ஜில்லா, வீரம் ஆகிய படங்களின் 'மாபெரும்' வெற்றிக்கு முக்கியமாக உழைத்தவர்கள் தல - தளபதியின் ரசிகர்கள்.
U - அனைவரும் பார்க்கலாம்
U/A - பெரியவர்களுடன் பார்க்க வேண்டிய படம்
A - கண்டிப்பாக பெரியவர்கள் மட்டும்...
இதில் புதிதாக ஒரு சென்சார் சான்றிதழை, T - தல, தளபதி ரசிகர்களுக்கு மட்டும் என்று கொண்டு வரவேண்டும்.
ஜில்லா, வீரம் இரண்டுமே ஒன்றுக்கு ஒன்று சளைத்த படம் கிடையாது. என்ன... ஒன்று சுமார் மொக்கை, இன்னொன்று சூர மொக்கை.
இரண்டு படங்களிலும் ஹை-லைட் காட்சி என்று கூற, ஒன்றுகூட இல்லை. வெறும் சண்டை, பன்ச் டயலாக்.
மசாலா படங்களுக்கு தேவையான இன்சைட்டிங் பாயின்ட் என்ற ஒரு விஷயம் சுத்தமாக தென்படவில்லை.
இந்த இரண்டு படங்களில் 'நம்பர் ஒன்' ஆகச் சிறந்து விளங்குவது ஜில்லா. கடுப்பேற்றிய முதல் விஷயம் எடிட்டிங். அப்படியே எடிட்டங் இல்லாமலே படத்தை தூக்கிக் கொட்டிவிட்டார் இயக்குனர். 'இந்தாங்க... நீங்க விஜய் ரசிகர்கள். நாங்க எதை வேணுன்னாலும் கொட்டுவோம்; அதுல உங்களுக்கு வேண்டியதை எடுத்துக்கோங்க' என்று சொல்லும் அளவுக்கு மோசமான எடிட்டிங்.
வில்லனுக்கு ஒரு ஃப்ளாஷ் பேக், மோகன்லால் - சிறு வயது விஜய்க்கு ஒரு ஃப்ளாஷ் பேக், விஜய்க்கு ஒரு இன்ட்ரோ, மோகன்லாலுக்கு ஒரு இன்ட்ரோ, காஜலுக்கு ஒரு இன்ட்ரோ, இதுக்கு நடுவுல ஒரு தங்கச்சி சென்டிமென்ட், ஒரு தம்பி சென்டிமென்ட், சூரிய வம்சம் அப்பா சென்டிமென்ட், அம்மா சென்டிமென்ட். இது எல்லாத்துக்கும் நடுவுல, விஜய் போலீசா வேற திடீர்னு அவதாரம் எடுத்து 'சாரே ஜஹான் சே அச்சா' இப்படி ஏதேதோ ஹிந்தி வசனம் பேசி சிரிப்பை மூட்டுகிறார்.
படத்தில் வரும் ஒரு காட்சிக்கும், அதற்கு அடுத்து வரும் காட்சிக்கும் பெரிய லிங்கே கிடையாது.
'சிவன் இல்லாம சக்தி கிடையாது; சக்தி இல்லாம எவனும் கிடையாது'
வேட்டைக்காரன் படத்தில் மேஜர் சுந்தர்ராஜன் பாணியில் பேசுவாரே தளபதி, அதே பாணியில்தான் இந்தப் படத்திலும் பேசியிருக்கிறார். மாடுலேஷன் முடியல்ல்ல்ல.
'அவன் உன் பொண்ணு வண்டி சத்தத்தையே இப்படி நோட் பண்றானே அப்போ உன் பொண்ணு! உங்கப் பொண்ணுக்கு இருக்கே ரெண்டு (சிறிய இடைவெளி) கண்ணு அதுதான் ரொம்ப புடிச்சிருக்கு!'
இந்த வசனங்கள் தான் காமெடியாம்.
காஜல் அகர்வாலை போலீசாக பார்ப்பதைவிட ஒரு மிகக் கொடுமையான அனுபவம் ரசிகருக்கு கிடைத்திருக்காது.
கமிஷனரின் கையை நட்டநடு ரோட்டில் வெட்டும் விஜய், அடுத்தக் காட்சியில் ஒரு எக்ஸாம் எழுதிவிட்டு அசிஸ்டென்ட் கமிஷனராக மாறுவது, அடுத்த சில காட்சிகளில் டெபுடி கமிஷனராக மாறுவது... இதெல்லாம் விஜய்க்கு மட்டுமே சாத்தியப்படும்.
முரட்டுக் காளை படத்தில் அமைந்த சுருளி ராஜன் கதாப்பாத்திரம் போல் சம்பத்தின் கதாப்பாத்திரம் அமைந்துள்ளது. அய்யய்யோ ட்விஸ்ட் வெளியே வந்துடுச்சோ... முரட்டுக் காளை பார்க்காதவர்களுக்கு, ஜில்லா ட்விஸ்ட் புதுமையாக தோன்றலாம்.
