.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, November 26, 2013

அரச மரம் - அனைத்து பயன்களும் ஒரே கட்டுரையில்!


 புவியில் வாழும் உயிர்களுக்கு உயிர் கொடுப்பது மரங்கள்தான்.

மரங்கள்தான் சூரிய ஒளியிலிருந்து வெப்பத்தை உள்வாங்கி, குளோரோபில் மூலம் காற்றில் உள்ள கார்பன்டை ஆக்ஸைடை உறிஞ்சி ஆக்ஸிஜனை வெளியிடுகிறது.

இதனாலேயே தாம் நம் முன்னோர்கள் மரங்களை தெய்வமாக வழிபட்டனர். அப்படி நம் முன்னோர்கள் வழிபட்ட மரங்களுள் அரச மரமும் ஒன்று.

இன்று குளக்கரை, கோவில்களில் அரச மரம் இல்லாத கிராமங்களை நாம் காண முடியாது. நீண்ட காலம் வாழும் அரச மரங்கள் தெய்வமாக போற்றப்படுகின்றன. வேம்பை பெண் தெய்வமாக வணங்குவார்கள். அரச மரத்தை ஆண்தெய்வமாக வணங்குவர். பெரும்பாலும் அரச மரம் இருக்கும் இடமெல்லாம் பிள்ளையார் சிலை இருக்கும்.

புத்தபிரான் போதி மரத்தின் கீழ் ஞானம் பெற்றதாக நாம் அறிவோம். அந்த போதிமரம் என்பது அரச மரம்தான்.

அரச மரத்தை சுற்றிவிட்டு அடிவயிற்றைத் தொட்டுப்பார்த்தாள் என்ற பழமொழி உண்டு.

இதன் பொருள் அரச மரம் குலம் தழைக்கச் செய்யும் பிள்ளைப்பேறை உண்டாக்கும். சூலகத்தை சீராக்கும். சூலகத்தில் உண்டான நோய்களை போக்கும் என்பதே.

அரச மரத்தின் காற்று கருப்பை கோளாறுகளை போக்கும் தன்மையுடையது. அதுபோல் மூளையின் செயல்பாடுகளை தூண்டி, மன அமைதியைக் கொடுக்கும் குணமும் இதற்கு உண்டு.

புராதான காலம் தொட்டே அரச மரம் இந்தியாவில் இருந்து வந்துள்ளது. இதன் பூர்வீகத்தை இந்தியா, இலங்கை, மியான்மர், நேபாளம், பாகிஸ்தான் போன்ற நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு தங்களுடையது என்கின்றனர். ஆனால் இதன் பூர்வீகம் பாரத பூமிதான்.

நீண்டு நெடிய மரம், அழகான இலைகள் என்று பரந்து விரிந்து காணப்படும் அரச மரத்திற்கு அஸ்வத்தம், அச்சுவத்தம், திருமரம், போதி, கவலை, பேதி, கணவம், சராசனம், மிப்பலம் என பல பெயர்கள் உண்டு.

நன்கு வளர்ந்த அரச மரம் நாளொன்றுக்கு 1808 கிலோ கரியமில வாயுவை உள்வாங்கி 2400 கிலோ பிராண வாயுவை வெளியிடுவதாக நவீன ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மேலும் இந்த பிராண வாயு காற்று மண்டலத்தில் கலந்து காலை நேரங்களில் இம்மரத்தை சுற்றி வரும்போது நாளமில்லா சுரப்பிகளில் செயல் பாடுகளைத் தூண்டுகின்றன என்றும் கூறுகின்றனர்.
இதன் இலை, வித்து, வேர், பட்டை அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது.

அரச இலை கொழுந்துகளை எடுத்து நீரில் கொதிக்க வைத்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வன்மை கொடுப்பதுடன் சுரக்காய்ச்சல் குறையும். முக்குற்றத்தையும் அதாவது வாதம், பித்தம், கபம் போன்றவற்றை சீராக்கி உடலை சீராகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.

அரசமரத்தின் பட்டை, வேர், விதை இவற்றை பாலில் கொதிக்கவைத்து ஆறிய பின் அதில் தேன் கலந்து தொடர்ந்து 1 மண்டலம் அருந்தி வந்தால் தாது விருத்தியடையும். பெண்களுக்கு கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.

