.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, December 30, 2013

ரயில் பயணம் ஆபத்தாவதேன்?




கர்நாடகத்தின் பெங்களூரில் இருந்து ஆந்திரத்தின் நாந்தேத் நகருக்குச் சென்ற விரைவு ரயிலில் நேரிட்டதீ விபத்து 26 பேரைப் பலிவாங்கியிருக்கிறது. அதிகாலை3.30 மணி அளவில் இந்த விபத்து நடந்திருக்கிறது. ரயில் பெட்டியில் தீப்பிடித்து எரிவது தெரியாமல் பயணிகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளனர். தற்செயலாகக் கண்விழித்த ஒரு பெண் பயணி அலறியதை அடுத்து, பயணிகள் விழித்துள்ளனர். அந்தப் பெட்டியிலிருந்த டிக்கெட் பரிசோதகர் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியிருக்கிறார். அதற்குள் மளமளவென்று தீ பரவியிருக்கிறது. தகவல் கிடைத்த 10 நிமிஷங்களுக்கு எல்லாம் அங்கு வந்த தீயணைப்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டதால், ஏராளமானோர் தப்பியிருக்கின்றனர்.

இத்தகைய விபத்துகள் இந்திய ரயில்வே துறைக்குப் புதிதல்ல. பல முறை நாம் மீண்டும் மீண்டும் பார்த்ததுதான். கடந்த ஆண்டுகூட ஒன்பது ரயில்கள் தீ விபத்துக்குள்ளாயின; 30 பேர் உயிரிழந்தனர். இந்த ஆண்டு ஐந்து ரயில்கள் தீ விபத்துக்குள்ளாகியிருக்கின்றன. ஒவ்வொரு முறையும் தவறாமல் விசாரணை ஆணையங்கள் அமைக்கப்படுகின்றன; பரிந்துரைகள் பெறப்படுகின்றன; அவை அப்படியே காற்றில் விடப்படுகின்றன.

இந்த விபத்துக்கான காரணங்கள் உடனே வெளியே வர ஆரம்பித்திருக்கின்றன. மின்கசிவு காரணமாகத்தான் பெட்டியில் தீப்பிடித்தது என்று தீயணைப்புத் துறையினரும் காவல் துறையினரும் தெரிவிக்கின்றனர். ரயில்வே அதிகாரிகள் இதை மறுக்கும் சூழலில், “ஏ.சி. மெக்கானிக்குகளுக்குப் பணிச் சுமை அதிகரித்துவிட்டது. ரயில் நிலையங்களிலும் பெட்டிகளிலும் அவர்கள் இருப்பதற்குக்கூட அடிப்படை வசதிகளை ரயில்வே நிர்வாகம் மறுக்கிறது” என்று பகிரங்கமாகவே குற்றம்சாட்டியிருக்கிறது ரயில்வே தொழிலாளர்கள் சங்கம்.

தீ விபத்தைத் தவிர்க்கும் பணிகள் இந்த லட்சணத்தில்இருக்கின்றன என்றால், தீ விபத்தின்போது மக்களைக் காக்கும் பணிகளின் லட்சணம் இன்னும் மோசம். ஒரு ரயிலில் தீ எச்சரிப்பு சாதனத்தைப் பொருத்த சுமார் ரூ. 35 லட்சம் ஆகும். அப்படிப் பொருத்தினால், ரயில் தீ விபத்துக்குள்ளாகும்போது பெரும் உயிர்ச் சேதத்தை நிச்சயம் தவிர்க்க முடியும். ஆனால், 11-வது ஐந்தாண்டு திட்டக் காலத்திலும் 12-வது ஐந்தாண்டு திட்டக் காலத்திலும் ரயில் பெட்டிகளில் தீயணைப்புக் கருவிகள் வைக்க மொத்தமாகவே ரயில்வே துறை ஒதுக்கிய தொகை ரூ.8.63 கோடிதான் (கடந்த நான்கு ஆண்டுகளில் ரயில்களில் நேரிட்ட தீ விபத்துகளால் ஏற்பட்ட சேதம் மட்டும் ரூ. 15 கோடி). விளைவு, பல ரயில்களில் தீயணைப்புக் கருவிகள் கிடையாது. உதாரணமாக, இப்போது விபத்துக்குள்ளாகியிருக்கும் நாந்தேத் விரைவு ரயிலிலேயே தீ எச்சரிப்புக் கருவி கிடையாது. விளைவை அனுபவிக்கிறோம்.