முதற் காட்சியில் அறுக்கப்படுவது ஜெயபாலனின் கழுத்து மட்டுமல்ல; ரசிகர்களின் கழுத்தும் தான். காட்சிக்கு காட்சி மோகன்லால் 'இந்த சிவன்னுக்கு, இந்த சிவனுக்கு' என்று ஒரே மாதிரி வசனத்தை பேசி கழுத்தருக்கிறார். மோகன்லாலை போன்ற ஒரு நடிகரை இப்படி வெறும் பன்ச் வசனத்திற்காக விரயம் செய்திருக்க வேண்டாம்.
இமானின் இசை ஆறுதல், அதுவும் தேவையற்ற இடங்களில் வருவது சலிப்பைக் கூட்டுகிறது.
இதற்கு மேலும் விவரித்தால் ஒரு நெடுந்தொடர் போல் நீண்டு கொண்டே செல்லும். அதனால் இத்துடன் ஜில்லா பற்றி பேசுவதற்கு முற்று புள்ளி வைக்கிறேன்.
ஆனந்தம் படத்தின் கதைக்களத்திற்கு சரவணாவின் திரைக்கதை கோட்டிங்காக கொடுக்கப்பட்டால் அது வீரமாக தோன்றும்.
படம் முழுக்க இருக்கின்ற ஒரே விஷயம் தல புராணம். நல்ல விஷயம் டைட் - எடிட்டிங், கரெக்ட்டான பன்ச் வசனங்கள்.
ஒட்டு மொத்த படத்தையும் புரட்டிப் போட்டுப் பார்த்தாலும் புதுசா பார்ப்பதற்கு ஒன்றுமே கிடையாது. அஜித்திற்கும் தமன்னாவிற்கும் வருகின்ற காதல் கொஞ்சம்கூட கன்வின்சிங்காக இல்லை. 'ஒரு குருவிக் கூட்ட பிரிக்காதவ குடும்பத்த பிரிக்க மாட்டா மாமா'. இந்த மாதிரி ஹீரோயின் செய்யற செயலை பார்த்து வியந்து காதலில் விழும் நாயகனை நாம சமுத்திரம் காலத்திலிருந்து பார்த்திருக்கோம். வீரம்ல தல காதலில் விழப் பார்ப்பதற்கு புதுசாக இருக்கோ? சந்தானம் காமெடி ரசிக்கற மாதிரி அமைந்திருந்தது.
டெண்டர் காட்சி மரண மாஸ். அய்யய்யோ சான்ஸ் இல்லை என்று விவரித்தார்கள். அப்படி என்னங்க இருக்கு இதுல. மிஸ்டர் பாரத், அண்ணாமலை படத்துலலாம் இந்த மாதிரி காட்சியை எத்தனை வாட்டி பார்த்திருப்போம்.
வீரம் டார்கெட் செய்திருப்பது பன்ச் பேச ஒரு இடம், சண்டை போட ஒரு களம் இவ்வளவு தான். லவ், சண்டை, பஞ்ச். சென்டிமென்ட், பஞ்ச், லவ்.
தம்பிங்கடா, அண்ணணன்டா, தலடா, ரசிகன்டா. இவ்வளவு தான் வீரம் கொடுக்கிற விஷயம்.
எஸ்.பி.முத்துராமன் படங்கள் பார்த்து வளரவில்லை என்றால் வீரம், ஜில்லாவை மசாலா படம் என்று கூறியிருப்பேன்.
ஷங்கர் தந்த க்ளாஸ் மசாலா படங்களை பார்க்காமல் போயிருந்தால் வீரம், ஜில்லாவை மசாலா என்று கூறியிருக்கலாம்.
இன்னும் பத்து வயதை தாண்டாமல் குழந்தையாகவே இருந்திருந்தால் இவ்விரு படங்களும் மாஸ் என்று தோன்றியிருக்கும்.
இவ்விரண்டு படங்களை காட்டிலும் சுசீந்திரன் இயக்கிய 'பாண்டிய நாடு' எவ்வளவோ நல்ல மசாலா.
படம் பார்க்கும்போது கதாநாயகனின் மாஸ்'ஸினை கூட்ட சம்மந்தம் இல்லாமல் அடி வாங்கும் ஜிம்பாடி பாய்ஸ், முறுக்கு மீசை வில்லன்களை பார்க்கையில் பாவமாகத்தான் தோன்றுகிறது.
இந்த இரண்டு படமும் ஹிட் ஆகும்போது இது மாதிரி தரக் குறைவான படங்கள் நிறைய வரக் கூடுமோ என்ற அச்சம்தான் கூடுகிறது.
ரஜினி என்ற நடிகரை சூப்பர் ஸ்டார் எனும் பட்டத்தினால் மாஸ் படத்திற்கென்று ரசிகர்கள் முடக்கினார்கள். இப்போது அதைப்போல் தல - தளபதி என்ற பட்டத்தினால் விஜய், அஜித் என்ற நடிகர்கள் தொலைந்துவிடுவார்களோ என்ற அச்சம் கூடுகிறது.
சாதாரண சினிமா ரசிகனாக பார்க்கும்போது ஜில்லா, வீரம் இரண்டுமே கேலிச் சித்திரங்களாகத்தான் தோன்றுகிறது.