அரச விதைகளைக் காயவைத்து இடித்து பொடியாக்கி வைத்துக்கொண்டு தினமும் பாலில் கலந்து உண்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும். மலத்துடன் இரத்தம் வெளியேறுதல் குணமாகும்.

அரசமரப் பட்டையை சிதைத்து நீரில் போட்டு கொதிக்க வைத்து குடிநீராக அருந்தி வந்தால் சொறி, சிரங்கு குணமாகும். உடல் வெட்கை குறையும். வியர்வை நாற்றம் நீங்கும். சருமம் பளபளப்பதுடன், சரும நோய்கள் அண்டாது. சருமத்தில் சுருக்கம் ஏற்படாது.

அரசமரப் பட்டையை சிதைத்து பொடியாக்கி நாள்பட்ட புண்களின் மீது தடவினால் புண்கள் விரைவில் குணமாகும்.

அரச மரப் பட்டையை நீரில் போட்டு கொதிக்க வைத்து ஆறிய பின் அந்த நீரால் வாய் கொப்பளித்து வந்தால் வாயில் உள்ள புண்கள் விரைவில் குணமாகும்.

வெள்ளைப்படுதல் நோய் கொண்ட பெண்கள் இந்த நீரால் பிறப்புறுப்பை கழுவி வந்தால் வெள்ளைப்படுதல் நோய் குணமாகும். அதனால் ஏற்படும் மற்ற பாதிப்புகள் குறையும்.

அரச மரத்தின் இலையை, பட்டை, வேர், விதை இவற்றை இடித்துபொடியாக்கி வைத்துக்கொண்டு மாதவிலக்குக் காலங்களில் கஷாயம் செய்து அருந்தி வந்தால் மாதவிலக்கில் ஏற்படும் பிரச்சனைகள் தீரும். கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.

அரச மரத்தின் பாலை எடுத்து பாத வெடிப்புகள் உள்ள பகுதிகளில் பூசிவந்தால் பித்த வெடிப்புகள் விரைவில் மறையும்.

அரச இலை, பட்டை, வேர் இவைகளை எடுத்து நன்கு இடித்து நீரில் கொதிக்க வைத்து கஷாயமாக்கி தேவையான அளவு பனைவெல்லம் கலந்து அருந்தி வந்தால், மன அழுத்தம், மன எரிச்சல், அதீத கோபம், தீரா சிந்தனை போன்றவை தீரும்.

அதிகளவு ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் மரங்களுள் அரச மரமும் ஒன்று. எனவே அரச மரத்தை நட்டு அதன் பயனை நாமும், நம் சந்ததியினரும் பெற வழி செய்வோம்.

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: "அரச மரத்தை சுற்றிவிட்டு அடி வயிற்றைத் தொட்டுப் பார்த்தாளாம்" என்றொரு பழமொழி இருக்கிறது. அரச மரத்தினுடைய காற்று கர்ப்பத்தையே பலப்படுத்தக்கூடிய அளவிற்கு மருத்துவ சக்தி பெற்றது. அரச மரத்தில் ஒருவித மின் ஆற்றல்கள், பாசிடிவ் எனர்ஜி அளிக்கக் கூடிய மின் ஆற்றல்கள் அரச இலை போன்றவற்றில் இருக்கிறது.

ஹோமங்களில் நாம் போடும் பொருட்களில் அரசங்குச்சி அவசியமாக அதில் இடம் பெறுகிறது. இந்த அரசங்குச்சியில் இருந்து வரக்கூடிய புகை மூச்சுத் திணறல், சளித் தொந்தரவுகளை போக்கக் கூடியது. நரம்புகளை முறுக்கேற்றக் கூடியது. சோர்வு, களைப்பு, நரம்புத் தளர்ச்சியுடன் இருப்பவர்களுக்கெல்லாம் மிகவும் நல்லது.

குறிப்பாக சொல்ல வேண்டுமானால், விந்தணுக்களினுடைய எண்ணிக்கை அதிகப்படுத்தக்கூடிய, பலப்படுத்தக்கூடியதெல்லாம் அரச பழத்தை பதப்படுத்தி உண்ணும் போது வருகிறது.