கடந்த 15 ஆண்டுகளாகவே மக்களிடம் ‘நல்ல பெயர் வாங்க’ பயணிகள் கட்டணக் குறைப்பில் மட்டுமே கவனமாக இருக்கின்றனர் ரயில்வே அமைச்சர்கள். ஆனால், குறைந்த கட்டணத்துக்காகத் தங்கள் உயிரைப் பணயம் வைப்பதை மக்கள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள்!

தமிழ்த்திரை 2013 நட்சத்திரங்கள் மின்னுவதும்.. மங்குவதும்...




புதிய சிந்தனை, புதிய திரைமொழியோடு திறமையான இயக்குநர்கள் வந்துகொண்டேதான் இருக்கிறார்கள். இன்னும் திரைப்படம் இயக்குநரின் ஊடகமாகத்தான் இருக்கிறது. ஆனால் ரசிகர்கள் கொண்டாடித் தீர்க்கும் பொழுதுபோக்குத் திரைப்படங்கள் என்பவை, முன்னணி நட்சத்திரங்களின் முதுகில் சவாரி செய்பவையாகவே இருக்கிறன. 2013ஆம் ஆண்டைத் திரும்பிப் பார்த்தால், மின்னிய நட்சத்திரங்கள், மின்னுவதுபோலத் தோற்றம் காட்டிய நட்சத்திரங்களின் செல்வாக்கு நிலையை, பாக்ஸ் ஆபீஸ் புள்ளிவிவரங்கள் புட்டுப் புட்டு வைக்கின்றன.


மாஸ் ஹீரோக்களைப் பொறுத்தவரை நடப்பாண்டில் ரஜினியின் கணக்கில் வரவு வைத்திருக்க வேண்டிய ‘கோச்சடையான்’ வெளியாகவில்லை. என்றாலும் ரஜினியின் எந்திரன் பட வசூல் சாதனை இன்னும் முறியடிக்கப்படாமல் அப்படியே இருக்கிறது.


ஆனால் கொஞ்சமும் அசைத்துப் பார்க்க முடியாதபடி ஜம்மென்று அடுத்த இடத்தில் உட்கார்ந்திருக்கிறார் கமல் ஹாஸன். அலையாகப் புறப்பட்ட சர்ச்சைகளைக் கடந்து வெளியான கமலின் விஸ்வரூபம், ரசிகர்களை ஏமாற்றவில்லை. கதை, திரைக்கதை, படமாக்கல், தொழில்நுட்பம், இயக்கம், நடிப்பு என எல்லா வகையிலும் கமல் தனது ஆளுமையால் ரசிகர்களை வியக்க வைத்த படமாகவே விஸ்வரூபம் இருந்ததால், பாக்ஸ் ஆபீஸில் மிகப் பெரிய வெற்றியை ஈட்டியது.


 விஸ்வரூபத்தின் தமிழ்நாட்டு வசூல் மட்டுமே 30 கோடி. மற்ற தென்மாநிலங்கள், இந்திப் பதிப்பின் வசூல், வெளிநாட்டு வசூல் எல்லாம் சேர்த்து 85 கோடியை ஈட்டியிருக்கிறது. கமலை நடப்பாண்டின் ‘மேன் ஆஃப் த பாக்ஸ் ஆபீஸ்’ என்று சொல்லிவிடலாம். ஒரு பொழுதுபோக்கு படத்தின் ஊடாகக் கையாண்ட இந்தியாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராகவும் தன்னை அடையாளம் காட்டியிருக்கிறார். கமலுக்கு அடுத்த நிலையில் நடப்பாண்டில் யார் செல்வாக்கு செலுத்தினார் என்பதுதான் விஜய் - அஜித் ரசிகர்களிடையே நிலவும் மில்லியன் டாலர் கேள்வி. சந்தேகமில்லால் அஜித் முன்னால் வந்து நிற்கிறார். அதற்குக் காரணம் ‘ஆரம்பம் ’ படத்தின் வசூல். தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 35 கோடி வசூல் செய்த ஆரம்பம், ஆந்திராவிலும் கணிசமாக வசூல் செய்தது, ஆரம்பம் படத்தின் மொத்த வசூல் 65 கோடி.


