நடவு செய்த 20 நாள் கழித்து பயிர் கலப்பு செய்தல் வேண்டும். பின்னர் களைகளை எடுத்து மண் அணைக்க வேண்டும். பொதுவாக வேர் அழுகல்நோயும், இலைப்புள்ளி நோயும் தாக்கும்.வேர் அழுகல் நோயைக் கட்டுப்படுத்த 10 கிராம் பைட்டலாம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். இலைப்புள்ளி நோயைக் கட்டுப்படுத்த 2 கிராம் இண்டோபில் எம் 45 மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.


நடவுக்குபின் 120 நாள் கழித்து பீட்ரூட் அறுவடைக்குத் தயாராகும். அறுவடை செய்யும் போது நிலம் மிதமான ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும். பருவமழை பொழியும் இந்த குளிர்காலத்தில் முறையாக விதைநேர்த்தி செய்தால் ஒரு எக்டேர் நிலத்தில் 20 முதல் 25 டன் வரை பீட்ரூட் மகசூல் கிடைக்கும். தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து குளிர்காலமாக இருப்பதால் தரைப்பகுதியில் பீட்ரூட் சாகுபடி ஏற்றதாக உள்ளது என வேளாண்மை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 
back to top