நம்முடைய மூதாதையர்கள், முன்னோர்கள் மருத்துவ குணங்களை சூசகமாக சொல்லிச் சென்றிருக்கிறார்களே தவிர, நேரடியாக அறிவியலாக அதை சொல்லாமல் சென்றுவிட்டார்கள். அதனால், பாதியில் வந்தவர்கள் இதெல்லாம் மூட நம்பிக்கை, அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

இதையே சிகாகோவில் இருக்கக் கூடிய பல்கலைக்கழகம், அரச மர இலையில் இவ்வளவு வீரியம் இருக்கிறது. அந்த மரத்திற்கு கீழ் உட்கார்ந்து அரை மணி நேரம் சுவாதித்தால் இத்தனை கலோரிகள் கிடைக்கிறது என்று அவர்கள் சொல்லும் போதுதான் மக்கள் நம்பப் போகிறார்கள்.

அதனால்தான், அரச, வேம்பு போன்றவைகளை பராமரிப்பது என்பது பரிகாரம் போன்றது என்று சொல்லியிருக்கிறார்கள். 4 அரச மரங்களை நட்டு அதற்கு கீழ் 4 பேர் உட்கார்ந்து மருத்துவ குணம் பெற்று உடல் நலம் தேறிச் செல்கிறார் என்றால், அந்தப் புண்ணியம் அந்த மரத்தை நட்டவரைப் போய்ச் சேரும்.

ஒரு ஆன்மாவைத் திருப்திப்படுத்தக் கூடிய செயல்தான் மரம் நடுதல். அதில் பயனுள்ள மரத்தை நடும்போது அவர்களுடைய புண்ணியம் இன்னமும் அதிகரிக்கிறது. அசோகர் மரம் நட்டார் என்று படிக்கிறோமே, இன்றைக்கும் அதையேதானே உலக நாடுகள் மரம் நடுவோம் என்று வலியுறுத்தி வருகின்றன.

அரச மரம் -அஸ்வத்தம்

 ஆயுர்வேதத்தில் அரச மரத்தை -அஸ்வத்த என்போம்
 வேறு பெயர்கள் -போதி மரம் (போதி தரு ),சல பத்ர,திரு மரம் ,பிப்பலம்
 ஆச்சார்யர் சர்க்கார் -மூத்திர சங்கிரக நீயம் ,கஷாய ஸ்கந்தா பிரிவில் சேர்த்துள்ளார் .

 ஆச்சார்யர் சுஸ்ருதர் -ந்யக்ரோதாதி கனத்தில் சேர்த்துள்ளார்
 பயன்பாடுகளில் -கப பித்த நோய்களிலும் ,ஆண்மை பெருக்கவும்,வர்ணத்தை கொடுக்கவும் ,புண்களை ஆற்றவும்,சுத்தம் செய்யவும் பயன்படும்

 நோய்களில் -பெண்களின் பெண் உறுப்பு நோய்கள்,வாத ரக்த என்னும் நீர் வாதத்திலும் ,தோல் நோய்களிலும் ,கெட்ட ஆரப் புண்களிலும் சரிசெய்யும்
 வாத ரக்த நோயில் -அரசம்பட்டையை குடிநீராக்கி குடிக்க தீரும் (சரக சம்ஹிதை -சி -இருபத்தி ஒன்பது அத்தி)
ஆண்மையில்லாதவனுக்கு (கிலைபியத்தில்)-அரசம் பாலில் அரச பூ,வேர்,பட்டை ,இலை மொக்கு வேக வைத்து தேன் சர்க்கரையுடன் சாப்பிட ஆண்மை இல்லாதவன் ஆண்மை பெறுவான்,குறி எழும்பாதவன் ஆண் மகனாவான் (சுஸ்ருத சம்ஹிதை -சி-இருபத்தி ஆறு )
தீப்புண்ணில் -அரசம்பட்டையின் வேர் பொடியை தூவ தீப்புண் சீக்கிரம் ஆறும் (வ்ரு-மாதவம் )
கடைகளில் கிடைக்கும் மருந்ந்துகளில்-அஸ்வத்த மூலாதி மோதகம் ,நால்பாமராதி தைலம்
 சித்த மருத்துவத்தில்