விஜயைப் பொருத்தவரை கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான துப்பாக்கி படத்தின் 80 கோடி ரூபாய் வசூல்தான் அவரது அண்மைய சாதனை. கடந்த 4 ஆண்டுகளில் விஜய்க்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி இது. ஆனால் நடப்பாண்டில் அரசியல் வசனச் சர்ச்சை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் சற்றுத் தாமதமாக வெளியான ‘தலைவா’ 50 கோடிக்கு வியாபாரம் ஆகியிருந்தது. தமிழ்நாட்டில் 13 கோடிகளை மட்டுமே இது வசூல் செய்தது.


அஜித்துக்கு அடுத்த நிலையில் சூர்யாவின் சிங்கம் 2 படம் 60 கோடியை வசூலித்திருக்கிறது. இதனால் கமல், அஜித் ஆகிய இருவருக்கும் அடுத்த நிலையில் சூர்யா ஒளிர்விட ஆரம்பித்திருக்கிறார்.


அஜித் - விஜய்க்கு இணையாக வியாபாரக் களத்தில் நின்ற சியான் விக்ரமுக்கு கடந்த ஆண்டில் தாண்டவம் மிகப்பெரிய சறுக்கலாக அமைந்துவிட்டது. இதற்கிடையில் ஹிந்தியில் தயாராகி, தமிழில் டப் செய்யப்பட்ட ‘டேவிட்’ படம் சில நாட்கள்கூடத் திரையரங்குகளில் இல்லை. தனது எல்லாச் சறுக்கல்களுக்கும் தீர்வாக அமையும் என்று ஷங்கரின் ’ஐ’ படத்தில் நடித்துவருகிறார் விக்ரம். ஷங்கரின் இயக்கமும், ஐ படக் கதாபாத்திரதுக்கான விக்ரமின் உழைப்பும் எதிர்பார்ப்பைக் கூட்டியிருக்கின்றன.


விக்ரமுக்கு அடுத்த நிலையில் வந்த சிம்பு - தனுஷ் இருவரில், சிம்புவுக்குக் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான ‘போடா போடி’ படத்துக்குப் பிறகு எந்தப் படமும் இன்னும் வெளியாகாத சூழ்நிலையில் தற்போது பாண்டிராஜ், கௌதம் மேனன் என்று சுறுசுறுப்பைக் கூட்டியிருக்கிறார்.


தனுஷ் இந்திப்பட உலகில் அறிமுகமான ‘ராஞ்சனா’ 100 கோடி வசூலை அங்கே ஈட்டியதாகச் சொல்லப்பட்டது. ஆனால் இதே படம் தமிழில் அம்பிகாபதியாக வெளியாகி 8 கோடி மட்டுமே வசூல் செய்தது. மரியானில் தனுஷின் நடிப்பு விமர்சகர்களால் கொண்டாடப்பட்டாலும் படம் வெற்றிபெறவில்லை. ‘நையாண்டி’ படமும் மோசமாகத் தோல்வியடைந்தது.


வசூல் ஹீரோக்களின் பட்டியலில் இணைந்துகொள்ள வேண்டும் என்று துடித்துவந்த விஷாலின் தொடர் தோல்விக்கு ‘பாண்டிய நாடு’ முற்றுப்புள்ளி வைத்தது. இந்தப் படத்தின் மொத்த வசூல் 40 கோடி. இதற்கு முன்பு வெளியான பட்டத்து யானை சுமார் என்று சொல்லப்பட்டாலும் 20 கோடியை வசூல் செய்திருக்கிறது. சுந்தர். சி இயக்கத்தில் வெளியாக இருக்கும் மதகஜராஜா படம் 2014இல் விஷாலுக்கு மிகப்பெரிய வெற்றியாக இருக்கும் என்று மதிப்பிடுகிறார்கள்.


