‘நய்யாண்டி’ படத்தில், டூப் நடிகை நடித்த 3 காட்சிகள் நீக்கப்பட்டதைத்தொடர்ந்து அந்த படம் வெள்ளிக்கிழமை திரைக்கு வருவதற்கு சம்மதம் தெரிவித்ததாக நடிகை நஸ்ரியா கூறினார்.
புகார்
தனுஷ்–நஸ்ரியா நடித்து, ஏ.சற்குணம் டைரக்டு செய்த ‘நய்யாண்டி’ படத்தை கதிரேசன் தயாரித்து இருக்கிறார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல் காட்சியில், படுகவர்ச்சியான சில சீன்கள் வைக்கப்பட்டு இருந்ததால், அதில் நடிப்பதற்கு மறுத்ததாகவும், அந்த காட்சிகளில் ஒரு ‘டூப்’ நடிகையை நடிக்க வைத்து, படத்தில் இணைத்து இருப்பதாகவும் டைரக்டர் சற்குணம் மீது தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நஸ்ரியா புகார் செய்தார்.
தான் நடிக்காத காட்சிகளை நடித்தது போல் காட்டுவது மிகப்பெரிய மோசடி என்று அந்த புகாரில் அவர் குறிப்பிட்டு இருந்தார். அந்த காட்சிகளை படத்தில் இருந்து நீக்காவிட்டால், வழக்கு தொடரப்போவதாகவும் அவர் கூறினார். இது தொடர்பாக அவர், போலீஸ் கமிஷனர் ஜார்ஜை சந்தித்து புகார் மனு கொடுத்தார்.
டூப் நடிகை
புகார் மனுவில், ஆட்சேபனைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால், ‘நய்யாண்டி’ படத்தை திரையிட அனுமதிக்கக்கூடாது என்றும், என் ரசிகர்களும், குடும்பத்தினரும் படுகவர்ச்சியான காட்சிகள் இடம் பெறுவதை விரும்பவில்லை என்றும் நஸ்ரியா குறிப்பிட்டு இருந்தார். பின்னர் அவர் ஒரு மலையாள படப்பிடிப்புக்காக கேரளா புறப்பட்டு சென்றார்.
‘நய்யாண்டி’ படம், நஸ்ரியாவின் வக்கீல்களுக்காக நேற்று காலை சென்னை போர் ப்ரேம் தியேட்டரில் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. வக்கீல்களுடன் நஸ்ரியாவின் தந்தை நசீம் அமர்ந்து படம் பார்த்தார். அப்போது, மூன்று காட்சிகளுக்கு அவர் ஆட்சேபம் தெரிவித்தார். அந்த காட்சிகளில் நஸ்ரியா நடிக்கவில்லை என்று அவர் கூறினார்.
3 காட்சிகள் நீக்கம்
முதல் இரவு அறையில் படுத்தபடி, தனுஷ் கால்களுடன் நஸ்ரியாவின் கால்கள் பின்னிப் பிணைவது போல் ஒரு காட்சி, நஸ்ரியாவின் முதுகில் வியர்வை துளிகள் படர்ந்திருப்பது போல் ஒரு காட்சி, தனுஷ் மடியில் நஸ்ரியா தலை வைத்து படுத்திருப்பது போல் ஒரு காட்சி இந்த மூன்று காட்சிகளிலும் நஸ்ரியா நடிக்கவில்லை என்றும், ‘டூப்’ நடிகையை பயன்படுத்தி அந்த காட்சிகள் படமாக்கப்பட்டிருப்பதால், அந்த மூன்று காட்சிகளையும் நீக்க வேண்டும் என்றும் நசீம் குறிப்பிட்டார். அந்த காட்சிகளை நீக்குவதற்கு தயாரிப்பாளர் கதிரேசன் சம்மதித்தார்.
அதைத்தொடர்ந்து வக்கீல்களும், நஸ்ரியாவின் தந்தை நசீமும் எடிட்டிங் அறைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்கள் முன்னிலையில், அந்த காட்சிகள் நீக்கப்பட்டன.
போலீஸ் புகாரில் கூறியிருந்த 3 காட்சிகளும் நீக்கப்பட்டதால், ‘நய்யாண்டி’ படம் வெள்ளிக்கிழமை திரைக்கு வருவதற்கு சம்மதம் தெரிவித்ததாக நஸ்ரியா கூறினார்.
0 comments:
Post a Comment