மனம் கவர்ந்த மனிதர்கள் பட்டியலில் பில்கேட்ஸ் முதலிடம்
அதிக மக்களின் மனம் கவர்ந்த மனிதர்கள் பட்டியலில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் முதலிடத்தையும், இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் 5-வது இடத்தையும் பிடித்தனர்.
பிரிட்டனிலிருந்து வெளியாகும் 'தி டைம்ஸ்' நாளிதழ் சார்பில் 'யுகவ்' என்ற நிறுவனம் உலகில் அதிக மக்களின் மனம் கவர்ந்த மனிதர் பற்றி கருத்து கணிப்பு நடத்தியது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷியா, இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, எகிப்து, நைஜீரியா மற்றும் பிரேசில் ஆகிய 13 நாடுகளில் 14 ஆயிரம் பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
30 பேர் அடங்கிய இந்தப் பட்டியலில், சச்சின் (5), பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி (7), பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் (9), குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் (10) சமூக சேவகர் அண்ணா ஹசாரே (14) டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் (18), தொழிலதிபர் ரத்தன் டாடா (30) ஆகிய 7 இந்தியர்கள் இடம் பிடித்துள்ளனர்.
பில் கேட்சுக்கு அடுத்தபடியாக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா 2-வது இடத்திலும், ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் 3-வது இடத்திலும் உள்ளனர். போப் பிரான்சிஸ் (4), சீன அதிபர் ஜி ஜின்பிங் (6), தலாய் லாமா (13), அமெரிக்க தொழிலதிபர் வாரன் பப்பெட் (8) உள்ளிட்டோரும் இடம் பிடித்துள்ளனர்.
ராணி எலிசபெத் (17), ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி (19), அமெரிக்க தொலைக்காட்சி தொகுப்பாளினி ஓபரா வின்பிரே (20), ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் (26), ஹிலாரி கிளின்டன் (27) மற்றும் சீன பாடகர் பெங் லியுவான் (28) ஆகிய 6 பெண்களும் இதில் இடம் பிடித்துள்ளனர்.
உலகம் முழுவதும் விளையாட்டு வீரர்களுக்கு அதிக ஆதரவு கிடைத்துள்ளது. இப்பட்டியலில் டெண்டுல்கர் மட்டுமல்லாது, கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி (15), கூடைப்பந்து வீரர் மைக்கேல் ஜோர்டான் (21), கால்பந்து வீரர் கிறிஸ்டினோ ரொனால்டோ (22), முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் (12) ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
இதுதவிர ஒவ்வொரு நாட்டிலும் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் தனி பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவை எடுத்துக் கொண் டால் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். ஒபாமா, மோடி, பில் கேட்ஸ், அமிதாப் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தனர்.