இதற்கிடையில் வழக்கமான ஹீரோயிசப் படங்களில் ஆர்வம் காட்டும் ஆர்யா, வித்தியாசமான கதாபாத்திரங்கள் கொண்ட படங்களிலும் ஆரம்பம் போன்ற மல்டி ஸ்டார் படங்களிலும் நடிக்கத் தயங்குவதில்லை. ஜெய் - நயன்தாராவுடன் இணைந்து நடித்த ‘ராஜா ராணி’, 30 கோடி வசூல் செய்தது. இந்தப் படத்துக்கு முன்பு வெளியான சேட்டை தோல்விப் படம் என்றாலும் 20 கோடி வசூல் செய்திருக்கிறது. ஆர்யாவை வியாபாரத்தின் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இரண்டாம் உலகம் தோல்வியைத் தழுவியிருக்கும் நிலையில் அவரது அடுத்த நம்பிக்கை ஜனநாதன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘புறம்போக்கு’.


ஜெயம் ரவியைப் பொருத்தவரை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரபுதேவா இயக்கத்தில் நடித்த ‘எங்கேயும் காதல்’ 20 கோடி வசூல் செய்ததோடு சரி. நடப்பாண்டில் வெளியான ஆதிபகவன் வெற்றி பெறவில்லை. பாக்ஸ் ஆபீஸில் தொடந்து ஆதிக்கம் செலுத்திவரும் ஹீரோக்களின் பட்டியலில் சசிகுமாரும் இந்த ஆண்டு இடம்பிடித்திருக்கிறார்.


சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, விமல், விக்ரம் பிரபு ஆகிய வளரும் ஹீரோக்களின் சின்ன பட்ஜெட் படங்கள், தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள் விநியோகஸ்தர்கள், என அனைவரும் கொண்டாடும் படங்களாகியிருக்கின்றன.


(கட்டுரையில் கூறப்படும் தகவல்கள் திரையரங்கங்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் வட்டாரங்களிலிருந்து திரட்டியவை)


இந்த ஆண்டின் நாயகிகள்  


தமிழ்ப் பெண்ணா, கேரளப் பெண்ணா, இல்லை வடநாட்டு மாடல் அழகியா என்பதெல்லாம் பிரச்சினை இல்லை. ரசிகர்களுக்குப் பிடித்து விட்டால் போதும், 10 ஆண்டுகளைக் கடந்தும் எங்களால் வெற்றிக் கதாநாயகியாக நீடிக்க முடியும் என்று நிரூபித்தபடி தொடர்கிறார்கள் த்ரிஷாவும் நயன்தாராவும். த்ரிஷாவுக்கு மவுசு குறைந்துவிட்டது, அவர் தனது கல்யாணத்தைத் திட்டமிட்டுவருகிறார் என்று செய்திகள் வெளியான நேரத்தில், த்ரிஷா தன் மந்திரப் புன்னகையால் அவற்றை ஊதித் தள்ளிவிட்டார். ‘என்றென்றும் புன்னகை’ படத்தில் தன்னை விட வயதில் குறைந்த ஜீவாவின் காதலியாக நடித்த அவர், மென்மையான கதாபாத்திரத்தில் பாந்தமாகப் பொருந்தினார். தோற்றத்தில் இளமையும் நடிப்பில் முதிர்ச்சியும் கூடியிருக்கின்றன. சமரில் வெற்றி கிடைக்காவிட்டாலும் அதிலும் அவரது நடிப்பும் அழகும் பாராட்டப்பட்டன.


இன்னொரு வெற்றி நாயகியான நயன்தாராவைச் சர்ச்சைகள் சுழற்றியடித்தன. அவரும் ஓய்வுபெறுவார் என்று சொல்லப்பட்டது. ஆனால் நயன்தாராவின் வசீகரம், சர்ச்சைகளிலிருந்து அவரை விடுதலை செய்தது. இவரும் தன்னைவிட இளையவர்களான ஜெய், கோபிசந்த் ஆகியோருடன் நடிக்கிறார். தமிழில் அதிக ஊதியம் பெறும் நாயகி இவர்தான். இந்த ஆண்டு ‘ராஜா ராணி’, ‘ஆரம்பம்’ ஆகிய இரண்டு படங்கள்; இரண்டிலும் வெற்றி என்று தொடரும் இவரது பயணத்தின் அடுத்த மைல்கல் கமல் படமாக இருக்கலாம்.


