காமெடி அதிரடி! நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘உத்தம வில்லன்’ படம் கமல் படத்தில் இதுவரை வந்திராத புதிய கதைக்களம் என்கிறார்கள். நல்லதுக்காக வில்லத்தனம் செய்யும் கேரக்டரில் கமல் நடிக்கிறாராம்.
அப்படியானால் படம் முழுக்க வில்லத்தனம் தான் பிரதானம் என்று எண்ணி விடாதீர்கள். இது காமெடிக்களத்தில் பயணிக்கும் படம்
என்பதால் சிரிக்கவும் வைக்கப் போகிறார், கமல்.
***
அது தான் காரணமா?தமிழில் விஜயகாந்த் நடித்த ‘ரமணா’ படம் இந்தியில் ‘கப்பார்’ என்ற பெயரில் ‘ரீமேக்’காக இருக்கிறது. விஜயகாந்த் நடித்த கேரக்டரில் அக்ஷய்குமார் நடிக்க, சிம்ரன் கேரக்டரில் அமலாபாலும், ஆஷிதா கேரக்டரில் ஸ்ருதி ஹாசனும் நடிக்க தேர்வானார்கள்.
ஆனால் இப்போது படத்தில் அமலாபால் இல்லை. மொத்தமாக கால்ஷீட் கொடுக்க முடியாது என்று சொல்லி விலகிக் கொண்டதாக தகவல்.
***
எல்லாமே நட்பு தான்!தமிழ் சினிமாவின் பிசி ஹீரோக்களில் ஜெய் முக்கியமானவர். திருமணம் என்னும் நிக்கா, நவீன சரஸ்வதிசபதம், வடகறி, தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும், வேட்டை மன்னன், அர்ஜூனன் காதலி என ஒரே நேரத்தில் 6 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித கேரக்டர் என்றவரிடம், ராஜாராணி பட அனுபவம் பற்றி கேட்டபோது...
‘‘படத்தில் நயன்தாரா என்காதலி. அவருடன் ஜோடியாக நடிக்க என் எடையை 6 கிலோ அதிகமாக்கினேன். அதுமாதிரி அவரும் தனது உடல் எடையை கணிசமாக குறைத்தார். இந்தப் படம் நடிப்பில் எனக்கு புது வண்ணம் கொடுத்திருக்கிறது...’’
முகத்தில் உற்சாகம் கொப்பளிக்க சொன்ன ஜெய்யிடம், ‘‘முதலில் அஞ்சலி. இப்போது நஸ்ரியா என உங்களை சுற்றி வரும் கிசுகிசுக்களை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்? ’’
“சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஆண்களும் பெண்களும் நட்பு ரீதியில் பழகுவதில்லையா? அது மாதிரி தான் இதுவும். உடன் நடிக்கும் நடிகைகளிடம் நட்பு ரீதியில் பழகப்போக, அதற்கு வேறு அர்த்தம் கொடுத்து விடுகிறார்கள்.’’
***
அடுத்த விளையாட்டு!சென்னை–28, வெண்ணிலா கபடிகுழு, சுண்டாட்டம் போன்ற விளையாட்டு பின்னணி கதையைக்கொண்ட படங்கள் வெற்றிபெற்றபிறகு அதுமாதிரி படங்கள் கோலிவுட்டில் வரத்தொடங்கி விட்டன. அந்த வரிசையில் இன்டோர் புட்பால் விளையாட்டை மையமாக வைத்து கே.குணா இயக்கி வரும் படமே எதிர்வீச்சு. நாயகனாக ‘சுண்டாட்டம்’ நாயகன் இர்பான் நடிக்கிறார். ‘தெரியாம உன்னை காதலிச்சிட்டேன்’ படத்தின் நாயகியான ரஸ்னா தான் இந்தப் படத்திலும் நாயகி.
பயிற்சி மட்டுமே வெற்றி தரும் என்று எண்ணும் ஒரு அணியும், பணத்தை வீசினால் வெற்றி ஓடி வந்து மண்டியிடும் என்று நம்பும் இன்னொரு அணியும் மோத, யார் ஜெயிக்கிறார்கள் என்பது அதிரடி கிளைமாக்ஸ்.
