.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, December 20, 2013

பிரியாணி - சினிமா விமர்சனம்..!



நடிகர் : கார்த்தி

நடிகை : ஹன்சிகா மொத்வானி

இயக்குனர் : வெங்கட் பிரபு

இசை : யுவன் சங்கர் ராஜா

ஓளிப்பதிவு : ஷக்தி சரவணன்



சிறு வயது முதல் நண்பர்களான கார்த்தியும், பிரேம்ஜியும் கார் ஷோரூம் ஒன்றில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், அக்கம்பெனி பெங்களூரில் புதிதாக துவங்கவிருக்கும் கிளை திறப்பு விழாவுக்காக இருவரும் பெங்களூருக்கு பயணமாகிறார்கள்.

அங்கு பெரிய தொழிலதிபரான நாசரை கிரானைட் மோசடி வழக்கில் கைது செய்ய சி.பி.ஐ தீவிரமாக இருக்கிறது. இச் சூழ்நிலையில், கார் ஷோரூமின் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த நாசருக்கு அங்கு அறிமுகமாகும் கார்த்தியை பிடித்துப் போகவே, அவருக்கு தனது இளைய மகளை திருமணம் செய்து கொடுத்துவிட முடிவு செய்து, தனது மூத்த மகளின் கணவரான ராம்கியிடம் தனது எண்ணத்தை கூறுகிறார். ஆனால், ராம்கிக்கு இது பிடிக்கவில்லை.

நாசர் கொடுக்கும் மிகப்பெரிய விருந்தில் கார்த்தியும், பிரேம்ஜியும் கலந்துகொண்டு சென்னைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் வழியில் ஆம்பூரில் பிரியாணி சாப்பிட்டுவிட்டு செல்லலாம் என முடிவெடுக்கின்றனர்.

அப்போது, மாண்டித் தாக்கரை சந்திக்கும் இருவரும் அவளது அழகில் மயங்கி, அவளுடன் ஓட்டலுக்கு சென்று அவளோடு சேர்ந்து குடித்துவிட்டு கும்மாளம் அடிக்கின்றனர். அப்போது அங்கு வரும் நாசரைப் பார்த்தவுடன், இருவரும் அவருக்குத் தெரியாமல் ஓட்டல் அறையிலேயே பதுங்கிக் கொள்கின்றனர்.

செமத்தியான போதையில் இருக்கும் இருவரும் அங்கேயே தூங்கிவிடுகின்றனர். பாதி போதை தெளிந்த நிலையில் கார்த்தி மட்டும் ஓட்டல் அறையைவிட்டு வெளியேறி காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டு செல்கிறார். பாதி தொலைவில் போதை முழுவதும் தெளியவே, தன்னுடன் வந்த பிரேம்ஜியை காணாமல் திடுக்கிடுகிறார்.

ஓட்டல் அறையிலேயே அவரை விட்டுவிட்டு வந்துவிட்டோம் என்று எண்ணி, ஓட்டலுக்கு திரும்புகிறார். ஆனால், அங்கு அவர் கண்ட காட்சி அவரை திடுக்கிட வைக்கிறது. அறை முழுவதும் ரத்தக்கறையுடன் நாசர் படுகொலை செய்யப்பட்டு கிடக்க, அவருக்கருகே பிரேம்ஜி படுத்திருப்பதை கண்டு மேலும் திடுக்கிடுகிறார். அந்த அறையில் இருந்த தாக்கரையும் காணவில்லை.

உடனடியாக பிரேம்ஜியை எழுப்பி, இருவரும் அவசர அவசரமாக அங்கிருந்து வெளியேறுகின்றனர். நாசர் கொல்லப்பட்ட செய்தி அறிந்ததும் ஓட்டலுக்கு விரையும் போலீசார் அங்கிருக்கும் சி.சி.டிவியை பார்த்தபோது, நாசர் கொலை செய்யப்பட்ட அறையில் கார்த்தியும், பிரேம்ஜியும் இருப்பதை பார்த்து அவர்கள் தான் நாசரை கொலை செய்திருப்பார்கள் என்று முடிவெடுத்து கார்த்தியையும், பிரேம்ஜியையும் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகின்றனர்.

இறுதியில், நாசரைக் கொன்றது யார்? அவரை கொலை செய்தவர்களை போலீசார் கண்டுபிடித்தார்காளா? அவர்கள் எதற்காக நாசரைக் கொன்றார்கள்? என்பதை காமெடி, சஸ்பென்ஸ் கலந்த பல திருப்பங்களுடன் சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்கள்.