ஹன்சிகாவின் குழந்தைத்தனமான தோற்றமும் அழகும் ரசிகர்களுக்குப் பிடித்திருப்பதில், அவர் நடிக்கும் படங்களின் வெற்றி தோல்விகளுக்கு அப்பால், அவர் கொண்டாடப்படுகிறார்.


காஜல் அகர்வால், அனுஷ்கா இருவருமே தெலுங்குப் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில் தமிழில் இந்த ஆண்டு பின்தங்கி விட்டார்கள். வந்த படங்களும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. காஜலுக்கு ‘அழகுராஜா’வும் அனுஷ்காவுக்கு ‘இரண்டாம் உலக’மும் நல்ல பெயரை வாங்கித்தரவில்லை.


இளம் கதாநாயகிகளான லட்சுமி மேனன், நஸ்ரியா இருவரும் நடிப்பத் திறமைகளாகவும், கவனமான படத் தேர்வுகளாலும் கவனிக்கவைத்திருக்கிறார்கள்.

"இந்தப் புத்தாண்டு ஆராதனாவுடன்தான்." - உற்சாகத்தில் சிவகார்த்திகேயன்




2013-ம் ஆண்டில் டாப் கியரில் பயணித்த ஹீரோக்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். அந்த வேகத்தை சற்றும் குறைக்காமல் அடுத்த ஆண்டிலும் பயணிக்க தயாராகி வருகிறார். 2014-ல் ரிலீஸாகவுள்ள அவரது முதல் படம் ‘மான் கராத்தே’. இந்தப் படத்துக்காக ஹன்சிகா மோத்வானியுடன் காதல் கராத்தேவில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிவகார்த்திகேயனை மாமல்லபுரம் சாலையில் சந்தித்தோம்.


இந்தப் படத்தில் என்ன கருத்து சொல்ல வர்றீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா? 


முதல்லயே இப்படி தொடங்கினா எப்படி நண்பா. நீங்களே சொல்லுங்க, நாம வந்து கருத்து சொன்னா சரியா இருக்குமா? புதுசா ஒரு காதல் சொல்ல வர்றோம். துறுதுறுனு சுத்திக்கிட்டிருக்கிற வெகுளிப் பாப்பா ஹன்சிகாவை, எவ்ளோ தூரம் துரத்தி துரத்தி காதல் செய்றான் பீட்டர் (சிவா) அப்படிங்கிறதுதான் படத்தோட ஒன்லைன். இந்தப் படத்துல மீசை இல்லாமல் நடிச்சிருக்கேன்.


அதுக்காக உடைகள், பாடி லாங்குவேஜ் எல்லாத்தையும் மாத்த கொஞ்சம் பயிற்சி எடுக்க வேண்டியிருந்தது. இந்தப் படத்துல முழுக்க முழுக்க காமெடியெல்லாம் இருக்காது. கொஞ்சம் ஆக்‌ஷன். அள்ள அள்ள காதல் இருக்கும். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸோட கதை. அவர் உதவியாளர் திருக்குமரன் இயக்குகிறார். இளைஞர்கள் ஒவ்வொருத்தருக்கும் இந்தப் படம் காதல் உணர்வைக் கொடுக்கும். இந்தப் படம் முழுக்க முழுக்க ஒரு ஜாலி விருந்து.


ஷூட்டிங்ல ஹன்சிகா என்ன சொல்றாங்க? 


கதை சொல்லும்போதே ஹன்சிகா மாதிரி ஒரு பொண்ணுன்னு எடுத்துக்கிட்டுதான் சொன்னாங்க. கதை முழுக்க ஹன்சிகா மாதிரி, ஹன்சிகா மாதிரின்னு பேசிவிட்டு அவங்க இல்லாமல் இருந்தால் எப்படின்னு யோசிச்சோம். தயாரிப்பு தரப்பில் அவங்ககிட்ட கதையைச் சொன்னாங்க. கிளைமேக்ஸ் வரைக்கும் அவங்க கேரக்டரோட முக்கியத்துவத்தை பார்த்துட்டு உடனே ஒப்புக்கொண்டாங்க.


