.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, November 28, 2013

குழந்தைகள் திரைப்படம் என்றால் எவை?

 nov 28 - edit chil film

ஆந்திரத் தலைநகர் ஹைதராபாத்தில் 18ஆவது சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழா முடிந்த சில நாள்களிலேயே கோவாவில் 44ஆவது சர்வதேச இந்தியத் திரைப்பட விழா தொடங்கிவிட்டது. குழந்தைகள் திரைப்படவிழாவைக் காட்டிலும் கோவா திரைப்பட விழாதான் அதிக கவனம் பெற்றது. இரண்டிற்கும் கொஞ்சம் இடைவெளி தந்திருக்கலாம்.

குழந்தைகள் திரைப்பட விழாவே முக்கியத்துவம் பெறாத நிலையில், தங்கயானை பரிசு பெற்ற படங்களின் விவரங்கள்கூட சரிவர ஊடகங்களில் பேசப்படாத நிலையில், சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண்-இயக்குநர் சன்னட் நேயே முன்வைத்த கருத்துகள் முக்கியத்துவம் பெறாமல் போனதில் வியப்பில்லை.

சன்னட் கூறியதில் முக்கியமான விஷயம், குழந்தைகள் திரைப்படம் என்றால் எவை என்பதை வரையறுக்கும் சீர்மைச் சட்டம் (யூனிபார்ம் லெஜிஸ்லேஷன்) தேவை என்பதுதான். குழந்தைத் திரைப்படங்களில் வன்முறைக் காட்சிகள், மூடநம்பிக்கைகள், சமுதாயத்தில் உள்ள கொடிய வழக்கங்கள், விபத்துக் காட்சிகள் ஆகியவற்றைச் சித்திரிப்பதில் சீர்மைச் சட்டம் தேவை. இது உலகம் முழுமைக்குமான பொதுச்சட்டமாக அமைய வேண்டும் என்பதுதான் அவருடைய விருப்பம். ஏனென்றால் குழந்தைகளை இந்தத் திரைக்காட்சிகள் வேகமாக “தொற்றி’க்கொண்டு விடுகின்றன.

இரண்டாவதாக அவர் வலியுறுத்தியது, குழந்தைத் திரைப்படங்களைச் சந்தைப்படுத்துவது தொடர்பானது. இதற்கு ஒருங்கிணைப்பு தேவை. சந்தைப்படுத்துதல், விளம்பரம் செய்தல், தயாரிப்புச் செலவைக் குறைத்தல், சலுகைகள், நிதிநல்கை, குழந்தைப் படங்களுக்கான பிரத்யேக திரையரங்குகள் இவை யாவும் ஒருங்கிணைந்த செயலாக்கத்தில் இடம்பெறுகின்றன.
குழந்தைகள் படங்கள் எல்லாவற்றையும் எளிதில் சந்தைப்படுத்த முடிவதில்லை. பேபிஸ் டே அவுட், ஜூமான்ஜி போன்ற படங்கள் பெரும் வசூல் படங்கள். நுட்பமாகப் பார்த்தால் இவையும் இவை போன்ற படங்கள் பலவும், குழந்தைகளை மையப்படுத்தி பெரியவர்கள் ரசிப்பதற்காக எடுக்கப்பட்ட வசூல்படங்களே தவிர, குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட படங்கள் அல்ல.

“பிளாக் ஹார்ஸ்’, “பிளோ எய்ட்’, ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதியின் “கலர் ஆப் பாரடைஸ்’, “பாதர்’ போன்ற படங்கள் குழந்தைகளின் பார்வையில் உலகை பெரியவர்களையும் காணச்செய்பவை. இத்தகைய படங்களைப் பார்க்கும் குழந்தைகளால் நிச்சயமாக அப்படங்களின் கதாபாத்திரங்களில் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள முடியும்.