கார்த்தி இந்த படத்தில் பிளே பாய் கேரக்டரில் வருகிறார். தனது முந்தைய படங்களைப் போல் இளிச்சவாய், தலைசாய்ந்து நடக்கும் கோண நடை என இல்லாமல் இந்த படத்தில் கொஞ்சம் சீரியஸாக நடித்திருக்கிறார். ஆக்சன் காட்சிகளில் எப்போதும் போல் வெளுத்து வாங்கியிருக்கிறார். ஹன்சிகாவிடம் பிரியாணி கடையில் நடந்த சம்பவங்களை விவரிக்கும்போது வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார். பிரேம்ஜியை கலாய்ப்பதிலும் கலக்கியிருக்கிறார்.

ஹன்சிகா மோத்வானி முதல்பாதியில் நாயகனுடன் டூயட் பாடுவதும், சண்டை போடுவதுமாக வருகிறார். இரண்டாவது பாதியில்தான் நடிக்க வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள்.

பிரேம்ஜி வழக்கமான பேச்சு, நடை, உடை என கலாட்டா செய்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்திருக்கும் ராம்கி இன்னும் இளமை மாறாமல் அப்படியே இருக்கிறார். முகத்தில் முதிர்ச்சி தெரியவில்லை. இவருக்கு ஒரு ஆக்சன் சீன் வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

வழக்கமாக வெங்கட் பிரபு படங்களில் சம்பத்துக்கு வெயிட்டான ரோல் கொடுக்கப்பபடும். ஆனால் இந்த படத்தில் அவருடைய கதாபாத்திரத்தை வீணடித்திருககிறார்கள். அதேபோல் ஜெயப்பிரகாஷ் கதாபாத்திரமும் வேண்டுமென்றே திணிக்கப்பட்டதுபோல் இருக்கிறது.

மாயா கேரக்டரில் வரும் மாண்டி தாக்கர் கொஞ்ச நேரமே வந்தாலும் ரசிகர்களை ரொம்பவுமே சூடேற்றியிருக்கிறார். தொழிலதிபராக வரும் நாசர் மிடுக்கான தோற்றத்தில் அழகாக நடித்திருக்கிறார். உமா ரியாஸ்கான் கேரக்டர் ரொம்ப அற்புதம். அவரும் தன் கேரக்டரின் தன்மை அறிந்து அற்புதமாக நடித்திருக்கிறார். ரொம்ப நாளைக்கு பிறகு நல்ல ரோல் அவருக்கு கிடைத்துள்ளது.

இயக்குனர் வெங்கட் பிரபு தனது முந்தைய படங்கள் போல் விறுவிறுப்பு குறையாமல் கதையை நகர்த்தியிருக்கிறார். பிரியாணி என்ற தலைப்புக்கு ஏற்றாற்போல் நல்ல சுவையுள்ள, அருமையான விருந்தை வைத்திருக்கிறார். கார்த்தி-க்கு காமெடி சென்டிமென்ட் ஒத்துவராது என ரசிகர்களின் ஏளன பேச்சுக்கு இந்த படம் நல்ல பதிலடி கொடுத்துள்ளது. அவரை நன்றாக வேலை வாங்கியிருக்கிறார் வெங்கட் பிரபு.

கொலையாளிகளை கண்டுபிடிப்பதில் டுவிஸ்ட் மேல் டுவிஸ்ட் வைத்து சஸ்பென்ஸாக நகர்த்தி, படம் பார்ப்பவர்களை சீட்டின் நுனியில் அமர வைத்திருக்கிறார் இயக்குனர். படம் பார்ப்பவர்களுக்கு ஒரு இடத்தில்கூட போரடித்துவிடக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு காட்சிகளையும் அற்புதமாக செதுக்கியிருக்கிறார். படத்தில் கொஞ்சம் மசாலாவை தூக்கலாக போட்டிருந்தாலும், நாவில் முழுமையான சுவை தெரியவில்லை.

சக்தி சரவணனின் ஒளிப்பதிவு முற்பாதியை விட பிற்பாதியில் பளிச்சிடுகிறது. சேசிங் காட்சிகளில் கேமராவை அழகாக கையாண்டிருக்கிறார். வெங்கட் பிரபு படங்களில் கதைக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்குமோ? அதுபோல் பாடல்களுக்கும் மிகவும் முக்கியத்துவம் இருக்கும். ஆனால், யுவன் இந்த படத்தில் கொஞ்சம் சொதப்பியிருக்கிறார். 100-வது படம் என்பதால் கொஞ்சம் பதட்டப்பட்டு விட்டார் என்று தோன்றுகிறது. பாடல்கள் எதுவும் கேட்கும் ரகம் இல்லை. பின்னணி இசையிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

மற்றபடி ‘பிரியாணி’ செம டேஸ்ட்.

0 comments:

 
back to top