முழுக்க மலேசியாவில் தயாராகும் இந்தப் படத்தில் நாயகன் நடித்திருப்பதும் மலேசிய புட்பால்வீரர் கேரக்டரில் தான்.
***
எல்லாமே தற்செயல்!இதுவரை நடித்த 15 படங்களில் தாஸ், குமரன் சன்ஆப் மகாலட்சுமி, பேராண்மை என 3 படங்களில் விளையாட்டு வீரராக பட்டை கிளப்பியிருப்பார் ஜெயம் ரவி. இப்போது நடித்து வரும் பூலோகம் படமும் இந்த ரகம் தான். குத்துச்சண்டை வீரராக இந்தப் படத்தில் நடிக்கும் ஜெயம்ரவி, ‘‘விளையாட்டு வீரன் சம்பந்தப்பட்ட படங்களெல்லாமே தற்செயலாக அமைகிறது என்பது தான் இதில் என் சந்தோஷம்’’ என்கிறார்.
‘‘சிறு வயதில் இருந்தே என்னுள் ஒரு விளையாட்டு வீரன் இருப்பதை உணருகிறேன். அந்த மன நிலையில்தான் வெற்றி தோல்வி இரண்டையும் எதிர்கொள்கிறேன். இந்த விளையாட்டு ஆர்வம்தான் நடிப்புக்கு மிகவும் உதவியது. பூலோகம் படத்தைத் தொடர்ந்து விளையாட்டுத்துறைக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் எனது கணிசமான நேரத்தையும் சக்தியையும் செலவிட முடிவு செய்திருக்கிறேன் என்கிறார்.
இது ஒண்ணும் பூலோகம் பட வசனம் இல்லையே..!
***
மாணவர் பிரச்சினைவியாபார நோக்கில் மட்டுமே எடுக்கப்பட்டு வரும்
படங்களுக்கு மத்தியில் எப்போதாவது நல்ல சமூக சிந்தனையுள்ள படங்களும் வந்து ஹிட்டடிக்கின்றன. எங்கள் தயாரிப்பில் புதுமுகங்கள் நடிக்க ஜேப்பிஅழகர் இயக்கி வரும் ‘பிரமுகர்’ அப்படியொரு படம் என்கிறார், டி.டி.சுரேஷ்.
‘‘அப்படியென்ன கதை?’’ கேட்டால், ‘‘மாணவர்களின் இன்றைய அத்தியாவசிய பிரச்சினையை மையமாக வைத்து இதுவரை யாரும் சொல்லியிராத திரைக்கதை. கொஞ்சமும் எதிர்பார்த்திராத கிளைமாக்ஸ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கும். தொடர்ந்தும் இம்மாதிரி சமூக அக்கறையுடன் கூடிய படங்களே என் சாய்ஸ்!’’ என்கிறார்.
அப்படீன்னா சமூக சீர்கேட்டை களையும் திரைக்கதை வைத்திருக்கும் இயக்குனர்களுக்கு அதிர்ஷ்டம் அடிச்சாச்சுன்னு சொல்லுங்க!
***
ஆல்பம் பார்த்து...‘அம்மா அம்மம்மா’ படம் மூலம் இசையமைப்பாளராக அடியெடுத்து வைக்கும் எம்.வி.ரகு, தொடக்கத்தில் கீபோர்டு பிளேயராகவே வெளிப்பட்டார். இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், சங்கர்–கணேஷ் ஆகியோரிடம் கீபோர்டு வாசித்தவர், அப்படியே கர்நாடக இசை, மேற்கத்தியஇசை இரண்டிலும் தேறி, இசைக்களத்தில் தன்னை இசையமைப்பாளராக அங்கீகரித்துக் கொண்டிருக்கிறார். இந்த காலகட்டத்தில் இவர் இசையில் வெளியான நூற்றுக்கணக்கான இசை ஆல்பங்கள் ‘யார் இவர்?’என்று கேட்க வைக்க, அதேநேரம் ‘அம்மா அம்மம்மா’ படத்தின் தயாரிப்பாளர் பார்வைக்கும் இந்த ஆல்பம் போக, அப்போதே கைகூடியதுதான் இசையமைப்பாளர் வாய்ப்பு.