ஷூட்டிங்குல ஹன்சிகா, பயங்கர துறுதுறு கேரக்டர். செம ஜாலிப் பேர்வழி. யாரையாவது வம்புக்கு இழுத்துக்கிட்டே இருப்பாங்க. அவங்க அமைதியா இருந்து பார்த்ததே இல்லை. அதுவும் இயக்குநர் திருக்குமரனை வம்புக்கு இழுக்கலைன்னா அவங்களுக்கு பொழுதே போகாது. அவர் என்கிட்ட வந்து ஹன்சிகா பத்தி புகார் கொடுப்பார். நம்ம சிக்கிடுவோமா நண்பா, சொல்லுங்க.

உங்க குழந்தை ஆராதனா எப்படி இருக்காங்க?

குட்டிப்பாப்பா சமத்தா அம்மாக்கூட விளையாடிக்கிட்டிருக்காங்க. பிறந்து 2 மாசம் ஆகுது. ஆனா நான் அவங்களோட இருந்தது ரொம்ப குறைச்சலான நாட்கள்தான். இப்பக்கூட அவளைப் பார்த்து 20 நாட்கள் ஆச்சு. அவங்க அம்மாதான் அவங்களுக்கு எல்லாம். அவளோட விளையாட்டு, தூக்கம், புன்னகைன்னு எல்லா விஷயங்களையும் நான் செல்போன் மூலமாதான் பார்த்துக்கிறேன். எவ்வளவு வேலைகள் இருந்தாலும் அதையெல்லாம் ஒதுக்கி வச்சுட்டு இந்த புத்தாண்டை என் ஆராதனாவுடன் சேர்ந்து கொண்டாட இருக்கிறேன்.


 அதேபோல அவங்க எங்களுக்கு பரிசா கிடைச்சபெறகு முதலில் வெளிவரப்போற படம் ‘மான் கராத்தே’. படம் ரிலீஸப்போ அவங்க 6 மாதக் கைக்குழந்தையா இருப்பாங்க. முதன்முதலா அப்போ அவங்களை தியேட்டருக்கு கூட்டிட்டு போகணும்னு இருக்கேன். திரையில வர்ற என்னை பார்த்துட்டு அவங்க எப்படி பாவனை காட்டப்போறாங்கன்ற எதிர்பார்ப்பு எனக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கு.


உங்க தலையில் இருந்த தொகுப்பாளர் கிரீடத்தை தூக்கி மா.கா.பா ஆனந்த் தலையில் வச்சீங்க. இப்போ அவரும் உங்களை பின் தொடர்ந்து சினிமாவுக்கு வந்துட்டாரே?


இதுதானே வேணும். அங்கிருந்து சினிமாவுக்கு வர முடியாதுங்கிற நிலையை உடைச்சிருக்கீங்கன்னு என்கிட்ட நண்பர்கள் சொல்வாங்க. அது தொடர்ந்து நடந்தா சந்தோஷம். இனிமேல் தொலைக்காட்சியை யாரும் சாதாரணமா பார்க்க மாட்டாங்க. பெரிய லிப்ட் அதுதான்னு நம்புவாங்க. அங்கிருந்து வரும்போது நிறைய கத்துக்கணும். அதுவேற இதுவேறதான். சினிமாவுக்கு ஏற்ற மாதிரியான ஆட்கள் மட்டும்தான் வரமுடியுது.


மா.கா.பா அப்படித்தான். நிறைய உழைப்பார். அதேபோல தொடர்ந்து எல்லாருமே வர்றது நல்ல விஷயம். இங்கே வந்துட்டோம் ஜெயிச்சிட்டோம் என்பதெல்லாம் எனக்கு இல்லை. சரியான ஆரம்பம் கிடைச்சிருக்கு. இந்த வெற்றியை எப்படி பாதுகாப்பானதா தொடர்ந்து கொண்டுப்போகப் போகிறேன் என்பதில்தான் எல்லாம் இருக்கு. ம்ம்ம்… பார்க்கலாம்.

பாலூட்டும் புறா..?