 செய்கை -விதை -மலம் இளக்கி,
இலை கொழுந்து -உடல் வன்மை பெருக்கும்,சூலகத்தை உண்டாக்கும் ,கருப்பை கொலரை போக்கி -சூல் கொள்ள செய்யும் -அதனாலே "அரச மரத்தை சுற்றி விட்டு அடி வயிற்றை தொட்டு பார்த்தாள்" என்ற பழ மொழியும் உண்டு
 அரசவேர் மேல் விரணம் ஆற்றுமுவ் வித்து

 வெருவவரும் சுக்கில நோய் வீட்டும் -குரல் வறள்வி

 தாகமொழிக் குங்கொழுந்து தாது தரும் வெப்பகற்றும்

 வேக முத்தோடம்போக்கும் மெய் (அகத்தியர் குண பாடம் )


மரங்களில் அபூர்வமான மரம் அரச மரம். அனைத்து தாவரங்களும் 12 மணி நேரம் ஆக்ஸிஜனும், 12 மணிநேரம் கார்பன்-டை-ஆக்சைடும் வெளியேற்றும். ஆனால் அரச மரம் மட்டும் 24 மணிநேரமும் ஆக்ஸிஜன் வெளியேற்றும். அதனால்தான் கோயில்களின் சுற்றுப்புறச் சூழ்நிலையைப் பராமரிக்க அரச மரங்களை நட்டு பராமரிப்பார்கள். இதேப் போல், பொது இடங்களில் கிராமங்களில் அரச மரத்தை நடுவார்கள்.

அரச மரத்திற்கும், வியாழன் (Jupiter) கிரகத்திற்கும் நேரடி தொடர்புகள் இருக்கின்றன. கிரகங்களில் வியாழன் கிரகம் சக்தி வாய்ந்தது. இது குழந்தை பாக்கியம், திருமணம், பணம், வரவு போன்ற காரியங்களுக்கு உதவுவதாக இந்து சாஸ்திரங்கள் கூறுகின்றன.

வியாழன் கிரகம் மனிதனின் தொடைப் பகுதியை அதிகளவில் பாதிக்கும். வியாழக்கிழமையன்று வியாழன் கிரகம் மிகவும் சக்தி வாய்ந்ததாக காணப்படுகிறது. அதனால்தான் அந்த தினம் வியாழக்கிழமை (Thursday)என்று உலகம் முழுவதும் அழைக்கப்படுகிறது.

தனுசு ராசி, மீனம் ராசி, புனர்பூசம் நட்சத்திரம், விசாகம் நட்சத்திரம், பூரட்டாதி நட்சத்திரம் கொண்டவர்களுக்கும் வியாழக்கிழமை பிறந்தவர்களுக்கும், நவம்பர் 21 முதல் டிசம்பர் 20 வரை பிறந்தவர்களுக்கும் அரசன் மரம் உகந்த நன்மை தரும் மரமாகும்.

தோல் நோய்கள், காயங்கள், தீப்புண், அஜீரணம், நடக்கும் போது கால் மடங்கிப் போதல், தொழுநோய், மூட்டுவாதம், இதய பலவீனம், மது மற்றும் போதைக்கு அடிமையாகுதல் போன்ற நோய்களும் வியாழன் கிரகத்துடன் தொடர்பு கொண்டவை.

இந்து சமுதாய மக்கள் வியாழன் கிரகத்திற்கு "குரு' என்று அழைப்பார்கள். வியாழன் கிரகத்தின் நல்ல கதிர்வீச்சுக்கள் நன்மைகள் தரும். கெட்ட கதிர்வீச்சுக்கள் தீங்கு விளைவிக்கும்.

வியாழன் கிரகத்தால் உண்டாகும் நோய்கள், தீமைகளுக்கு வியாழன் தோஷம், குரு தோஷம் என்பார்கள். இந்த தோஷத்தை நீக்க நவக்கிரக ஆலயங்களுக்குச் சென்று குரு பகவான் விக்கிரகத்தை வணங்கிவிட்டு அருகில் உள்ள அரச மரத்தைக் தொட்டு கும்பிட்டு நூறு முறை சுற்றி வருவது இந்து சமுதாய மக்களின் ஐதீகம்.

உண்மையில், அரச மரம் வியாழன் கிரகத்துடன் தொடர்பு கொண்டது. இந்த மரம் வியாழன் கிரகத்தின் நல்ல கதிர்வீச்சுகளை தன் உடலில் உறிஞ்சிக் கொண்டு அடைத்து பாதுகாத்துக் கொளளும். அதுதான் இந்த மரத்தின் ஒவ்வொரு பாகததிலும் மருத்துவ குணமாக மாறுகிறது.