இந்தப் படம் முடிவதற்குள் தரிசுநிலம் உள்ளிட்ட 3 படங்களில் வாய்ப்பு கனிய, உற்சாகமாகி விட்டார், ரகு.
‘அம்மா அம்மம்மா’ படத்தின் இசை அனுபவம் பற்றிக்கேட்டால், ‘‘அது அம்மா–மகன் பாசப்போராட்டக் கதை. அதற்கேற்ற பாசப்பின்னணியில் ‘குக்கூ குயில் பாட்டு’ என்ற மெலடி பாடலுக்கு இசையமைத்தபோது யூனிட்டே ரசித்தது. அப்போதே இந்தப் பாடல் ஹிட் ஆகும். நானும் பேசப்படுவேன் என்ற நம்பிக்கை வந்து விட்டது’’ என்கிறார்.
நல்ல இசை நாடறிய வைக்கும் தானே!
***
சின்னத்திரை சிநேகா!திருமணத்துக்குப் பிறகு ‘உன் சமையலறையில், பண்ணையாரும் பத்மினியும்’ என 2 படங்களில் நடித்துவரும் சிநேகா, மிக விரைவில் சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றிலும் கலக்கவிருக்கிறார். இதற்காக அவருக்கு பேசப்பட்ட தினசரி சம்பளம் தான் கேட்பவர்களுக்கு தலையை சுற்றும்.
***
மறுபடியும் தமிழ்!‘அத்திரண்டிக்கு தாராதி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தெலுங்கில் நடிகை பிரணிதாவுக்கு வாய்ப்புகள் வரிசை கட்டுகின்றன. தமிழில் ‘சகுனி’ படத்தில் நடித்தவர், அந்தப்படம் எதிர்பார்த்த அளவுக்கு கைகொடுக்காததில் நொந்து போய்த்தான் தெலுங்குப் படஉலகம் போனார்.அப்படியே கன்னடத்திலும் நடிக்கத் தொடங்கினார்.
இப்போது மீண்டும் தமிழ்ப்பட வாய்ப்புகளும் எட்டிப் பார்க்கத் தொடங்கி இருக்கின்றன.
ஜெயிச்சாத்தான் நம்மவர்கள் அள்ளிக்குவாங்களே!
***
ராசியான ஜோடி!காஜலுடன் ஜோடி சேர்ந்த ‘நான் மகான் அல்ல’ படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்தே ‘ஆல்இன்ஆல் அழகுராஜா’ படத்திலும் சென்டிமென்டாக அவருடன் ஜோடி சேர்ந்தார், கார்த்தி. இப்போது படம் எதிர்பார்த்தபடி திருப்தியாக வந்திருப்பதில், புதிய படத்தில் காஜல் ஜோடி என்றாலும் ஓ.கே. என்கிறாராம்.
ராசியான ஜோடி என்றால் எத்தனை படங்களில் நடித்தாலும் ஜெயித்துக் கொண்டே இருக்கலாமே. நமக்கு வெற்றி தானே முக்கியம்.
***
மறுப்பேனா, நான் மறுப்பேனா..!காஜல்அகர்வால் தமிழில் முன்னணி நடிகை. விஜய்யுடன் சேர்ந்து ‘துப்பாக்கி’ தூக்கியவர், அவரது அடுத்த படமான ‘ஜில்லா’வுக்கும் ராணியாகி விட்டார். இப்போது கார்த்தியுடன் ‘ஆல்இன்ஆல் அழகுராஜா’வை முடித்தவர், தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடிக்கிறார். கூடவே கைகோர்த்துக் கொண்டு ஒரு தெலுங்குப் படமும் வந்திருக்கிறது.
இதற்கிடையே கமல் படத்தில் நடிக்க கேட்டதாகவும், காஜல் மறுத்ததாகவும் ஒரு தகவல். அதுபற்றி காஜலிடம் கேட்டால், ‘‘கமல் படத்தில் நடிக்க என்னிடம் யாரும் பேசவில்லை. அப்படியொரு வாய்ப்பு தேடி வந்தால் அதை எப்படி விடுவேன்’’ என்கிறார்.
இதுவும் நடிப்பு இல்லையே!
***