தமிழ்நாட்டின் மாநிலப் பறவை மரகதப்புறா (Emerald Dove) பச்சை நிற இறகுகளும் சிவப்பு நிற அலகும் கொண்ட இந்த மரகதப்புறா மட்டுமல்ல, எல்லாப் புறாக்களும் தங்கள் குஞ்சுகளைப் பாலூட்டி வளர்க்கின்றன என்பது தெரியுமா?


DoveP-feed புறாவின் பாலானது அதன் தொண்டைப் பகுதியிலுள்ள ‘crop’ எனப்படும் தொண்டைப் பையின் உட்புற சுவரின் திசுக்களில் சுரக்கிறது. இதனால் புறாப்பால் ‘crop milk’ எனவும் அழைக்கப் படுகிறது. திரவமாக இல்லாமல் பாலாடை போன்று சற்றே கெட்டியாக இருக்கும் இந்தப் பாலில் தாய்ப்பாலைவிட புரதச் சத்தும், கொழுப்புச் சத்தும் மிக அதிகம். ஆனால் மாவுச் சத்தும் கால்சியமும் கிடையாது.


தாய்ப்புறா முட்டை இட்டதும் தாய், தந்தை என இரு புறாக்களுமே அடைகாக்கின்றன. குஞ்சுகள் வெளி வருவதற்கு நாலைந்து நாட்களுக்கு முன்பிருந்தே புறாக்களின் தொண்டைப் பையில் பால் சுரக்க ஆரம்பித்து விடுகிறது. அப்படிச் சுரக்கும் பாலை, புறாக்கள் தொண்டைப் பையிலிருந்து எதிர்க்களிப்பு செய்து தங்கள் வாய்க்குள் கொண்டு வருகின்றன. குஞ்சுகள் தங்கள் சிறிய அலகுகளை தாய் தந்தையின் அலகுக்குள் செலுத்தி இந்தப் பாலை உட்கொள்ளுகின்றன.


குஞ்சுப் புறாக்களுக்கு முதல் இரண்டிலிருந்து மூன்று வாரங்கள் வரை இந்தப் பால் மட்டும்தான் உணவு. பால் சுரக்கும் தொண்டைப் பையானது சாதாரண நாட்களில் புறாக்கள் வேகமாக உட்கொள்ளும் தானியத்தைத் தற்காலிகமாகச் சேமித்து வைக்க உதவும் உறுப்பாகும். பால் கொடுக்கும் சமயத்தில் புறாக்கள் தானியம் உட்கொண்டால் பாலில் குஞ்சுகளால் ஜீரணிக்க முடியாத தானியம் கலக்க வாய்ப்புண்டு. அதனால் புறாக்கள் தாங்கள் பட்டினியாக இருந்து தங்களின் சிறிய குஞ்சுகளுக்கு இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குப் பாலூட்டுகின்றன. எப்பேர்ப்பட்ட தியாகம் மூன்று வாரங்களுக்குப் பிறகு ஈரப்படுத்தி மென்மைப்படுத்தப்பட்ட தானிய உணவு குஞ்சுகளுக்குக் கொடுக்கப்படுகிறது.


அதிபுத்திசாலியான புறா இனம், கண்ணாடியில் தங்கள் பிரதிபலிப்பைத் தெரிந்து கொள்ளும் (pass the mirror test) ஆற்றல் படைத்தவை மனிதர்களைத் தவிர குரங்கு, யானை, டால்ஃபின் போன்ற இன்னும் சில மிகக் குறைந்த உயிரினங்களுக்கே இந்த ஆற்றல் உண்டு. இதுபோல் இந்தப் புவியில் வாழும் தாவரங்கள், விலங்கினங்கள் என எல்லாவற்றிலும் நமக்குத் தெரியாத பல்வகை அதிசய ஆற்றல்கள் உள்ளன. இவற்றை அறியும் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும். எல்லா உயிர் இனங்களையும் போற்றிப் பாதுகாக்கும் உணர்வை வளர்க்க வேண்டும். இந்தப் புவியானது, மனிதர்களாகிய நமக்கே சொந்தம் என்ற அகந்தை உணர்வு மழலைச் செல்வங்களிடம் தலைதூக்கமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நமது கடமை.

 
back to top