தற்போது ஹைதராபாத்தில் நிறைவடைந்த குழந்தைகள் திரைப்பட விழாவில் தங்க யானை பரிசு பெற்றிருக்கும் “கவ்பாய்’ (சிறுபறவை) என்ற படமும் இரண்டாம் பரிசு பெற்றுள்ள “ஏ ஹார்ஸ் ஆன் ஏ பால்கனி’ (ஜெர்மன் மொழி) படமும் பெரியவர்-குழந்தைகள்- விலங்குகள் ஆகிய மூவருக்குமான அன்பின் இடைவெளியை இட்டு நிரப்பும் கதைக்களன் கொண்டவை. முதல் படத்தில், தாய் இல்லாத வீட்டில் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட அன்பின் விரிசலுக்கு குறுக்கே புரிதலை ஏற்படுத்தி இணைக்கிறது சிறுபறவையின் வரவு. இரண்டாவது படத்தில், லாட்டரியில் பரிசாகக் கிடைத்த குதிûரையை விற்று கடனை அடைக்க விரும்பும் அண்டை வீட்டுக்காரரின் தேவையைப் பூர்த்தி செய்ய சிறுவனை உந்துகிறது குதிரையின் மீதான நேசம்.
இந்த இரு படங்களிலும், பெரியவர்களால் கவனிக்கப்படாத சிறுவர்கள், தாங்கள் எதிர்கொள்ளும் பறவை, குதிரையால் ஆட்கொள்ளப்படுகிறார்கள். பிராணிகள் மீதான அன்பின் வழியாக பெரியவர்களைப் புரிந்துகொள்கிறார்கள்.

இந்தியாவில் இத்தகைய கதைகளுக்கு பஞ்சமே கிடையாது. புராண கதை தொடங்கி, நவீன கதைகள் வரை எல்லாவற்றிலும் இத்தகைய கதைகள் உள்ளன. பாரதத்தில் நீதிக்கதைகள் அனைத்திலும், மனிதர்களின் தீயகுணங்களையும் நல்ல குணங்களையும் விலங்குகளின் மீது ஏற்றிச் சொல்லப்படுவதைக் காணலாம்.

இந்தியாவில் – குறிப்பாக தமிழில் – குழந்தைப் படங்களில் கதைமாந்தராக இடம்பெறும் குழந்தைகள் பேசும் வசனங்கள் பெரியவர்களுக்கு உரித்தானவை. செய்யும் சாகஸங்களும் பெரியவர்களுக்கானவை. ஆனால் நடிப்பவர்களோ குழந்தைகள்.

“வா ராஜா வா’ படத்தில் இடம் பெற்ற சிறுவனைக் காட்டிலும், “குட்டி’ படத்தில் (தனுஷ் -ஸ்ரேயா நடித்தது அல்ல) இடம்பெறும் சிறுமி பல மடங்கு தேவலை. அந்த கதைபாத்திரமும் வளர்இளம் பெண்ணுக்குரியது. ஆனால் சிறுமி நடித்த படம். “தாரே ஜமீன் பார்’, “தங்கமீன்கள்’ இவற்றிலும்கூட பெரியவர்களுக்கான செய்தி அதிகமாகி, குழந்தைகளுக்கான உலகம் பின்தங்கிவிடுகிறது. காரணம், வணிகச் சந்தை. போட்ட அசலாவது கிடைக்க வேண்டுமே என்கிற எண்ணம்.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். தமிழ்ப்படக் கதைகள் சிறுபிள்ளைத்தனமானவை. கதாநாயகிகள் எல்லாரும் குழந்தைத்தனமாக இருக்கிறார்கள். கனவுக்காட்சிகளில் அவர்கள் அணியும் உடைகள், “பேபி ஷாப்’பில் தேர்வு செய்யப்பட்டு இவர்களுக்காக பெரிதாக தைக்கப்படுபவை- பெரியவர்கள் ரசிப்பதற்காக!

0 comments:

 
back to top