.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, September 14, 2013

முட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – திரை விமர்சனம்



தமிழ் சினிமாவின் தரம் இப்போது எங்கே போய் கொண்டிருக்கிறது என்பதே தெரியவில்லை. முன்பெல்லாம் பிரமாண்ட செட் போட்டு படமெடுத்தார்கள்… அதன்பிறகு அவுட்டோர் ஷூட்டிங் என வெளியிடங்களிலும், வெளிநாடுகளிலும் படப்பிடிப்பை நடத்தினார்கள்… இப்போது ஒரே வீட்டுக்குள் மொத்த படத்தையும் முடித்துக் கொள்கிறார்கள்… இதில் கடைசியாக சொன்ன ரகத்தில்தான் ‘மூடர் கூடம்’ உருவாகியிருக்கிறது.


படத்திற்கு ஏன் அப்படி பெயர் வைத்தார்கள் என்று யோசிப்பவர்கள் படம் பார்த்தால் அட… சரியாகத்தான் பேர் வைத்திருக்கிறார்கள்… ‘மூடர் கூடம்’ என பேர் வைத்து விட்டு அதற்கு கீழே ‘பூஃல்ஸ் கேதரிங்’ என அடைமொழி போட்டிருக்கிறார்கள்.


படமும் முட்டாள்களைப் பற்றியது… என்ன ஒரு கொடுமை என்றால் படம் பார்க்கிறவர்களையும் முட்டாள்களாகவே பாவிக்கிறது..’நாளைய இயக்குனர்’ மூலம் சினிமாவுக்குள் அடி எடுத்து வைத்தவர் என்பதை மறக்காமல் படம் முழுக்க குறும்பட பாதிப்பு… ஒரு சினிமாவுக்கான இலக்கணம் எதுவும் மூடர்கூடத்தில் இல்லை.

sep 14 - cine moodar kottam
 


இந்த படத்தை தனது கம்பெனி சார்பில் ‘பசங்க’பாண்டியராஜ் வாங்கி வெளியிடுகிறார்… தனது முதல் படைப்பில் பேசப்பட்ட இயக்குனர் முதல் படைப்பில் தேசிய விருது பெற்ற இயக்குனர் என பல அடைமொழிகளை சுமக்கிற பாண்டியராஜ் ‘மூடர்கூடம்’ படத்தை வெளியிடுவதன் மூலம் அவரும் சாதாரண சினிமா வியாபாரிதான் என்பதை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்…


கதை என பார்த்தால் பிழைப்பு தேடி சென்னை வரும் ஒரு இளைஞர்… விபத்தில் தங்கையை காப்பாற்ற மறுக்கும் டாக்டர் மீது ஆசீட் வீசி ஜெயிலுக்கு போய் திரும்பும் ஒரு இளைஞர்… வீட்டிலும், படிக்கிற இடத்திலும் முட்டாள் ஒன்றுக்கும் உதவாதவன் என சொல்வதால் வீட்டை விட்டு ஓடிவரும் ஒரு இளைஞனும்… சூழ்நிலையால் அனாதையான ஒரு இளைஞர் என நால்வரும் ஒரு சூழலில் போலீசில் சிக்கிக் கொள்கிறார்கள்…


அங்கிருந்து வெளியே வரும்போது ஏற்படும் நட்பு எங்கே கொண்டுபோய் விடுகிறது என்பதுதான் கதை.


பிழைப்பு தேடி சென்னைக்கு வரும் இளைஞரின் மாமா வீட்டில் கொள்ளையடிக்க இந்த நால்வர் அணி திட்டமிடுகிறது… அதே மாமா வீட்டில் ஒரு சிடியை தேடி ஒரு திருடன் உள்ளே புகுந்து கொள்கிறான்… இது தெரியாமல் நால்வர் அணி வீட்டுக்குள் புகுந்து ஒட்டுமொத்த குடும்பத்தையும் சிறை பிடித்து ஒரு அறைக்குள் அடைக்கிறது…

அங்கே நடக்கும் கலாட்டாக்கள்தான் மொத்த படமும்…

நால்வர் அணிக்கு தனித்தனியாக ஒரு பாட்டும்… ஒரு பிளாஷ்பேக் கதையும் வைத்திருக்கிறார் இயக்குனர் நவீன்… தமிழ் சினிமாவின் சாபக்கேடு படத்தில் நடிக்கிற நாய்க்கு கூட ஒரு பிளாஷ்பேக் கதை சொல்கிறார் இந்த இயக்குனர்… (இது புது டிரண்டு என இதைப்போல பலர் கிளம்புவார்கள் பாருங்கள்)


உச்சபட்ச கொடுமை என்றால் படத்தில் இடம் பெரும் ஒரு பொம்மைக்கு கூட ஒரு பிளாஷ்பேக் வைத்தது இயக்குனரின் ‘டச்’…


ஹீரோயின் ஓவியாவுக்கு பாடல் காட்சியைத்தவிர படம் முழுக்க ஒரே ஒரு கையில்லாத பனியன்… பேன்ட்…தான் காஸ்டியூம்… அதிக பட்சம் ஒரு குளியல் சீனில் பெரிய டர்க்கி டவல் கட்டியிருக்கிறார் ஓவியா… இதை தவிர அவருக்கு பெருசாக எதுவும் சிரமபடவில்லை… அவரும் நடிப்பதற்கு பெருசாக சிரமபடவில்லை…


பரட்டை தலையுடன் சென்ட்ராயன் அலம்பல்கள் ரசனை… இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிற நவீன் படம் முழுக்க ரொம்ப பேசுகிறார்…


பாடல்கள் எதுவும் மனசில் நிற்கவில்லை… நடராஜ் சங்கரனின் பின்னணி இசை படத்துக்கு பல இடங்களில் பலம் சேர்க்கிறது…


படத்தை பார்த்தவர்களுக்கு இப்படியும் போட்டிகள் நடத்தலாம்…


1.படத்தில் மொத்தம் எத்தனை பிளாஷ்பேக் காட்சிகள் வருகின்றன?

2.படத்தில் எத்தனை முறை முட்டாள் என சொல்கிறார்கள்?

3.படத்தில் ஹீரோயின் ஓவியா எத்தனை காஸ்டியூம் பயன்படுத்துகிறார்..?

4.நாய் பாடலில் எத்தனை நாய் குட்டிகள் இருந்தன..?

இப்படி பல கேள்விகளை தயாரித்து பரிசுபோட்டிகள் கூட நடத்தினாலும் ஆச்சர்யமில்லை…

மொத்தத்தில் ‘மூடர்கூடம்’ படம் பார்க்கிறவர்களையும் முட்டாள்களாக்கி தன்னிலை மறக்கச் செய்யும்… தமிழ் சினிமாவின் தரத்தை மறந்து பார்த்தால் இதுபோன்ற படங்களையும் ரசிகர்கள் வரவேற்பார்கள் என்பதுதான் வேதனையான உண்மை..!

0 comments:

 
back to top