மருத்துவ குணங்கள்

 இலைகள்: இளம் துளிர்களை பாலில் அல்லது தண்ணீரில் காய்ச்சி, வடிகட்டி சர்க்கரை கலந்து குடித்து வந்தால் மூளைக்கு பலம் கிடைக்கும்.

இதன் இலைகளை நிழலில் உலர வைத்து, பவுடராக்கி, கருவேலம் பிசின் சேர்த்து மாத்திரைகளாக உருட்டி ஒரு மாத்திரையை சுவைத்துச் சாப்பிட்டால் இருமல் குணம் பெறும்.

ஏழு முதிர்ந்த இலைகளை எரித்து, தண்ணீரில் போட்டு சிறிது நேரம் கழித்து வடித்துக் குடித்தால் வாந்தி நிற்கும்.

மரப்பட்டை: 

இம்மரத்தின் பட்டையையும், இலைகளையும் தண்ணீரில் கொதிக்க வைத்து தேன் கலந்து குடித்தால் வெட்டை நோய், குஷ்ட நோய் நீங்குவதுடன், இரத்தம் சுத்தமாகும்.

பட்டைச்சாறு: 

இம்மரத்தின் பட்டைச்சாறு மிகச் சிறந்த கிருமி நாசினியாகப் பயன்படுகிறது.

பழம்: இம்மரத்தின் பழங்களை நிழலில் உலர வைத்துப் பவுடராக்கி மாதவிலக்கு முடிந்த நாளிலிருந்து தினசரி ஒரு டீ ஸ்பூன் வீதம் பாலில் கலந்து தினசரி ஒருவேளை என பதினான்கு நாட்கள் சாப்பிட்டு வந்தால் பெண்களின் மலட்டுத்தன்மை பிரச்னைகள் நீங்கும். இதை ஆண்கள் சாப்பிட்டால் அவர்களுடைய குடும்ப வாழ்க்கை இனிதாக அமையும். அதனால்தான் "அரச மரத்தைச் சுற்றிவிட்டு அடிவயிற்றைத் தொட்டுப்பார்' என்ற பழமொழியும் சொல்லப்படுகிறது. மருத்துவ ரீதியாக அரச மரத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் மலட்டுத்தன்மையை நீக்கும் குணம் இருக்கின்றது.

 "ரெய்கி' மருத்துவத்தில் மரத்தைக் கட்டிப்பிடிக்கும் சிகிச்சை பிரபலமானது. மரத்தை கட்டிப்பிடிக்கும் போது அதன் நல்ல குணங்கள் நம் உடலில் மாற்றலாகி பல வகையான நோய்களை குணப்படுத்துவதுடன், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியையும் உண்டாக்குகிறது. கிரக தோஷங்களையும் நீக்குகிறது. இம்மரத்தை தினசரி அரை மணி நேரம் கட்டிப்பிடிப்பதால் மேற்கண்ட பலன் கிடைப்பதுடன் நல்ல உடல் நலனும் கிடைக்கிறது.

பெரும்பாலான கோவில்களில் அரசமரம் இருக்கும். அதன் அடியில் விநாயகர் அமர்ந்திருப்பார். விநாயகரையும், அதனுடன் அரச மரத்தையும் சுற்றி பக்தர்கள் வழிபடுவார்கள். அரச மரத்தில் மும்மூர்த்திகளான சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூவரும் வாசம் செய்வதாக கூறப்படுகிறது.

எனவே தினமும் நேரம் கிடைக்கும் போது அரச மரத்தை பிரதட்சணம் (வலம் வருதல்) செய்வது புண்ணியம் தரும். திங்கட்கிழமைகளில் வரும் அமாவாசை அமாசோமவாரம் என்று அழைக்கப்படும்.

அன்றைய தினத்தில் அரச மரத்தை வலம் வந்து வழிபடுவது பெரும் புண்ணியத்தை கிடைக்கச் செய்யும். அரச மரத்தை வலம் வரும்போது, மூலப்பொருளான கணபதியையும், மும்மூர்த்திகளையும் கைகூப்பி மனதார நினைத்து வணங்க வேண்டும்..

0 comments:

 
back to top